அலசல்
Published:Updated:

“கடல் உங்களுக்கு... கரை எங்களுக்கு!”

“கடல் உங்களுக்கு... கரை எங்களுக்கு!”
பிரீமியம் ஸ்டோரி
News
“கடல் உங்களுக்கு... கரை எங்களுக்கு!”

வர்த்தகத் துறைமுகத்தால் பிரிந்துகிடக்கும் குமரி

ன்னியாகுமரி மாவட்டத்தில் இனயம் வர்த்தகத் துறைமுகத் திட்டத்துக்கு ‘பன்னாட்டு சரக்குப் பெட்டக மாற்று முனைய எதிர்ப்பு மக்கள் இயக்கம்’ கடும் எதிர்ப்பு தெரிவித்துவரும் நிலையில், அவர்களுடன் தொடர்ந்து பி.ஜே.பி-யினர் மல்லுகட்டி வருவதால், பதற்றமான சூழல் நிலவுகிறது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள இனயத்தில் 28,000 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பன்னாட்டு சரக்குப்பெட்டக மாற்று முனையம் எனப்படும் வர்த்தகத் துறைமுகம் அமைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இதை எதிர்த்து மீனவ மக்கள் போராட்டம் நடத்தினர். அதனால், இந்தத் திட்டத்துக்கு கன்னியாகுமரியை அடுத்த கீழ மணக்குடி மற்றும் கோவளத்துக்கு இடையே மாற்று இடம் தேர்வுசெய்யப்பட்டது. அங்கும் இதற்கு எதிர்ப்பு கிளம்பியது. மேலும், ‘கன்னியாகுமரி பன்னாட்டு சரக்குப்பெட்டக மாற்று முனைய எதிர்ப்பு மக்கள் இயக்கம்’ என்ற அமைப்பு தொடங்கப்பட்டது. இந்த அமைப்பினர், கோவளம் கடற்கரையில் தொடர் போராட்டங்கள் நடத்தினர். உடனே பி.ஜே.பி-யினர், ‘கன்னியாகுமரி வர்த்தகத் துறைமுக ஆதரவு இயக்கம்’ என்ற அமைப்பைத் தொடங்கினர். அதற்கு பி.ஜே.பி-யின் முன்னாள் மாவட்டத் தலைவர் வேல்பாண்டியன் ஒருங்கிணைப்பாளராக நியமிக்கப்பட்டார். இவர்கள், வர்த்தகத் துறைமுகத்துக்கு ஆதரவாக நாகர்கோவிலில் கலெக்டர் அலுவலகம் எதிரே பிப்ரவரி 18-ம் தேதி போராட்டம் நடத்தினர். அதனால், மாவட்டமே ஸ்தம்பித்தது. துறைமுக எதிர்ப்பாளர்களும் மாவட்டத்தை ஸ்தம்பிக்க வைக்கும் அளவுக்கு ஏப்ரல் 7-ம் தேதி நாகர்கோவில் கலெக்டர் அலுவலகம் எதிரில் மிகப்பெரிய போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்தனர். அதே நாளில் துறைமுகத்துக்கு ஆதரவாக கலெக்டர் அலுவலகம் எதிரில் தாங்கள் போராட்டம் நடத்த அனுமதி வழங்க வேண்டும் என்று காவல்துறையிடம் பி.ஜே.பி-யினர் அனுமதிக் கேட்டனர்.

“கடல் உங்களுக்கு... கரை எங்களுக்கு!”

இரு தரப்பினரின் மனுக்களையும் ஆராய்ந்த போலீஸார், துறைமுக எதிர்ப்பாளர்கள் ஏப்ரல் 7-ம் தேதி போராட்டம் நடத்துவதற்கு 14 நிபந்தனைகளுடன் ‘தற்காலிக’ அனுமதியை வழங்கினர். எதிர்ப்புப் போராட்டத்தை முடக்கவேண்டும் என்பதில் விடாப்பிடியாக இருந்த பி.ஜே.பி-யினர், அதே ஏப்ரல் 7-ம் தேதி மாவட்டம் தழுவிய பந்த் அறிவித்தனர். இது, கன்னியாகுமரி மாவட்டத்தில் பதற்றத்தை அதிகரித்தது.

இது தொடர்பாகக் காவல்துறை அதிகாரி ஒருவரிடம் பேசியபோது, “துறைமுகத்துக்கு எதிரான போராட்டத்தில் கலந்துகொள்ள மீனவர் கிராமங்களிலிருந்து வீட்டுக்கு ஒருவராவது வர வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது. அதையடுத்து, போராட்டத்தில் பங்கேற்பதற்காக கிராமங்களிலிருந்து வந்த மீனவர்களின் வாகனங்களை மறிப்பதற்கு பி.ஜே.பி தரப்பில் திட்டமிட்டனர். இதனால், உயர் போலீஸ் அதிகாரிகள் இரண்டு தரப்பையும் அழைத்துப் பேச்சுவார்த்தை நடத்தினர். நாகர்கோவிலில் மீனவர்கள் போராட்டம் நடத்தினால், அதற்கு எதிராக பந்த் நடத்துவது என்பதில் பி.ஜே.பி-யினர் உறுதியாக இருந்தனர். எந்த எதிர்ப்பு வந்தாலும் நாகர்கோவில் கலெக்டர் அலுவலகம் எதிரில் வந்து போராட்டம் நடத்துவது உறுதி என எதிர்ப்பு இயக்கத்தினர் அறிவித்தனர். இதனால், எங்களுக்குத் தலைவலி அதிகமானது. அதனால், துறைமுக எதிர்ப்பாளர்களுக்கு ஏற்கெனவே வழங்கியிருந்த அனுமதியைத் திரும்பப் பெற்றது போலீஸ். அதையடுத்து, பி.ஜே.பி-யினரும் பந்த் போராட்டத்தைக் கைவிட்டனர். இனி, துறைமுக எதிர்ப்பு இயக்கத்தினர் எப்போது போராட்டம் நடத்த முயற்சி செய்தாலும், அந்தப் போராட்டத்துக்கு எதிரான நடவடிக்கையில் பி.ஜே.பி-யினர் ஈடுபடுவார்கள். ஆனால், எதிர்ப்பாளர்கள் தங்கள் போராட்டத்தை வேறு வடிவங்களில் முன்னெடுத்துச் செல்ல முயற்சி செய்வார்கள்’’ என்றார்.

“கடல் உங்களுக்கு... கரை எங்களுக்கு!”

‘துறைமுகத்துக்கு எதிராகப் போராடும் மீனவர்களைக் கரைப் பகுதிக்கு வந்து போராட்டம் நடத்த அனுமதிக்கும் காவல்துறையினர், துறைமுகம் வேண்டும் என்ற கோரிக்கையுடன் கடல் பகுதியில் போராட்டம் நடத்த எங்களுக்கு அனுமதி வழங்குவார்களா?’ என்பதுதான் பி.ஜே.பி தரப்பினர் எழுப்பிய முக்கியக் கேள்வி. மீனவர்கள் தங்கள் போராட்டங்களைக் கடலோடு நிறுத்திக்கொள்ள வேண்டும் என்பது அதன் அர்த்தம். இதற்குப் பதிலளிக்கும் விதமாக, கோவளத்தில் நடந்த கடல் முற்றுகைப் போராட்டத்தில் கலந்துகொண்டு பேசிய முன்னாள் எம்.பி-யான பெல்லார்மின், ‘‘மீனவர்கள் தங்கள் கோரிக்கைகளை நிறைவேற்ற கடலிலோ, காட்டிலோதான் போராட்டம் நடத்த வேண்டும் என்றால், அரசு அலுவலகங்களை ஏன் நகரத்தில் வைத்திருக்கிறீர்கள்?’’ என்று ஆவேசமாகக் கேட்டார்.

கன்னியாகுமரி மாவட்ட பி.ஜே.பி தலைவர் முத்துகிருஷ்ணன், ‘‘ஒரு வீடுகூட இல்லாத பகுதியில்தான் துறைமுகம் அமைகிறது. ஒரு சிறிய காம்பவுண்டு சுவர்கூட உடைபடாது. ஆனால், கடற்கரையில் துறைமுகமே அமைக்கக் கூடாது எனச் சொல்வதற்கு இவர்கள் யார்?’’ எனக் கொதித்தார்.

‘‘தமிழகத்தின் விவசாயத்தையும் இயற்கை வளங்களையும் பாதுகாக்கவே துறைமுகத் திட்டத்தை எதிர்க்கிறோம். தமிழகத்தைப் பாதுகாக்க, நெடுவாசல், ஸ்டெர்லைட் போராட்டக்காரர்களுடன் கைகோப்போம்’’ என்றார் கோட்டாறு மறைமாவட்ட ஆயர் நசரேன் சூசை.

எது எப்படியோ, கன்னியாகுமரி வர்த்தகத் துறைமுகத் திட்டத்தால், கடல் பகுதி, கரைப் பகுதி எனப் பிரிந்துகிடக்கிறது குமரி மாவட்டம்.

- ஆர்.சிந்து
படங்கள்: ர.ராம்குமார்