அலசல்
Published:Updated:

கும்பாபிஷேகத்தால் ஆட்சிக்கு ஆபத்து?

கும்பாபிஷேகத்தால் ஆட்சிக்கு ஆபத்து?
பிரீமியம் ஸ்டோரி
News
கும்பாபிஷேகத்தால் ஆட்சிக்கு ஆபத்து?

நெல்லையப்பர் கோயில் சர்ச்சை

‘‘திருநெல்வேலி நெல்லையப்பர் கோயிலுக்குக் கும்பாபிஷேகம் நடத்தத் தேர்வுசெய்யப்பட்ட தேதியும் நேரமும் தமிழ்நாட்டுக்கும் தமிழக ஆட்சியாளர்களுக்கும் ஆபத்தாக முடியும்’’ என ஜோதிடர்களும் ஆதீனங்களும் எச்சரித்து வருகின்றனர். இதனால், கும்பாபிஷேக நேரம் மட்டும் மாற்றப்பட்டுள்ளது. ஆனாலும், பக்தர்கள் எழுப்பிவரும் ஏராளமான கேள்விகளுக்குச் சம்பந்தப்பட்டவர்களிடமிருந்து பதில் ஏதும் இல்லை.

நெல்லையப்பர் கோயிலில் கடைசியாக 2004-ம் ஆண்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை திருப்பணிகள் செய்து கும்பாபிஷேகம் செய்ய வேண்டும் என்பது ஆகம விதி. இதையடுத்து, 4.92 கோடி ரூபாய்ச் செலவில் கும்பாபிஷேகப் பணிகள், 2017 நவம்பர் 30-ம் தேதி பாலாலயத்துடன் தொடங்கின. முறையான அறிவிப்பு இல்லாமல் பணிகளைத் திடீரெனத் தொடங்கியதாக, கோயிலின் பக்த பேரவையினரும் கோயில் ஊழியர்களும் அப்போதே எதிர்ப்பு தெரிவித்தார்கள். அதை அதிகாரிகள் கண்டுகொள்ளவில்லை.

கும்பாபிஷேகத்தால் ஆட்சிக்கு ஆபத்து?

விதிமுறைகள் மீறல்!

இதுபற்றிப் பேசிய நெல்லையப்பர் கோயிலின் பக்த பேரவையினர், ‘‘நெல்லையப்பர் கோயிலில் 12 மாதங்களும் திருவிழா நடக்கும். அதனால், இதுபோன்ற பெரிய கோயில்களில் திருப்பணிகளைப் பகுதி பகுதியாகப் பிரித்து நடத்துவது வழக்கம். ஆனால், நெல்லையப்பர் கோயிலில் விதிமுறைகள் எவையும் கடைப்பிடிக்கவில்லை. 2017 ஜூலை மாதம் கும்பாபிஷேகம் தொடர்பாக அறநிலையத்துறை அதிகாரிகள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டத்திலேயே, ‘பணிகளை நான்கு மாதங்களில் முடிக்க வேண்டும்’ எனத் தெரிவிக்கப்பட்டது. அதற்குக் கோயிலில் வழிபடுவோர் சங்கத்தினர் எதிர்ப்பு தெரிவித்தார்கள். அதிகாரிகளுக்கு உள்ளூர் பட்டர்கள், பக்த குழுவினர், திருப்பணிக் குழுவினர் எதிர்ப்பு தெரிவித்ததால், இந்தக் கோயிலுக்குச் சம்பந்தமே இல்லாத தூத்துக்குடியைச் சேர்ந்த பட்டரை அழைத்துவந்து பாலாலயம் செய்தனர். பக்தர்கள் சார்பாக இருமுறை நெல்லை கலெக்டரிடம் மனு அளிக்கப்பட்டும் எந்தப் பலனும் இல்லை’’ என்று ஆதங்கப்பட்டார்கள்.

ஜோதிடர்கள் எச்சரிக்கை!

நெல்லையப்பர் கோயிலில் கருவறை தவிர்த்து ஏனைய சந்நிதிகள் அனைத்திலும் பாலாலயம் செய்யப்பட்டுள்ளது. கொடிமரத்தில் எந்தப் பணியும் நடைபெறாத நிலையில், அதையும் சேர்த்தே பாலாலயம் செய்தது ஏன் என்பது புரியாமல் பக்தர்கள் குழம்பிப் போயிருக்கிறார்கள். நெல்லையப்பர் மற்றும் அம்பாள் கொடிமரங்கள் தங்கக் கொடிமரங்களாகும். அவற்றில் இருந்த தங்கம் சுரண்டப்பட்டிருப்பதை அதிகாரிகளின் கவனத்துக்குக் கொண்டுசென்றும், எந்தப் பலனும் இல்லை. கருவறை தங்கக்கலசத்தில் இருந்த தங்க முலாமும் என்ன ஆனது என்றே தெரியவில்லை.

திருப்பணிச் செலவுகள், திட்ட மதிப்பீடுகள் குறித்துக் கோயிலில் அறிவிப்புப் பலகை வைக்கப்படுமெனத் திருநெல்வேலி அறநிலையத் துறை இணை ஆணையர் பரஞ்சோதி கடந்த ஆண்டு தெரிவித்திருந்தார். ஆனால், அப்படி எந்த அறிவிப்பும் செய்யவில்லை. இந்தக் கோயிலில், 300 வருடப் பழமையான வெள்ளி வாகனங்கள் நிறைய உள்ளன. அவற்றைச் சீர் செய்யாமலேயே, திருப்பணி முடியும் நிலையில் இருப்பதாக நிர்வாகம் தெரிவிக்கிறது. கும்பாபிஷேகம் செய்வதற்கு முன்னர் திருப்பணிக் கமிட்டி எதுவும் அமைக்கவில்லை என்றும் பக்தர்கள் குற்றம்சாட்டி வருகின்றனர். இதனிடையே, கும்பாபிஷேகம் ஏப்ரல் 27-ம் தேதி அதிகாலையில் 4.10 முதல் 5.10 மணி வரை நடக்கும் என அழைப்பிதழ் அச்சடித்துவிட்டனர். அதன் பின்னர் சிவாச்சாரியார்களுக்கும் தருமபுர ஆதீனம் உள்ளிட்ட முக்கியப் பிரமுகர்களுக்கும் கும்பாபிஷேகம் குறித்துத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அப்போது, 27-ம் தேதி கும்பாபிஷேகம் நடத்தினால் நாட்டுக்கும் அரசுக்கும் கேடு வரும் என்று சில ஜோதிடர்களும் ஆதீனங்களும் கூறியிருக்கின்றனர். அதைத் தொடர்ந்து, நேரம் மட்டும் மாற்றப்பட்டுள்ளது. அதன்படி, ஏப்ரல் 27-ம் தேதி காலை 9.25 முதல் 10.15 மணி வரை கும்பாபிஷேகம் நடைபெறவுள்ளது.

கும்பாபிஷேகத்தால் ஆட்சிக்கு ஆபத்து?

கொள்ளை போகுமா ரூ. 4.92 கோடி?

இந்து முன்னணி மாநில நிர்வாகக் குழு உறுப்பினரான குற்றாலநாதன், ``கும்பாபிஷேகப் பணிகளில், அறநிலையத்துறையினர் ஆகம விதிகளைக் கடைப்பிடிக்கவில்லை. முன்பெல்லாம் ஒவ்வொரு சந்நிதியாகப் பாலாலயம் செய்து கும்பாபிஷேகம் நடக்கும். இந்தமுறை, ஒட்டு மொத்தக் கோயிலுக்கும் பாலாலயம் செய்துள்ளனர். கோயில் கொடிமரத்தில் திருப்பணி எதுவும் செய்யாத நிலையில், அதற்கும் சேர்த்துப் பாலாலயம் செய்துள்ளனர். அதனால், சாமி வெளியே வரமுடியவில்லை. திட்டமிடாமல் கும்பாபிஷேகப் பணிகளைத் தொடங்கியதால், இந்த வருடம் ஆருத்ரா நடனம் நடக்கவில்லை. கோயிலின் கோபுரத்தில் வர்ணம் பூசுவது, வெள்ளையடிப்பது, கோயிலைக் கழுவுவது ஆகியவை மட்டுமே திருப்பணி என நினைக்கிறார்கள். கோயிலின் பிரகாரங்கள் பாழடைந்து கிடக்கின்றன. சப்பரங்கள் சிதிலமடைந்துள்ளன. அரசு சார்பாக 4.92 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. அந்தப் பணத்தை மொத்தமாகக் கொள்ளையடிக்கப் போகிறார்களோ என்கிற சந்தேகம் பக்தர்களுக்கு ஏற்பட்டுள்ளது’’ என்றார் காட்டமாக.

கும்பாபிஷேகத்தால் ஆட்சிக்கு ஆபத்து?

‘‘எங்களிடம் கேட்கவில்லை!’’

நெல்லையப்பர் கோயிலின் நிர்வாக அலுவலரான ரோஷிணியிடம் கேட்டதற்கு, ‘‘ஆகம விதிகளுக்கு உட்பட்டே திருப்பணிகளைச் செய்கிறோம். பாலாலயம் செய்வதற்கு முன்பாகவே கடந்த இரண்டு வருடங்களாகத் திருப்பணி வேலைகளைச் செய்வதால், சீக்கிரத்தில் பணிகளை முடித்துவிட்டோம். தற்போது 90 சதவிகிதத்துக்கும் அதிகமான பணிகள் முடிந்துவிட்டன. எஞ்சிய பணிகளையும் விரைவில் முடித்து, திட்டமிட்ட தினத்தில் கும்பாபிஷேகம் நடத்துவோம். கும்பாபிஷேகத்தை அவசரமாக நடத்தவில்லை. பலரையும் கலந்து ஆலோசித்தே முடிவு செய்துள்ளோம். தருமபுர ஆதீனம் குறித்துக் கொடுத்த தேதியில்தான் கும்பாபிஷேகம் நடக்கவுள்ளது. காலையில் 4.40 மணிக்குப்  பிரம்ம முகூர்த்தத்தில் கும்பாபிஷேகம் நடத்தவிருந்தோம். ஆனால், அதிகாலையில் நிறைய பக்தர்களால் வர முடியாது எனப் பலரும் சொன்னதால் நேரத்தை மட்டும் மாற்றியுள்ளோம். கோயிலின் முக்கியமான சந்நிதிகள் அனைத்திலும் திருப்பணிகள் நடந்துவிட்டன. சாமிகள் இல்லாத மண்டபங்களில் கும்பாபிஷேகத்துக்குப் பின்னரும் தொடர்ந்து பணிகளைச் செய்வோம். கோயிலின் திருப்பணிக்கு ஒரு செங்கலைக்கூட எடுத்து வைக்காத சிலர், குறைகளை மட்டுமே சொல்லிக்கொண்டிருக் கிறார்கள்’’ என்றார்.

தருமபுரம் ஆதீன இளைய சந்நிதானம் மாசிலாமணி தேசிகர் ஞானசம்பந்த பரமாச்சார்ய சுவாமிகளிடம் பேசினோம். ‘‘கோயில் தரப்பில் எங்களிடம் எந்தத் தேதியும் கேட்கவில்லை. அவர்கள் குறித்து வைத்த நேரத்தை, நாங்கள்தான் மாற்றச் சொன்னோம். சூரிய உதயத்துக்கு முன்னர் கும்பாபிஷேகம் செய்யக் கூடாது. அப்படிச் செய்தால் நல்லதல்ல என்று கூறினோம். அதையடுத்து நேரத்தை மட்டும் மாற்றியுள்ளனர். அதுபோல், கோயில் குருக்களுடன் இணைந்துதான் கும்பாபிஷேகத்தை நடத்தச் சொல்லியுள்ளோம். கோயிலில் அம்பாள் சந்நிதிக்குப் பின்புறம் உள்ள மதில்சுவர் மற்றும் தகடு வேய்வது மட்டும்தான் திருப்பணி செய்யப்படாமல் உள்ளது. மீதமுள்ள திருப்பணியை வரும் 20-ம் தேதிக்குள் முடித்துவிடுவதாகக் கோயில் நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்’’ என்றார்.

கும்பாபிஷேகத்தால் ஆட்சிக்கு ஆபத்து?

கும்பாபிஷேகப் பணிகளில் தீவிரம் காட்டிவரும் ஒருவர், டி.டி.வி.தினகரன் ஆதரவாளர் என்ற தகவலும் வெளியில் கசிந்துள்ளது. அவரது திட்டத்தின்படியே, ஆட்சியாளர்களுக்கும் ஆட்சியில் இருப்பவர்களுக்கும் கேடு விளைவிக்கும் நாளில் நேரத்தைத் தேர்வு செய்ததாகவும் பேச்சு கிளம்பியுள்ளது. 

உபயதாரர்கள்மூலம் திருப்பணிகள் நடைபெற்றால், திருப்பணிக்குழு அமைக்கப்பட வேண்டும். அப்படி அமைக்கப்பட்டதா? திருப்பணிக்கு உயர் நீதிமன்றம் நியமனம் செய்த வல்லுநர் குழு ஒப்புதல் தந்ததா? கொடிமரம் உள்பட மொத்தக் கோயிலையும் ஒரே நேரத்தில் பாலாலயம் செய்ய வேண்டியதன் காரணம் என்ன? கோயிலில் பாரம்பர்யமாக கைங்கர்யம் செய்யும் அர்ச்சகர்கள் இருக்கும்போது, வெளியூரிலிருந்து கும்பாபிஷேகம் செய்ய அர்ச்சகர்களை ஏன் அழைத்துவர வேண்டும்?

இவையெல்லாம் நெல்லையப்பருக்கும் அறநிலையத்துறைக்குமே வெளிச்சம்.

- பி.ஆண்டனிராஜ், இ.லோகேஷ்வரி
படங்கள்: எல்.ராஜேந்திரன்