
#CambridgeAnalyticaஞா.சுதாகர்
தேர்தலில் ஒரு கட்சி பெரும்பான்மை பலத்தோடு வெற்றி பெறுகிறது என்றால் அதற்கு என்னென்ன காரணங்கள் இருக்க முடியும்? வலிமையான தலைவர்; கவர்ச்சியான வாக்குறுதிகள்; கடந்தகால செயல்பாடுகள்; எதிர்க்கட்சிகள் மீதான வெறுப்பு; தலைசிறந்த கொள்கை; இப்படி இன்னும் சொல்லிக்கொண்டே போகலாம்.
இந்த காரணங்கள்தான் ஒரு தலைவரை ஜெயிக்க வைக்கின்றன; இந்தக் காரணங்கள்தான் ஒரு கட்சியை அரியணை ஏற்றுகின்றன. இந்தக் காரணங்கள்தான் மக்களின் வாக்குகளைப் பெற்றுத் தருகின்றன. ஆனால், இவையெல்லாம் இனி பழங்கதைகள்.
இனி உங்கள் வாக்குகளை வாங்க உங்களைக் கவர வேண்டும் என்பதில்லை. உங்களை ஏமாற்றினாலே போதும். மக்களின் பெரும்பான்மை கருத்துதான் ஜனநாயகம். அவர்களை ஈர்ப்பதுதான் ஒரு கட்சி தேர்தலில் ஜெயிக்க மிகவும் முக்கியம்.
ஆனால், இனிமேல் பெரும்பான்மை மக்கள் ஒரு கட்சிக்கு எதிராக இருந்தாலும்கூட, அந்தக் கட்சியால் எளிதாக ஜெயிக்க முடியும். மக்களின் கருத்து எதுவாக இருந்தாலும் சரி; அதனை தங்களுக்கு ஏதுவாக மாற்ற கட்சிகளால் முடியும். இவையனைத்தும் எதிர்காலத்தில் நடக்கப்போகும் சம்பவங்கள் அல்ல; நம் கடந்தகாலத்தில் நடந்துமுடிந்த சம்பவங்கள். இவை இந்தியாவிலும் நடந்திருக்கின்றன என்றாலும், இப்போதைக்கு பிரச்னை அமெரிக்காவில்தான். இந்த எல்லா பிரச்னைகளுக்கும் காரணம் கேம்ப்ரிட்ஜ் அனலிடிகா என்ற ஒரு நிறுவனம். என்ன பிரச்னை?
இந்தப் பிரச்னையை நாம் இரண்டு விதமாகப் பார்க்கவேண்டும். ஒன்று தொழில்நுட்ப ரீதியாக; மற்றொன்று அரசியல் ரீதியாக.

பிரச்னைக்கான விதை
Strategic Communications Laboratories (SCL) என்பது பிக்டேட்டாவைக் கொண்டு பல்வேறு பணிகளைச் செய்யும் பிரிட்டிஷ் நிறுவனம். டேட்டா உதவியுடன் விளம்பரங்கள், தேர்தல் பிரசாரங்கள் போன்றவற்றை மேற்கொள்வதுதான் இதன் வேலை. இந்நிறுவனம் கடந்த 2014-ம் ஆண்டு கிளை நிறுவனம் ஒன்றை தொடங்குகிறது. அதுதான் கேம்ப்ரிட்ஜ் அனலிடிகா. இந்த நிறுவனத்திற்கு நிதியுதவி செய்த ஸ்டீவ் பன்னன் மற்றும் ராபர்ட் மெர்சர் இருவருமே அதிபர் டொனால்ட் ட்ரம்ப்பின் குடியரசுக் கட்சிக்கு நெருக்கமானவர்கள். இந்த ஸ்டீவ் பன்னன்தான், கடந்த அமெரிக்க அதிபர் தேர்தலின்போது ட்ரம்ப்பின் பிரசாரங்களை கவனித்தவர்.
SCL நிறுவனம் உலகம் முழுவதுமே டேட்டா மூலம் தேர்தல் பிரசாரங்களை மேற்கொண்டு வரும் நிறுவனம். புதிதாக தொடங்கப்பட்ட கேம்ப்ரிட்ஜ் அனலிடிகா நிறுவனத்தின் பணி ட்ரம்ப்பின் தேர்தல் பிரசாரங்களைக் கவனித்து கொள்வது. இந்தப் பணிகளுக்காக பல்வேறு நிறுவனங்களிடம் இருந்து டேட்டாவை வாங்குவார்கள். அதில் ஒரு நிறுவனம்தான் Global Science Research (GSR). இதன் தலைவர் கோகன்; கேம்ப்ரிட்ஜ் பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சியாளர். இவர் வடிவமைத்த ஃபேஸ்புக் ஆப்பின் பெயர் thisisyourdigitallife. இந்த ஆப் மூலம் பயனாளர்களின் பெயர், இருப்பிடம், அவர்களின் விருப்பங்கள் போன்ற தகவல்களை சேகரித்திருக்கிறார் கோகன். இவையனைத்தும் ஆராய்ச்சி பணிகளுக்காக என ஃபேஸ்புக்கிடம் தெரிவித்திருக்கிறார். இந்த ஆப்பை சுமார் 3 லட்சம் பயன்படுத்தியிருக்கின்றனர். அவர்களின் தகவல்களையும், அந்த மூன்று லட்சம் பேரின் ஃபேஸ்புக் நண்பர்களின் தகவல்களையும் சேகரித்திருக்கிறார் கோகன். இப்படி சுமார் 50 மில்லியன் பயனாளர்களின் தகவல்களை ஃபேஸ்புக்கிடம் இருந்து சேகரித்திருக்கிறார். இதுவரைக்கும் எந்தப் பிரச்னையும் இல்லை. ஃபேஸ்புக் ஆப்பின் மூலம் சேகரித்த தகவல்கள் அனைத்தும் கோகனிடம் மட்டுமே இருக்கிறது. தற்போது கோகன் ஃபேஸ்புக்கின் விதிகளை மீறுகிறார்.
அதாவது, அந்த பயனாளர்களின் தகவல்கள் அனைத்தையும் கேம்ப்ரிட்ஜ் அனலிடிகா நிறுவனத்துடன் பகிர்ந்துகொள்கிறார். இந்த விஷயம் ஃபேஸ்புக்கிற்கோ அல்லது அந்தப் பயனாளர்களுக்கோ தெரியாது. ஒரு வருடம் கழித்து 2015-ல் இந்த விஷயத்தை ஊடகங்கள் மூலம் தெரிந்துகொள்கிறது ஃபேஸ்புக். உடனே கோகனையும், கேம்ப்ரிட்ஜ் அனலிடிகாவையும் விசாரிக்கிறார்கள். தற்காலிகமாக கோகனின் ஆப்பை தடை செய்கிறார்கள்.
அந்தத் தடையை நீக்க வேண்டுமானால், ஃபேஸ்புக் ஒரு கோரிக்கை வைக்கிறது. "இதுவரை பயனாளர்களுக்கு தெரியாமல் சேகரித்த அனைத்து தகவல்களையும் மொத்தமாக அழித்துவிட வேண்டும். சரியா?". உடனே சரி என்றது கேம்ப்ரிட்ஜ் அனலிடிகா. தடையும் நீக்கப்படுகிறது. ஃபேஸ்புக்கும் சமாதானமாகிறது. ஆனால், இங்கேதான் சூது ஒளிந்திருந்தது. அதாவது கேம்ப்ரிட்ஜ் அனலிடிகா அந்த டேட்டா எதையுமே அழிக்கவில்லை. தொடர்ந்து ட்ரம்ப்பின் பிரசாரத்திற்காக பயன்படுத்தியிருக்கிறது. இந்த விஷயத்தையும் ஃபேஸ்புக் கண்டுபிடிக்கவில்லை. ஊடகங்கள்தான் கண்டுபிடித்தன.

அம்பலப்படுத்திய வைலி
மேலே இருக்கும் சம்பவங்களைப் படிக்கும்போது, இந்த சம்பவம் வெறும் தகவல் திருட்டாக மட்டும்தான் தெரியும். ஆனால், இது திட்டமிடப்பட்ட டிஜிட்டல் போர் என்பதுதான் இதில் ஒளிந்திருக்கும் அபாயம்.
இந்த கேம்ப்ரிட்ஜ் அனலிடிகா நிறுவனம் அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் மட்டுமல்ல; ஐரோப்பா, கென்யா, இந்தியா, நைஜீரியா, பிரேசில், தாய்லாந்து உள்பட பல்வேறு நாடுகளிலும் அரசியலில் தன் கைவரிசையைக் காட்டியிருக்கிறது.
"நீங்கள் அரசியலை மாற்ற வேண்டுமென்றால், முதலில் அந்நாட்டின் கலாசாரத்தை மாற்ற வேண்டும். காரணம், அங்கிருந்துதான் அரசியல் உருவாகிறது. கலாசாரத்தை மாற்ற வேண்டுமெனில் அதில் இணைந்திருக்கும் மக்களை மாற்ற வேண்டும்; அவர்களின் எண்ணங்களை மாற்ற வேண்டும்; ஒருவருடன் போரில் ஈடுபட வேண்டுமென்றால் அதற்கான ஆயுதம் நம்மிடம் இருக்கவேண்டும்.
அந்த ஆயுதம்தான் டேட்டா. அதனை உருவாக்குவதுதான் எங்கள் பணி " என்கிறார் கிறிஸ்டோபர் வைலி. இவர் கேம்ப்ரிட்ஜ் அனலிடிகாவின் முன்னாள் ஊழியர். இந்த தகிடுதத்தங்களை முதன்முதலில் ஊடகங்களிடம் சொன்னவர். இவர் இதுகுறித்து ஆங்கில நாளிதழ் ஒன்றிற்கு பேட்டியளித்ததும் தான் இப்படி ஒரு விஷயம் நடந்ததே வெளியுலகிற்கு தெரியவந்தது. பின்னர், சேனல் 4 நிறுவனமும் பல மாதங்களாக நடத்திய ஸ்டிங் ஆபரேஷன் வீடியோக்களை வெளியிட்டது. அதில் கேம்ப்ரிட்ஜ் அனலிடிகாவின் தலைவர் அலெக்சாண்டர் நிக்ஸ் எப்படியெல்லாம் இந்நிறுவனம் மக்களையும், ஜனநாயகத்தையும் ஏமாற்றுகிறது என்பதை புட்டுபுட்டு வைத்தார். பின்னர்தான் இந்தப் பிரச்னை இன்னும் விஸ்வரூபம் எடுத்தது.

டேட்டாவைப் பயன்படுத்தி பிரசாரம் மேற்கொள்வது என்பது கடந்த சில ஆண்டுகளாகவே பின்பற்றப்படும் நடைமுறைதான். தலைவர்களின் பிரசாரங்களைக் கவனிப்பதற்காக உலகம் முழுவதுமே இப்படி பல நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. இதற்காக பொதுவெளியில் கிடைக்கும் தகவல்களைப் பயன்படுத்தினால் எந்தப் பிரச்னையும் இல்லை.
ஆனால், மக்களுக்கே தெரியாமல், அவர்களின் தகவல்களையே திருடி அவர்களையே மூளைச்சலவை செய்வதும், எதிர்க்கட்சி தலைவர்களின் புகழை மங்கச்செய்து, போட்டியை சிதைத்து ஜனநாயகத்திற்கே சவால்விடுவதும்தான் ஆபத்து. அதனால்தான் கேம்ப்ரிட்ஜ் அனலிடிகா விஷயத்தை எல்லா நாடுகளும் உற்று கவனிக்கின்றன. சேனல் 4 நிறுவனத்தின் வீடியோக்கள் அனைத்தும் வெளியானதும், அந்நிறுவனம் அலெக்சாண்டர் நிக்ஸை நிறுவனத்தில் இருந்து நீக்கிவிட்டது. ஃபேஸ்புக்கும் SCL மற்றும் கேம்ப்ரிட்ஜ் அனலிடிகாவின் கணக்குகளை சஸ்பெண்ட் செய்துவிட்டது.
இந்தப் பிரச்னையில் ஃபேஸ்புக் அதிகம் அடிவாங்கக் காரணம், கேம்ப்ரிட்ஜ் அனலிடிகாவிடம் ஏமாந்தது மட்டுமல்ல; இதேபோல தொடர்ச்சியாக பல்வேறு உளவு நிறுவனங்களும், டேட்டா நிறுவனங்களும் ஃபேஸ்புக் மூலம்தான் மக்களின் தகவல்களைச் சேகரிக்கின்றன. இந்த அத்துமீறல்களுக்கு ஃபேஸ்புக்கே உடந்தையாக இருக்கிறது; அல்லது அவர்களைத் தடுக்க முடியாமல் செயலற்றுக் கிடைக்கிறது.
இந்த இரண்டு சிக்கல்கள்தான் ஃபேஸ்புக் பயனாளர்களைக் கொதிப்படைய வைத்திருக்கிறது. இதனால் பலரும் 'ஃபேஸ்புக்கில் இருந்து வெளியேறுகிறோம்" என ஸ்டேட்டஸ் தட்டவும், ஃபேஸ்புக்கின் பங்குகள் சட்டென சரியவும் நொந்துபோய் விட்டார் மார்க் ஸக்கர்பெர்க். இறுதியாக, "உங்கள் தகவல்களைப் பாதுகாக்க வேண்டியது எங்கள் கடமைதான். அதனை செய்ய முடியாவிட்டால் நாங்கள் உங்களுக்கு சேவை செய்யவே தகுதியற்றவர்கள்; நடந்த சம்பவத்திற்கு மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். இந்த தகவல் திருட்டு விஷயத்தில் கோகன் எங்களை ஏமாற்றிவிட்டார். இதிலிருந்து நாங்கள் பாடம் கற்றுக்கொள்கிறோம். எல்லா விதமான விசாரணைக்கும் ஒத்துழைப்போம்" என மன்னிப்பு கேட்டுவிட்டார்.

இனிமேல் இதுபோன்ற சம்பவங்கள் நடக்காமல் இருப்பதற்கான பாதுகாப்பு வழிமுறைகளையும் முடுக்கி விட்டிருக்கிறார்."தற்போதைய தேர்தல்களில் இதுவரைக்கும் இல்லாத வகையில் புதியதொரு பிரசாரம் மேற்கொள்ளப்படுகிறது. இந்தப் பிரசாரத்தின் நோக்கம் மக்களை ஈர்ப்பதல்ல; மக்களை சிந்திக்கவிடாமல் தடுப்பது; அவர்களின் மனதில் தவறான எண்ணங்களை பரப்புவது; அவற்றை நம்பவைப்பது. இந்தப் பிரசாரம் துரதிருஷ்டவசமாக வெற்றிகரமாக அமைந்துவிடுகிறது." என்கிறார் ஹிலரி கிளின்டன்.
தற்போது மொத்தம் இரண்டுவிதமான சிக்கல்களை எதிர்கொண்டு நிற்கிறது அமெரிக்கா. ஒன்று, அமெரிக்க மக்களின் ஃபேஸ்புக் தகவல்கள் எந்தளவிற்கு பாதுகாப்பாக இருக்கின்றன என்பது. இரண்டாவது, அமெரிக்க அதிபர் தேர்தலில் நடந்த இந்தப் போலி இணைய பிரசாரங்களின் பின்னணியில் ரஷ்யா இருக்கிறதா என்பதைக் கண்டறிவது.
இந்த இரண்டு கேள்விகளுக்கும் பதில்தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டிருக்கிறது அமெரிக்க புலனாய்வுத்துறை. கேம்ப்ரிட்ஜ் அனலிடிகா Brexit பிரசாரத்திலும் தில்லுமுல்லுகள் செய்திருப்பதால் அவற்றைக் கண்டறியும் முனைப்பில் இருக்கிறது பிரிட்டன். ஏழையின் சொல்லும் அம்பலம் ஏறுவதுதானே ஜனநாயகத்தின் அழகு? அதனையும் இப்படி தொழில்நுட்பத்தின் உதவியுடன் தடுக்கின்றனர் அரசியல்வாதிகள். நாம் தமிழனாய் நினைத்து வாட்ஸ்அப்பில் ஷேர் செய்யும் ஒவ்வொரு செய்திக்குப் பின்னாலும் இப்படி ஒரு அரசியல் ஒளிந்திருக்கலாம். இந்தப் பிரச்னையைக் கண்டறிவதற்கும், தப்பிப்பதற்கும் புதிய ஆயுதத்தை உருவாக்க வேண்டிய அவசியமில்லை. நம்மிடம் ஏற்கெனவே இருக்கும் ஆயுதத்தைப் பயன்படுத்தினாலே போதும்; அது, பகுத்தறிவு!

கேம்ப்ரிட்ஜ் அனலிடிகாவின் விளக்கம்
இந்த எல்லா குற்றச்சாட்டுகளுக்கும் கேம்ப்ரிட்ஜ் அனலிடிகாவின் பதில், "இவை அத்தனையும் பொய். நாங்கள் பல்வேறு நிறுவனங்களிடமிருந்து டேட்டாவைப் பெறுகிறோம். அதில் ஒரு நிறுவனம்தான் கோகனின் GSR. அந்நிறுவனம் ஃபேஸ்புக்கிடம் இருந்து டேட்டாவைப் பெற்றது எங்களுக்குத் தெரியாது. அதற்கும் எங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை" எனக் கைவிரித்துவிட்டது. இந்த விஷயத்தை ஊடகங்களில் தெரிவித்த வைலி தற்போது அமெரிக்கா மற்றும் பிரிட்டன் அரசுகளிடம் வாக்குமூலம் அளித்துவருகிறார். கேம்ப்ரிட்ஜ் அனலிடிகா மற்றும் SCL இரண்டும் விசாரணை வளையத்தில் இருக்கின்றன.

காங்கிரஸ் Vs பி.ஜே.பி
தேர்தல்களில் கேம்ப்ரிட்ஜ் அனலிடிகா தில்லுமுல்லு செய்த விஷயம் வெளியே தெரிந்ததுமே, இந்தியாவில் காங்கிரஸ் மற்றும் பி.ஜே.பிக்கிடையே மோதல்கள் ஆரம்பித்துவிட்டன.
"இந்தியாவில் ஃபேஸ்புக் தேர்தல்களில் குளறுபடிகள் செய்வது தெரியவந்தால் அதனை எங்களால் பொறுத்துக்கொள்ள முடியாது. எங்களிடம் வலுவான தகவல் தொழில்நுட்ப சட்டங்கள் இருக்கின்றன. தேவைப்பட்டால் மார்க் ஸக்கர்பெர்க்கிற்கே கூட இந்தியா வர சம்மன் அனுப்புவோம்" - இங்கிருந்து சென்ற நிரவ் மோடியையும், விஜய் மல்லையாவையுமே இன்னும் பிடிக்க முடியாமல் திணறும் பி.ஜே.பி அரசின் தகவல்தொழில்நுட்ப அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் சொன்ன விஷயம் இது.
இதேபோல காங்கிரஸும் பிஜேபியையும் குற்றம் சாட்டியது. இறுதியாக கிறிஸ்டோபர் வைலி இங்கிலாந்தில் அளித்த வாக்குமூலத்தில், "ஒருவேளை இந்தியாவில் காங்கிரஸ் SCL-ன் சேவையைப் பயன்படுத்தியிருக்கலாம்" எனச் சொல்ல, அத்துடன் அலெக்சாண்டர் நிக்ஸின் அலுவலகத்தில் காங்கிரஸ் சின்னம் இருக்கும் வீடியோவும் வைரலாக, இந்த இரண்டையும் கெட்டியாகப் பிடித்துக்கொண்டு தற்போது காங்கிரஸை வறுத்தெடுக்கிறது பி.ஜே.பி.