Published:Updated:

இந்த விபத்துக்கு பொறுப்பேற்பது யார்?

இந்த விபத்துக்கு பொறுப்பேற்பது யார்?
பிரீமியம் ஸ்டோரி
News
இந்த விபத்துக்கு பொறுப்பேற்பது யார்?

மு.ராஜேஷ்

ரம்பத்தில் ஆர்வத்தை தூண்டுபவையாக இருந்த தானியங்கி கார்கள் தற்போது அச்சத்தை விதைத்து வருகின்றன. கடந்த ஆண்டு ஜூன் மாதம் புளோரிடா மாகாணத்தில், முதன்முதலாக தானியங்கி கார் விபத்து மூலம் ஒருவர் உயிரிழந்தார். டெஸ்லா நிறுவனத்தின் ஆட்டோபைலட் வசதியின் சோதனை ஓட்டத்தின்போது இந்த விபத்து ஏற்பட்டது. தற்போது இதேபோல இன்னொரு சம்பவம் உபெர் காரால் ஏற்பட்டிருக்கிறது.

 அதிர்வலைகளை ஏற்படுத்திய விபத்து?

அமெரிக்காவின் அரிசோனா மாநிலத்தில் கடந்த மாதம் 18-ம் தேதி இரவு பத்து மணிக்கு இந்த விபத்து நடந்திருக்கிறது. எலைன் ஹெஸ்பெர்க் (Elaine Herzberg) என்ற 49 வயது பெண் அவரது சைக்கிளுடன் சாலையைக் கடக்க முயன்றபோது அவர்மீது பலத்த வேகத்தில் மோதியிருக்கிறது ஒரு கார். மருத்துவமனைக்குக் கொண்டு சென்ற அவரை பரிசோதித்த மருத்துவர்கள் பலத்த காயமடைந்ததால் உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்திருக்கிறார்கள். தகவல் தெரிந்ததும் உடனே காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட்டனர்.

அப்போதுதான் அவர்களுக்கு இன்னொரு விஷயம் தெரியவந்தது. அந்தப் பெண் மீது மோதிய காரை ஓட்டுநர் யாரும் ஒட்டிவரவில்லை. அது உபெரின் டிரைவர்லஸ் கார். உடனே விசாரணையைத் தொடங்கியிருக்கிறார்கள். அப்போது இன்னும் சில தகவல்கள் தெரியவந்தன. தானியங்கி கார்களின் சோதனை ஓட்டத்தின்போது அவசரநிலைகளைச் சமாளிப்பதற்காகவும், கார் எப்படி இயங்குகிறது என்பதைக் கண்காணிப்பதற்காகவும் ஒரு நபர் இருப்பார். அப்படி அந்த விபத்து நடந்த காரிலும் ஒருவர் இருந்தார். அவர் பெயர் ரபேல் வாஸ்கஸ்.

இந்த விபத்துக்கு பொறுப்பேற்பது யார்?

ஏன் விபத்தை தடுக்கமுடியவில்லை?

ரபேல் உள்ளே இருந்தும் விபத்து நடக்க காரணம், மிகக்குறைவான நேரத்தில் விபத்து நடந்ததுதான். "அந்தப் பெண்மணி கண்ணிமைக்கும் நேரத்திற்குள் காருக்கு முன்னால் வந்துவிட்டார், விபத்து ஒரு ஃபிளாஷ் அடித்ததைப்போல நடந்துவிட்டது" என்று தெரிவித்திருக்கிறார் அவர். விபத்து நடந்த பகுதியில் வாகனங்கள் மணிக்கு 55 கி.மீ வேகத்தில் செல்வதற்கு அனுமதிக்கப் பட்டிருந்தது. ஆனால், விபத்து நடந்தபோது காரின் வேகம் மணிக்கு 65 கிலோமீட்டருக்கு மேல் இருந்திருக்கிறது. விபத்தின் வீடியோவை ஆராய்ந்த காவல்துறையினர் விபத்து நடப்பதற்கு முன்னால் உள்ளே இருந்த டெஸ்ட் டிரைவரான ரபேல் வாஸ்கஸ் விபத்தைத் தடுப்பதற்கு முயற்சி செய்ததைக் கண்டறிந்திருக்கிறார்கள். விபத்து நடந்த இடம் அபாயகரமான பகுதி எனவும், சாலையின் ஒரு பக்கத்தில் இருள் சூழப்பட்டு இருந்த இடத்தில் இருந்து எலைன் ஹெஸ்பெர்க் வேகமாக சாலைக்குள் நுழைந்ததைப் பார்த்து, இதுபோன்ற சமயத்தில் மனிதனே ஒட்டியிருந்தாலும் விபத்தை தடுத்திருக்க முடிந்திருக்காது எனவும் தெரிவித்திருக்கிறார்கள்.    

விபத்தைத் தொடர்ந்து மற்ற சில இடங்களில் நடைபெற்று வந்த தானியங்கி கார் பரிசோதனைகளை உடனடியாக நிறுத்தியிருக்கிறது உபெர் நிறுவனம். விபத்து தொடர்பாக இரங்கல் தெரிவித்ததோடு மட்டுமின்றி, இதுதொடர்பாக விசாரணைக்கு முழுவதும் ஒத்துழைப்பு அளிப்பதாகவும் தெரிவித்தது.

இந்த விபத்துக்கு பொறுப்பேற்பது யார்?

எதிர்காலம் எப்படி இருக்கும் ?

கூகுள், ஆப்பிள், மைக்ரோசாஃப்ட் போன்ற தொழில்நுட்ப நிறுவனங்கள் முதல் ஆடி, டெஸ்லா, டொயோட்டா போன்ற ஆட்டோமொபைல்  நிறுவனங்கள் வரை பல நிறுவனங்கள் தானியங்கி கார்களை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டிருக்கின்றன. உபெர் நிறுவனத்தின் இந்த விபத்து எல்லா நிறுவனங்களுக்குமே ஒரு பாடம்தான். இதுவே சாதாரண கார் விபத்து என்றால், அதனை ஓட்டிவந்த ஓட்டுநர், விபத்துக்கு முழு பொறுப்பேற்க வேண்டியிருக்கும். அப்படி இந்த விபத்துக்கு யார் பொறுப்பு? உபெர் நிறுவனமா அல்லது அந்தக் காரின் தொழில்நுட்ப நிபுணரா? இப்படி நிறைய சட்டசிக்கல்களையும் எழுப்பியிருக்கிறது இந்த சம்பவம். இது இத்தோடு முடிந்துவிடுகிற பிரச்னை இல்லை என்பதால், இதற்கான தீர்வுகளை நிறுவனங்களும், அரசுகளும் உடனடியாக முன்வந்து கண்டறிய வேண்டும் என்பதே மக்களின் எதிர்பார்ப்பு. அப்போதுதான் எதிர்கால சாலைகளாவது பாதுகாப்பானவையாக இருக்கும்!