
எம்.கணேஷ்
தேனி மாவட்டம் பொட்டிபுரத்தில், நியூட்ரினோ ஆய்வுக்கூடத்தை அமைத்துக் கொள்ளலாம்' என அனுமதி அளித்திருக்கிறது மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சகம். இதனால் மீண்டும் தென் மாவட்டங்களில் நியூட்ரினோவுக்கு எதிரான குரல் ஒலிக்கத் தொடங்கியிருக்கிறது. இந்தப் பிரச்னை குறித்த அறிவியல்பூர்வமான விளக்கம்தான் இந்தக் கட்டுரை.
நியூட்ரினோ என்றால் என்ன?
நியூட்ரினோ என்பது சூரியனில் இருந்தும், இந்தப் பேரண்டத்தின் மற்ற விண்மீன்கள் இருந்தும் வெளிப்படும் ஒரு துகள். ஒரு மில்லிகிராம் எடையில் பல கோடி நியூட்ரினோ துகள்கள் இருக்கும். இந்த நியூட்ரினோ துகள், ஒளியின் வேகத்தில் பயணிக்கக் கூடியவை. தன் எதிரில் உள்ள எந்தப் பொருளையும் ஊடுருவிச் செல்லக்கூடியவை.
பொதுவாக, ஒரு பொருளை ஆராய்ச்சி செய்யவேண்டும் என்றால், அது மற்ற பொருளுடன் எப்படி வினை புரிகிறது என்பதை வைத்தே ஆய்வு மேற்கொள்ளப்படும். ஆனால், நியூட்ரினோ வேறு எந்தப் பொருளுடனும்
வினைபுரியாத மின் காந்த சக்தியற்ற துகள்கள் ஆகும். அதனாலேயே, நியூட்ரினோ பற்றி அறிந்துகொள்ள விஞ்ஞானிகள் மத்தியில் ஆய்வு செய்ய மோகம் அதிகரித்தது.

ஒவ்வொரு மைக்ரோ வினாடியும் நம்மைக் கடந்து செல்லும் இந்த நுண்துகள்கள் மீதான விஞ்ஞானிகளின் பார்வை 1930-ற்கு பிறகு தான் தீவிரமடையத்துவங்கியது. இந்திய விஞ்ஞானிகளின் பங்கிற்கு 1965-ல் கோலார் தங்கவயல் சுரங்கத்தில் காஸ்மிக் கதிர்களில் இருந்து உருவாகும் நியூட்ரினோ துகள்களை கண்டறிய ஒரு திட்டம் தீட்டப்பட்டு தோல்வியில் முடிந்தது. அதனைத் தொடர்ந்து ‘இந்திய நியூட்ரினோ அறிவியல் கூடம்’ (Indian Based Neutrino Observatory – INO) என்ற திட்டத்தை மத்திய அரசு உருவாக்கியது. அதன் அடிப்படையில் இந்தியா முழுவதிலும் உள்ள அறிவியல் நிறுவனங்கள், பல்கலைக்கழகங்களைச் சேர்ந்த விஞ்ஞானிகளைக் கொண்ட ஒரு குழு ஏற்படுத்தப்பட்டது.
அவர்கள், நியூட்ரினோ ஆய்வகம் அமைக்க சரியான இடத்தை தேர்வு செய்ய இந்தியா முழுவதும் பயணப்பட்டார்கள். குஜராத்திலும், தமிழக கேரள எல்லையான குமுளியிலும் இடங்களை தேர்வு செய்தாலும் அங்கே கடும் எதிர்ப்புகளை சந்தித்தனர். இறுதியாக, தேனி மாவட்டம் தேவாரம் அருகே பொட்டிபுரம் என்ற கிராமத்தில் இருக்கும் அம்பரப்பர் மலை, நியூட்ரினோ ஆய்வுக் கூடம் அமைக்க தேர்வானது.
என்ன செய்வார்கள்?
ஒரே பாறையினால் ஆன அதன் அமைப்புதான் பொட்டிபுரம் மலை தேர்வானதற்கு மிக முக்கிய காரணமாக சொல்லப்படுகிறது. மலையின் உச்சியில் இருந்து 1.3 கிலோ மீட்டர் கீழே, மலையின் பக்கவாட்டில் இருந்து 2.5 கிலோ மீட்டார் தூரத்தில் ஆய்வுக்கூடம் அமைக்கப்படும். அதன் உள்ளே நியூட்ரினோ துகள்களை கண்டறியும் டிடெக்டர் பொருத்தப்படும். ‘’இந்த ஆய்வுக்கூடம் அமைப்பதற்காக அம்பரப்பர் மலையை குடைய பல ஆயிரம் கிலோ வெடி மருத்துகள் பயன்படுத்துவார்கள். இதனால், அருகில் இருக்கும் 12 நீர் தேக்கங்கள் கடுமையாக பாதிக்கப்படும். குறிப்பாக முல்லைப்பெரியாறு பாதிக்கப்படும். இது ஒருபுறம் என்றால், யுனெஸ்கோவால் அங்கீகரிக்கப்பட்ட, பாதுகாக்கப்பட வேண்டிய பட்டியலில் இருக்கும் மேற்குத்தொடர்ச்சி மலையின் சூழலியல் பாதிப்புக்குள்ளாகும்." என்கிறார் பூவுலகின் நண்பர்கள் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் சுந்தர்ராஜன்.
நிறுத்தப்பட்ட பணிகள்
இத்திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்த இயற்கை ஆர்வலர்களுடன் பொட்டிபுரம் கிராம மக்களும், அருகே இருக்கும் டி.புதுக்கோட்டை, ராமகிருஷ்ணாபுரம், சின்ன பொட்டிபுரம், திம்மிநாயக்கன்பட்டி, குப்பனாசாரிபட்டி, தெற்குபட்டி ஆகிய கிராம மக்களும் இணைந்துகொண்டனர். சில சுற்றுச்சுழல் அமைப்புகளும், சில கட்சிகளும் அவர்களின் போராட்டத்திற்கு வலு சேர்க்க, மாபெரும் போராட்டங்கள் நடத்தப்பட்டன. அதனைத்தொடர்ந்து நியூட்ரினோ ஆய்வுப் பணிகளுக்கு எதிராக நீதிமன்றத்தில் சில வழக்குகள் தொடுக்கப்பட்டன. குறிப்பாக, இத்திட்டமானது தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் அனுமதி பெற்ற பின்னரே நடைமுறைப்படுத்த வேண்டும் என்று, ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ தாக்கல்செய்த பொதுநல வழக்கில் உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது. மேலும், தென்மண்டல பசுமைத் தீர்ப்பாயத்தில் பூவுலகின் நண்பர்கள் என்ற சுற்றுச்சூழல் அமைப்பு தொடுத்த வழக்கில், நியூட்ரினோ ஆய்வுத்திட்டத்திற்கு கொடுக்கப்பட்ட சுற்றுச்சூழல் அனுமதியை நிறுத்தி வைப்பதாக உத்தரவிடப்பட்டது. இதனால் இத்திட்டத்தை கைவிடும் நிலைக்குச் சென்றுவிட்டது மத்திய அரசு. அதுவரை நடைபெற்ற பணிகள் அனைத்தும் நிறுத்தப்பட்டன.

இச்சூழலில், 26/03/2018 அன்று நியூட்ரினோ ஆய்வுத்திட்டத்திற்கு முழுமையான அனுமதியை மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் வழங்கியுள்ளது. "நியூட்ரினோ திட்டத்தால் எந்தவித கதிர்வீச்சு அபாயமும் இல்லை. இத்திட்டத்திற்காக முல்லைப்பெரியாறு அணையில் இருந்து தினமும் 340 கி.லி தண்ணீரை எடுத்துக் கொள்ளலாம். இதனை சிறப்புத்திட்டமாக செயல்படுத்த அனுமதியளிக்கப்படுகிறது. இதனால், இனி பொதுமக்களின் கருத்துகள் கேட்க வேண்டிய அவசியம் இருக்காது. இதில் ஆட்சேபனை இருப்பில் 30 நாள்களுக்குள் பசுமை தீர்ப்பாயத்தில் வழக்கு தொடுக்கலாம்.’’ என்றும் அந்த அனுமதிக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.
‘’மக்களுக்கு பாதிப்பு ஏற்படும் என்று தெரியவந்தால், நியூட்ரினோ திட்டத்தை செயல்படுத்த விட மாட்டோம்.!’’ என ஒருமுறை துணை முதல்வர் பன்னீர்செல்வம் பேசினார். ஆனால், தற்போதைய அரசியல் சூழலை வைத்து பார்க்கும்போது, மத்திய அரசின் அறிவுறுத்தலின் பேரில், தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் அனுமதி கொடுக்க வாய்ப்பு உள்ளது. அதனைத் தொடர்ந்து, ’’நாட்டின் அறிவியல் வளர்ச்சிக்கு தேவையான நியூட்ரினோ சிறப்புத்திட்டம் நம் மாநிலத்தில் அமைவது நமக்கு பெருமை.!’’ என நம் முதல்வரும், துணை முதல்வரும் இணைந்து கூட்டறிக்கை வெளியிட்டாலும் ஆச்சர்யப்படுவதிற்கில்லை.
அணுசக்தி அறிவியலைக் கூட புரிந்துகொள்ள முடிகிறது; ஆனால், இவர்கள் செய்யும் அரசியலைத்தான் நம்மால் புரிந்துகொள்ள முடிவதேயில்லை.