
கார்க்கிபவா
தகவல்களைத் திருடும் வேலையைக் கிட்டத்தட்ட அனைத்து சமூக வலைதளங்களும் செய்து கொண்டுதானிருக்கின்றன. ஆனால், சொல்லிவிட்டு எடுப்பதால் அவை திருட்டில் வராதென அவர்கள் தரப்பு வாதங்கள் முன் வைக்கப்படுகின்றன. அப்படியென்றால், நம்மிடம் சொல்லாமலும் நம்மைப் பற்றிய டேட்டா எடுக்கப்படுகின்றனவா என்றால் ஆம் என்றுதான் சொல்ல முடியும்.

கேம்ப்ரிட்ஜ் அனலிடிகா பிரச்னையிலும் டேட்டாவை எடுக்க ஓர் ஆப் பயன்பட்டது. அதன் பெயர் “thisisyourdigitallife’. இதைப் போல ஏகப்பட்ட ஆப்களுக்கு நாம் ஃபேஸ்புக்கில் பர்மிஷன் தந்திருப்போம். அவற்றில் பல நம்மைப் பற்றிய அடிப்படை தகவல்களை மட்டுமே அணுகும். புதிர்கள் மற்றும் பெர்சனாலிட்டி டெஸ்ட் எனப்படும் ஆப்ஸ் இன்னும் கூடுதலான தகவல்களை நம்மிடம் கேட்கும். நாமும் யோசிக்காமல் அவற்றுக்கு அனுமதி தந்துவிடுவோம். அவையெல்லாம் நம் பெர்சனல் டேட்டாவை ஃபேஸ்புக் மூலம் உறிஞ்சிக்கொண்டிருக்கின்றன. அவற்றை எப்படி நீக்குவது?
எந்த எந்த ஆப்க்கு என்ன என்ன அனுமதி தந்திருக்கிறீர்கள் என்பதை https://www.facebook.com/settings?tab=applications என்ற முகவரிக்கு சென்று பார்க்கலாம். ஒரு சில ஆப்ஸ் உங்களுக்கு பரிச்சயமாக இருந்தாலும் பெரும்பாலான ஆப்ஸ்க்கு எப்போது அனுமதி தந்தோம் என்ற நினைவே இருக்காது.
ஏதாவது ஒரு ஆப்-ஐ க்ளிக் செய்தால் அந்த ஆப்புடன் என்ன என்ன விஷயங்களை பகிர்ந்து கொள்கிறோம் என்ற தகவலைப் பார்க்கலாம். அதில் வேண்டாதவற்றை பகிர்வதை தடுத்து நிறுத்தலாம். அந்த ஆப்-ஐயே நீக்கினால் மட்டுமே நம்மைப் பற்றிய அடிப்படை தகவல்களை (Basic information) பகிர்வதை நிறுத்த முடியும். ஆனால், முழுமையாக நீக்கிவிட்டால் அதுதொடர்பான பக்கங்களுக்கு இனி செல்ல முடியாது. எனவே, எந்த ஆப் எங்கு பயன்படுகிறது என்பதை யோசித்து அதன் பின் முழுமையாக நீக்குங்கள். ஒரு ஆப்-ஐ முழுமையாக நீக்கினாலும், அந்த நொடிவரை அவர்கள் நம்மைப் பற்றி எடுத்த தகவல்கள் அவர்களிடம் இருக்கும். அதற்கு ஃபேஸ்புக் ஒன்றும் செய்ய முடியாது.
இந்த பிரைவசி வசதியை எளிதாக்க, விரைவில் ஃபேஸ்புக்கில் சின்ன மாற்றம் ஒன்றை கொண்டுவரவிருப்பதாக அறிவித்திருக்கிறார் மார்க் ஸக்கர்பெர்க்.