
மு.ராஜேஷ்
இந்த மாதம் சந்தைக்கு வந்திருக்கும் இரண்டு மொபைல்கள் பற்றிய அறிமுகம் இங்கே.
நோக்கியா 1
ஏற்கெனவே நோக்கியா வெளியிட்ட ஃபிளாக்ஷிப் மொபைல்கள், நாஸ்டால்ஜிக் மொபைல்கள் எதுவும் பெரியளவில் கைகொடுக்காத நிலையில், தற்போது இன்னும் இறங்கிவந்து 6,000 ரூபாய் பட்ஜெட்டிற்குள் அடங்கும் வகையில் 'நோக்கியா 1' என்ற மாடலை வெளியிட்டிருக்கிறது. ஆனால், இந்தமுறையும் நோக்கியாவுக்கு ஏமாற்றமே மிஞ்சும் எனத்தெரிகிறது.
கம்மி விலை, நோக்கியா தரம்... இந்த இரண்டு விஷயங்கள் மட்டும்தான் இந்த போனில் கவனம் ஈர்க்கின்றன. மற்ற டெக்னிக்கல் விஷயங்கள் அனைத்திலும் நோக்கியா 1 நோஞ்சான்தான். 4.5 இன்ச் FWVGA IPS டிஸ்ப்ளே, 1 GB ரேம், 1.1 GHz மீடியாடெக் MT6737M பிராஸசர், 8 GB இன்டர்னல் மெமரி என எல்லா ஏரியாவிலும் ஆவரேஜ் பர்ஃபார்மன்ஸ்தான்.

6,000 ரூபாய்க்கு கிடைக்கும் மற்ற எல்லா மொபைல்களிலும் இதைவிட வசதிகள் அதிகமாகவே இருக்கும். குறைந்தபட்சம் 8 MP ரியர் கேமரா என்பதுதான் தற்போதைய ட்ரெண்ட். ஆனால், நோக்கியா 1-ல் இருப்பதோ வெறும் 5 MP-தான். முன்பக்கம் 2 MP. ஆபரேட்டிங் சிஸ்டம், ஆண்ட்ராய்டு ஓரியோ Go. இந்த OS உடன் இந்தியாவில் வெளிவரும் முதல் மொபைல் இதுதான். இதன் ஸ்பெஷல், குறைவான ரேம் கொண்ட மொபைல்களிலும் வேகமாக இயங்குவது மற்றும் குறைவான டேட்டாவை மட்டுமே செலவு செய்வது. இதில் இருப்பது 2150 mAh ரிமூவபிள் பேட்டரி. 4G வசதியும் உண்டு.
"பழைய மாடல் மொபைல்களில் இருந்து புதிதாக ஸ்மார்ட்போன்களுக்கு வருபவர்களுக்கு, நோக்கியா 1 சிறந்த தேர்வாக இருக்கும். இது அவர்களுக்கான மொபைல்" என்கிறது நோக்கியா. ஆனால், அவர்கள் ஏன் வசதிகள் நிறைந்த மற்ற மொபைல்களை விட்டுவிட்டு நோக்கியாவிற்கு வரவேண்டும்?
ரெட்மி 5
கடந்த வருடம் வெளியான பெரும்பாலான ஸ்மார்ட்போன்களின் அப்டேட் வெர்ஷன்களை ஏற்கெனவே அறிமுகப்படுத்திவிட்ட ஷியோமி, தற்போது அந்த வரிசையில் ரெட்மி 4-ன் அப்டேட்டட் மாடலான ரெட்மி 5-ஐ வெளியிட்டிருக்கிறது.
ரெட்மி 4-உடன் ஒப்பிடும்பொழுது வடிவமைப்பு, கேமரா, மற்றும் செயல்திறனில் பெரியளவில் மாற்றம் செய்திருக்கிறது ஷியோமி. மொபைல் சந்தையில் ட்ரெண்டிங்கில் இருக்கும் விஷயத்தை பட்ஜெட் ஸ்மார்ட்போனில் கொடுப்பதைத் தொடக்கத்தில் இருந்தே கடைபிடித்துவரும் ஷியோமி, தற்போதைய ட்ரெண்டான 18:9 டிஸ்பிளேவை இதில் கொடுத்திருக்கிறது.

5.7 இன்ச் 18:9 (1440 × 720) HD+ டிஸ்ப்ளே இதில் இருக்கிறது. பட்ஜெட் செக்மென்டில் இந்த வசதியைக்கொண்ட ஸ்மார்ட்போன்கள் குறைவு என்பது இதன் பிளஸ் பாயின்ட்.
18:9 டிஸ்ப்ளே என்பதால் மூன்று நேவிகேஷன் பட்டன்கள் டிஸ்ப்ளேவிற்கு உள்ளேயே கொடுக்கப்பட்டிருக்கின்றன. 1.8 GHz குவால்காம் ஸ்னாப்ட்ராகன் 450 ஆக்டாகோர் பிராசஸர் பயன்படுத்தப் பட்டிருக்கிறது. ரெட்மி 4-ல் குறைவான வெளிச்சத்தில் எடுக்கப்படும் புகைப்படங்கள் தரம் குறைவாக இருப்பதாக விமர்சனம் எழுந்தது.
எனவே, இந்த போனில் கேமராவை சற்று மேம்படுத்தியிருக்கிறது. இதில் 12 மெகாபிக்ஸல் பின்புற கேமரா மற்றும் 5 மெகாபிக்ஸல் முன்புற கேமரா இருக்கிறது. வெளிச்சம் குறைவான இடத்தில் செல்ஃபி எடுப்பதற்கு உதவும் வகையில் முன்புற கேமராவிற்கு ஃப்ளாஷ் வசதி இருக்கிறது. பேட்டரி திறன் 3300mAh. ஆண்ட்ராய்டு நெளகட் இயங்குதளத்தில் இயங்கவிருக்கிறது. தனது பிளாக்ஷிப் ஸ்மார்ட்போன்களுக்கு இணையான தரத்திலேயே பட்ஜெட் ஸ்மார்ட்போன்களும் தயாரிக்கப்படுவதால், கீழே விழுந்தாலும் அவ்வளவு எளிதில் இந்த மொபைல் பாதிப்படையாது என்கிறது ஷியோமி. இந்த ஸ்மார்ட்போனோடு ஒரு பேக் கவரையும் அளிக்கிறது.