
புக்மார்க்
‘ஓரிடத்தோரிடத்து’ என்ற பெயரில் இயங்கும் யூ ட்யூப் சேனலில், மலையாள எழுத்தாளர்களின் படைப்புகளுக்கு அவர்களே குரலும் கொடுத்துப் பதிவேற்றப்படுகிறது. இந்த வீடியோக்கள் எழுத்தாளர்களுடனான வாசகர்களின் நெருக்கத்தை இன்னும் அதிகமாக்குகிறது.

சமகாலப் படைப்புகளை அதனை எழுதியவர்களே வாசிக்க, காலம் சென்ற எழுத்தாளர்களின் கிளாசிக் படைப்புகளை இளைஞர்கள் சிலர் வாசிக்கிறார்கள்.

கார்ப்பரேட் சூழல் வேலைகள் பளபளப்பும் பதற்றமும் நிறைந்தவை. அதிகாரச் சூழலில் வாய் பொத்தி மௌன சாட்சிகளாகப் பணி செய்வதும் சகஜம். கொஞ்சம் கவனமாகப் பார்த்தால் கைகட்டி வேலை பார்க்கிற எல்லா வேலைகளிலுமே அடிமைத்தனம் ஒளிந்திருக்கிறது . ‘வேலைசூழுலகு’ என்ற சிறுகதைத் தொகுப்பு 14 எழுத்தாளர்களின் ‘வேலை’ தொடர்பான கதைகளை முன்வைக்கிறது. ஆதவன், எம்.ஜி.சுரேஷ், சுஜாதா, அசோகமித்திரன், கந்தர்வன், பாவண்ணன், அழகிய சிங்கர், சாந்தன், சுப்ரபாரதி மணியன் உள்ளிட்டோரின் கதைகளைக் கொண்டு வெளியாகியிருக்கும் இந்நூலைத் தொகுத்திருப்பவர்
எஸ். சங்கரநாராயணன்.
நிவேதிதா பதிப்பகம், சென்னை-92.

தோழர் உ.வாசுகி:
‘பி.எஸ் தனுஷ்கோடி வாழ்க்கை வரலாறு’ என்ற புத்தகம் என்னை, சிறுவயதிலேயே கொள்கையில் உறுதியானவராக மாற்ற உதவியது. இப்புத்தகம் மூலம் சாணிப்பால், சவுக்கடி, பண்ணையடிமைக் கொடுமைகள் போன்றவற்றை அறிய முடிந்ததுடன் கிராமப்புற மக்கள், சாதியரீதியாகவும் வர்க்கரீதியாகவும் ஒடுக்கப்பட்டு வருவதை மிகுந்த வலியுடன் உணர்ந்தேன். இந்தப் புத்தகமே கிராமங்களில் எனது அரசியல் அணிதிரட்டல் பணிகளுக்குப் பெரிதும் உதவியது. தற்போது ‘Lenin and the Russian Revolution’ புத்தகம் படித்து வருகிறேன். கிறிஸ்டோபர் ஹில் எழுதியது. சமகாலத்துக்கும் மிகவும் அவசியமான புத்தகம்.”

``எண்பதுகளுக்குப் பிறகான தமிழ்ப் புனைவெழுத்து உலகில், தமிழ்நாட்டு உருது முஸ்லிம் வாழ்வின் அறியப்படாத பக்கங் களைக் கொண்டுவந்து சேர்த்த படைப்பாளி அர்ஷியா. குறிப்பாக, தமிழ் இலக்கியத்தில் குறைவாகப் பதிவுசெய்யப்பட்ட மதுரை வட்டாரத்தைக் களமாகக் கொண்டவை இவருடைய கதைகள். எதிர்பாராமல் வரக்கூடிய நண்பர்களையும் விருந்தினர் களையும் உற்சாகமாக வரவேற்கும் அர்ஷியாவுக்கு, மரணமும் எதிர்பாராத விருந்தாளியாகவே வந்து நின்றது. முஸ்லிம்களின் வாழ்வியலை எழுத, ஏராளமான படைப்பாளிகள் இன்று வந்துவிட்டார்கள். ஆனால், தமிழகத்தில் கணிசமான எண்ணிக்கையில் வாழும் உருது முஸ்லிம்களின் மூடுண்ட வாழ்வியலை எழுதுவதற்கு, இன்னும் ஓர் அர்ஷியாவுக்காக நாம் பலகாலம் காத்திருக்க வேண்டும்.''
- ஹாமிம் முஸ்தபா(எழுத்தாளர்)

‘நீர் எழுத்து’ என்ற தனது புதிய புத்தகத்தில் சங்க காலம் தொடங்கி தற்போது வரை நீர் எவ்வாறு மேலாண்மை செய்யப்பட்டது, நீர் எப்படிச் செல்வமாக, வாழ்வாதாரமாக, வியாபாரமாக காலத்திற்கேற்ப மாறியது என்பது குறித்து எழுதிக் கொண்டிருக்கிறார் நக்கீரன். ‘‘பொ.ஐங்கரநேசன் எழுதிய ‘ஏழாவது ஊழி’ புத்தகத்தை அனைவரும் படிக்க வேண்டும். எழுத்தாளர் என்பவர், தான் வாழும் சமகாலத்தின் சமூகப் பிரச்னைகள், வாழ்க்கை முறை குறித்துத் துல்லியமாகப் பதிவு செய்யக்கூடிய படைப்புகளைக் கொண்டு வரவேண்டும்’’ என்கிறார் நக்கீரன்.

‘மணல்வீடு’ ஹரிகிருஷ்ணனிடம் ஒரு கேள்வி: “நாம் இருவரும் வளர்ந்து, சுற்றித் திரிந்ததெல்லாம் ஒரே ஊர்தான். ஆனால் நம்முடைய வட்டார வழக்குச் சொற்களை எப்படி உங்களால் மட்டும் துல்லியமாகப் படைப்புகளில் கொண்டுவர முடிகிறது?”
- ஆதவன் தீட்சண்யா

எழுத்தாளர் பேராசிரியர் நா.தர்மராஜன், ரஷ்ய இலக்கியங்களைத் தமிழில் படித்தவர்களுக்கு நன்கு அறிமுகமான பெயராக இருக்கும். இதுவரை நூற்றுக்கும் மேற்பட்ட நூல்களை ஆங்கிலம், ரஷ்ய மொழிகளிலிருந்து மொழி பெயர்த்துள்ளார். ரஷ்யாவில் எட்டு ஆண்டுகள் தங்கியிருந்து இலக்கியப் பணி செய்தார். ‘அன்னா கரீனினா’, ‘கேப்டன் மகள்’, ‘கஸாக்குகள்’, ‘துப்ரோவ்ஸ்கி’, ‘தஸ்தயேவ்ஸ்கி சிறுகதைகள்’, ‘டால்ஸ்டாய் சிறுகதைகள்’, ‘புஷ்கின் கதைகள்’, ‘அன்னை வயல்’, ‘குல்சாரி’, ‘அரசியல் பொருளாதாரத்தின் இளமைக்காலம்’, ‘குடும்பம், தனிச்சொத்து, அரசு ஆகியவற்றின் தோற்றம்’, ‘கம்யூனிஸ்ட் அறிக்கை தோன்றிய வரலாறு’ உள்ளிட்ட நூல்களை ரஷ்ய மொழியிலிருந்து நேரடியாக மொழிபெயர்த்தார். இப்போது தன்னுடைய சுயசரிதையை எழுதிக்கொண்டிருக்கிறார் நா.தர்மராஜன்.