பேட்டி - கட்டுரைகள்
தொடர்கள்
Published:Updated:

விண்வெளியில் அனிதாவின் கனவு...

விண்வெளியில் அனிதாவின் கனவு...
பிரீமியம் ஸ்டோரி
News
விண்வெளியில் அனிதாவின் கனவு...

சி.ய.ஆனந்தகுமார், படம்: என்.ஜி.மணிகண்டன்

பூமி  மாசுபடுவதைத் துல்லிய மாகக் கண்டறியும் மினி செயற்கைக்கோளை உருவாக்கி யுள்ளார் திருச்சி மாணவி வில்லட் ஓவியா. அதன் பெயர் ‘அனிதா சாட்’ என்பது இன்னும் சிறப்பு.

திருச்சி பெல் வளாகத்தில் உள்ள ஆர்.எஸ்.கே பள்ளியில் ப்ளஸ் டூ படிக்கிறார் வில்லட் ஓவியா.

“தொடர்ச்சியா எனக்கு அறிவியலில் ஆர்வம் இருந்தது. ‘ஏழாம் அறிவு’  என்னும் மாணவர்களுக்கான அறிவியல் கண்டுபிடிப்புகள் தொடர்பான ‘பொதிகை’ தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும் வாய்ப்பு கிடைத்தது. 30ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்துகொண்ட அந்த நிகழ்ச்சியில், இறுதியாக நான்தான் முதல்பரிசு பெற்றேன்.

இதுவரை நான், விவசாயிகளுக்கு உதவும் வகையில், மண்ணின் ஈரத்தன்மை குறித்துத் தெரிந்துகொண்டு அதற்கேற்ப தண்ணீர் பாய்ச்சும் கருவி, காது மற்றும் வாய் பேச இயலாத மாற்றுத் திறனாளிகளுக்காக அவர்களின் கை அசைவுகள் மூலம் அவர்களின் தேவையை ஒலியாகப் பிரதிபலிக்கும் கருவி என்று ஏராளமாக சின்னச் சின்னக் கருவிகளை உருவாக்கியிருக்கிறேன். ஒருமுறை விவசாயம் தொடர்பான என் கண்டுபிடிப்பை அப்துல் கலாம் பாராட்டினார்.

விண்வெளியில் அனிதாவின் கனவு...

என் கண்டுபிடிப்புகளில் ஒரு மைல் கல்லாக, இந்தச் செயற்கைக்கோளை உருவாக்கத் திட்டமிட்டு, இப்போது உருவாக்கியிருக்கிறேன்.

குளோபல் வார்மிங் முறையால் காற்று மாசுபடுவது மற்றும் காற்றில் இருக்கும் ஆக்ஸிஜன், கார்பன் உள்ளிட்ட மூலக்கூறுகளின் அளவுகளை இது கண்டுபிடிக்கும். இந்தச் செயற்கைக்கோளில் 4 சென்சார்கள், கைரோ மீட்டர், கேமரா மற்றும் ஜிபிஆர்எஸ் கருவிகள் பொருத்தியுள்ளேன். இதனால் செயற்கைக்கோளின் பயணத்தை மொபைல் மூலம் துல்லியமாகப் பார்த்துக்கொள்ள முடியும். புவியின் உள்வட்டப்பாதையில் பறக்க இருக்கும் இந்த மினி சாட்டிலைட், உலக வெப்பமயமாதலின் விளைவுகள் குறித்த தகவல்களைச் சேகரித்து நமக்கு அனுப்பும். 

இதற்கு அரியலூர் மாணவி அனிதாவின் பெயரை வைத்துள்ளேன். சிறந்த மருத்துவர் ஆகியிருக்க வேண்டிய அனிதா, நிறைவேறாத கனவோடு இறந்துபோனார். இப்போது இந்தச் செயற்கைக்கோள், எனது கனவை மட்டுமன்றி, அனிதாவின் கனவையும் சுமந்து விண்ணில் பாயவுள்ளது.”

கண்கள் மின்னப் பேசுகிறார் வில்லட் ஓவியா