
அதிஷா, ஓவியம்: கோ.ராமமூர்த்தி
‘2001: எ ஸ்பேஸ் ஒடிசி’ திரைப்படத்தில்தான், தன் மனித எஜமானரின் கட்டளையை எந்திரக் கதாபாத்திரம்

மறுத்துப் பேசிய முதல் காட்சி இடம்பெற்றது. உருவமற்ற சிவப்புக்கண் HALதான் உலகின் முதல் எந்திர வில்லன்.
1968-ல் திரைப்படம் வெளியாகி சென்றவாரத்தோடு 50 ஆண்டுகள் ஆகிவிட்டன. ஆர்தர்.சி.கிளார்க்கின் ‘The sentinel’ என்ற சிறுகதையை எடுத்துக்கொண்டு, எழுத்தாளரோடு அமர்ந்து மெருகேற்றி இரண்டு ஆண்டுகள் உழைத்து ‘2001 : A Space odysey’ படத்துக்கான கதையை உருவாக்கினார் இயக்குநர் ஸ்டான்லி குப்ரிக்.
ஸ்பீல்பெர்க் தொடங்கி ரிட்லி ஸ்காட், ஜார்ஜ் லூகஸ், ஜேம்ஸ் கேமரூன் என ஹாலிவுட் ஜாம்பவான்களை AI திரைப்படங்களை நோக்கி அழைத்து வந்தது குப்ரிக்கின் படம்தான். தொடர்ச்சியாக வெளியான இத்தகைய திரைப்படங்களில் பல்வேறுவிதமான ரோபோக்கள் சித்திரிக்கப்பட்டன. ஆனால், நடிக்கிற எந்திரங்களை, கதை எழுதுகிற, இசையமைக்கிற எந்திரங்களை, இயக்குநர் எந்திரங்களை அவர்கள் சினிமாவில் சித்திரித்தது இல்லை. ஆனால், விஞ்ஞானிகள் இதுகுறித்து சிந்திக்கத் தொடங்கிவிட்டனர்.

வாட்சன்
ஐபிஎம் ஒரு `சூப்பர் கம்ப்யூட்டரை உருவாக்கிக்கொண்டிருக்கிறது. இது மற்ற செயற்கை நுண்ணறிவுக் கணினிகள்போல இல்லாமல், முழுக்கவே திரைக்கலைஞனாக வார்க்கப்படுகிறது. இதன் பெயர் வாட்சன். சில ஆண்டுகளுக்கு முன்புவரை வாட்சன் ஒரு சமையல்காரனாக இருந்தது. வீட்டில் தக்காளி, வெங்காயம், புளி, சிக்கன் இருக்கிறது என்று வாட்சனிடம் சொல்லிவிட்டால் போதும், அதை வைத்துக்கொண்டு புதுமையாக என்ன சமைக்கலாம் என உடனே சொல்லிவிடும். வெவ்வேறு நாடுகளைச் சேர்ந்த உணவுகளைக் கலந்து வித்தியாசமான ரெசிப்பிகளுக்காக ஐடியா கொடுக்கிற எந்திரனாக இருந்தவர் இவர்! வாட்சனின் பீமபாகத் திறமைகளை இங்கே காணலாம்! https://www.ibmchefwatson.com/community
இந்த விருந்தோம்பல் விற்பன்னர் வாட்சனைத்தான் திரைக்கலைஞராக மாற்றும் முயற்சியில் ஈடுபட்டிருக்கிறது ஐபிஎம். வாட்சனின் அறிவை எப்படியெல்லாம் விரிவாக்கி அதை சினிமாவுக்குப் பயன்படுத்தமுடியும் என்பதை அறிந்துகொள்ள பெரிய போட்டி ஒன்றை அறிவித்தது ஐபிஎம். அதில் திரைக்கலைஞர்களும் விஞ்ஞானிகளும் கூட்டாகக் கலந்துகொண்டனர். போட்டியில் இரண்டு யோசனைகள் வெற்றி பெற்றன.
1 - எழுதப்பட்ட ஸ்க்ரிப்டுகளை அப்படியே வானொலி நாடகம்போலக் குரல்பதிவாக மாற்றி அமைப்பது. வெவ்வேறு விதமான குரல்களை ஒலிக்கச்செய்யும் ஆற்றல் கொண்ட வாட்சன், திரைக்கதையை முழுமையான ஆடியோ பதிவாக மாற்றிக்கொடுத்துவிடும்,
2 - வெவ்வேறு காட்சிகளைப் பார்த்துப் புரிந்துகொண்டு அவற்றையெல்லாம் வெட்டி ஒட்டி எடிட் செய்து தருவது.
இதில் நம்பர் ஒன் சாத்தியமாக இன்னும் சில ஆண்டுகள் ஆகும் என்கிறார்கள். ஆனால், இரண்டாவது பாய்ன்ட்டை ஏற்கெனவே கொஞ்சம் முயற்சி செய்து பார்த்திருக்கிறார்கள். 2016-ல் வெளியான மோர்கன் என்கிற ஹாலிவுட் படத்தைக்கொடுத்து ‘`திருவாளர் வாட்சன் அவர்களே, ஒரு நல்ல பரபர ட்ரைலர் கட் பண்ணிக்கொடுங்க’’ என்று கேட்டிருக்கிறார்கள். ஒரே நாளில் பக்காவாகப் பண்ணிக்கொடுத்துவிட்டார் வாட்சன்.
இந்த ட்ரைலரைத் தயாரித்தது ஒரு கணினி என்று யாருமே நம்ப முடியாத அளவுக்கு அது இருந்தது. படம் மொக்கைதான். ஆனால், ட்ரைலர் நன்றாக இருக்கிறது. படமும் செயற்கை நுண்ணறிவு பற்றியதுதான். பிரியப்பட்டால் ட்ரைலரை இங்கே பார்க்கலாம். https://youtu.be/gJEzuYynaiw
இன்னும் என்னென்ன மேஜிக்கெல்லாம் வாட்சன் காட்டப்போகிறான் என்பதை இப்போதைக்குப் பார்க்க முடியாது. அவன் இப்போதுதான் கற்கிறான். ஆனால் பென்ஜமின் படமெடுக்கத் தொடங்கிவிட்டான்!
பென்ஜமின்
ஐபிஎம் சிந்தித்துக்கொண்டிருக்கும்போதே பென்ஜமினை வைத்து இரண்டு ஆண்டுகளில் இரண்டு குறும்படங்களை எடுத்து வெளியிட்டுவிட்டார் இயக்குநர் ஆஸ்கர் ஷார்ப்.
Introducing The First ever machine script writer Benjamin. பென்ஜமினின் திரைக்கதையில் எடுக்கப்பட்ட இரண்டு குறும்படங்களையும் இங்கே காணலாம்.
குறும்படம் 1 - https://www.youtube.com/watch?v=5qPgG98_CQ8
குறும்படம் 2 - https://www.youtube.com/watch?v=LY7x2Ihqjmc&feature=youtu.be
சில ஆண்டுகளுக்கு முன்பு இங்கிலாந்தைச் சேர்ந்த இயக்குநர் ஆஸ்கர் ஷார்ப்புக்கு ஓர் ஆசை வந்தது. தன்னுடைய அடுத்த குறும்படத்தின் திரைக்கதையை ஓர் எந்திரத்தை வைத்து எழுதவைத்தால் என்ன? கூப்பிடு ரோஸ் குட்வின்னை. ரோஸ் ஒரு செயற்கை நுண்ணறிவு ஆராய்ச்சியாளர். இருவரும் கூட்டாக இணைந்து, திரைக்கதை எழுதும் ஓர் எந்திர எழுத்தாளரை உருவாக்க முனைந்தனர். உலகின் முக்கியமான சயின்ஸ் ஃபிக்ஷன் திரைக்கதைகளை நியூரல் மூளைக்குள் ஏற்றுவது, சிட் ஃபீல்டில் தொடங்கி பிளாக் ஸ்னைடர் வரைக்குமான திரைக்கதை ஜாம்பவான்களின் அடிப்படைகளைக் கற்றுக்கொடுப்பது என்று, பென்ஜமினை உருவாக்கினார்கள். முதலில் ‘ஜெட்சன்’ என்றுதான் பெயர் வைக்கப்பட்டது. ஆனால் அந்தப் பெயர் பிடிக்காமல் தனக்குத்தானே ‘பென்ஜமின்’ எனப் பெயர் சூட்டிக்கொண்டிருக்கிறார் இந்த ஸ்க்ரிப்ட் ரைட்டர். படத்துக்கான திரைக்கதையை மட்டுமல்ல, தீம் சாங்கையும் எழுதிக்கொடுத்து விட்டார் பென்ஜமின். பென்ஜமினின் மூளைக்குள் 30,000 பாடல்களையும் கொட்டி வைத்திருக்கிறார்கள்.
பென்ஜமினின் குறும்படங்களைப் பார்த்த ஊடகங்கள் ‘புதுமையாக இருக்கின்றன’ எனப் பாராட்டின. சில விமர்சகர்கள் “This is gibberish” என்றனர். லண்டனில் நடந்த அறிவியல் புனைவு குறும்படப் போட்டியில் கலந்துகொண்டு பென்ஜமின் பரிசுகள் பெற்றான். அநேகமாக ஆஸ்கரின் அடுத்த Feature filmக்கு பென்ஜமினே திரைக்கதையாசிரியர் ஆகலாம்!
அர்ரே
மனிதர்களைவிடக் கச்சிதமாக கிராபிக்ஸ் பண்ணுகிற எந்திரம் இது.
பொறியியல் வல்லுநர்கள், செயற்கை நுண்ணறிவு ஆராய்ச்சியாளர்கள், ரோபோடிஸிஸ்ட்ஸ், திரைப்பட ஆர்வலர்கள் என வலுவான டீம் ஒன்றிணைந்து இந்த அர்ரேவை உருவாக்கிக்கொண்டிருக்கிறார்கள். கிட்டத்தட்ட 50 கோடி ரூபாய் அளவுக்குப் பணத்தைக் கொட்டிக்கொடுத்திருக்கிறது சிலிக்கான் வேலி.
காட்சிகளைப் பார்த்துப் புரிந்துகொண்டு அதில் எந்த மாதிரியான கிராபிக்ஸ் வேலைகளைச் செய்யவேண்டுமோ அதைச் சில நிமிடங்களில் செய்து தரக்கூடியதாக இருக்கப்போகிறது. சினிமாவில் மிகவும் பிரபலமான விஷயம் `ரோட்டோ ஸ்கோப்’. ஃப்ரேமில் இருக்கிற உருவத்தையும் பின்னணியையும் தனித்தனியாகப் பிரித்தெடுப்பது. இதன்மூலம் நிறைய கிராபிக்ஸ் வேலைகள் பார்க்க முடியும். இந்த வேலையை மனிதர்கள்தாம் ஆதியிலிருந்தே செய்து வருகிறார்கள். இது பல நாள்கள் பிடிக்கிற கடுமையான உடல் உழைப்பைக் கோரும் வேலை. இதைத்தான் அர்ரே சில நிமிடங்களில் செய்து தருகிறான். அதனால்தான் அர்ரேவுக்கு 50 கோடிக்கு ஸ்பான்சர் கிடைத்திருக்கிறது!

ரோட்டோஸ்கோப் மட்டுமல்ல, இன்னும் பல வேலைகள் செய்யக்கூடியவன் இவன் என்கிறார்கள். ஏற்கெனவே Human race என்ற குறும்படத்திலும் , Black eyed peas-ன் Street Livin என்ற இசை ஆல்பத்திலும் வேலை பார்த்துக் கொடுத்திருக்கிறான் அர்ரே. ‘சீக்கிரமே வர்றேன்டா ஹாலிவுட்டுக்கு’ என கிராபிக்ஸ் கலைஞர்களுக்கு அல்லு கிளப்பிக்கொண்டிருக்கிறான்.
உலக சினிமாக் கலைஞர்கள் எல்லாம் கொஞ்சம் அச்சத்தில்தான் இருக்கிறார்கள். சினிமாவை ஆக்கிரமிக்கப்போகும் இந்த ‘HAL’-கள் தங்கள் வேலைகளைப் பறித்துவிடும் என்ற கவலை அமெரிக்காவைத் தாண்டி, கோடம்பாக்கம் நோக்கி வந்துகொண்டிருக்கிறது.
எல்லாமே கணினி மயமானபோது உருவான அதே கவலை. டிஜிட்டல் கேமராவும், எடிட் ஷூட்டும், இசை சிந்தசைசர்களும், புளூமேட்டும் வந்தபோது உண்டான அதே பதற்றம்... என்னாகும் எதிர்காலம் என்கிற கவலை... என்னதான் ஆகும் எதிர்காலம்?