
சொக்கலிங்கம் பழனியப்பன்
நிதித் திட்டமிடல் என்றால் என்ன... அது அவசியமா?

இன்றைய இளைஞர்களிடம் இல்லாத பழக்கம் `நிதித் திட்டமிடல்.’ செலவழி, சம்பாதி என்பது ஒருகட்டத்துக்குமேல் உதவாது. 35 வயதைத் தாண்டி விட்டால், `நிதித் திட்டமிடல் எவ்வளவு முக்கியம், நாம் முன்னரே கொஞ்சம் திட்டமிட்டுப் பணம் சேர்த்திருக்கலாமே!’ என வருத்தப்படவைக்கும் அளவுக்கு மன அழுத்தம் கூடும் என்பதே உண்மை.
நிதித் திட்டமிடல் என்பது, மிகவும் எளிதானது. உங்களுக்கு நிதி சார்ந்த புரிதல் இருக்கையில், மிகவும் எளிதாக நீங்களே திட்டமிட்டுக்கொள்ளலாம். இல்லையேல், ஒரு நிதி ஆலோசகரின் உதவியுடன் அதைச் செய்து கொள்ளலாம். இந்த நிதித் திட்டமிடலில், முதற்கட்டமாக உங்களுக்குப் போதுமான அளவில் ஹெல்த் மற்றும் டேர்ம் லைஃப் இன்ஷூரன்ஸ் உள்ளதா என ஆராய வேண்டும். போதுமான அளவில் இல்லாதபோது முதலில் அவற்றைப் பூர்த்திசெய்துகொள்ள வேண்டும். உங்கள் வருமானத்துக்கு ஏற்றாற்போல் டேர்ம் லைஃப் இன்ஷூரன்ஸ் எடுத்துக்கொள்ள வேண்டும். உங்கள் ஆண்டு வருமானத்தைப்போல் 10, 20 மடங்கு உங்களுக்கு டேர்ம் இன்ஷூரன்ஸ் அவசியம்.
குடும்பத்தில் இருக்கும் ஒவ்வொரு நபருக்கும் குறைந்தபட்சமாக ஐந்து லட்சம் ரூபாய்க்காவது மருத்துவக் காப்பீடு இருக்க வேண்டும். அதிக மருத்துவச் செலவு ஏற்படலாம் என எதிர்பார்ப்பவர்களுக்கு, டாப்-அப் ஹெல்த் இன்ஷூரன்ஸும் உள்ளது. பெரிய நகரங்களில் வாழ்பவர்கள், சற்று அதிகமான ஹெல்த் இன்ஷூரன்ஸ் கவரேஜ் வைத்துக்கொள்வது அவசியம்.

அடுத்த கட்டமாக, உங்களின் அவசரகாலத் தேவைகளுக்குப் பணம் எவ்வளவு தேவைப்படும் என்பதைக் கண்டறிய வேண்டும். இதில் உங்களுக்கு திடீரென வருமானம் நின்றுவிட்டால், சில மாதங்கள் உங்கள் குடும்பத்தை நடத்த பணம் எவ்வளவு தேவைப்படும் என்பதும் அடக்கம். உங்கள் மாதச் செலவுகளைக் கணக்கிடுங்கள், இ.எம்.ஐ உட்பட! உத்தேசமாக மாதச் செலவுகளைப்போல் ஆறு மடங்கு (6 மாதச் செலவுகளுக்காக) எமர்ஜென்சி ஃபண்டில் வைத்துக்கொள்வது சிறந்தது. இதற்காக, மியூச்சுவல் ஃபண்டுகளில் ஒரு வகையான லிக்விட் ஃபண்டுகளில் முதலீடு செய்துகொள்ளலாம்.
இன்று பலருக்கும் ஓய்வூதியம் இல்லை. ஆகவே, உங்களின் ஓய்வுகாலத்துக்கு எவ்வளவு பணம் தோராயமாகத் தேவைப்படும் என்பதை உங்களின் இன்றைய வாழ்க்கைச் செலவை வைத்துக் கணக்கிட்டுக்கொள்ளலாம். அவ்வாறு கணக்கிடும்போது, வருடத்துக்கு சுமார் 6 சதவிகிதம் பணவீக்கத்தைக் கணக்கில் எடுத்துக்கொள்ளுங்கள். அந்தச் செலவுகளைச் சமாளிக்க, நீங்கள் இன்றிலிருந்து எவ்வளவு முதலீடு செய்ய வேண்டும் என்பதையும் கணக்கிட்டுக்கொள்ளலாம். அந்தத் தொகையை நீண்டகால முதலீட்டு உபகரணங்களான பங்கு சார்ந்த மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்துகொள்ளலாம்.
உங்களின் வயது சுமார் 40 என வைத்துக்கொள்வோம். இப்போது உங்களின் குடும்பச் செலவு 20,000 ரூபாய் என எடுத்துக்கொள்வோம். வருடத்துக்கு 6 சதவிகிதப் பணவீக்கம் அடிப்படையில், இன்னும் 20 வருடங்களில் இதே அளவில் செலவு செய்வதற்கு உங்களுக்கு சுமார் 64,000 ரூபாய் தேவைப்படும். உங்களது 60-வது வயதில் மாதத்துக்கு அந்த 64,000 ரூபாய் கிடைக்க, நீங்கள் சுமார் 1 கோடியே 10 லட்சம் ரூபாய் சேர்த்திருக்க வேண்டும். அந்தப் பணத்தைச் சேமிக்க நீங்கள் மாதம் சுமார் 13,000 அடுத்த 20 வருடங்களுக்கு மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்துவர வேண்டும். இதுபோல் உங்கள் தேவைக்கேற்ப உங்களின் ஓய்வுக்கால நிதிக்கு ப்ளான் செய்துகொள்ளுங்கள்.
இவை தவிர, உங்கள் குழந்தைகளின் கல்லூரிப் படிப்புச் செலவுகள் மற்றும் திருமணச் செலவுகளுக்கும் கணக்கிட்டு, முதலீட்டை மேற்கொள்ளலாம்.
நீங்கள் எவ்வளவு சம்பாதிக்கிறீர்கள் என்பது முக்கியமல்ல; அதில் எவ்வளவு சேமிக்கிறீர்கள், எவ்வளவு முதலீடு செய்கிறீர்கள் என்பதுதான் முக்கியம்! உங்களின் மாத வருமானம் 10 ஆயிரம் ரூபாய்க்குள் இருந்தால், குறைந்தது உங்கள் வருமானத்தில் 10 சதவிகிதத்தைச் சேமியுங்கள். மாதத்துக்கு 10,001 - 20,000 சம்பாதிப்பவர்கள், குறைந்தது 15 சதவிகிதத்தைச் சேமியுங்கள். 20,001- 30,000 வரை மாதச் சம்பாத்தியம் உள்ளவர்கள், 20 சதவிகிதத்தைச் சேமியுங்கள். 30,001 – 50,000 வரை வருமானம் உள்ளவர்கள் 25 சதவிகிதத்தைச் சேமியுங்கள். 50,001 – 75,000 வரை மாதச் சம்பாத்தியம் உள்ளவர்கள் 30 சதவிகிதத்தைச் சேமியுங்கள். அதற்குமேல் வருமானம் உள்ளவர்கள் 40 சதவிகிதத்தைச் சேமியுங்கள். உங்களின் வருமானம் அதிகமாக அதிகமாக, உங்களின் சேமிப்பும் முதலீட்டு சதவிகிதமும் அதிகரிக்க வேண்டும்.
சேமிப்பு, முதலீடு செய்வது பெரிதல்ல. அவற்றை அதிக வளர்ச்சி தரக்கூடிய அதே சமயத்தில் அரசாங்கக் கட்டுப்பாட்டுடன்கூடிய பாதுகாப்பான முதலீட்டு வழிமுறைகளில், முதலீடு செய்வது முக்கியம். இவை அனைத்தும் ஒருசேரக் கிடைக்கக்கூடிய ஒரு முதலீட்டு வழிமுறை என்றால், அது மியூச்சுவல் ஃபண்டுதான்.
நிதித் திட்டமிடல், பணக்காரர்களுக்கு மட்டுமல்ல... சாமானியர்களுக்கும் முக்கியம்!
- வரவு வைப்போம்...