நடப்பு
தொடர்கள்
Published:Updated:

முதிர்வுத் தொகையைப் பெற மியூச்சுவல் ஃபண்ட் டாக்குமென்ட் அவசியமா?

முதிர்வுத் தொகையைப் பெற மியூச்சுவல் ஃபண்ட் டாக்குமென்ட் அவசியமா?
பிரீமியம் ஸ்டோரி
News
முதிர்வுத் தொகையைப் பெற மியூச்சுவல் ஃபண்ட் டாக்குமென்ட் அவசியமா?

கேள்வி - பதில்

முதிர்வுத் தொகையைப் பெற மியூச்சுவல் ஃபண்ட் டாக்குமென்ட் அவசியமா?

எனது தந்தை, எஸ்.பி.ஐ டூயல் அட்வான்டேஜ் சீரிஸ் XII மியூச்சுவல் ஃபண்டின் ஒரிஜினல் டாக்குமென்டைத் தவறவிட்டுவிட்டார். இனி ஒரிஜினல் சான்றிதழைத் திரும்பப் பெறமுடியுமா? இந்த ஃபண்டின் லாக்-இன் பீரியட் ஏப்ரல் 2019-ல் முடிகிறது. அப்போது முதிர்வுத் தொகை தானாகவே அக்கவுன்டில் சேர்ந்து விடுமா? 2016-ம் ஆண்டில் இதில் ஒரு லட்சம் ரூபாய் முதலீடு செய்துள்ள சூழலில், தற்போது இந்த ஃபண்டின் வருமானம் எப்படி உள்ளது? 

இந்துமதி, மெயில் மூலமாக

சுரேஷ் பார்த்தசாரதி, முதலீட்டு ஆலோசகர்

‘‘மியூச்சுவல் ஃபண்டைப் பொறுத்தவரை, ஒரிஜினல் டாக்குமென்ட் என்று எதையும்  பத்திரப்படுத்த வேண்டிய அவசிய மில்லை. மியூச்சுவல் ஃபண்டின் ஃபோலியோ எண்ணைத் தெரிந்து வைத்திருந்தால் போதுமானது. அது தெரியாவிட்டால் உங்களுடைய பான் கார்டு எண் இருந்தால், அதை வைத்து மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு குறித்த ஸ்டேட்மென்ட்டை எடுத்துவிடலாம். அல்லது அந்த மியூச்சுவல் ஃபண்டின் வெப்சைட்டில் லாகின் செய்து அதன்மூலம் ஆன்லைனில் ஸ்டேட் மென்ட்டைப் பெறலாம்.

அடுத்ததாக, ஏப்ரல் 2019-ல் முதிர்ச்சி அடையும்போது ஆட்டோமேட்டிக்காக உரியவரின் அக்கவுன்டில் முதிர்வுத்தொகை செலுத்தப்பட்டுவிடும்.

இந்த மியூச்சுவல் ஃபண்ட் தற்போது ஆண்டுக்கு சராசரியாக 7.4% வருமானம் தந்துள்ளது.’’

சென்னையில் இரண்டு மாடிகள் கொண்ட ஒரு வீட்டினைக் கட்ட வேண்டும் என்றால், சி.எம்.டி.ஏ அனுமதி பெறவேண்டுமா?

கணபதி, மாதவரம், சென்னை

பார்த்தசாரதி, மதிப்பீட்டாளர், சார்ட்டர்ட் இன்ஜினீயர்

முதிர்வுத் தொகையைப் பெற மியூச்சுவல் ஃபண்ட் டாக்குமென்ட் அவசியமா?

‘‘இரண்டு மாடிகள் கொண்ட ஒரு வீட்டைக் கட்டவேண்டுமென்றால், சி.எம்.டி.ஏ-வானது, அதற்கு அனுமதி வழங்கும் உரிமையைச் சென்னை மாநகராட்சிக்கே வழங்கிவிட்டது. இரண்டு மாடிகள் அல்லது கார் பார்க்கிங் தளத்தோடு சேர்ந்த இரண்டு மாடிகள் கட்டுவதாக இருந்தாலும் அதற்கான அனுமதியைச் சென்னை மாநகராட்சியில்தான் வாங்கவேண்டும். அந்த அனுமதியை ஆன்லைன் மூலமாகவும் செய்யலாம். கட்டடத்தின் வரைபடம், பட்டா உள்ளிட்ட ஆவணங்களை ஆன்லைனிலேயே அப்லோட் செய்யலாம். இப்படி அப்லோட் செய்ய தெரிய வில்லை என்றால், இதற்கென்றே மாநகராட்சி உரிமம் பெற்ற நில அளவையாளர்கள் (Licensed Surveyors) இருக்கிறார்கள். அவர்களை அணுகினால், அனைத்தையும் செய்துதருவார்கள். அதனை மாநகராட்சி அதிகாரிகள் சரிபார்த்து, அனுமதிச் சான்றிதழைத் (Approved) தருவார்கள்.

இதன்பின்னர், அந்த ‘அப்ரூவ்டு’ நகலை எடுத்துக்கொண்டு மண்டல அலுவலகத்தை அணுக வேண்டும். சென்னை மாநகராட்சியைப் பொறுத்தவரை, 10 மண்டலங்கள் உள்ளன. ஒவ்வொரு மண்டலத்திலும் 20 டிவிஷன்கள் இருக்கும். உங்களுடைய டிவிஷன் எந்த மண்டலத்திற்குள் வருகிறது எனப் பார்த்து, அந்த மண்டல அதிகாரியை நேரில் அணுக வேண்டும். அவருக்குக் கீழே இருக்கும் எக்ஸிகியூட்டிவ் இன்ஜினீயரிடம் அந்த ஆன்லைன் நகலைக் கொடுத்து விண்ணப்பிக்க வேண்டும்.

அவர்கள் விண்ணப்பத்தைப் பரிசீலித்து, கட்டட அனுமதிக்காக நிர்ணயிக்கப்பட்ட தொகையைப் பெற்றுக்கொண்டு அனுமதியளிப்பார்கள்.’’

என் வயது 45. தபால் நிலைய என்.எஸ்.சி மற்றும் வங்கி வைப்புநிதி மூலமாகக் கிடைத்த 5 லட்சம் ரூபாயை, ஐந்து ஆண்டு காலத்திற்கு மொத்தமாக மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்ய விரும்புகிறேன். எனக்கேற்ற சில ஃபண்டுகளைப் பரிந்துரைக்கவும்.

திருமுருகன், வந்தவாசி

என்.விஜயகுமார், நிதி ஆலோசகர்

முதிர்வுத் தொகையைப் பெற மியூச்சுவல் ஃபண்ட் டாக்குமென்ட் அவசியமா?

‘‘உங்களுடைய கடந்த கால முதலீடு, வயது மற்றும் ஐந்தாண்டு கால அளவையும் கணக்கில் கொண்டு சில மியூச்சுவல் ஃபண்டுகளைப் பரிந்துரைக்கிறேன். ஐ.சி.ஐ.சி.ஐ புரூடென்ஷியல் ரெகுலர் சேவிங்க்ஸ் ஃபண்ட், டி.எஸ்.பி.பி.ஆர் கிரெடிட் ரிஸ்க் ஃபண்ட், ஹெச்.டி.எஃப்.சி. பேலன்ஸ்டு ஃபண்ட், ஐ.டி.எஃப்.சி ஃபோகஸ்டு ஈக்விட்டி ஃபண்ட், ஆதித்ய பிர்லா எஸ்.எல் ஈக்விட்டி ஃபண்ட் ஆகிய ஐந்து மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களில் 5 லட்சம் ரூபாயைப் பிரித்து முதலீடு செய்யலாம்.’’ 

கடந்த 2015-ம் ஆண்டில் ஓய்வுபெற்ற எனது தந்தை, அவருக்குக் கிடைத்த கிராஜுவிட்டித் தொகை முழுவதையும் சீனியர் சிட்டிசன் சேமிப்புத் திட்டத்தில் (எஸ்.சி.எஸ்.எஸ்) முதலீடு செய்துள்ளார். அவரிடம் கூடுதலாக ரூ.10 லட்சம் இருக்கிறது. அதை என் அம்மாவின் பெயரில் இன்னொரு       எஸ்.சி.எஸ்.எஸ் திட்டத்தில் முதலீடு செய்யலாமா?

செந்தில்குமார், சிவகாசி 

த.சற்குணன், நிதி ஆலோசகர்

முதிர்வுத் தொகையைப் பெற மியூச்சுவல் ஃபண்ட் டாக்குமென்ட் அவசியமா?

‘‘உங்களுடைய அம்மாவின் பெயரில் தனியாக சீனியர் சிட்டிசன் சேமிப்புத் திட்டத்தில் முதலீடு ஆரம்பிக்கவேண்டுமானால், அம்மாவுக்கு 60 வயது நிரம்பியிருக்க வேண்டும். அல்லது அப்பா மற்றும் அம்மாவின் பெயரில் இணைந்து எஸ்.சி.எஸ்.எஸ்-ல் முதலீடு செய்யலாம். அல்லது உங்கள் அப்பாவின் பெயரிலேயே தனியாக மற்றொரு எஸ்.சி.எஸ்.எஸ் அக்கவுன்ட் தொடங்கி அதில் முதலீடு செய்யலாம். ஒருவர் ஒன்றுக்கு மேற்பட்ட சீனியர் சிட்டிசன் சேமிப்புத் திட்டக் கணக்குகளைத் தொடங்கலாம். ஆனால், அனைத்து கணக்குகளிலும் சேர்த்து மொத்த முதலீடு ரூ.15 லட்சத்தைத் தாண்டக்கூடாது.’’

முப்பது வயதாகும் எனக்கு மாதம் ரூ.12,000 என்கிற வீதத்தில், ஆறு ஆண்டு காலத்திற்கு முதலீடு செய்வதற்கேற்ற முதலீட்டு ஆலோசனையைக் கூறவும்.

கதிரேசன், திருப்பூர்

ஸ்ரீகாந்த் மீனாட்சி, துணை நிறுவனர், ஃபண்ட்ஸ் இந்தியா

முதிர்வுத் தொகையைப் பெற மியூச்சுவல் ஃபண்ட் டாக்குமென்ட் அவசியமா?

‘‘ஆறு ஆண்டுகள் என்பது நீண்ட கால முதலீட்டில் சேரும். நீங்கள் இளம் வயதுடையவரும் கூட. ஆகையால், உங்களுக்கு ஓரளவுக்கு நல்ல ரிஸ்க் இருக்கும் முதலீட்டுத் திட்டத்தைப் பரிந்துரை செய்யலாம். பங்குச் சந்தையில் 80%, கடன் சந்தையில் 20% முதலீடு செய்யுமாறு ஒரு முதலீட்டுத் தொகுப்பினை நீங்கள் பயன்படுத்த லாம். அதன்படி ஆதித்ய பிர்லா சன் லைஃப் ஃப்ரன்ட்லைன் ஈக்விட்டி ஃபண்டில் ரூ.4,000, மிரே அஸெட் இந்தியா ஈக்விட்டி ஃபண்டில் ரூ.3,000, ஹெச்.டி.எஃப்.சி. பேலன்ஸ்டு  ஃபண்டில் ரூ.3,000, மற்றும் யூ.டி.ஐ ஷார்ட் டேர்ம் இன்கம் ஃபண்டில் ரூ.2,000 முதலீடு செய்யலாம்.’’

கடந்த 2016 நவம்பர் மாதத்தில் எனது அண்ணனின் மருத்துவச் சிகிச்சைக்காக இரண்டு லட்சம் ரூபாயைச் செலவழித்திருந்தேன். அவரது வயது 65. புற்றுநோய்க்கான சிகிச்சை மேற்கொள்ளப் பட்டது. அந்த மருத்துவச் செலவை 2016-17 -ம் ஆண்டு வருமானவரி கணக்கினைத் தாக்கல் செய்யும்போது இணைக்கத் தவறிவிட்டேன்.  இப்போது இந்தச் செலவைக் குறிப்பிட்டு வரிக் கணக்குத் தாக்கலை மாற்ற முடியுமா?

ராஜேஷ்குமார், கோவில்பட்டி

என்எம்.இளங்குமரன், ஆடிட்டர்

முதிர்வுத் தொகையைப் பெற மியூச்சுவல் ஃபண்ட் டாக்குமென்ட் அவசியமா?

‘‘80டிடிபி-யின்படி, தனது சொந்த அல்லது தன்னைச் சார்ந்தவர்களின், சகோதரர்களின் மருத்துவச் செலவை வரிக் கழிவுக்குக் கணக்கு காட்டி க்ளெய்ம் செய்ய முடியும். ரூ.40,000 வரை கணக்கு காட்டலாம். அதுவே அவர் சீனியர் சிட்டிசன் என்றால், ரூ.60,000 வரை கணக்கில் காட்டலாம். அவர், 80 வயது தாண்டிய சூப்பர் சீனியர் சிட்டிசன் என்றால், ரூ.80,000 வரை கணக்கில் காட்டலாம்.

வருமான வரி கணக்குத் தாக்கலை ஓராண்டிற்குள் செய்தாக வேண்டும். 2016-17-ம் ஆண்டின் வரிக் கணக்கை 31, ஜூலை 2017-ம் தேதிக்குள் தாக்கல் செய்ய வேண்டும். அதே சமயம், திருத்தப்பட்ட வருமான வரி கணக்கை 31, மார்ச், 2019-ம் தேதிக்குள் தாக்கல் செய்யலாம்.

இந்த வரிக் கழிவானது, புற்றுநோய், எய்ட்ஸ், சிறுநீரகக் கோளாறு போன்ற குறிப்பிட்ட சில வியாதிகளுக்கு மட்டுமே பொருந்தும் என்பதால், உங்கள் அண்ணனுக்காக சிகிச்சைக்கு ஆன செலவைக் கணக்கில் காட்டித் திருத்தம் செய்யலாம்.’’ 

தொகுப்பு: தெ.சு.கவுதமன்

கேள்விகளை அனுப்புகிறவர்கள் தங்கள் செல்போன் எண்ணையும் குறிப்பிடவும்.

அனுப்ப வேண்டிய முகவரி: கேள்வி-பதில் பகுதி, நாணயம் விகடன், 757, அண்ணாசாலை, சென்னை-2. nav@vikatan.com.