நடப்பு
தொடர்கள்
Published:Updated:

குளுகுளு ஹாலிடே ஹோம்... உங்களுக்கு லாபமா, நஷ்டமா?

குளுகுளு ஹாலிடே ஹோம்... உங்களுக்கு லாபமா, நஷ்டமா?
பிரீமியம் ஸ்டோரி
News
குளுகுளு ஹாலிடே ஹோம்... உங்களுக்கு லாபமா, நஷ்டமா?

குளுகுளு ஹாலிடே ஹோம்... உங்களுக்கு லாபமா, நஷ்டமா?

கோடைகாலம் வந்தால் ஊட்டிக்குப் போகலாமா, கொடைக்கானலுக்குப் போகலாமா என்று யோசிப்பவர் களுக்கு எங்கே தங்குவது என்பதுதான் பெரிய பிரச்னை. நல்ல லாட்ஜுகள் ஏற்கெனவே புக்காகிவிட்ட நிலையில்,  நல்ல இடத்தில் தங்க முடியாத மனக்குறையுடன்தான்   வீடு திரும்பவேண்டியிருக்கும்.

இந்தச் சிக்கலுக்கு ஒரு தீர்வாக வந்ததே ஹாலிடே ரிசார்ட்டுகளில் தங்குவதற்கு ஆயுட்கால உறுப்பினர்களாகும் ‘டைம் ஷேரிங்’ முதலீட்டு முறை. இந்த முதலீட்டு முறையில் இந்தியா முழுக்கப் பல்வேறு கிளப்புகள் ஹாலிடே ரிசார்ட்டுகளை நடத்தி வருகின்றன.

டைம்ஷேரிங் என்னும் முறையில் உறுப்பினர் சேர்க்கை செய்வதே வித்தியாசமான அனுபவமாக இருக்கும். “உங்களுடைய நம்பருக்கு ஒரு கிஃப்ட் விழுந்திருக்கிறது. அதைப் பெற்றுக்கொள்ள இந்த ஸ்டார் ஹோட்டலுக்கு, இந்தத் தேதியில், இத்தனை மணிக்கு வாங்க. மறக்காமல் உங்கள் மனைவியையும் அழைத்துக்கொண்டு வாருங்கள்’’ என்று நமது செல்போனில் அன்பாக அழைப்பார்கள். கிஃப்ட்டை வாங்க வருகிறவர்களிடம் ஹாலிடே ரிசார்ட் உறுப்பினராவதில் உள்ள நன்மைகளை அசந்துபோகிற அளவுக்கு எடுத்துச் சொல்வார்கள்.

குளுகுளு ஹாலிடே ஹோம்... உங்களுக்கு லாபமா, நஷ்டமா?

இப்படி உறுப்பினராகச் சேர்பவர்களுக்கு ஒப்பந்தத்தில் கூறியபடி வசதிகளைச் செய்துதரும் நிறுவனங்களும் இருக்கின்றன. உறுப்பினர்களிடம், ஒப்பந்தம் போடும்போது சொல்லப்படாத, ஆண்டுப் பராமரிப்புக் கட்டணம், மின் கட்டணம், குடிநீர்க் கட்டணம் என்றெல்லாம் பல்வேறு விதமாகக் கூடுதல் பணத்தைப் பறிக்கும் நிறுவனங்களும் இருக்கின்றன. இத்தகைய ஹாலிடே ரிசார்ட்ஸ் முதலீட்டின் சாதக பாதகங்கள் குறித்து முதலீட்டு ஆலோசகரும், செக்யூரிட்டீஸ் அண்ட் டைம் ஷேர் ஓனர்ஸ் அசோசியேஷன் அமைப்பின் முன்னாள் தலைவருமான வ.நாகப்பனிடம் கேட்டோம்.  

“டைம்ஷேர் முறையில் ஹாலிடே ஹோம் பேக்கேஜ் வாங்குவது பல ஆண்டுகளாக நடைமுறையில் இருந்து வருகிறது. இதன்படி ஒரு வருடத் தில் குறிப்பிட்ட வாரத்தில் நாம் அந்த ரிசார்ட்டில் தங்குவதற் கான உரிமையை விலைக்கு வாங்குவது என்பதாகும். காலஓட்டத்தில் பணவீக்கத் தோடு ஒப்பிடும்போது, பணத்தின் மதிப்பு குறையக் குறைய, ஹோட்டல்களில் தங்குவது அதிகம் செலவு பிடிக்கக்கூடிய ஒன்றாகக்கூடும். எனவே, இப்படி பேக்கேஜ் ஒப்பந்தம் செய்து கொண் டால், இது லாபகரமானதாகவும், சேமிப்பாகவும் இருக்குமெனக் குறிப்பிட்டார்கள்.

ரிசார்ட்டில் உறுப்பினர்களாகச் சேருகிறவர்களுக்குச் சமையலறையை யும் எந்தக் கட்டணமும் இல்லாமல் தருவோம். அதில், சமைத்துச் சாப்பிட லாம். சமையலுக்குத் தேவையான பொருள்களை வாங்குவதற்கு ஏதுவாக அந்த ரிசார்ட்டிலேயே ஒரு சிறு மளிகைக்கடையும் இருக்கும் என்றார்கள். ஆனால், அவர்கள் சொன்னபடி எல்லாம் எதுவுமில்லை.

முதலில் ஆயுள் முழுவதற்கும், நமக்குப் பின்னர் நம் வாரிசுகளுக்கும் நிரந்தரமாகச் சொந்தம் எனச் சொன்னார்கள். பின்னர், 99 வருடங்களுக்கென இந்த ஒப்பந்தம் போட்டார்கள். அதற்குப்பின்பு 33 ஆண்டுகள் எனக் குறைத்தார்கள். இப்போது செய்யப்படும் ஒப்பந்த மெல்லாம் 25 ஆண்டுகளுக்கு மட்டுமே.

முன்பு ரிசார்ட்டில் தங்கும்போது மின்சாரப் பயன்பாட்டைக் கணக்கிட சப்-மீட்டர் வைத்துவிடுவார்கள். இதே போல, தண்ணீருக்கும் தனியாகக் கணக்கிட்டு வாங்குவார்கள். உண்மை யிலேயே நாம் எவ்வளவு பயன்படுத்து கிறோமோ, அதற்குரிய கட்டணத்தை  மட்டுமே நியாயமான வசூல்     செய்தார்கள். இப்போது அப்படி யில்லை. குத்துமதிப்பாக ஒரு நாளைக்கு சுமார் ரூ.1,000 என வசூல் செய்கிறார்கள். இது பகல் கொள்ளை.

முன்பெல்லாம், எந்தக் கட்டணமும் இல்லாமல், இந்த ஹாலிடே ரிசார்ட் ஒரு வார உரிமையை நம் நண்பர்களுக்கு விற்கவோ அல்லது அவர்களையும் அழைத்து வந்து தங்கவோ செய்யலாம். கூடுதல் அறைகள் தேவைப்பட்டாலும் கூட, நம் அடுத்த ஆண்டு அல்லது முந்தைய ஆண்டுகளில் பயன்படுத்தாத விடுமுறை நாள்களைச் சரிசெய்து, அதற்கு ஈடாக ஏற்பாடு செய்து தருவார்கள்.

அதேபோல், நாம் ஒரு வருடம் ரிசார்ட்டைப் பயன்படுத்தவில்லை எனில், அந்த வருடத்திற்கான நமது வாரத்தை வேறு யாருக்கேனும் விற்று நமக்குப் பணம் தருவார்கள். இப்படி நல்ல திட்டமாகத்தான் தொடக்கத்தில் இருந்தது. ஆனால், இந்தத் திட்டம் வெற்றிகரமாகச் செயல்படத் தொடங்கியதும், புதிய மாற்றங்களைக் கொண்டுவந்தார்கள்.

குளுகுளு ஹாலிடே ஹோம்... உங்களுக்கு லாபமா, நஷ்டமா?

ஆண்டுப் பராமரிப்புச் செலவுக் கென்று ஒரு தொகையை அறிமுகப்படுத்தி னார்கள். அதை நம்மால் எதிர்க்கவும் முடியாது. ஏனெனில், நமது ஒப்பந்தத்தி லேயே ‘ஒருவேளை மேற்கொண்டு தொகை தேவைப்பட்டால் வசூலித்துக் கொள்வோம்’ என்ற வரியும் குறிப்பிடப் பட்டிருக்கும். எந்த ஒப்பந்தத்தையும் நம்பிக்கையின் பேரில் முழுமையாக வாசிக்காமல் கையெழுத்திடுவதுதானே நம் மக்களின் வழக்கம். அதையே சாதகமாக்கிக்கொள்வார்கள். அந்த நிபந்தனையை ஏற்றுக்கொள்ள மறுத்தால் முன்பு நாம் செய்துகொண்ட ஒப்பந்தமே கேன்சல் ஆகும். அதாவது, நாம் விடுமுறைக்குச் சென்று தங்க முடியாது. கட்டிய பணத்தையும் திரும்பப்பெற இயலாது. எனவே, பல்லைக் கடித்துக்கொண்டு ஏற்றுக் கொள்கிறார்கள். அதுமட்டுமல்ல; இந்தத் தொகையையும் ஆண்டுக்கு ஆண்டு கணிசமாக அதிகரிக்கிறார்கள் என்பது கொடுமை.

அடுத்ததாக, நம் நண்பர்களுக்குப் பரிசாக அளிக்கும் அனுமதியை ரத்து செய்துவிட்டு, அப்படி அளிப்பதாக இருந்தால் அதற்கு விருந்தினர் கட்டணம் என்று ஒரு தொகையை வசூலிக்கிறார்கள். மேலும், சப் மீட்டர் வைத்து மின்கட்டணம் வசூலிக்கும் முறையை மாற்றிவிட்டு, மேலே சொன்ன மாதிரி தோராயமாக ஒரு தொகையை வசூலிக்கும் முறையைக் கொண்டுவந்தார்கள். இடத்திற்கு தக்கபடி, ஹலிடே பிளானுக்குத் தக்கபடி தொகை நிர்ணயிக்கிறார்கள். ஒரு வாரம் தங்கினால், இதற்கென சில ஆயிரங்களை எடுத்து வைக்க வேண்டும்.

அடுத்ததாக, சமையலறையில் கேஸ் அடுப்பு, சமையல் பாத்திரங்கள் போன்றவற்றை மொத்தமாக எடுத்துவிட்டு, பதிலுக்கு மைக்ரோ ஓவன் போன்று வைத்துவிடுகிறார்கள். ஏனென்று கேட்டால், சமையலறையை நாசம் செய்கிறார்கள் என்கிற காரணத்தைச் சொல்கிறார்கள். ஆக நாமே பெரிய அளவில் சமையலேதும் செய்ய இயலாது. வெளியே வாங்கும் பொருளை, மைக்ரோ ஓவனில் சூடுபடுத்திச் சாப்பிடுவது மட்டுமே செய்யலாம். இதன் காரணமாக அவர்களின் ரெஸ்டாரன்டில் சாப்பிட வேண்டிய கட்டாயம் ரிசார்ட்டில் தங்குகிறவர்களுக்கு ஏற்படுகிறது. இந்த ரிசார்ட்டுகளும் பெரும்பாலும் ஊருக்கு வெளியே வெகு தூரத்தில் அமைந்திருப்பதால், வெளியில் வேறு எங்கும் சாப்பிடவும் முடியாது.

இன்னொரு முக்கியமான விஷயம், நாம் கேட்கும் நேரத்தில் ரிசார்ட்டுகள் கிடைப்பதில்லை. ஏற்கெனவே புக் ஆகிவிட்டது என்று சொல்லி விடுவார்கள். அவர்கள் தரும் தேதிகளில் நமக்கு விடுமுறை கிடைக்காத சூழல் இருந்தால், அந்த ரிசார்ட்டைப் பயன்படுத்த முடியாமல் போகும்.

இப்படிப் பல குளறுபடிகள் மிகுந்துவிட்டன. வெளிப்படைத்தன்மை குறைந்துவருகிறது. ஆக, முப்பது ஆண்டுகளுக்கு முன்பு இருந்த ஹாலிடே ஹோம் ஒப்பந்த முறைகள் முற்றிலும் மாறி, கூடுதல் செலவு வைப்பவையாக மாறியுள்ளன.

இந்தத் தொழிலை நெறிமுறைப்படுத்த சட்டமோ, கண்காணிக்க செபி/ரிசர்வ் வங்கி போன்ற ஒழுங்குமுறை அமைப்புகளோ இல்லை என்பதால், இவர்கள் வைத்ததுதான் சட்டம் என்றாகிவிடுகிறது’’ என்று முடித்தார் அவர்.

ஆக எந்த நெறிமுறைக்கும் உட்படாத இந்த ரிசார்ட்டுகளைத் தவிர்த்துவிட்டு, தேவைப்படும் போது ரிசார்ட்டுகளை புக் செய்து, தங்கிவிட்டு வருவதே புத்திசாலித்தனம்!  

- தெ.சு.கவுதமன்

சொந்தமாக வாங்கினாலும் லாபமில்லை!

ஹாலிடே ஹோம்களை விலைக்கு வாங்கி வைத்து, நமது விடுமுறை நாள்களில் மட்டும் அங்கு சென்று ஒரு மாதமோ, ஓரிரு வரங்களோ தங்கிவரலாம்; மற்ற நாள்களில் வாடகைக்கு விட்டுச் சம்பாதிக்கலாம் என்ற வகையில் வாங்கப்படுகின்றன. ஆனால், நிலவரமோ தலைகீழாக இருக்கிறது. இதனை ஒரு முழுநேரத் தொழிலாகச் செய்தால் மட்டுமே நல்லபடியாகச் சம்பாதிக்க முடியும். ஆனால், பெரும்பாலானவர்கள், இதனை ஒரு சைடு பிசினஸ் என்ற வகையில் முதலீடு செய்கிறார்கள். வேறொருவரின் மேற்பார்வையில் அதனை வாடகைக்கு விட்டு வருமானம் பார்க்க நினைக்கிறார்கள். ஆனால், இது நடைமுறைக்குச் சரிப்பட்டு வருவதேயில்லை. அந்த வீடுகள் முறையாகப் பராமரிக்கப்படுவதில்லை. அதைப் பராமரிக்கும் பொறுப்பிலிருப்பவர்கள் செய்யும் தில்லுமுல்லுகளைச் சமாளிக்க முடியாமல் பணம் வீணாவதுதான் நடக்கிறது. உரிமையாளர்களும்கூட விரும்பியபோது அங்கே சென்று தங்க இயலாமல், நண்பர்களுக்கு அந்த வீடுகளை இலவசமாகத் தங்குவதற்குக் கொடுப்பதுதான் எதார்த்தத்தில் நடக்கிறது.

குளுகுளு ஹாலிடே ஹோம்... உங்களுக்கு லாபமா, நஷ்டமா?

இனிமையான முதலீடுதான்!

கிளப் மஹேந்திரா ஹாலிடே ஹோமில் கடந்த பத்தாண்டுகளாக உறுப்பினராக இருக்கும் மருத்துவர் சோமு லட்சுமணனுடன் பேசினோம்.

‘‘நான் உறுப்பினராகச் சேரும்போது மூன்று லட்சம் ரூபாய் கட்டியிருந்தேன். வருஷத்துக்கு ஒரு வாரம் அவர்களது ரிசார்ட்டுகளில் தங்க வாய்ப்பளிக் கிறார்கள். அந்த ரிசார்ட்டுகள் நல்ல லொகேஷன்களில் இருக்கின்றன. அது ப்ளஸ் பாயின்ட். சீசன் தொடங்கும்முன்பே பதிவு செய்துவிட்டால் பிரச்னை இல்லாமல் தங்கி வரலாம். சிறிதளவுக் கூடுதல் கட்டணம் கட்டி, நண்பர்களையும் அழைத்துச் செல்லலாம்.  

இதில் சிக்கல்களென்றால், குறைந்த காலக்கெடுவுக்குள் புக்கிங் செய்தால் ரிசார்ட்டுகள் கிடைப்பது கடினம். மூன்று மாதங்களுக்கு முன்பே புக்கிங் செய்ய வேண்டும். நான் மருத்துவராக இருப்பதால், என்னால் முன்கூட்டியே  திட்டமிட்டு விடுமுறை எடுக்க முடியாது. ஆனால், அலுவலகப் பணியாளர்கள் திட்டமிட்டு விடுமுறை எடுக்கலாம். 

தங்குமிடம் இலவசமாக இருக்கும். உணவுக்கு மட்டுமே செலவழிக்க வேண்டியிருக்கும். சில ரிசார்ட்டுகளில் சமையலறை வசதிகள் இருக்கின்றன. உறுப்பினர்களுக்கு ஆண்டுப் பராமரிப்புச் செலவு என்று இருக்கிறது. விடுமுறையை முன்கூட்டியே திட்டமிட்டு அனுபவிக்க நினைப்பவர்களுக்கு ஹாலிடே ரிசார்ட்டுகள் இனிமையான முதலீடாகத்தான் இருக்கும்.”

குளுகுளு ஹாலிடே ஹோம்... உங்களுக்கு லாபமா, நஷ்டமா?

சொந்த வீடு, கார் இருக்கிறதா?

தனியார் ஹாலிடே ரிசார்ட்ஸ் நிறுவனத்தில் பணியாற்றிய அனுபவமுள்ள வத்சலா சுப்பிரமணியனிடம் இதுகுறித்து கேட்டோம். 

“பொதுவாக ஹாலிடே ரிசார்ட்ஸ் நிறுவன வாடிக்கையாளர்களில், டைம் ஷேரிங் முறையில் 25 ஆண்டுகால உறுப்பினர்களாகப் பணம் கட்டியவர் களை ஆயுட்கால உறுப்பினர் என்று குறிப்பிடுவார்கள். இந்த உறுப்பினர்கள், இந்தியா முழுவதிலுமுள்ள அந்த நிறுவனத்தின் ரிசார்ட்டுகளில் வருடத்திற்கு ஒருமுறை, ஒரு வார காலத்திற்கு இலவசமாகத் தங்கிக் கொள்ளலாம்.

இந்த உறுப்பினர்களை மூன்று வகையாகப் பிரிக்கிறார்கள். முதலா வதாக, ஸ்டுடியோ அபார்ட்மென்ட் என்ற வகையில் ஒரு ஹால் மற்றும் பெட்ரூம் இருக்கும். இதில் கணவன், மனைவி என ஒரு ஜோடி மட்டும்  தங்கிக்கொள்ளலாம். அடுத்து, ஒரு பெட்ரூம் அபார்ட்மென்ட் வகையில் ஒரு குடும்பம் மட்டும் தங்கும் வகையில் ஒரு ஹால், பெட்ரூம், சமையலறை வசதிகள் இருக்கும். அடுத்ததாக இரண்டு குடும்பம் தங்கும் வகையில், இரண்டு பெட்ரூம், ஒரு ஹால், ஒரு சமையலறை வசதிகள் இருக்கும்.

மேலும், ரிசார்ட்டுகளில் தங்கக்கூடிய சீசனைப் பொறுத்து ஒய்ட், புளூ, ரெட், பர்ப்பிள் என்று பிரித்திருப்பார்கள். ஒய்ட் என்பது சீசன் இல்லாத சாதாரண நாள்கள். பர்ப்பிள் என்பது நல்ல சீசன். சீசன் நேரத்தில் தங்குவதற்கு எனில், அதற்கான உறுப்பி னர் கட்டணம் கூடுதலாக இருக்கும். சீசன் இல்லாத போது தங்குவதற்குக் கட்ட ணம் குறைவாக இருக்கும்.

இதில்  பணம் கட்டும் அனைவரையும் உறுப்பினராக இணைத்துவிட மாட்டார்கள். உறுப்பினராக இணைவதற்குக் குறிப்பிட்ட அளவு வருமானம், சொந்த வீடு, சொந்த கார் போன்ற வசதிகள் இருக்கின்றனவா என்பதைத் தெரிந்துகொண்டே அவர்களை உறுப்பினராகச் சேர அனுமதிப்பார்கள். ஏனெனில், ஹாலிடே ரிசார்ட்ஸ் உறுப்பினர் கட்டணமே சில லட்சங்களில் இருப்பதால் வசதியானவர்கள் மட்டுமே இதில் முதலீடு செய்யத் தயங்கமாட்டார்கள் என்பது கணிப்பு.

உறுப்பினர் சேர்க்கைக்காக ஆதரவு திரட்டுவதற்கு, சுங்கச்சாவடிகளைக் கடக்க சொந்த கார்களில் காத்திருப்பவர் களிடம் ஒரு கூப்பனைக் கொடுத்து, கேன்வாஸ் செய்வார்கள். சுங்கச்சாவடி மட்டுமல்லாது, பெரிய மால்கள், கண்காட்சிகளிலும்கூட தொலைபேசி எண்களைச் சேகரிக்கும் பணி நடக்கும். உறுப்பினர் கட்டணங்கள் தோராயமாக 4 லட்சம் ரூபாய் முதல் 15 லட்சம் வரை இருக்கக்கூடும்’’ என்கிறார் அவர்.