நடப்பு
தொடர்கள்
Published:Updated:

பணத்தோடு விளையாடாதீர்கள்!

பணத்தோடு விளையாடாதீர்கள்!
பிரீமியம் ஸ்டோரி
News
பணத்தோடு விளையாடாதீர்கள்!

ஹலோ வாசகர்களே..!

டந்த ஒன்றரை மாதங்களாக ஆந்திரா, தெலங்கானா பகுதிகளில் ஏற்பட்டிருந்த பணத்தட்டுப்பாடு, இப்போது அகில இந்திய அளவில் வெடித் திருக்கிறது. வட இந்தியாவின் பல மாநிலங்களிலும், தமிழகம் நீங்கலாகத் தென் மாநிலங்களிலும் ஏ.டி.எம்-களில் பணம் இல்லாமல் மிகவும் சிரமப்பட்டிருக்கின்றனர் மக்கள்.

ரூ.2000 நோட்டு புழக்கத்தில் இருப்பதை மத்திய அரசு குறைக்க நினைப்பது, புதிய ரூபாய் நோட்டுகளை அச்சடிக்கக் காகிதம் மற்றும் மை போன்ற வற்றுக்குத் தட்டுப்பாடு இருப்பது, தேர்தல் செலவுக்காகச் சிலர் பணத்தை முடக்கியது, எஃப்.ஆர்.டி.ஏ மசோதா ஏற்படுத்திய பயத்தினால் வங்கிகளில் உள்ள பணத்தை எடுத்து வீட்டில் வைத்திருப்பது என்கிற ரீதியில் இந்தப் பிரச்னைக்குப் பல காரணங்களைச் சொல்கிறார்கள்.

பணத்தோடு விளையாடாதீர்கள்!


இவற்றில் எந்தக் காரணம் சரி என இப்போது உறுதியாகச் சொல்ல முடியாவிட்டாலும், பணத்தட்டுபாடு இல்லை என அரசு மறுக்கவில்லை. ‘‘தற்போது ஒருநாளைக்கு ரூ.500 கோடி அளவுக்கு 500 ரூபாயை அச்சடிக்கிறோம். இந்த வேகத்தை இன்னும் அதிகப்படுத்தி, ஒரு நாளைக்கு ரூ.2,500 கோடி அளவுக்கு 500 ரூபாயை அச்சடிக்கப் போகிறோம். இதன்மூலம் ஒரே மாதத்தில் ரூ.75 ஆயிரம் கோடிக்குப் புதிய நோட்டுகளை வெளியிட்டு, பணப்புழக்கத்தை அதிகரிப்போம்’’ என மத்திய அரசின் உயரதிகாரி சொன்னதே இதற்குச் சாட்சி. 

பணத்தை நிர்வாகம் செய்வதில் இந்த அரசாங்கத்துக்குப் பல குழப்பமான சிந்தனைகள் இருப்பது தெளிவாகத் தெரிகிறது. நமது பொருளாதாரம் எந்த அளவுக்கு வளர்ச்சி கண்டுவருகிறது, இந்த வளர்ச்சிக்கு ஈடுதருகிற வகையில் எவ்வளவு பணம் வேண்டும் என்பதை எல்லாம் இந்த அரசாங்கத்தினால் சரியாகக் கணிக்க முடியவில்லையோ என்கிற சந்தேகம்தான் வருகிறது.

இதுமாதிரியான சந்தேகம் உருவாவதை மத்திய அரசாங்கம் உடனடியாகத் தடுக்க வேண்டும். இருக்க இடமும், உண்ண உணவும், குடிக்கத் தண்ணீரும் இருந்தால் மட்டும் போதாது; பரிவர்த்தனை செய்யக் கொஞ்சம் பணமும் வேண்டும். ரொக்கப் பணம் இல்லாமல், ஆன்லைன் மூலமாகவே அனைத்துச் செலவுகளையும் செய்துவிட முடியும் என்கிற அளவுக்கு நம் மக்கள் முன்னேறிவிடவில்லை என்பது நம் ஆட்சியாளர்களுக்குத் தெரியாதா?

இந்தப் பிரச்னை தற்காலிகமானது; கூடிய விரைவில் இதைச் சரிசெய்வோம் என மத்திய அரசு சொன்னாலும், அத்தியாவசியத் தேவையான பணத்துடன் விளையாடுவதை மக்கள் எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். கறுப்புப்பணம் ஒழியும் என்கிற ஒரே காரணத்துக்காகத்தான் பணமதிப்பு நீக்க நடவடிக்கைக்கு மக்கள் ஆதரவு தந்தார்கள். ஆனால், பெரும் பணக்காரர்கள் தங்களிடமிருந்த கறுப்புப்பணத்தை எளிதாக மாற்றிவிட, அப்பாவி மக்கள் அநியாயத்துக்குக் கஷ்டப்பட்டதே மிச்சம்.  

இனியாவது இந்த அரசாங்கம் நிதி நிர்வாகம் தொடர்பான விஷயங்களில்  வெளிப்படையாக நடந்துகொள்வதுடன், அதை மக்களிடம் எடுத்துச் சொல்லவும் வேண்டும்.  இதைப் பிரதமர் மோடி செய்வாரா? 

- ஆசிரியர்