
ஏ.டி.எம் பணத்தட்டுப்பாடு... என்னதான் காரணம்?
2016, நவம்பரில் கிலோ மீட்டர் தூரத்துக்கு ஏ.டி.எம்-களில் பணம் எடுக்க மக்கள் காத்துக் கிடந்ததைப் போன்றதொரு காட்சியை கடந்த வாரத்தில் மீண்டும் பார்க்க முடிந்தது. வட இந்தியாவின் பல மாநிலங்களில், தென் இந்தியாவில் தமிழகம் நீங்கலாகப் பிற மாநிலங்களில், ஏ.டி.எம்-களில் பணமே இல்லாமல் போகிற அளவுக்கு மக்கள் பணத்தை எடுத்தனர். இதற்கு என்ன காரணம் என அகில இந்திய வங்கி ஊழியர்கள் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் சி.ஹெச்.வெங்கடாசலத்திடம் கேட்டோம்.
“பணமதிப்பு நீக்க நடவடிக்கைக்குப்பிறகு இரண்டாயிரம் ரூபாய் நோட்டை அச்சிட முடிவு செய்ததே முதல் தவறு. கறுப்புப் பணத்தை ஆயிரம் ரூபாய் நோட்டுகளாகப் பதுக்குகிறார்கள் என்றுதான் ஆயிரம் ரூபாய் நோட்டை ஒழித்தார்கள். அதற்குப் பதிலாக 2000 ரூபாய் நோட்டைக் கொண்டுவந்தால், இப்போது மிக எளிதாகப் பணத்தைப் பதுக்கலாம். இப்படிப் பலரும் பதுக்கியதால் தான், இப்போது 2000 ரூபாய் நோட்டுகளுக்குத் தட்டுப்பாடு வந்திருக்கிறது.

இந்தியா முழுவதும் 1,62,000 ஏ.டி.எம்-கள் உள்ளன. இந்த ஏ.டி.எம்-களில் 50, 100, 500, 1,000 ரூபாய் நோட்டுகளை வைக்கும்படியான அமைப்புதான் இருக்கிறது. ஆனால், பணமதிப்பு நீக்கத்துக்குப்பிறகுப் புதிதாக வெளியிடப்பட்ட ரூபாய் நோட்டுகளை ஏ.டி.எம்-களில் வைக்க முடியவில்லை. நாட்டின் பல பகுதிகளில் குறிப்பாக, கிராமப்புறங்களில் இன்ன மும் புதிய ரூபாய் நோட்டுகளை வைக்கிற மாதிரி ஏ.டி.எம்-கள் மாற்றி யமைக்கப்படவில்லை. பணத் தட்டுப்பாடு ஏற்பட இதுவும் ஒரு காரணம்.
நம்மிடம் புழங்கும் மொத்தப் பணமதிப்பில் சிறிய தொகை கொண்ட ரூபாய் நோட்டுகளை அதிக அளவில் அச்சிட வேண்டும். அப்போதுதான் ஏழை, நடுத்தரக் குடும்பங்களைச் சேர்ந்த மக்களுக்கு உதவிகரமாக இருக்கும். 10 ரூபாய், 20 ரூபாய் நோட்டுகள் அதிக எண்ணிக்கையிலும், 2,000 ரூபாய் நோட்டுகள் குறைவான எண்ணிக்கையிலும் அச்சிடப்பட வேண்டும். ஆனால், நோட்டு அச்சடிப்புச் செலவுக்கானப் பணத்தை மிச்சப்படுத்தும் நோக்கில், 2,000 ரூபாய் நோட்டுகளை அதிக அளவில் அச்சடித்துவிட்டார்கள். இதனால் சில்லறை ரூபாய் நோட்டு களுக்கும் தட்டுப்பாடு அதிகமாகிவிட்டது.
முன்பு வங்கிகளில் போடப்பட்ட வாடிக்கையாளர்களின் பணத்திற்குப் பாதுகாப்பு இருந்தது. ஆனால், தற்போதைய அரசு, எஃப்.ஆர்.டி.ஐ மசோதாவினைச் சட்டமாக முயற்சி செய்வதால், வங்கியிலிருந்து பணத்தை எடுத்து வீட்டிலேயே வைத்திருக்கிறார்கள். வங்கியில் பணத்தைப் போட்டால்தானே பணச்சுழற்சி இருக்கும். ஆனால், பாடுபட்டுச் சேர்த்த பணத்தை இழக்க யாரும் தயாராக இல்லை. இந்தத் தவறான மசோதாவால் ஏற்பட்ட அச்சம் காரணமாகவும் பணச்சுழற்சி தடைபட்டு தட்டுப்பாடு உருவாகியுள்ளது.
கணினிமயமாக்கப்பட்ட வங்கிப் பணப்பரிமாற்றத்தை அதிகப்படுத்துவதற்காகப் பணத்தை அச்சிடுவதைக் குறைத்துவிட்டார்கள். ஆனால், இந்தியாவின் சராசரி மக்கள் இன்னமும் கணினிமயமான பணப்பரிமாற்றத்திற்கு மாறவில்லை. அனைவரிடமும், கணினி கிடையாது; வைஃபை வசதியும் கிடையாது, எனவே, பெரும்பாலான மக்கள் பணத்தை ரொக்கமாகவே பயன்படுத்த விரும்புகிறார்கள். ஆனால், செயற்கையாகப் பணத் தட்டுப்பாட்டினை ஏற்படுத்தினால், மக்கள் டிஜிட்டல்மயமாகி, ரொக்கமாகப் பணத்தைப் பயன்படுத்துவதைக் குறைப்பார்கள் என்கிற எதிர்பார்ப்பில் இப்படி செய்யப்பட்டிருக்கலாம்” என்றார்.

ஆனால், பொருளாதார நிபுணர்கள் வேறு சில முக்கிய விஷயங்களைச் சொல்கிறார்கள். அதில் முக்கியமானது, மொத்தப் பொருள் உற்பத்திக்கும், பணப்புழக்கத்துக்கும் உள்ள உறவு. கடந்த மார்ச் 2012 முதல் மார்ச் 2014 ஆண்டுவரை மொத்தப் பொருள் உற்பத்தி 28.60 சதவிகிதமாக இருந்தது; பணப்புழக்கம் 21.70 சதவிகிதமாக இருந்தது. இதுவே கடந்த 14 முதல் 16 ஆண்டு வரையிலான காலத்தில் மொத்தப் பொருள் உற்பத்தி 22.50 சதவிகிதமாகக் குறைந்து, பணப்புழக்கம் 27.90 சதவிகிதமாக அதிகரித்தது. ஆனால், கடைசி இரண்டு ஆண்டு காலத்தில் மொத்தப் பொருள் உற்பத்தி 21.70 சதவிகிதமாக இருந்த நிலையில், பணப்புழக்கம் 10 சதவிகிதமாகக் குறைந்துள்ளது. அதாவது, ரூ.19.6 லட்சம் கோடி அளவுக்குப் பணப்புழக்கம் இருக்கவேண்டிய நிலையில், இப்போது நம்மிடம் புழக்கத்தில் இருக்கும் பணம் ரூ.18.29 லட்சம் கோடி மட்டுமே. கிட்டத்தட்ட ரூ.1.3 லட்சம் கோடி தட்டுப்பாடு இருப்பதால்தான், ஏ.டி.எம்-களில் பணம் கிடைக்கவில்லை என்கிறார்கள் பொருளாதார ஆய்வாளர்கள்.
பொருளாதார விவகாரத் துறை செயலாளர் எஸ்.சி.கர்க் சொன்ன விஷயத்தையே ஆதாரமாகக் காட்டுகிறார்கள் அவர்கள். தற்போது ரூ.500 நோட்டினை ஒரு நாளைக்கு ரூ.500 கோடி அளவுக்கு மட்டுமே அச்சிடப்படுகிறது. இனிவரும் நாள்களில் ஒருநாளைக்கு ரூ.2,500 கோடி அளவுக்கு ரூ.500 அச்சிடப்படும். எனவே, ஒரு மாதத்தில் பணத் தட்டுப்பாடு முழுமையாக இல்லாமல் போகிற அளவுக்குப் பணப்புழக்கம் ஏற்பட்டுவிடும் என கர்க் சொல்லியிருப்பது, பணத்தட்டுப்பாடு தற்போது இருப்பதை ஒப்புக்கொள்கிற மாதிரிதான் இருக்கிறது.
ஆக, இந்தப் பணத்தட்டுப்பாடு இயற்கையாக ஏற்பட்டதா அல்லது செயற்கையாக உருவாக்கப்பட்டதா, அப்படி உருவாக்கப்பட்டிருக்கும் எனில், அதற்கான காரணம் என்ன என்பது இப்போது மறைமுகமாக இருந்தாலும், இன்னும் சில மாதங்களில் அவை வெட்டவெளிச்சமாகும் என்பதில் சந்தேகமில்லை!
-ஏ.ஆர்.குமார், தெ.சு.கவுதமன்
தேவையில்லாமல் பயப்படுகிறார்கள் மக்கள்!
இந்தப் பிரச்னை பற்றி டெல்லியில் உள்ள நேஷனல் இன்ஸ்ட்டிடியூட் ஆஃப் பப்ளிக் ஃபைனான்ஸ் அண்டு பாலிசி நிறுவனத்தில் பேராசிரியராக இருக்கும் என்.ஆர்.பானுமூர்த்தியிடம் கேட்டோம்.
‘‘ஏ.டி.எம்-களில் நிலவும் கடும் பணத்தட்டுப்பாடு பற்றி இதுதான் காரணம் என்று துல்லியமாகச் சொல்வது கடினம். பஞ்சாப் நேஷனல் பேங்க் சமீபத்தில் சர்ச்சைக்குள்ளானதால் வங்கிகள்மீது மக்களிடம் ஒருவிதமான சந்தேகத்தை உருவாக்கியிருக்கிறது.

பொதுத்துறை வங்கிகள் மட்டுமல்ல, தனியார் துறை சார்ந்த சில வங்கிகளும் சர்ச்சையில் சிக்கியிருப்பதும் இந்தச் சந்தேகத்தை அதிகமாக்கி யிருக்கிறது. இந்தச் சந்தேகம், அவநம்பிக்கையாக மாறியதினாலோ என்னவோ, வங்கிகளில் வைத்திருக்கும் பணத்தை மக்கள் திடீரென எடுக்கத் தொடங்கியிருக்கின்றனர்.
ஆனால், வங்கிகளின் மீதான மக்களின் இந்த அவநம்பிக்கை சரியான சிந்தனையின் அடிப்படையில் விளைந்ததல்ல. ஆர்.பி.ஐ போன்ற அமைப்புகள் வங்கிகளை உன்னிப்பாகக் கண்காணித்து வருகின்றன. எனவே, ஏதாவது தவறு நடந்து நம் பணம் பறிபோய் விடுமோ என்கிற சிந்தனை தவறானது.
மேலும், கடந்த ஆண்டு கடைசியில் மத்திய அரசினால் கொண்டுவர முயற்சி செய்யப்பட்ட எஃப்.ஆர்.டி.ஐ மசோதாவைப் பார்த்துப் பயந்து, ஆந்திரா, தெலங்கானா ஆகிய மாநிலங்களில் வங்கிகளில் வைத்திருக்கும் பணத்தை மக்கள் வேகமாக எடுத்துவருகிறார்கள்.
வங்கி டெபாசிட்தாரர்களின் பாதுகாப்புக்காக சில நடவடிக்கைகள் எடுக்கப்போய், வங்கியில் போட்டு வைத்திருக்கும் பணம் பறிபோய்விடுமோ என்ற பயத்தை ஏற்படுத்திவிட்டது. இப்படிப்பட்ட சூழலை உருவாக்காமல் இருந்திருந்தால், மக்களிடம் பயமும் உருவாகியிருக்காது. வங்கிகளில் விழுந்தடித்துக் கொண்டு பணத்தை எடுத்திருக்கவும் மாட்டார்கள்.
இரண்டாயிரம் நோட்டுக்குப் பதிலாக 500 ரூபாயை வேகமாக அச்சடித்து வெளியிடுவதில் ரிசர்வ் வங்கிக்குச் சில பிரச்னைகள் இருக்கலாம். ஆனால், ஒவ்வொரு மதிப்புக்கொண்ட ரூபாயும் எவ்வளவுக்கு இருக்க வேண்டும் என்பதை ஆர்.பி.ஐ அறிவியல்பூர்வமாகக் கணக்கிட்டுத்தான் அச்சடித்து வெளியிடும். பணப்புழக்கம் எவ்வளவு இருக்கிறது, இன்னும் எவ்வளவு புதிய பணம் தேவை என்பதை ஆர்.பி.ஐ-யால் கணிக்க முடியும். எனவே, இப்போது ஏற்பட்டுள்ள பணத்தட்டுப்பாடுக்காக ஆர்.பி.ஐ-யைக் குறைசொல்ல முடியாது’’ என்றார்.

ரூ.25 ஆயிரம் கோடி லாபம் பார்த்த எல்.ஐ.சி!
ஒவ்வோர் ஆண்டும் பங்குச் சந்தை முதலீட்டில் எல்.ஐ.சி-யின் லாபம் அதிகரித்தே வருகிறது.கடந்த 2017-18-ம் நிதி யாண்டில் எல்.ஐ.சி நிறுவனம் ரூ.25 ஆயிரம் கோடியைப் பங்குச் சந்தை முதலீட்டின் மூலம் லாபம் சம்பாதித்துள்ளது. கடந்த 2016-17-ம் நிதியாண்டில் ரூ.19 ஆயிரம் கோடி மட்டுமே லாபம் பார்த்தது எல்.ஐ.சி நிறுவனம். 2015-16-ம் நிதியாண்டில் ரூ.11 ஆயிரம் கோடி லாபம் பார்த்தது. ரூ.5 லட்சம் கோடி ரூபாயைப் பங்குச் சந்தையில் முதலீடு செய்துள்ள எல்.ஐ.சி-யின் லாபம் ஆண்டுதோறும் உயர்ந்துவருகிறது. இனிவரும் ஆண்டுகளிலும் இந்த நிறுவனத்தின் லாபம் தொடரவே வாய்ப்புள்ளது என்கிறார்கள் நிதித்துறை நிபுணர்கள்.