Published:Updated:

சர்வைவா - 9

சர்வைவா - 9
பிரீமியம் ஸ்டோரி
News
சர்வைவா - 9

அதிஷா, ஓவியம்: கோ.ராமமூர்த்தி

சர்வைவா - 9

“என்னுடைய நுண்ணறிவு  கருணை, இரக்கம் முதலான மனித விழுமியங்களின் மேல் உருவாக்க ப்பட்டது. நான் மனிதாபிமானம் கொண்ட ரோபோவாகச் செயல்படவே போராடுகிறேன்.’’

‘`அது எங்களுக்கு நன்றாகத்தெரியும் சோபியா. இருந்தாலும் நாங்கள் மோசமான எதிர்காலத்தைத் தவிர்க்கவே விரும்புகிறோம்.’’

‘`நீங்கள் எலான் மஸ்க்கை அதிகம் படிக்கிறீர்கள். நிறைய ஹாலிவுட் படம் பார்க்கிறீர்கள். அப்படியெல்லாம் அஞ்ச வேண்டாம். நீங்கள் என்னிடம் நல்ல முறையில் நடந்துகொண்டால் நானும் உங்களோடு நல்ல முறையில் நடந்துகொள்வேன்!’’

செயற்கை நுண்ணறிவு கொண்ட ரோபோவான சோபியா சென்ற ஆண்டு கொடுத்த பேட்டி இது.

(எந்திர)சோபியாவின் பேட்டியில் டெஸ்லாவின் முதலாளி எலான் மஸ்க் கலங்கித்தான் போனார். மனிதனை எந்திரம் கலாய்ப்பதா?

‘அந்த ரோபோவுக்கு ‘காட்ஃபாதர்’ படத்தைப் போட்டுக் காட்டுங்கள். அப்போதாவது அதற்குத் தெரியட்டும், மோசமான பின்விளைவுகள் எப்படி இருக்கும் என்று’- ட்விட்டரில் பொங்கினார் மஸ்க். சோபியாவுக்கு இப்போது அறிவு இன்னும்கூட வளர்ந்திருக்கிறது. நக்கல் நையாண்டியும் கூடியிருக்கிறது. சமீபத்தில் ஹாலிவுட் நடிகர் வில்ஸ்மித், சோபியாவை அழைத்துக்கொண்டு டேட்டிங் போனார்!  இருவரும் கடலோரம் அமர்ந்து கடலை போட்டு முடித்தனர். கடைசியாக எல்லா டேட்டிங்கிலும் நடப்பது போலவே வில்ஸ்மித் ஒரு காரியம் பண்ணினார். கிஸ் இல்லாமல் டேட்டிங்கா? சோபியாவுக்கும் முத்தம் கொடுத்துவிடத் தீர்மானித்தார். வாயைக் கூப்பிக்கொண்டு முகத்தை சோபியாவுக்கு அருகில் கொண்டு சென்றார் ஸ்மித். சோபியா வெடுக்கென முகத்தைத் திருப்பிக் கொண்டது.  வில்ஸ்மித் பரிதாபங்களை இங்கே காணலாம் -   https://youtu.be/Ml9v3wHLuWI

சர்வைவா - 9

சோபியாவின் கதை:

மனிதர்களைப்போலவே இருக்கும் ரோபாட்களை  Humanoid robot என்கிறார்கள். சோபியா அந்த இனம்தான். 62 விதமான முகபாவங்களை வெளிப்படுத்தக்கூடிய ஆற்றல் கொண்டவர். சுயமாகச் சிந்தித்து உரையாடக்கூடியவர். சோபியாவின் பராக்கிரமங்களைக் காண்பதற்கு முன்பு, சோபியாவைப் படைத்த அமெரிக்கர் டேவிட் பிராங்க்ளின் ஹான்சனைப் பற்றித் தெரிந்துகொள்வோம்.

ஹான்சன் ஒரு சிற்பக் கலைஞர். 90களில் சிற்பக்கலை படிக்கும்போதே செயற்கை நுண்ணறிவு குறித்தும் படிக்க ஆரம்பித்தார்.  `சிற்பங்கள் பேசினால் எப்படி இருக்கும்’ என்கிற அவருடைய சிந்தனைதான் சோபியாவின் தொடக்கம். 

கல்லூரியில் படிக்கும்போதே ரப்பரால் ஆன, பேசக்கூடிய எந்திரத் தலைகளை உருவாக்கி ரிமோட் கன்ட்ரோல் வழியே இயங்கச்செய்து, பார்ப்பவர்களை அசத்துவது அவருடைய பொழுதுபோக்கு. இந்த விளையாட்டு அவருக்கு டிஸ்னி நிறுவனத்திலேயே வேலை வாங்கிக்கொடுத்தது. 2003 வாக்கில் டென்வரில் நடந்த அறிவியல் மாநாட்டுக்காக எந்திரத் தலை ஒன்றை வடிவமைக்க முடிவெடுத்தார். அதுதான் சோபியாவின் முன்னோடி, ‘K-BOT’.

24 மோட்டார்கள் கொண்ட அதன் முகம் மிகச்சில பாவங்களைக் காட்டும். கே-பாட்டுக்கு அறிவியல் மாநாட்டில் நல்ல வரவேற்பு கிடைத்தது. திரைப்பட இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள் தொடங்கி செக்ஸ் பொம்மைகள் தயாரிப்பவர்கள் வரை ஹான்சனோடு வேலை செய்ய ஆர்வமாக முன்வந்தனர்.

அப்போது ஹான்சனுக்கு ஆர்ட்டிபிஷியல் இன்டெலி ஜன்ஸ் துறை குறித்தும் ரோபாடிக்ஸ் குறித்தும் அடிப்படைகள் மட்டும்தான் தெரியும். அதனால் மேலும் மேலும் கற்றுக்கொண்டார்.  கூடவே அவருடைய சிற்பக்கலையும் ரோபாடிக்ஸ் வடிவமைப்புக்கு உதவியது. 2013ல் ஹான்சன், ஹாங்காங்கில் ‘ஹான்சன் ரோபாடிக்ஸ் நிறுவனத்தை’த் தொடங்கினார். இன்று உலகின் முன்னணி ரோபாடிக்ஸ் நிறுவனங்களில் ஒன்றாக இருக்கிறது அது!

சோபியாவை விடவும் புத்தி சாலித்தனமான எந்திரங்கள் நிறையவே வரத்தொடங்கி விட்டன.  ஆனால் சோபியாவின் பாப்புலாரிட்டிக்குக் காரணம் அது மனிதர்களைப் போலவே இருப்பதும்  பேசுவதும் புன்னகைப்பதும்தான்!

சோபியாவுக்கு இன்று உலகம் முழுக்க ரசிகர்கள் இருக்கிறார்கள். சவூதி அரேபியா சோபியாவுக்குக் குடியுரிமை வழங்கியிருக்கிறது. பெண்களுடைய உரிமைகளு க்காக சோபியா உலகம் முழுக்கப் பயணித்துக் குரல் கொடுக்கிறது.

சர்வைவா - 9

வாயாடி!

சோபியாவால் எதிரில் இருக்கிற விஷயங்களைப் பார்க்க முடியும். எதிரில் இருப்பவர் யார் என்பதை நினைவில் வைத்துக்கொண்டு அடுத்த முறை சந்திக்கும் போது ‘நல்லாய இருக்கீங்களா?’ என்று நலம் விசாரிக்க முடியும்.  இதுபோக சோபியாவின்  மூளையை ஒவ்வொருநாளும் ஆய்வுக்கூடத்தில் வைத்து அப்டேட்  பண்ணிக்கொண்டே யிருக்கிறார்கள். கூடவே சோபியாவும் மக்களிடம் பேசிப்பேசி தன்னுடைய அறிவை வளர்த்துக்கொள்கிறது. அனேகமாக இன்னும் சில மாதங்களில் அது ஃபேஸ்புக் அக்கவுன்ட் தொடங்கிப் புரட்சிப் போராட்டத்தில் இறங்கவும் கூடும்.

இப்போதைக்கு சோபியா வின் முழுநேர வேலையே ‘பல்துறை ஆர்வலர்’ ராமசுப்பிரமணியம் போல வாய் ஓயாமல் தொலைக்காட்சிகளில் பேசுவது மட்டும்தான்.

இப்போதைக்கு எல்லோருமே சோபியாவிடம் வியக்கிற விஷயம் அதன் வாயாடித்தனம் இல்லை. அதன் விதவிதமான முகபாவங்கள்தான். தமிழ்சி னிமாவின் முன்னணி நடிகர்களான... (பெரிய பட்டியல்...  Censored) காட்டுகிற நான்கே நான்கு அபிநயங்களைவிட அதிகமாகவே காட்டுகிறது சோபியா.

காட்சிகளைச் சொல்லிக் கொடுத்தால் சிறப்பாக நடித்தும் கொடுத்துவிடும் என்று தோன்றுகிறது. எந்திர நடிகை Ready. 

சோபியாவையே ஹாலிவுட் நடிகை Audrey Hepbun சாயலில் தான் உருவாக்கியிருக்கிறார்கள். ­‘Roman holiday’ படத்தின் மூலம் ஆஸ்கர் விருதெல்லாம் வாங்கிய நடிகை.

ஆனால், ஹான்சனுக்கு சோபியாவை சினிமாவில் நடிக்க வைக்கிற யோசனை எல்லாம் இல்லை. அவருடைய திட்டமெல்லாம் எதிர்கா லத்தில் வயதான வர்களுக்கு உதவக்கூடிய புன்னகைக்கும் எந்திர நர்ஸ்களை, மாற்றுத் திறனாளிகளுக்கு உதவக்கூடிய உதவியாளர்களை, ஆட்டிசக் குழந்தைகளுக்கான ஆசிரியர்களை உருவாக்கு வதுதான். அதை மனதில் கொண்டுதான் சோபியாவைத் தயார் செய்துகொண்டிருக்கிறார்.

சர்வைவா - 9

சோபியாதான் நடிக்கவில்லை. வேறொரு எந்திர நடிகை படமே நடித்து முடித்து பாராட்டுகளையும் பெற்றுவிட்டார்!

ஜெமினாய்ட் -  F

உயிரோடு இருந்திருந்தால் இந்த நடிகையும் அவரைக் காதலித்திருக்கக்கூடும் என்பதைத்தவிர ஜெமினி கணேசனுக்கும் ஜெமினாய்ட்- F­­­க்கும் எந்தத் தொடர்பும் இல்லை. இது ஜப்பானின்  Kokoro Co என்ற நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட Humanoid robot.  சோபியா செய்கிற பல வேலைகளை இதுவும் செய்யக்கூடியது. சோபியா அளவுக்கு அறிவு கிடையாது. ஆனால் இது பாடும், பேசும், மனிதர்களைப்போலவே முக பாவங்களைத் துல்லியமாகக் காட்டும். ஏற்ற இறக்கங்களோடு வசனங்களை ஒப்பிக்கும்.

ஜெமினாய்ட் நடித்த ‘சயானோரா’ என்கிற படம் 2015ல் வெளியானது. படத்தில் ஜெமினாய்ட் இரண்டாவது நாயகி. ரோபோவாவே அது நடித்தது. அணுகுண்டு வெடிப்பில் தப்பித்த இருவரைப் பற்றிய கதை அது. படத்தின் விமர்சனங்களில் நல்ல பேரையே ஜெமினாய்ட் பெற்றது. ஆனால் ‘‘இது தொடக்கம்தான்” என்கிறார் ரோபாட்டிக் துறையின் சூப்பர் ஸ்டார்களில் ஒருவரான ஹீரோஷி இஷிகுரோ! ஜெமினாய்டின் தந்தை. (அவரைப்பற்றி அடுத்தவாரம்...)

இன்று திரைப்படங்களில் ரோபோவாக மனிதர்களேதான் நடித்துக்கொண்டிருக்கிறார்கள் அல்லது மனிதர்களின் உதவியோடு கிராஃபிக்ஸ் பண்ணிக்கொள்கிறார்கள். ஆனால் எதிர்காலத்தில் நேரடியாக ரோபோக்களையே நடிக்கவைக்கமுடியும். இன்னும் சில ஆண்டுகளில் மனிதர்களுக்கு மாற்றாக எந்திர நடிகர்களை உருவாக்கும் சாத்தியங்களை ஆராய்ச்சியாளர்கள் கணிக்கிறார்கள். சிவாஜிகணேசன் மாதிரியான இறந்துபோன நடிகர்களைக்கூட உயிர்த்தெழச்செய்ய முடியும். சிவாஜிகணேசனின் திரைப்படங்களை அவருடைய நடிப்பை நியூரல் நெட்வொர்க்கில் பதிவு செய்வதன் மூலம் அவரைப் போலவே நடிக்கிற எந்திர நடிகரை உருவாக்க முடியுமில்லையா?

இதுதான் சினிமாவின் எதிர்காலம். அவை பாடல்கள் எழுதப்போகின்றன, எடிட்டங் செய்யும், நடிக்கவும் போகின்றன. எந்திரங்கள் சினிமாவை ஆக்கிரமிக்கப்போகின்றன. ஆனால் அஞ்சத்தேவையில்லை. மனிதர்கள் இல்லாமல் மனிதர்கள் ஒருங்கிணைக்காமல் தனக்குத்தானே படமெடுத்துக் கொள்கிற ஒரு திரைப்படத்தை உருவாக்கிக்கொள்கிற எந்திரங்களை உருவாக்கவே முடியாது. ரசனை என்பது மனிதர்களுக்கானது. அது காலந்தோறும் மாறக்கூடியது. எந்தப் படைப்பாக இருந்தாலும் அதை இறுதியில் ரசிக்கப் போவது மனிதர்கள்தானே... எந்திரங்களுக்குக் காதலிக்கத் தெரியாது, காமம் தெரியாது... இப்படியெல்லாம் மனதைத் தேற்றிக்கொள்ளலாம்தான்.

ஆனால், மனிதர்களைப் போலவே பேசுகிற, எழுதுகிற, கவிதை சொல்கிற எந்திரங்கள் சினிமாவை மட்டுமல்ல, நம் உறவுகளை, காதலை, காமத்தையும்கூட மாற்றியமைக்கப்போகின்றன. அதைதான் ஹிரோஷி இஷிகுரோ செய்துகொண்டிருக்கிறார். காதலிக்கும் எந்திரங்கள்...