மற்ற எபிசோடுகள்
Published:Updated:

வீரயுக நாயகன் வேள்பாரி - 80

வீரயுக நாயகன் வேள்பாரி
பிரீமியம் ஸ்டோரி
News
வீரயுக நாயகன் வேள்பாரி ( வீரயுக நாயகன் வேள்பாரி )

சு.வெங்கடேசன், ஓவியங்கள்: ம.செ.,

வீரயுக நாயகன் வேள்பாரி - 80

போர்க்கருவிகளின் தொகுப்பாக விளங்கும் படைக்கலப் பேரரங்கு, மூன்று இடங்களில் உருவாக்கப்பட்டது. பாண்டியனின் பேரரங்கு மூஞ்சலின் அருகில் இருந்தது. சேரனின் பேரரங்கு தென்புறமும், சோழனின் பேரரங்கு வடபுறமும் அமைக்கப்பட்டன. மூவேந்தர்களுக்கான போர்க்கருவிகள் முழுமையும் இங்குதான் சேகரித்துவைக்கப்பட்டிருந்தன. ஒவ்வொரு பேரரங்கும் மூஞ்சல் நகரின் பரப்பளவைக்கொண்டிருந்தது. அவற்றுள் பத்துக்கும் மேற்பட்ட கூடாரங்கள் இருந்தன.

ஒவ்வொரு கூடாரத்திலும் ஒவ்வொருவிதமான ஆயுதம் வைக்கப்பட்டிருந்தது. ஆயுதங்களை ஒழுங்குமுறைப்படி அடுக்கிவைப்பதும், தேவைக்கேற்ப நாள்தோறும் அவற்றை எடுத்து போர்க்களத்துக்கு அனுப்புவதும் தனித்ததொரு கலை. இந்தக் கலையைச் செய்பவரை `ஆயுதவாரி’ என்று அழைத்தனர்.

நான்கு வகையான வில்களும் பதின்மூன்று வகையான அம்புகளும் போர்க்களத்தில் பயன்படுத்தப்பட்டன. ஒவ்வொருவிதமான அம்புக்கட்டும் தனித்தனியே அடுக்கிவைக்கப்பட வேண்டும். அப்போதுதான் அவற்றை எடுத்துத் தர வசதியாக இருக்கும். களம் புகும் வீரன் கையில் ஏந்தியிருக்கும் வில்லுக்குத் தகுந்த அம்புகள் அவனது அம்பறாத்துணிக்கு வந்துசேர வேண்டும்.

ஆயுதங்களை படைக்கலப் பேரரங்கிலிருந்து வீரர்களின் போர்ப்பாசறைக்கு நள்ளிரவுக்குள் கொண்டுபோய்ச் சேர்க்க வேண்டும். பொழுது விடியும்போது அந்தப் பாசறையில் இருக்கும் வீரர்களுக்குத் தேவையான ஆயுதங்கள் அவர்களின் கண்கள் முன் பளிச்சிடவேண்டும். `என்னை ஏந்திக்கொள்’ என்ற ஆயுதங்களின் அழைப்பை வீரர்கள் உணரவேண்டும்.

படைப் பிரிவுகளின் தன்மைக்கேற்ப குறிப்பிட்ட வகை வில்லை மட்டுமே பயன்படுத்துபவராக ஒவ்வொரு பிரிவினரும் இருப்பர். அந்த வகை வில்லுக்குப் பொருத்தமான அம்புக்கட்டுகள் அங்கு வந்துசேர வேண்டும். அதில் ஏதாவது குழப்பம் நிகழ்ந்தால், அதிகாலையிலேயே சிக்கல் உருவாகிவிடும். எனவே, ஆயுதங்களை பாசறைக்குப் பிரித்துத் தரும் பொறுப்பை வகிக்கும் `ஆயுதவாரி’ மிக முக்கியமானவராகக் கருதப்படுவார். போர்க்களத்தில் தளபதிக்கு சமமான அதிகாரம்கொண்டவராக போர்களக் கொட்டிலில் ஆயுதவாரி விளங்குவார். 

மூன்று பேரரசுகளும் அனுபவமேறியவர்களைத் தான் ஆயுதவாரிகளாக நியமித்தன. பல நேரங்களில் படைகளின் தளபதியையே சமாளிக்கவேண்டிய பொறுப்பு ஆயுதவாரிக்கு உண்டு. குறிப்பிட்டவகை ஆயுதம்தான் வேண்டும் என்று தளபதி கேட்பார். ஆனால், அந்த வகையான ஆயுதத்தின் இருப்பு மிகக் குறைவாக இருக்கும். எனவே, மற்றவகை ஆயுதத்தைக் கொடுத்து நிலைமையைச் சமாளிக்க வேண்டும். போர் நெருக்கடிகளுக்கு இடையில் அதிகம் மோதிக்கொள்பவராக தளபதியும் ஆயுதவாரியும்தான் இருப்பர். அதனால் ஆயுதவாரி பொறுப்புக்கு நியமிக்கப்படுபவர் வயதானவராக இருப்பது அவசியம். அதுவும் தளபதி மதிக்கும் மனிதராக இருக்குமாறு பார்த்துக்கொள்வர். ஏனென்றால், போர்களத்தினூடே அவர்களின் தேவைகளையும் இருப்புகளையும் பற்றிப் பேசிக்கொள்ள சில கணங்களே வாய்க்கும். அதற்குள் அனைத்தையும் புரிந்துகொள்பவராகவும் பரிமாறிக்கொள்பவராகவும் இருக்க வேண்டும்.

வீரயுக நாயகன் வேள்பாரி - 80

இருபது வகையான வாள்கள், எட்டு வகையான வேல்கள், மூன்று வகையான குறுவாள்கள், மூன்று வகையான தண்டங்கள், மூன்று வகையான கேடயங்கள் என அனைத்தும் எந்த இடத்தில் எவ்வளவு இருக்கின்றன, எந்தெந்தப் பாசறைக்கு எந்தெந்த வகையான ஆயுதங்களை எவ்வளவு அனுப்ப வேண்டும், கடைசி வரை இருப்பு குறையாமல் எப்படிச் சமாளிப்பது, உற்பத்திக் களத்திலிருந்து தேவையான ஆயுதங்களை எப்படி விரைவுபடுத்தி வாங்குவது ஆகியவற்றில் மிகுந்த கவனத்தோடு செயல்படுபவராக ஆயுதவாரிகள் இருந்தனர்.

போர்க்களக் கொட்டில்களில் ஆயுதங்கள் பெருமரச்சாரங்களில் ஏற்றி அடுக்கப்பட்டுக்கொண்டிருந்தபோது இரலிமேட்டின் முதல் மூன்று குகைகள் முழுக்க ஆயுதங்கள் நிரப்பப்பட்டுவிட்டன. ஒவ்வொரு குகையும் பத்து பனை நீளத்துக்கு உள்ளே செல்லக்கூடியதாக இருந்தது. பறம்பின் ஆயுதப் பொறுப்பாளனாக சிறுபாழியைச் சேர்ந்த முதுவேலன் நியமிக்கப்பட்டார். குகைகளுக்குள் விளக்குகள் எந்நேரமும் எரிந்துகொண்டிருந்தன. ஆயுதங்களை எடுத்துத் தர ஏதுவாக மரச்சாரங்களை அடிக்கும் பணி இரண்டே நாளில் முடிவுற்றது. அதன் பிறகு ஆயுதங்கள் அடுக்கப்பட்டன. போர்க்களம் செல்ல முடியாத வயதானவர்கள் இந்தப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

மூங்கிலும் குமிளங்கொம்பும் மட்டுமே வில் செய்ய பயன்படுத்தப்பட்டன. உலோகத்தால் வில் செய்யும் பழக்கம் பறம்பில் இல்லை. வேந்தர்களின் தரப்பில் முன்கள வீரர்களும் தளபதிகளும் உலோக வில்லையே பயன்படுத்துவர்.  மற்ற வீரர்கள் பயன்படுத்தும் வில்கள் பனைமட்டையாலும் மூங்கிலாலும் ஆனவையாக இருந்தன. ஐந்து, ஏழு, ஒன்பது முடிச்சுகள்கொண்ட வில்களையே வேந்தர்களின் படையினர் பயன்படுத்தினர். பெரும்பாலான முன்கள வீரர்களும் தளபதிகளும் சிறுவிரல் பருமன் அளவு முறுக்கப்பட்ட பட்டுநூலால் ஆன நாணையே பயன்படுத்தினர். ஆனால், பறம்புவீரர்கள் அத்தனை பேரும் குறுங்காது முயலின் குருதியில் ஊறவைக்கப்பட்ட நாண் பூட்டிய வில்லையே பயன்படுத்தினர்.

இரும்புக்கிட்டம், சிரட்டைக்கரி, புளியம் விதை மூன்றையும் கருவேலஞ்சாறு விட்டு இடித்து அதனுடன் கூழாங்கல் மாவைச் சேர்த்து ஆயுதங்களுக்கான `வடி’ உருவாக்கப்பட்டது. நான்காம், ஐந்தாம் குகைகள் ஆயுத உருவாக்கங்களுக்கான உலைகளால் நிரம்பி இருந்தன. உலைகளின் தன்மைக்கு ஏற்ப அவை குகைகளைவிட்டு வெளியே பல இடங்களில் அமைக்கப்பட்டன. சிறிய உலைக்கு காற்றடி இல்லாத ஒடுங்கிய பகுதியே ஏற்றது. அந்த வகை உலைகளில்தான் ஆயுதங்களின் நுனிப்பகுதியிலும் விளிம்பின் கூர்முனையிலும் செய்யவேண்டிய முக்கியமான வேலைகளைச் செய்ய முடியும்.

மற்ற காலங்களில் ஆயுதங்களை பெருவுலையில் அடித்தும் வடித்தும் வைத்திருப்பர். அவை எல்லாம் முதல் மூன்று குகைகளில் வந்து நிரப்பப்பட்டுவிட்டன. இப்போது அவை அனைத்தையும் போருக்குப் பயன்படுத்துவதற்கு ஏற்ப இறுதி வடிவம்கொடுக்கும் வேலையைத்தான் நான்காம், ஐந்தாம் குகைகளில் செய்தனர். 

பறம்புவீரர்கள் பயன்படுத்தும் வாள்கள் அனைத்தையும் கலவைத் தொட்டியில் பத்து நாள்கள் ஊறவைக்க வேண்டும். அதன் பிறகுதான் போர்க்களத்துக்கு எடுத்துச்செல்லப்பட வேண்டும். பொதுவாக, பறம்புவீரர்களுக்கு போர்க்களத்தில் வாளைப் பயன்படுத்தும் வாய்ப்பு அதிகம் வாய்த்ததில்லை. பறம்பின் வில்படையே எதிரிகளை முழுமுற்றாகத் தாக்கி அழித்துவிடும். எனவே, வாளின் வேலை மிகக் குறைவே. ஆனால், இந்தப் போரில் வாள்வீச்சுக்கு மிகுந்த முக்கியத்துவம் உண்டு என்பதால், எண்ணற்ற கலவைத்தொட்டிகள் உருவாக்கப்பட்டன. கொடிக்கள்ளி சாம்பல், புறாவெச்சம், எருக்கிலைப்பால், எலிச்சக்கை ஆகிவற்றால் ஆன கலவையில் உலோகங்கள் நாள்கணக்கில் ஊறவைக்கப்பட்டன. அப்படிச் செய்தால் அவை ஒருபோதும் மொட்டையாகாது. வேறு எந்த உலோகத்துடனோ கருங்கற்பாறையிலோ மோதினாலும் இந்த வாளுக்கு சிறு பாதிப்புகூட ஏற்படாது. முனை, எளிதில் மழுங்காது. வாய்ப்பு கிடைக்குமேயானால், எதிரியின் வாளைப் பிளந்து இறங்கும். 

பறம்புவீரர்கள் பயன்படுத்தும் இந்த வகை வாளுக்கு நிகரான கூர்வழுவுள்ள வாள் வேறெதுவும் இல்லை.

கலவைத் தொட்டியில் ஊறவைக்கப்பட்ட உள்ளங்கை அளவு அகலம்கொண்ட கூர்முனை

வீரயுக நாயகன் வேள்பாரி - 80

ஆயுதத்தைக்கொண்டே மூவிலைவேல் தயாரிக்கப்பட்டது. பறம்பின் தனித்துவமான ஆயுதம் இது. வேறெங்கும் இந்த வகை ஆயுதம் செய்யப்பட்டதில்லை. வேலின் முனையில் விரிந்திருக்கும் மூவிலையில் கல்லூசிகளையும் எஃகூசிகளையும் பன்றியின் முன்கொம்பால் செய்யப்பட்ட ஊசியையும் பொதிந்துவைப்பர். மூவிலைவேலை செய்ய அதிக காலம் தேவைப்படும். எனவே, வீரர்களின் பயன்பாட்டுக்கு இது அரிதாகவே  கொடுக்கப்படும். வலிமைகொண்ட வீரன் ஒருவன் குறி தவறாமல் எறிந்தால், எதிரியின் தேர் முறிந்து கீழே சரியும். போர் யானையை ஒரே எறியால் வீழ்த்த முடிகிற ஆயுதம், இது ஒன்றுதான்.

பேரரசுகளின் வலிமை, எண்ணில்லாத மடங்கு ஆயுதங்களை இடைவிடாது போர்க்களத்துக்கு அனுப்புவதிலே இருக்கிறது. ஒரு யானையின்மேல் ஏற்றப்படும் ஆயுதங்களைக்கொண்டு நூறு வீரர்களைக்கொண்ட படைப்பிரிவு நாள் முழுவதும் சண்டையிடலாம். அவ்வாறு ஆயுதங்களை ஏற்றிச்செல்ல மட்டும் நூறு யானைகள் ஆயுதவாரியின் உத்தரவுக்குக் காத்துநின்றன. உடல் முழுவதும் கவசங்களால் பூட்டப்பட்ட யானை, ஆயுதங்களைச் சுமந்து போர்க்களத்துக்குள் செல்லும்போது எதிரிப்படையால் அதை எதிர்த்து எதுவும் செய்ய முடியாது.

வாளும் வேலும் அம்பும் தாக்கும் ஆயுதங்கள் என்றால், கவசமும் கேடயமும்தான் காக்கும் ஆயுதங்கள். பேரரசுகளின் படைகளில் தளபதிகளுக்கும் முதல் நிலை வீரர்களுக்கும் தகுந்த மெய்யுறைக் கவசங்களை உருவாக்கி வைத்திருந்தனர். வாள்வீச்சாளர்கள் அத்தனை பேருக்கும் மூன்று வகையான கேடயங்கள் வடிவமைக்கப்பட்டிருந்தன. சேரனின் கேடயம் வாள்வீச்சாளன் சுழன்று தாக்க ஏதுவாக இருந்தது. சோழனின் கேடயம் அதே அளவு வலிமையுடன், ஆனால் எடை குறைவானதாக இருந்தது. அதனாலேயே அதைப் பயன்படுத்த வீரர்கள் மிகவும் விரும்பினர். பாண்டியனின் கேடயமோ, யானை ஏறி நின்றபோதும் நெளிந்துகொடுக்கவில்லை.

``பறம்புக்கு கடந்தகாலங்களில் வாள்படை பெரிதாகத் தேவைப்படாததால், கேடயத்துக்கான தேவையும் பெரிய அளவில் இல்லை. இப்போதுதான் அதன் தேவை உணரப்படுகிறது. அதை உருவாக்குவதொன்றும் கடின வேலையல்ல’’ என்றான் முதுவேலன். ஆனாலும் முறியன் ஆசான் வந்த பிறகு அவரிடம் கேட்காமல் செய்வது முறையன்று என்பதால், அவரிடம் ஆலோசனை கேட்டான். அவர் சொல்லிய குறிப்பின் அடிப்படையில் வேலைகள் உடனடியாகத் தொடங்கப்பட்டன. ஆனால், மெய்யுறை தயாரிக்க ஆசான் சொல்லும் சிவப்புச் சித்திர மூலக்கொடியும் செங்கொடி வேலியும் எளிதில் கண்ணுக்குப்படாதவை. எங்கோ ஒன்றுதான் முளைத்துக்கிடக்கும். பறம்பின் அத்தனை வீரர்களுக்கும் மெய்யுறை தயாரிக்கத் தேவையான அளவு இந்தக் கொடிகளைப் பறித்துவருதல் எளிதன்று. ஆனால், அதைத் தவிர வேறு வழியில்லை.

முடியன் உத்தரவிட்டான். நாகக்கரடுக்கு வந்து சேர்ந்த வீரர்கள் மட்டும் இங்கு இருக்கவைக்கப்பட்டனர். பல்வேறு பகுதிகளிலிருந்து இரலிமேட்டுக்கு வந்துகொண்டிருந்த வீரர்கள் அனைவருக்கும் செய்தி அனுப்பப்பட்டது. அதேபோல பறம்புமலை முழுவதும் உள்ள மக்களுக்கும் செய்தி கொடுக்கப்பட்டது. எல்லோரும் மூலிகையைத் தேடி காடுகளுக்குள் இறங்கினர்.

கிடைக்கும் மூலிகைகளை, காலம் கடத்தாமல் இரலிமேட்டுக்கு அனுப்பிவைக்க வேண்டும் என்பது உத்தரவு. வந்துசேர்ந்த மூலிகைக் கொடிகளைக்கொண்டு மெய்யுறை தயாரிக்கும் வேலை நடந்துகொண்டிருந்தது. கல்லில் அறைத்துத் தயாரிக்கப்படும் இவற்றை, நிழலில் உலர்த்திதான் ஈரம்போக்க வேண்டும். அதற்கு ஏற்ற இடமாக குகைத்தளங்கள் இருந்தன.

வேலைகள் மும்முரமாக நடந்துகொண்டிருந்தபோது பாரியும் கபிலரும் வேட்டுவன்பாறையிலிருந்து இரலிமேடு நோக்கிப் புறப்பட்டனர். இத்தனை நாள்களாக பாரி வேட்டுவன்பாறையிலேயே இருந்ததற்கு போர்த்தயாரிப்பு நோக்கி மனம் ஒன்றாததுதான் காரணம். ஆனாலும் முன்னெச்சரிக்கையாக நாம் சில தயாரிப்புகளைச் செய்தாகவேண்டும் என்று அனைவரும் சொன்னதால், அதை ஏற்றான். தேக்கனும் முடியனும் அதைச் செய்து முடிக்கட்டும் என்று வேட்டுவன்பாறையிலே தங்கிவிட்ட பாரி, இன்று காலையில் கபிலருடன் இரலிமேடு நோக்கிப் புறப்பட்டான்.

நடுப்பகலின்போது அவர்கள் நெடுங்குன்றை வந்தடைந்தனர். அங்கிருந்து சமதளத்தில் கண்ணுக்கு எட்டும் தொலைவு வரை வேந்தர்களின் படைகள் பரவிக்கிடந்தன. நெடுங்குன்றைக் கடந்ததும் நாகக்கரடு தொடங்குகிறது. கரடு முழுவதும் பறம்புவீரர்கள் நிலைபெற்றிருந்தனர். நீலனும் உதிரனும் கரட்டின் இருபக்க எல்லைகளில் நிலைகொண்டிருந்தனர். குதிரைகள் நிற்காமல் விரைந்துகொண்டிருந்தன. எங்கும் வீரர்கள் உற்சாகமாக ஒலி எழுப்பியபடி இருந்தனர். மாலை வரை பயணம் நீடித்தது. கரடு முழுவதும் பறம்பின் வீரர்களும் சமவெளி முழுவதும் வேந்தர்களின் படையுமாக நிலமெங்கும் மனிதத்தலைகள் நிரம்பி வழிந்தன.

நாகக்கரட்டைவிட்டு இறங்கி இரலிமேட்டை நோக்கி மேலேற, குதிரையைத் திருப்பினான் பாரி. அந்த இடத்தில்தான் தேர்களைச் செய்வதற்கான வேலைகள் நடந்துகொண்டிருந்தன.

எண்ணிலடங்கா தேர்கள் செய்யப்பட்டு வரிசை வரிசையாக நிறுத்தப்பட்டிருந்தன. பாரியும் கபிலரும் அந்த இடம் வந்ததும் குதிரையை இழுத்து நிறுத்தினர். கபிலரின் கண்கள் வியப்பு நீங்காமல் பார்த்துக்கொண்டிருந்தன. ஒற்றைக் கட்டையால் நடுமரம் அமைக்கப்பட்டு எளிய முறையில் தேரை வடிவமைத்திருந்தனர். வேட்டூர் பழையனும் காலம்பனும் அந்த இடம் நின்றிருந்தனர். தேரின் உறுதியை கலைஞர்கள் பாரிக்கு விளக்கினர். நிறுத்தப்பட்டிருந்த தேர்களைவிட்டு பாரியின் கண்கள் எளிதில் அகலவில்லை.

பார்த்தபடி இரலிமேட்டை நோக்கி குதிரையைச் செலுத்தினர்.  உலைக்களங்களும் குதிரைக்கொட்டடிகளும் உணவுச்சாலைகளும் இரலிமேடு முழுவதும் நிரம்பி வழிந்துகொண்டிருந்தன. எங்கும் வீரர்கள் வேலைபார்த்துக்கொண்டிருந்தனர். கூழையன் சத்தம் இடதுபுற மூலையில் கேட்டுக்கொண்டிருந்தது.

வீரயுக நாயகன் வேள்பாரி - 80

மூன்றாம் குகையிலிருந்து வெளிவந்தார் வாரிக்கையன். கீழிருந்து பாரியும் கபிலரும் குகை நோக்கி வந்துகொண்டிருப்பது தெரிந்தது. அவர்கள் மேலே வரும் வரை அந்த இடம்விட்டு நகரவில்லை. பாரியின் குதிரை, முன்னால் வந்துகொண்டிருந்தது. அதைத் தொடர்ந்து கபிலர் வந்துகொண்டிருந்தார். குகைவாயில் வந்தடையும் வரை பார்த்துக்கொண்டிருந்தார் வாரிக்கையன்.

பாரி வந்து இறங்கினான். மகிழ்ந்த முகத்தோடு அவனை வரவேற்றார் வாரிக்கையன்.

``என்ன... நெடுநேரமாக நின்று பார்த்துக்கொண்டிருக்கிறீர்கள்?” எனக் கேட்டான் பாரி.

``உன் பின்னால் வந்துகொண்டிருந்தது கபிலனா, கூழையனா என, சற்றே ஐயமாக இருந்தது!”

``ஏன், பார்வை தெளிவில்லையா?”

``போர்வீரனைப்போல மலையேற்றத்தில்கூட குதிரையை இயல்பாக இயக்கும் தெளிவை புலவன் பெற்றுவிட்டான் அல்லவா! அதனால்” என்றார்.

கபிலர் ஒரு கணம் பூரித்து நின்றார். பாரி சொன்னான், ``உங்களையும் போருக்கு ஆயத்தப்படுத்துகிறார். எச்சரிக்கையாக இருங்கள்.”

மூவரின் சிரிப்பும் குகை முழுவதும் எதிரொலித்தது.

மூவேந்தர்களின் வருகைக்குப் பிறகு மூஞ்சல்நகர் களைகட்டத் தொடங்கியது. பேரரசர்கள் ஒருவருக்கொருவர் ஆரத்தழுவி அன்பைப் பரிமாறிக்கொண்டனர். ரத்தினக்கல் பதித்த ஆரங்களை பாண்டியனுக்கும் சோழனுக்கும் சூட்டி மகிழ்ந்தான் உதியஞ்சேரல். செங்கனச்சோழனும் தனது சிறந்த பரிசை மற்ற இருவருக்கும் வழங்கினான். குலசேகரபாண்டியனோ இருவரையும் முத்துகளால் குளிக்கவைத்தான். மூவரும் ஹிப்பாலஸுக்கு அளவற்ற நன்றியைத் தெரிவித்துக்கொண்டனர். இசையும் கூத்தும் இரவெல்லாம் நீண்டன.

நாள்கள் நகர, அடுத்தடுத்த கட்டத்துக்கான ஏற்பாடுகள் தீவிரமாகின. படைகளின் பிரிவுகள் எண்ணற்றச் சேனைகளாக வகுக்கப்பட்டன. ஒவ்வொரு சேனைக்கும் சேனைமுதலி இருந்தார். பன்னிரு சேனைகளைக்கொண்ட பெரும்பிரிவுக்கு சேனைவரையன் இருந்தார். விற்படை, வாள்படை, குதிரைப்படை, தேர்ப்படை, யானைப்படை என ஐவகைப் படைகள் ஆயத்தநிலையில் இருந்தன. ஐவகைப் படைகளுக்கும் ஐந்து தளபதிகளைத் தேர்வுசெய்யவேண்டியிருந்தது. விற்படைக்கு துடும்பனும், வாள்படைக்கு சாகலைவனும், குதிரைப்படைக்கு உறுமன்கொடியும், தேர்ப்படைக்கு நகரி வீரனும், யானைப்படைக்கு உச்சங்காரியும் தளபதிகளாக இருக்க முடிவுசெய்யப்பட்டது.

ஐந்து தளபதிகளையும் கட்டுப்படுத்தும் தலைமைத் தளபதியாக `மகாசாமந்தன்’ என்று அழைக்கப்படும் பெரும்பொறுப்புக்கு கருங்கைவாணன் தேர்வுசெய்யப்பட்டான்.

சேரனின் சார்பில் உதியஞ்சேரலும் சோழனின் சார்பில் சோழவேலனும் பாண்டியனின் சார்பில் பொதியவெற்பனும் களத்தில் ஆயுதம் ஏந்துவர். மூவேந்தர்களும் ஒற்றைப்படை அணியில் நின்று ஆயுதம் ஏந்தப்போகும் இந்தப் பெரும்போரின் தொடக்கச் சடங்குக்கு நாள் குறிக்க கணியர்களிடம் ஆலோசனை கேட்க வேந்தர்கள் முடிவுசெய்தனர்.

மூன்று நாட்டுக் கணியர்களும் மூன்றுவிதமான குறிப்புகளைச் சொல்ல வாய்ப்புண்டு. இந்தப் போரில் அடையப்போகும் வெற்றி பொதுவானது. ஆனால், இழப்பின் தன்மை பொதுவானதாக இருக்க வாய்ப்பில்லை. மூவருக்கும் வேறுபட்ட தன்மையில்தான் அது அமையும். தங்களுக்கு எந்தவித இழப்பும் நேரக் கூடாது என்றே மூவரும் நினைப்பர். அதற்குத் தகுந்த தன்மையில்தான் நாள் குறிக்க எண்ணுவர். எனவே, இதுதான் மூவருக்குள்ளும் ஆழமான விளைவை உருவாக்கும் செயல். இதை மிகவும் கவனமாகக் கையாளவேண்டும் என நினைத்தார் முசுகுந்தர்.

அன்று இரவு குலசேகரபாண்டியனிடம் இது பற்றி தனியே உரையாடினார், ``காலையில் அந்துவன் கையில் வரைபடம் ஏந்திய பட்டுத்துணியோடு என்னை வந்து சந்தித்தான். `பவளவந்திகையின் காலடி குறிப்பைக்கொண்டே வேந்தர்களின் பாடிவீடு வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்தக் குறிப்பின் அடிப்படையிலே நாள் குறிப்பதுதான் பொருத்தமானது’ என்றான். ஆனால், மற்ற இரு பேரரசர்களும் கணியர்களும் இதை ஏற்பார்கள் என்று சொல்ல முடியாது. அவர்களின் நாள்கணக்குகள் வேறு மாதிரியாக இருக்க வாய்ப்புண்டு” என்றார்.

வீரயுக நாயகன் வேள்பாரி - 80

``தளபதிகளைத் தேர்வுசெய்ததைப்போல மற்றவர்கள் எளிதில் ஏற்றுக்கொள்ளும் செயலல்ல இது. உணர்வுடனும் நம்பிக்கையுடனும் கலந்தது. எனவே, கவனமாகச் சிந்தித்து முடிவெடுக்க வேண்டும்” என்று சொன்னவர், நீண்டநேரம் கழித்து ``இந்தப் பிரச்னையைத் தீர்க்க நீங்கள் சொல்லும் வழி என்ன?” எனக் கேட்டார்.

``ஒரே வழிதான் உண்டு. தமிழ் நிலத்தின் அத்தனை கணியர்களும் பேராசானாக ஏற்றுக்கொண்டது திசைவேழரைத்தான். அவரை வரவழைத்து நாள் குறிப்போம். மற்ற இரு பேரரசர்களும் அதை ஏற்பர்” என்றார்.

குலசேகரபாண்டியன், திசைவேழரை நன்கு அறிவார். அவரது கருத்தை யாருக்காகவும் விட்டுக்கொடுக்காத அறிவுச்செருக்கின் அடையாளம். அவரை கையாள்வது ஆபத்து நிறைந்தது. ஆனாலும் `மூவரும் ஏற்றுக்கொள்ளும் ஒரு பொதுமனிதர் தேவை. அதற்கு திசைவேழர் பொருத்தமானவர்தான்’ என நினைத்து அவரை அழைக்க சம்மதம் தெரிவித்தார்.

மற்ற இரு பேரரசர்களுக்கும் இந்த ஆலோசனை சொல்லப்பட்டது. அனைவரும் மகிழ்வோடு ஏற்றனர். திசைவேழரின் தலைமாணவன் அந்துவனையே அனுப்ப முடிவானது. அவரின் இருப்பிடமான பொதிகைமலையில் இருந்தால் வந்துசேர பல நாள் ஆகும். ஆனால், அவரோ வைகையின் ஓரத்தில் இருக்கும் குன்றில்தான் இருந்தார். நான்கு புரவி பூட்டிய பெருந்தேரில் அவரின் இருப்பிடம் நோக்கி விரைந்தான் அந்துவன்.

இரவு-பகல் நிற்காமல் பயணித்து அவரின் இருப்பிடம் அடைந்தான். ஆற்றின் வடகரையில் அவரது குடில் இருந்ததால் வைகையின் வெள்ளத்தைக் கடக்கவேண்டிய தேவை எழவில்லை. ஆற்றங்கரையிலிருந்து நாணல்கள் விலக்கி குடில் நோக்கி வந்தார் திசைவேழர். தனது ஆசானைப் பணிந்து வணங்கி மூவேந்தர்களின் அழைப்பைத் தெரிவித்தான் அந்துவன்.

``பெருவெள்ளம் ஓடும் ஆற்றங்கரையில் இருக்கிறேன். ஆனால், அள்ளிப்பருக குருதி கொண்டுவந்திருக்கிறாய் நீ.”

அந்துவன் மறுமொழியின்றி அமைதியாக நின்றான்.

``நான் போர்க்களம் புகேன் என மூவேந்தர்களுக்கும் தெரியும். அப்படியிருந்தும் என்னை ஏன் அழைத்தார்கள்?” என வினவினார். அந்துவனிடம் இதற்கும் பதில் இல்லை. திசைவேழர், குடிலுக்குள் போனார்.

அந்துவன் அன்று முழுவதும் காத்திருந்தான். மறுநாள் மாலை குடில்விட்டு வெளியே வந்தார். `மூவேந்தர்களின் அழைப்பை நிராகரிக்க வேண்டாம். போய் நமது நிலையைத் தெளிவுபடுத்திவிட்டு வருவோம்’ என்று எண்ணியபடி ``காலையில் புறப்படுவோம்” எனக் கூறினார்.

இந்தச் செய்தி இரவோடு இரவாகப் பயணித்து விடியும்போது மூஞ்சல்நகர் எட்டியது. `திசைவேழர், அழைப்பை ஏற்க மறுப்பாரோ!’ என்ற அச்சத்திலிருந்த முசுகுந்தர், செய்தி கேட்டு அளவற்ற மகிழ்வடைந்தார். மூஞ்சலில் எல்லாமே சிறப்பான தொடக்கமாக அமைகிறது. மூவேந்தர்களும் தங்களுக்குள் மிக இயல்பாகப் பேசிக்கொள்ள அதிக காலம் எடுத்துக்கொள்ளவில்லை. `தளபதிகளின் தேர்விலும் முரண்கள் எதுவும் உருவாகவில்லை. அதேபோல சடங்குக்கான நாள் குறிப்பிலும் சிக்கலான நிலையேதும் உருவாகாமல் இருந்தால் போதும், எல்லாம் வெற்றிகரமாக அமைந்துவிடும்’ என்று எண்ணியபடி பொதியவெற்பனின் கூடாரத்துக்கு வெளியே நின்றுகொண்டிருந்தார்.

அப்போது உதியஞ்சேரல் தனது மாளிகையைவிட்டு வெளிவருவதை பணியாளர்கள் சிற்றோசை எழுப்பி தெரியப்படுத்தினர். அவர் உணவுக்கூடாரத்தை நோக்கி நடந்து போனார். பேசிக்கொண்டே உடன் சென்ற அமைச்சர் நாகரையன், அவர் உணவகம் நுழைந்ததும் வந்த வழியே திரும்பினார்.

வீரயுக நாயகன் வேள்பாரி - 80



சற்று தொலைவில் முசுகுந்தர் நிற்பதைப் பார்த்து அருகில் வந்தார். திசைவேழர் அழைப்பை ஏற்றுக்கொண்ட செய்தியை அவரோடு பரிமாறி மகிழ்ந்தார் முசுகுந்தர். இருவரும் நீண்டநேரம் பேசியபடி நின்றனர்.

முசுகுந்தர் கேட்டார், ``எனக்கு ஓர் ஐயம். தெளிவுபடுத்த முடியுமா?”

``எனக்கு விடை தெரிந்தால் தெளிவுபடுத்துகிறேன்” என்றார் நாகரையர்.

``உங்களின் பேரரசருடன் எந்நேரமும் கருங்குரங்குக் குட்டி ஒன்று இருக்கிறதே, ஏன்?”

நாகரையர் இந்தக் கேள்வியை எதிர்பார்க்கவில்லை. சற்றே சிந்தித்தபடி இருந்தார், ``பேரரசருக்குப் பிடித்த உயிரினம் அது என்பதால்தான்” என்று சொல்லி, வார்த்தையை முடிக்காமல் நீட்டினார். எதையோ சொல்ல தயங்குகிறார் என்பது புரிந்தது.

சற்று இடைவெளியில் அவரே சொன்னார், ``உங்களிடம் மறைக்க விரும்பவில்லை. ஆனால், நீங்கள் மற்றவர்களிடம் பகிர்ந்துகொள்ளாதீர்கள். எந்நேரமும் அந்தக் குட்டி உடன் இருக்காது; உணவுக்கூடாரத்துக்குச் செல்லும்போது மட்டும்தான் உடன் இருக்கும். உணவில் நஞ்சு இருப்பின் வாசனையை நுகர்ந்த கணத்திலேயே அது சத்தமிட்டுக் குதிக்கும்; மலம்கழிக்கும். அதனால்தான் அவர் அதை வைத்துள்ளார். எங்கள் மருத்துவர்கள் கூறியுள்ள பாதுகாப்பு ஏற்பாடு அது” என்றார்.

மூவேந்தர்களுக்குள்ளும் பொதுநம்பிக்கையை உருவாக்குவது எவ்வளவு கடினமான செயல் என்பதை குரங்கின் மூலமும் உணர்ந்தார் முசுகுந்தர்.

திசைவேழரின் இருப்பிடத்திலிருந்து நான்கு புரவிகள் பூட்டிய பெருந்தேர் பயணத்தைத் தொடங்கியது. திசைவேழர், மனக்குழப்பத்தினூடே பயணப்பட்டுக்கொண்டிருந்தார். மறுநாள் போர்ப்பாசறைக்குள் தேர் நுழைந்தது. திரைச்சீலையின் வழியே வெளியில் பார்த்துக்கொண்டு வந்தவர் போர்நிலம் வந்தவுடன் வெளிப்பார்வையைத் தவிர்த்தார். தேர் மூஞ்சலில் வந்து நின்றது.

முசுகுந்தர் வணங்கி வரவேற்றார். பயணக்கலைப்பு நீங்க கூடாரத்தில் தங்கி சற்று ஓய்வெடுக்கச் சொன்னார். மாலை ஆனதும் அவர் முன் உணவு பரிமாறப்பட்டது. இரண்டு வாழைக்கனிகளை மட்டும் எடுத்துக்கொண்டார். பேரரசர்கள் கூடும் நடுக்கூடாரத்துக்கு அவரை அழைத்துச் செல்ல முசுகுந்தர் காத்திருந்தார். சிறிது நேரம் கழித்து புறப்பட்டார். அவரை அழைத்துக்கொண்டு முன்நடந்தார் முசுகுந்தர்.

நடுக்கூடாரத்தில் மூவேந்தர்களுடன் சோழவேலனும் பொதியவெற்பனும் இருந்தனர். அரச குடும்பமல்லாத ஒரே நபராக முசுகுந்தர் இருந்தார். திசைவேழர் உள்ளே நுழைந்ததும் அனைவரும் அவருக்கு மரியாதை செய்தனர். அதை ஏற்றபடி தனக்கான இருக்கையில் அமர்ந்தார் திசைவேழர்.

உதியஞ்சேரலும் செங்கனச்சோழனும் திசைவேழரைப் பார்த்து பல்லாண்டுகள் ஆகின்றன. நீண்ட இடைவெளிக்குப் பிறகு பார்க்கும் இருவரும் அவரின் முதுமையைக் கண்டு மனம்குவித்து வணங்கினர்.
குலசேகரபாண்டியன்தான் பேச்சைத் தொடங்கினார், ``இந்த மண் காணாத பெரும்போரை நடத்த மூவேந்தரும் இணைந்துள்ளோம். போர்ச்சடங்குக்கு நாள் குறித்துத் தரவே பேராசானை அழைத்தோம்” என்றார்.

``பலி நிலத்துக்குக் குறிசொல்லும் இழிசெயல் செய்யேன்” என வார்த்தை வெடித்து மேலே கிளம்ப எத்தனித்தது. `பேரரசர்கள் மூவரும் இருக்கும் அவையில் கடுஞ்சொற்கள் வேண்டாம்!’ என எண்ணினார் திசைவேழர்.

அமைதி நீடித்தது. அவர் சொல்லப்போகும் வார்த்தையை எதிர்பார்த்துக் காத்திருந்தது அவை. சற்று இடைவேளைக்குப் பிறகு, ``போரைத் தவிர்க்க வழியேதும் இல்லையா?” என மெல்லிய குரலில் கேட்டார்.
போர்க்களத்துச் சடங்குக்கு நாள் குறிக்க அழைக்கப்பட்டவர் போரைத் தவிர்க்க வழிகேட்டது, சேரனுக்கு அதிர்ச்சியைக் கொடுத்தது. சடங்கின் தன்மை பேசப்படும் கணத்திலிருந்து தொடங்கக்கூடியது. அது சார்ந்த எல்லா நிகழ்வுகளும் சடங்கின் பகுதியே, அது சார்ந்த செயலும் சொல்லும் சடங்கினால் ஏற்படும் விளைவை தீர்மானிப்பவையே; நாள் குறிக்க நிகழ்த்தப்படும் சடங்கைப் பற்றியப் பேச்சே சட்டென தடுமாறியது நல்ல அறிகுறியாக உதியஞ்சேரலுக்குப் படவில்லை.

குலசேகரபாண்டியனோ திசைவேழரிடமிருந்து இந்தக் கேள்வியை எதிர்பார்க்கவில்லை. என்ன சொல்வதென்ற திகைப்பு எல்லோரிடமும் இருந்தது. பேராசானுடனான உரையாடலில் மிகுந்த கவனம் தேவை என அனைவரும் அறிவர். எனவே, அமைதியே நீடித்தது.

``வலதுகாலை மடக்க முடியாமல் சிரமப்பட்டீர்களே! இப்போது ஆசனத்தில் சம்மணமிட்டு உட்கார்ந்திருக்கிறீர்களே எப்படி?” என்று சூழலை இலகுவாக்க பேச்சின் போக்கை மாற்ற முயன்றார் முசுகுந்தர். ஆனால், அந்தப் பேச்சு பறம்பினைத்தான் நினைவூட்டியது. புலி முன் ஆடு போல இருந்தது அவையின் அமைதி.

``வளம்மிக்க மண்ணைப் பாழ்படுத்துதல் அறமன்று” என்றார் திசைவேழர்.

``வளத்தை, தானும் பயன்படுத்தாமல் மற்றவர்களையும் பயன்படுத்தவிடாமல் தடுப்பது இயற்கைக்குச் செய்யும் நியதியன்று” என்றார் முசுகுந்தர்.

வீரயுக நாயகன் வேள்பாரி - 80

``பயன்பாட்டு உரிமைதான் சிக்கல் என்றால், பேசித் தீர்க்கலாமே. பேசிப்பார்க்காமலேயே போர்க்களம் புகுவது என்ன அறம்?”

மீண்டும் அமைதி நிலவியது.

இந்த இடம் சேரனோ சோழனோ மறுமொழி பேச முடியாது. வயதில் மூத்த குலசேகரபாண்டியன்தான் பேசியாக வேண்டும். எனவே, மற்றவர்கள் அவரையே பார்த்தனர்.

குலசேகரபாண்டியன் சற்றே குழப்பமடைந்தான். நாமே தேவையில்லாமல் சிக்கலை ஏற்படுத்திக்கொண்டோமோ எனத் தோன்றியது. மற்ற இரு பேரரசர்களும் ஏற்கும் பொதுமனிதர் ஒருவர் வேண்டும் என யோசித்தோம். ஆனால், `மூவரும் பேசி இணங்கவைக்க முடியாத மனிதரை அழைத்துவந்துவிட்டோமோ!’ எனத் தோன்றியது. 

சற்று இடைவெளியில் ``சரி, நீங்களே இதற்கு வழியொன்று சொல்லுங்கள்” என்றார் குலசேகரபாண்டியன்.

திசைவேழர் இதை எதிர்பார்க்கவில்லை. ஆனாலும் அதை இறுகப் பற்றிக்கொண்டார். சற்றே கண்மூடிச் சிந்தித்தார். `என்ன சொல்லப்போகிறார்?’ என அவை காத்திருந்தது. ``மூன்று பேரரசுகளின் போற்றுதலுக்குரிய பெரும்புலவர் கபிலர்தானே பாரியின் உற்றதோழர். அவர் மூலம் பேசிப்பார்க்கலாமே!”

மூவரின் கண்களும் ஒருவரை ஒருவர் பார்த்துத் திரும்பின. மறுமொழி எழவில்லை. திசைவேழரின் கூற்றை மறுப்பதற்கான காரணம் ஏதுமில்லை. அமைதி நீடித்தது. சம்மணமிட்ட காலை நீட்டித் தொங்கவிட்டார் திசைவேழர்.

இந்த இடத்தை அறிவுக்கூர்மையுடன் கையாள வேண்டும். இல்லையென்றால், போரின் தொடக்கமே சிக்கல் நிரம்பியதாகிவிடும் என நினைத்த குலசேகரபாண்டியன், ``சரி, பேச்சுவார்த்தைக்காக கபிலருக்கு அழைப்பு அனுப்புங்கள்” என்றார்.

- பறம்பின் குரல் ஒலிக்கும்...