மற்ற எபிசோடுகள்
Published:Updated:

காலத்தை கைமாற்றிவிடுதல்... - அர்ஷியா எனும் நினைவு - ஆதிரன்

காலத்தை கைமாற்றிவிடுதல்... - அர்ஷியா எனும் நினைவு - ஆதிரன்
பிரீமியம் ஸ்டோரி
News
காலத்தை கைமாற்றிவிடுதல்... - அர்ஷியா எனும் நினைவு - ஆதிரன்

படங்கள்: கு.வேல்முருகன், ரெங்கா கருவாயன்

‘சிந்திக்கிறேன்... அதனால் நான் இருக்கிறேன்’ என்றார், ரேனே டெகார்த்தே. என் சிந்தனைகளில் இருந்துதான் என்னை அறிந்துகொள்ளவும் அதன் அடிப்படையில் புரிந்துகொள்ளவும் முடிகிறது. சிந்தனைகளின் ஊடாக எழும் நினைவுகள், பல சிக்கலான உணர்வுகளை மனிதர்களிடம் உருவாக்கிவிடுகிறது. அர்ஷியா என்கிற மனிதர், கடந்த ஒன்றரை வருடங்களுக்கு முன் என் நினைவுகளில் இல்லை. பிற்பாடான 18 மாதங்களில் ஐந்து முறை சந்தித்திருக்கிறேன், அவ்வளவே. க.சீ.சிவகுமாரது மரணம்போலவே இவரது மரணமும் முற்றிலும் எதிர்பாராத ஒன்று. இரண்டும் வாழ்வின் சகிக்க முடியாத அபத்தத்தின் நிறுவல்கள். மரணம் ஒரு கைதேர்ந்த முதிய மருத்துவச்சியைப் போல காலத்தைப் பகுத்தாய்வு செய்கிறது. காலம் நொடிக்கு நொடி அகாலமாகப் போய்விடுகிறது. நினைவுகள் என்பதோ மரணத்தைக் கவனமாகத் தவிர்த்து, தனக்கான காலத்தை உற்பத்தி செய்துகொண்டே இருக்கிறது. மரணம் என்கிற தவிர்க்க முடியாத ஒன்றிற்கு சமாதானம் செய்வதும் அடுத்த நகர்வுக்கு ஊக்கப்படுத்திக்கொள்தலும் உயிரின் இயல்பு என்று சிந்தனை நம்புகிறது. தற்கொலைகள், கொலைகள், நோயுற்றவரின் மரணங்கள், விபத்து மரணங்கள் எனத் தினம் தினம் மரணச் செய்திகளைக் கடக்கும் பணி எனக்கு. ‘ஏற்கெனவே சொல்லப்பட்ட’ கொலைகளை அவதானிக்கும் கூடுதல் பணியும். புள்ளிவிபரங்கள் எனது கனவுகளை நிர்ணயம் செய்கின்றன. எனதான தூக்கம் என்பது மற்றொரு கால அலுவலாகவே ஆகிப்போன பெருந்துயர்.

காலத்தை கைமாற்றிவிடுதல்... - அர்ஷியா எனும் நினைவு - ஆதிரன்

இதனிடையில் எனதான நினைவுகளைத் தவிர, மற்றவர்கள் நினைவுகளையும் சுமந்தலைகிறேன். இவ்வகையான துயர் அல்லது மகிழ்ச்சி எல்லோருக்குமானதுதான். யாருடைய மூளையிலும் நினைவுகள் தீர்வதே இல்லை. மறதி என்ற பெயரில் சற்று ஓய்வும், மரணம் என்கிற பெயரில் நிரந்தரமாகவும் நினைவுகள் மனிதருக்கு இல்லாமல் போகலாம். அதனாலேயே மனிதர்கள், நினைவுகளை

காலத்தை கைமாற்றிவிடுதல்... - அர்ஷியா எனும் நினைவு - ஆதிரன்

மற்றவர்களுக்குக் கைமாற்றிவிடும் செயல்களில் தொடர்ந்து ஈடுபடுகிறார்கள். அர்ஷியாவின் முதல் சந்திப்பில் அவர் எதை எனதான நினைவுகளாகக் கைமாற்றினார் என்பது எனக்குத் துலக்கமாக நினைவிலிருக்கிறது. நேசகரமான அவரது கண்களில் அவர் கொண்டிருந்த நிறைவுதான் அது. அவர் வாழ்வில் அவருக்கு இருந்த நிறைவை அவரின் மொத்த உடல்மொழியும் எனக்கு அறிமுகம் செய்தது. நிதானமான அதேசமயம் உறுதியான அசைவுகள், பேச்சு, தன்மையில் வெளிப்பட்ட வெகுளி, மற்றவர்களிடம் கொள்ளும் அணுகுமுறை போன்றவை தீர்மானமான திட்டத்திலிருந்து வந்தவையல்ல மாறாக, முற்றிலுமான நிறைவினால் வந்தவை. நான் மனிதன் அதனால் எந்தவொரு சகமனிதருக்கும் அந்நியாமானவன் அல்ல என்கிற தோழமை.

எனக்கு அவரைப் பற்றி, அவரது குடும்பத்தைப் பற்றி எதுவும் தெரியாது, இப்போதும். அவருடனான முதல் சந்திப்பு தேனியின் ஒரு விடுதி அறையில் நண்பர்களுடன் நடந்தது. அவர் அதிகமாகப் பேசிக்கொள்ளவில்லை. உற்சாகமாகக் கேட்டுக் கொண்டிருந்தார். பின்னான நான்கு சந்திப்புகளும் குறுகலான நேரம்கொண்டவை. ஒரு தேதியில் தாயின் மரணம் பற்றி, மற்றொரு தேதியில் மகளின் திருமணம் பற்றி, அடுத்தொன்றில் தண்டுவடப் பிரச்னையில் ஏற்பட்ட அனுபவம் தொடர்பாக, கடைசியாக ஓர் இலக்கிய மேடையில், அவ்வளவுதான். ஆனால், அவர் எனக்கு கைமாற்றிவிட்ட நினைவுகள்... அவை எனது தொப்பியில் மிக முக்கியமான இறகு. வண்ணம் மிகுந்த நீலமயில் இறகு. தனது தண்டுவடப் பிரச்னையைப் பற்றி அவரது உற்சாகமான விவரணை. தனது வலியை ஒரு செவ்வியல் நகைச்சுவையாகப் பாவித்து அவர் சொன்ன விதம் என நினைவுகள்...

காலத்தை கைமாற்றிவிடுதல்... - அர்ஷியா எனும் நினைவு - ஆதிரன்

இனிமையான மனிதர் என்று சொன்னால் அவரது எதிரிகள்கூட (அப்படி யாராவது இருக்கிறார்களா?) ஒப்புக்கொள்வார்கள். தனதான வாழ்வு, அதனூடான சமர்களில் தன் செயல்பாடுகள் மீதான முழுமையான நிறைவு, இயல்பான தன் வெளிப்பாடு, அதை சகலருக்கும் பரவச்செய்யும் சக்தி என்பதே அர்ஷியா. அவரது புனைவுகளில் ‘சொட்டாங்கல்’, ‘அதிகாரம்’, ‘ஏழரைப்பங்காளி வகையறா’ ஆகியவை மட்டுமே வாசித்திருக்கிறேன். அவரது புனைவுகளின் நடையில் எனக்குச் சற்று கேள்விகள் இருந்தாலும், ‘ஏழரைப்பங்காளி வகையறா’ தமிழ் புனைவுவெளியில் மிகச் சிறந்த பதிவுகளில் ஒன்று. அவரது கதைக்களமும் புலமும் யதார்த்த வகை விளிம்புநிலை வரலாற்று நிகழ்வுகளின் தொகுப்பு. அதேசமயம், அவரது மொழிபெயர்ப்புகள் சமரசமில்லாத வகையில் தமிழுக்கான கொடைகள். மொழிபெயர்ப்புகளுக்கான புத்தகங்கள் அர்ஷியாவை இழந்தது தமிழ் இலக்கியத்திற்கும் வரலாற்றுப்புலத்திற்கும் பெருந்துயரங்களில் ஒன்று. ஒருவர் தனது நினைவுகளை மற்றவர்களுக்குக் கைமாற்றிவிடுவதன் மூலம் எவ்வகையான சிந்தனைகளை உருவாக்க முயல்கிறார் என்பதில் அவரது வாழ்வின் வெற்றி இருக்கிறது. அப்படித்தான் அர்ஷியா குறித்த நினைவுகளை அசைபோடுகிறேன். சமீபத்தில் ஒருவர் என்னை “மனுசா...” என விளித்தார். கேட்பதற்கு நிறைவாக இருந்தது. இப்போது சிந்தித்துப் பார்த்தால், நிறைவாக ஒருவரை ‘மனுசா…’ என அழைக்கக்கூடிய தன்மையில் அர்ஷியா வாழ்ந்திருக்கிறார் என்பதைப் புரிந்துகொள்கிறேன்.
அவர் இறந்துவிட்ட ஒரு சில நாள்களில், முகநூலில் எனக்கு அவரது பிறந்தநாள் அழைகுறிப்பு வந்தது. என்ன செய்வதென்றே தெரியவில்லை. அவரின் முகநூல் பக்கம் இன்னும் இருக்கிறது. அப்படியென்றால்…?

எனது சிறுவயதில், கிராமத்தில் ஒரு சாவு என்றால் ஊரே திரண்டுவிடும். இடுகாடு வரையிலான ஊர்வலம் என்பது நீளமான ஒன்றாக இருக்கும். நான் வளர வளர, இறுதிஊர்வலங்களின் நீளம் பத்து பதினைந்து

காலத்தை கைமாற்றிவிடுதல்... - அர்ஷியா எனும் நினைவு - ஆதிரன்

அடிகளுக்குள் சுருங்கிவிட்டன. ஆனால், முகநூல் வேறோர் ஊர்வலத்தை உருவாக்கியிருக்கிறது, மெய்நிகர் இறுதிஊர்வலம். அர்ஷியாவிற்கான... அவரைப் போன்ற ஆளுமைகளுக்கான இறுதிஊர்வலங்கள், உலகம் முழுவதுமாக நீண்டதும் அகலமானதுமான ஊர்வலங்களாக அமைந்து கொண்டிருக்கின்றன. இறந்தவர்களின் நினைவுகளை நாம் மனதில் ஏந்துவதோடு மட்டுமல்லாமல் மெய்நிகர் உலகில் பதிவும் செய்கிறோம். அதன்மூலமாக அர்ஷியாக்களை நாம் நிரந்தரமாக்குகிறோம். இது ஒரு புதுவகை மனிதநேயமாக எனக்குப்படுகிறது. காலத்தையும் மரணத்தையும் ஒன்றாக்கி தத்துவம் செய்தவர்கள் தமிழர்கள். அப்படியென்றால் மனிதரும் காலமும் ஒன்றுதானே. சிந்தனைகளும் நினைவுகளும் காலம்தானே. நினைவுகளை கைமாற்றுவது என்பது காலத்தை கைமாற்றுவது என்றுதானே அர்த்தம். அர்ஷியாவின் நினைவு எனக்கு நிறைவு. அதை எனது சகமனிதர்களுக்குத் தொடர்ந்து கைமாற்றிக்கொண்டே இருக்க வேண்டும் என்பதே எனது விருப்பம். பிரகாசமான அர்ஷியாவுக்கு வந்தனம்.