மற்ற எபிசோடுகள்
Published:Updated:

ஹாக்கிங் எனும் கருத்துளைக் காதலன் - ராஜ் சிவா

ஹாக்கிங் எனும் கருத்துளைக் காதலன் - ராஜ் சிவா
பிரீமியம் ஸ்டோரி
News
ஹாக்கிங் எனும் கருத்துளைக் காதலன் - ராஜ் சிவா

ஹாக்கிங் எனும் கருத்துளைக் காதலன் - ராஜ் சிவா

ஜே.ஜே.தாம்சன், ஜோன் டால்டன், மைக்கேல் ஃபாரடே, சார்ல்ஸ் பாபேஜ், எட்வர்ட் ஜென்னர், ஜேம்ஸ் கிளார்க் மாக்ஸ்வெல், சார்ல்ஸ் டார்வின், ஐசக் நியூட்டன் போன்ற வரலாற்று அடையாளங்களாகிவிட்ட பிரித்தானிய விஞ்ஞானிகளின் வரிசையில், மேலும் ஒரு மைல் கல், ஸ்டீபன் ஹாக்கிங். பிரித்தானியராக இருந்தும் அமெரிக்க உச்சரிப்புடனான ஆங்கிலத்தில் தன் பின்னாள் காலங்களில் உலகத்துடன் உரையாடியவர். வானியல், கணிதம், இயற்பியல் ஆகியவற்றில் மிகச் சிறந்து விளங்கிய கோட்பாட்டு இயற்பியலாளர். ஐன்ஸ்டைனுக்குப் பின்னர், நாம் வாழும் காலத்திலேயே வாழ்ந்த புத்திஜீவிகளில் முதல்வர். ஹாக்கிங் பற்றிப் பலரும் பலவிதங்களில் எழுதிவிட்டார்கள். எங்கு பார்த்தாலும் அவர் புகழ்பாடும் பத்திகளும், கட்டுரைகளும் காணப்படுகின்றன. எத்தனை பேர் எத்தனை முறை எழுதினாலும் அலுத்துவிடாத பொக்கிஷம்தான் அவர். உலகம் முழுவதும் தொடர்ச்சியாக அசை போடுமளவுக்குத் தகுதியானவரும்கூட. அந்த வரிசையில் நானும் ஒரு ஹாக்கிங் காதலனே!

ஹாக்கிங் எனும் கருத்துளைக் காதலன் - ராஜ் சிவா

எனக்கு ஒப்புமையான இரண்டு விஷயங்களைப் பற்றி ஹாக்கிங் தொடர்ந்து பேசி வந்திருக்கிறார். அவரது மரணம் வரை அது தொடர்ந்தது என்றும் சொல்லலாம். அதனாலேயே அவரை எனக்கு மிகவும் பிடித்துப்போனது. அந்த இரண்டு விஷயங்களில் ஒன்று, கருந்துளை; மற்றது, ஏலியன். ‘பிரபஞ்சத்தில் ஏலியன்கள் எங்கேயாவது இருக்கின்றனவா?’ என்னும் கேள்விக்கான பதிலைக் கட்டுரைகளாக நான் எழுதியபோது, கேலியாகச் சிரித்தவர்கள் பலர். இல்லாத ஒன்றை இருப்பதுபோல எழுதுவதாக எண்ணினார்கள். ஆனால், அவர்களைத் தலைகுனியவைத்தவர் ஹாக்கிங்தான். ஏலியன்களின் இருப்பைப் பற்றிப் பலமுறை வெளியுலகுக்குச் சொன்னார். இறக்கும் வரை ஏலியன் ஆராய்ச்சிக்காகப் பல திட்டங்களையும் வகுத்தார். ஏலியன் ஆராய்ச்சியில் கடைசியாக அவர் உருவாக்கிய திட்டம் பற்றி நம்மில் பலர் அறிந்திருக்கவில்லை. அதைச் சொல்வதே இந்தக் கட்டுரையின் நோக்கம். ஸ்டீபன் ஹாக்கிங் எங்கே பிறந்தார்; எப்படி வளர்ந்தார்; எவ்வாறு கல்வி கற்றார் என்பதையெல்லாம் நீங்கள் பல இடங்களில் படித்து அறிந்திருப்பீர்கள். அவரைப் பற்றிப் பேச வேண்டிய இந்தத் தருணத்தில், அறியாத தகவல்களை உங்களிடம் பகிர்ந்துகொள்வதுதான், நான் அவருக்குச் செய்யும் நியாயமான நன்றியாக இருக்கும்.

ஹாக்கிங் எனும் கருத்துளைக் காதலன் - ராஜ் சிவா


இங்கிலாந்தில் பிறந்து, இங்கிலாந்திலேயே படித்து வளர்ந்தவரான ஹாக்கிங், ஏன் அமெரிக்க உச்சரிப்புடன் ஆங்கிலத்தைப் பேசினார் என்பது உங்களுக்குள் ஒரு கேள்வியாக மாறியிருக்கும். அதற்கான காரணத்தைச் சொல்லிவிட்டு மேலே தொடரலாம். ஹாக்கிங் 1963-ம் ஆண்டு, தனது 21-வது வயதில் ‘Amyotrophic Lateral Sclerosis’ (ALS) என்னும் நரம்பியல் நோயால் பாதிக்கப்பட்டார். சமீபத்தில்கூட மிகப் பிரபலமாகப் பேசப்பட்ட குளிர் வாளித் தண்ணீர் சவால் (Ice Bucket Challenge)கூட, இந்த ALS நோயின் அடிப்படையை முன்வைத்தே தொடர் சவாலாக நிகழ்த்தப்பட்டது. இந்த நோய் பற்றிய விழிப்புஉணர்வு, மனிதர்களுக்கு எழவேண்டும் என்பதற்காகவே அது நடத்தப்பட்டது. இந்த நோயால் பாதிக்கப்படுபவர்கள் படிப்படியாக உடலியக்கங்கள் குறைந்துபோய், செயல்பட முடியாத ஒருவராக மாறிச் சீக்கிரம் மரணத்தைத் தழுவிக்கொள்வார். ஹாக்கிங்கிற்கும் அவரது 21-வது வயதில் மருத்துவர்கள் அப்படியே சொல்லியிருந்தனர். ‘இன்னும் சில மாதங்களே அவர் உயிரோடு இருப்பார்’ என்று மருத்துவர்களால் அறிவுறுத்தப்பட்டார். ஆனால், அவர் மூலம் உலகத்திற்கு நிறையத் தகவல்கள் கிடைக்க வேண்டுமென இயற்கை தீர்மானித்ததோ என்னவோ, அவரை 76 வயது வரை தன் மடியில் வைத்துப் பாதுகாத்தது. இந்தச் சமயங்களில் அவரது ஒவ்வோர் உறுப்பாகச் செயலிழந்துபோய், 1985-ல் மூச்சுக்குழாய்த் தடங்கலால் (Tracheotomy) பேசும் திறனையும் இழந்தார். இறுதியாக எஞ்சியது கன்னத்தின் தசையசைவும் கண் சிமிட்டலும் மட்டுமே.

இவரின் அறிவைப் பயன்படுத்தும் அவசியத்தை அறிந்துகொண்ட அறிவுலகம், அவருக்கெனப் பிரத்தியேகமான ஒரு கணினியை வடிவமைத்துக் கொடுத்தது. அவரது கன்னத் தசையசைவுகளின் மூலம் எழுத்துகள், சொற்களாக... சொற்கள், ஒலிவடிவமாக வெளிவரும் வகையில் அந்தக் கணினி வடிவமைக்கப்பட்டது (Speech Synthesizer software). அந்த வடிவமைப்பில் இருந்து வெளிவரும் ஒலிதான் அமெரிக்க ஆங்கில உச்சரிப்புடன் இருந்தது. ஹாக்கிங் அமெரிக்க ஆங்கிலம் பேசியது இதனால்தான். ஆரம்பத்தில் அதைப் பெரிதாகக் கண்டுகொள்ளாமல் இருந்தாலும், பின்னர் அதை மீளமைப்புச் செய்யும்போது திருத்திவிட நினைத்தார்கள். ஆனால், ஹாக்கிங் தனக்கு அது பழக்கமாகிவிட்டதால், அப்படியே இருக்கட்டும் என்று சொல்லிவிட்டார். அதனால், அதையே தொழில்நுட்ப மேம்படுத்தலின்போதும் தொடர்ந்து இருக்குமாறு பார்த்துக்கொண்டார்கள். இதில் இன்னுமொரு ஆச்சரியமும் உண்டு. ஹாக்கிங்கின் இந்த ஒலியமைப்பு முறையைக் காப்புரிமையும் (Copyright) செய்திருக்கிறார்கள்.

ஹாக்கிங் எனும் கருத்துளைக் காதலன் - ராஜ் சிவா

‘ஏலியன்கள் இருக்கின்றனவா?’ என்னும் கேள்விக்கு அறிவியல், இதுவரை ‘ஆம்’ என்றோ ‘இல்லை’ என்றோ பதில் கூறியதில்லை. பல இலட்சக்கணக்கான வீடியோ, புகைப்பட ஆதாரங்களுடன், ஏலியன்களை அங்கே கண்டோம், இங்கே கண்டோம் என்று பலர் பலவிதமாகச் சொன்னாலும், அறிவியல் உலகம் இதுவரை அந்த விஷயத்தில் மௌனமாகவே இருக்கிறது. ஆனாலும், இதில் உள்ள மிகப் பெரிய வேடிக்கையும், முரண்பாடும் என்ன தெரியுமா? பூமி தாண்டிய வேற்றுக் கோள்களில் ஏலியன்கள் இருக்கின்றனவா என்று அறிவதற்கு, உலகிலுள்ள விஞ்ஞானிகளும், நாசாவும் கோடிக் கோடியாக டாலர்களைக் கொட்டித் தேடிக்கொண்டிருக்கின்றனர். இல்லாத ஏலியன்களை ஏன் இவ்வளவு பணம் கொடுத்துத் தேட வேண்டும்? ஆனால், இதில் மிகவும் நேர்மையாகத் தன் கருத்துகளைச் சொல்லிக்கொண்டிருந்தவர் ஸ்டீபன் ஹாக்கிங் மட்டுமே!

ஹாக்கிங் எனும் கருத்துளைக் காதலன் - ராஜ் சிவா“ஏலியன்களைத் தேடாதீர்கள். அதுவே பூமிக்கும் மனித குலத்திற்கும் பெரும் ஆபத்தாக முடியும். ஏலியன்கள் நல்லவர்களாக இருக்க வேண்டிய அவசியமே இல்லை” என்று தன் கருத்தை வெளிப்படையாக முன்வைத்தார். அதுமட்டுமில்லை. ஏலியன்கள் இருப்பதைக் கண்டுபிடிப்பதற்கு எனத் திட்டம் ஒன்றையும் உருவாக்கினார். உலகின் மிகப் பெரிய கோடீஸ்வரரான ரஷ்யாவைச் சேர்ந்த யூரி மில்னர் (Yuri Milner) மற்றும் ஃபேஸ்புக் அதிபர் மார்க் ஸக்கர்பெர்க் (Mark Zuckerberg) ஆகிய இருவரும் இணைந்து செயல்படுவதாக அந்தத் திட்டம் இருந்தது.

நான்கு ஒளியாண்டுகள் தூரத்தில் இருப்பவை அல்ஃபா சென்டாரி நட்சத்திரங்கள். அல்ஃபா சென்டாரி a, அல்ஃபா சென்டாரி b, அல்ஃபா சென்டாரி c என்ற மூன்று நட்சத்திரங்களும் அருகருகே இருக்கின்றன. அல்ஃபா சென்டாரி c நட்சத்திரத்தை, புரொக்‌ஷிமா சென்டாரி என்ற தனிப் பெயருடனும் அழைப்பார்கள். இந்தப் புரொக்‌ஷிமா சென்டாரியைப் பூமி போன்றதொரு கோள் சுற்றிக்கொண்டிருக்கிறது. அதற்கு புரொக்‌ஷிமா சென்டாரி b என்று பெயரிட்டிருக்கிறார்கள். இந்தக் கோளில் ஏலியன்கள் இருக்கலாம் என்னும் சந்தேகம் ஹாக்கிங்கிற்கு இருந்தது. அதனால், அந்தப் புரொக்‌ஷிமா சென்டாரி b-ஐ நோக்கி விண்கலங்களை அனுப்பி ஆராய்ச்சி செய்யலாம் என்பதே ஹாக்கிங்கின் திட்டமாகும். அவர் அனுப்ப விரும்பிய விண்கலங்கள் ஒரு தபால் முத்திரையின் அளவு இருக்கக்கூடிய நானோ விண்கலங்களாகும் (Nanocraft). ஆயிரக்கணக்கான நானோ விண்கலங்களை ஒன்றாக அங்கு அனுப்பிவைப்பார்கள். அவை 20 வருடங்களில் புரொக்‌ஷிமா சென்டாரி b-ஐ சென்றடையும் வண்ணம் அனுப்பப்படும். இந்தத் திட்டத்துக்கு ‘Breakthrough Starshot’ என்று பெயரிட்டுள்ளார்கள். ஹாக்கிங், ஸக்கர்பெர்க், மில்னெர் ஆகிய மூவரும் இணைந்து ஆரம்பத்தில் 100 மில்லியன் டாலர்கள் முதலீட்டில் தொடங்க இருந்த இந்தத் திட்டம், ஹாக்கிங் மறைந்துவிட்டாலும் தொடரும் என்ற நம்பிக்கை உள்ளது.

ஹாக்கிங் எனும் கருத்துளைக் காதலன் - ராஜ் சிவா

ஏலியன்கள் சம்பந்தமான கருத்துகளில் பெரும் நாட்டமுள்ளவராக இருந்த ஹாக்கிங்கின் இன்னுமொரு அடையாளம், கருந்துளைகள் (Black holes). அவரது ஆராய்ச்சிகளில் பெரும்பான்மையானவை கருந்துளைகள் சார்ந்ததாகவே இருந்தன. உலகமே வியந்துபோகும் அளவுக்குக் கருந்துளைகள் தொடர்பாகப் புதுமையானதோர் ஆராய்ச்சி முடிவை 1974-ம் ஆண்டு ஹாக்கிங் வெளியிட்டார். ‘ஒளியைக்கூட வெளியே செல்ல அனுமதிக்காமல், உள்ளே இழுத்துவிடுமளவு ஈர்ப்புவிசையைக் கொண்டவை கருந்துளைகள். அவற்றினுள்ளே செல்லும் எதுவுமே தப்பித்து வெளியே வரமுடியாது. ஆனால், கருந்துளைகளின் ஈர்ப்பு எல்லையிலிருந்து (Event Horizon) கதிர்வீச்சுகள் வெளிப்பட்டுக்கொண்டிருக்கின்றன’ என்று ஹாக்கிங்கின் ஆராய்ச்சி கூறியது. குவாண்டம் இயற்பியல் சமன்பாடுகள் மூலம் அதை அவர் நிரூபித்தார். ‘கதிர்வீச்சுகள் வெளியே வருவதால், கருந்துளைகள் சற்று ஒளிர்ந்துகொண்டி ருக்கும்’ என்ற கருத்தையும் கூறினார். கதிர்வீச்சின் வெளிப்பாட்டால், கருந்துளைகள் படிப்படியாகச் சக்தியை இழந்துகொண்டேவந்து, தனது அளவிலும் சிறிதாகிச் சிறிதாகி, இறுதியில் இல்லாமலே போய்விடும் என்று அறிவித்தார். இதைப் பலராலும் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. ஒளியையே வெளியே வர முடியாமல் உள்ளிழுக்கும் கருந்துளைகள் எப்படிக் கதிர்வீச்சை வெளிவிட முடியும் என்ற கேள்வி அங்கு எழுந்தது. ஆனால், அவரது கணிதச் சமன்பாடுகள் மறுக்க முடியாதவையாக இருந்தன. ஆதாரமில்லாமல் கோட்பாட்டு ரீதியாக அவர் கொடுத்த ஆராய்ச்சியை ஏற்றுக்கொள்வதா, விடுவதா? என்று அவர்களுக்குத் தெரியவில்லை. பல தளங்களில் இது பற்றிய விவாதங்களும் நடைபெற்றன. ஐன்ஸ்டைன்கூட, ஈர்ப்பலைகள் சம்பந்தமான முடிவுகளை அவரின் கணிதச் சமன்பாடுகள் மூலம் கணித்து, கோட்பாடாகச் சொல்லியிருந்தார். ஆனால், ஈர்ப்பலைகள் நிஜத்தில் இருக்கின்றன என்று யாரும் அறிந்திருக்கவில்லை. அன்றைய காலத்தில் இது ஒரு சந்தேகமான முடிவாகவே பார்க்கப்பட்டது. சரியாக 100 ஆண்டுகளின் பின்னர் ஈர்ப்பலைகள் இருப்பதைக் கண்டுகொண்டது உலகம். ஆச்சர்யத்தில் அனைவரும் துள்ளிக் குதித்தனர். என்ன செய்வது, அப்போது அதைப் பார்த்து மகிழ ஐன்ஸ்டைன் உயிருடன் இருக்கவில்லை. ஹாக்கிங் கூறிய கதிர்வீச்சும் இது போன்றதுதான். இன்று பலரும் கருந்துளைகள், கதிர்வீச்சைக் கொண்டிருக்கலாம் என்பதை நம்புகிறார்கள். கருந்துளைகள் வெளிவிடும் கதிர்வீச்சுக்கு, ‘ஹாக்கிங் கதிர்வீச்சு’ (Hawking radiation) என்று பெயரும் இட்டிருக்கிறார்கள்.

ஹாக்கிங் எனும் கருத்துளைக் காதலன் - ராஜ் சிவா


ஹாக்கிங் கதிர்வீச்சு உண்மையாக இருக்கலாம் என்பதை நிரூபிக்க நாசா உள்படப் பலரும் முயற்சி செய்கின்றனர். விண்வெளியெங்கும் கருந்துளைகளைத் தேடிக்கொண்டிருக்கிறார்கள். நிலத்திற்குக் கீழே வட்டவடிவமாக அமைக்கப்பட்ட சேர்ன் (Cern) ஆராய்ச்சி நிலையத்தில், துகள்கள் ஒன்றுடன் ஒன்று மோதும்போது, மைக்ரோ அளவுடைய கருந்துளைகள் உருவாகும் என்று விஞ்ஞானிகள் நம்புகின்றனர். அப்படி மைக்ரோ கருந்துளைகள் ஒருவேளை உருவானால், அவை கதிர்வீச்சை வெளியிடுகின்றனவா என்பதை அவதானிக்கக் கண்கொத்திப் பாம்பாய் விழித்தபடி பார்த்துக் கொண்டிருக்கின்றனர். ஆனால், இதுவரை அப்படி எந்தவிதமான மைக்ரோ கருந்துளைகளும் அங்கு உருவாகவில்லை. இன்றும் ஆராய்ச்சியாளர்கள் கருந்துளைகளையும் அவற்றின் கதிர்வீச்சையும் தேடியபடியே இருக்கின்றனர். ஒருவேளை அது கண்டுபிடிக்கப்பட்டால், ஹாக்கிங்கிற்கு நோபல் பரிசு கிடைக்கும். ஆனால், அதை வாங்கிக்கொள்ள அவர் நம்முடன் இல்லை. ஐன்ஸ்டைனுக்கு அடுத்தபடியாக உயரத்தில்வைத்துக் கொண்டாடப்படும் ஹாக்கிங்கிற்கு இதுவரை எந்தவொரு நோபல் பரிசும் கிடைக்கவில்லை. புத்திஜீவியான ஹாக்கிங்கிற்கு நோபல் பரிசு கிடைக்காமல்போனதற்கும் ஒரு காரணம் உண்டு. ஹாக்கிங் எப்போதும் ஒரு கோட்பாட்டு இயற்பியலாளராக இருந்தார். குவாண்டம் இயற்பியல் சிந்தனைகளில் வல்லவரான அவர், வெளியிட்ட ஆராய்ச்சி முடிவுகள் எல்லாமே கோட்பாடுகளாகவே இருந்தன. குவாண்டம் இயற்பியல் பெரும்பான்மையாகக் கோட்பாட்டு அளவில்தான் இருக்கின்றன. அவற்றை நிஜம் என நிரூபிப்பதற்கான கருவிகளோ, தகுதிகளோ இன்றைய மனிதனின் அறிவியலுக்குப் போதுமானதாக இல்லை. நாளைய தினங்களில் என்றாவது அவை கண்டுபிடிக்கப்படலாம். ஆனால், இன்று முடியவில்லை. அணுவுக்குள் குவாண்டம் நிலையில் எத்தனையோ நுண்ணிய துகள்கள் இருக்கின்றன என்று கோட்பாட்டு ரீதியாக நாம் அறிந்திருக்கிறோம். ஆனால், நிஜத்தில் இன்னும் நாம் அவற்றைக் கண்டுபிடிக்கவில்லை. படிப்படியாக ஒவ்வொரு துகளாகக் கண்டுபிடித்துக்கொண்டிருக்கிறோம். கண்டுபிடிக்கப்படாதவை இன்னும் லட்சக்கணக்கில் இருக்கின்றன. கண்டுபிடிக்கப்படாததால் அவை இல்லையென்று ஆகிவிடாது. ஆனாலும், இருக்கிறது என்பதை நிரூபிக்கும் வரை அறிவியலும் ஏற்றுக்கொள்ளாது. நிரூபித்தால் மட்டுமே நோபல் பரிசு கிடைக்கும்.

ஹாக்கிங், தன் ஆராய்ச்சி முடிவுகளைக் கோட்பாடுகளாகவே வெளியிட்டதால், அவை நிரூபணம் ஆகாத நிலையில் இருக்கின்றன. என்றாவது ஒருநாள் ஈர்ப்பலைகள்போல அவையும் நிரூபிக்கப்படலாம். ஹாக்கிங் கதிர்வீச்சு நிஜமென விரைவில் நிரூபிக்கப்படும். அப்போது நோபல் பரிசை (அதை வென்ற தகுதியை) அவர் உயிருடன் இல்லாவிட்டாலும் பெற்றுக்கொள்வார்.