மற்ற எபிசோடுகள்
Published:Updated:

காவிரி: துரோகத்தின் போர் - சுகுணா திவாகர்

காவிரி: துரோகத்தின் போர் - சுகுணா திவாகர்
பிரீமியம் ஸ்டோரி
News
காவிரி: துரோகத்தின் போர் - சுகுணா திவாகர்

படங்கள் : கே.ஜெரோம்

காவிரிப் பிரச்னை குறித்த போராட்டங்கள் தீவிரத்தின் உச்சத்தைத் தொட்டிருக்கும் தருணம் இது. மத்தியில் ஆளும் கட்சியான பாரதிய ஜனதா கட்சி மற்றும் மாநிலத்தில் ஆளும் கட்சியான அ.தி.மு.க.வைத் தவிர, மற்ற அனைத்துக் கட்சிகளும் ஒருமித்தக் குரலில் காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்கக் கோரிப் போராட்டத்தில் ஈடுபடுகின்றன.

பொதுவாகவே இந்தியாவின் வடக்குப் பகுதியைவிட தெற்கு, தனித்துவமான வித்தியாசங்களுடன் விளங்குகிறது. விடுதலைப் போராட்டக் காலத்திலிருந்தே இந்த வித்தியாசம் தொடர்ந்து வந்தாலும் சமீப காலங்களில் தனித்துவமான அரசியல் நிலைப்பாடுகளின் வழியாக உறுதிசெய்யப் பட்டிருக்கிறது. பிரிட்டிஷாரால் கட்டமைக்கப்பட்ட ‘ஒருங்கிணைந்த இந்தியா’ எனும் அமைப்பும் பிரிட்டிஷ் ஆட்சிக் காலகட்டத்தில் உருவான இந்தியத் தேசிய அடையாளமும் அடிப்படையில் பல முரண்பாடுகளைக்கொண்டவை. இந்த முரண்பாடுகள் அவ்வப்போது வெளிப்பட்டு வந்தபோதும், மோடியின் இந்த ஆட்சிக்காலத்தில் அவை உச்சம் பெற்றுள்ளன.

காவிரி: துரோகத்தின் போர் - சுகுணா திவாகர்

‘திராவிட நாடு’ கோரிக்கையைக் கைவிட்ட பிறகும், பெயரில் திராவிட அடையாளத்துடன்  தமிழகத்தில் திராவிடக் கட்சிகள் இயங்கிவருகின்றன. இதன் பொருத்தமின்மை குறித்து தமிழ்த் தேசிய அமைப்புகள் எழுப்பும் கேள்விகள் சமீபகாலமாக அதிகரிக்கத் தொடங்கின. ஆச்சர்யமளிக்கும்வகையில் ‘திராவிட நாடு’, வடவர் எதிர்ப்பு, தெற்கின் தனித்துவம் குறித்து அண்டை மாநிலங்களிலிருந்து குரல்கள் எழுகின்றன.  குறிப்பாக, திராவிட நாடு கோரிக்கையைக் கைவிட்டபோதும் தேசிய இனங்களின் தனித்துவத்தை வலியுறுத்தும் வகையில் அண்ணாவால் முன்வைக்கப்பட்ட ‘மாநிலச் சுயாட்சி’ என்னும் கருத்தாக்கம், இன்று மீள்வாசிப்பு பெறுகிறது.

காவிரி: துரோகத்தின் போர் - சுகுணா திவாகர்


மத்திய அரசால் மாநிலங்களுக்கு அளிக்கப்படும் நிதி குறைக்கப்படுவது, இந்தித் திணிப்பு, ‘ஒரே நாடு, ஒரே வரி, ஒரே கல்விமுறை’ என்று ஒற்றைத்துவத்தை நிறுவ முயலும் பா.ஜ.க-வின் செயற்பாடு ஆகியவற்றுக்கு எதிர்வினையாக இத்தகைய குரல்கள் எழுவது கவனிக்கத்தக்கது. அதிலும், குறிப்பாக கர்நாடக முதல்வர் சித்தராமய்யா, கர்நாடகத்துக்குத் தனிக்கொடி, வடக்கு ஆதிக்க எதிர்ப்பு, மாநில உரிமைகள், லிங்காயத்துகளைத் தனி மதமாக அறிவிக்கக் கோரிப் பரிந்துரை என இந்துத்துவ அரசியலுக்கு எதிர்த் திசையிலும் திராவிட அரசியலுக்கு அணுக்கமான திசையிலும் இயங்கிவருகிறார்.

ஆனால், இப்போது கர்நாடக முதல்வர் சித்தராமய்யா காவிரிப் பிரச்னையில் தமிழகத்துக்கு எதிரான நிலைப்பாடு எடுத்திருப்பது, திராவிட அடையாளத்தைக் கேள்விக்குள்ளாக்குகிறது. அதேநேரத்தில் தமிழ்த் தேசிய அணுகுமுறையில் இந்தப் பிரச்னையை அணுகினாலும் குழப்பமே மிஞ்சுகிறது. ஏனெனில், சித்தராமய்யாவும் கர்நாடகத் தேசிய அரசியல் என்னும் நிலையிலிருந்துதான் காவிரிப் பிரச்னையை அணுகுகிறார். இந்தியர், திராவிடர், தமிழர் என்னும் அடையாளங்களிலிருந்து இந்தப் பிரச்னையை அணுகுவது என்பது குழப்பமான நிலைக்கே நம்மைத் தள்ளுகிறது.

காவிரி: துரோகத்தின் போர் - சுகுணா திவாகர்

சட்டரீதியாக இந்தப் பிரச்னையை அணுகினால், தமிழகத்தின் நியாயங்களை உணர முடியும். காவிரிப் பிரச்னையின் தொடக்கம் ஒரு நூற்றாண்டைக் கடந்தது. மைசூர் சமஸ்தானத்துக்கும் சென்னை மாகாணத்துக்கும் இடையிலான ஒப்பந்தம் 1892-ல் உருவானது. அதற்குப் பிறகு வெவ்வேறு காலகட்டங்களில் பிரச்னையின் படிநிலைகள் குறித்துப் பலரும் விரிவாக எழுதியிருக்கிறார்கள். இந்தப் பிரச்னையின் முக்கிய நகர்வு என்பது காவிரி நடுவர் மன்றம் அமைக்கப்பட்டது; நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பு; நடுவர் மன்றத்தின் தீர்ப்பு அரசிதழில் வெளியிடப்பட்டது ஆகியவற்றைச் சொல்லலாம்.

இந்த நகர்வுகளைக் கணக்கிலெடுத்தால், திராவிடக் கட்சிகளான தி.மு.க., அ.தி.மு.க ஆகிய இரண்டுக்கும் இதில் பங்கு இருப்பதை உணரலாம். தி.மு.க-வின் அழுத்தத்தின் காரணமாகத்தான் 1990-ல் வி.பி.சிங் ஆட்சிக்காலத்தில் ‘காவிரி நடுவர் மன்றம்’ அமைக்கப்பட்டது. 1991-ல் இடைக்காலத் தீர்ப்பு வழங்கப்பட்டபோதும் கர்நாடகத்தில் பங்காரப்பா ஆட்சிக்காலத்தில் தமிழர்களுக்கு எதிராக நடத்தப்பட்ட கலவரம், மாறிய அரசியல் சூழ்நிலைகளால் அடுத்தகட்டத்தை எட்டவில்லை.

நடுவர் மன்றம் ஆரம்பிக்கப்பட்டு 17 ஆண்டுகளுக்குப் பிறகுதான் இறுதித் தீர்ப்பு வழங்கப்பட்டது. தமிழகத்துக்கு 419 டி.எம்.சி நீரும் கர்நாடகத்துக்கு 270 டி.எம்.சி நீரும் பகிர்ந்தளிக்கப்பட வேண்டும் என்றது நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பு. கர்நாடகம், தமிழகம் இரண்டுமே நடுவர் மன்றத்தின் தீர்ப்புக்கு அதிகமாகவே தங்களுக்கு நீர் வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்தன. இவற்றில் நியாயங்கள் இருக்கிறதோ இல்லையோ, ஒப்பீட்டளவில் காவிரி நடுவர் மன்றத்தின் தீர்ப்பு தமிழகத்துக்குச் சாதகமான ஒன்று. மேலும், எல்லா எதார்த்தங்களையும் கணக்கிலெடுத்தே இந்தத் தீர்ப்பு வழங்கப்பட்டது என்பது கவனத்தில்கொள்ள வேண்டிய ஒன்று.

வெறுமனே நதிநீர்ப் பங்கீடு மட்டுமல்லாமல், அதைச் செயல்படுத்துவதற்கு காவிரி மேலாண்மை வாரியத்தையும் காவிரி ஒழுங்காற்றுக் குழுவையும் அமைக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு உத்தரவிட்டது முக்கியமான அம்சம். இந்த நடுவர் மன்றத் தீர்ப்புக்கு எதிராகத் தொடுக்கப்பட்ட வழக்கில்தான் இப்போது உச்ச நீதிமன்றத் தீர்ப்பு வெளியாகியிருக்கிறது.

நடுவர் மன்றம் தமிழகத்துக்கு ஒதுக்கிய நீரில் 14.75 டி.எம்.சி தண்ணீரைக் குறைத்து கர்நாடகத்துக்கு உச்ச நீதிமன்றம் வழங்கியது ஓர் அநீதி என்றால், அதற்கான காரணங்களாக முன்வைக்கப்பட்டவையும் அர்த்தமற்ற, அநீதியான காரணங்கள்தான். தமிழகத்தின் நிலத்தடி நீரைக் கணக்கில் கொண்டுதான், தமிழகத்துக்கு வழங்கப்பட வேண்டிய நீரின் அளவைக் குறைத்தது உச்ச நீதிமன்றம். மேலும், பெங்களூரு நகரத்தின் குடிநீர்த் தேவையைக் கருத்தில்கொண்டு தமிழகத்திடமிருந்து பறிக்கப்பட்ட 4.75 டி.எம்.சி நீரைக் கர்நாடகத்துக்கு ஒதுக்குவதாகச் சொன்னது உச்ச நீதிமன்றம்.

காவிரி: துரோகத்தின் போர் - சுகுணா திவாகர்

நிலத்தடி நீரைக் கணக்கிலெடுப்பது என்பதை நீரியல் ஆய்வாளர்கள் ஒப்புக்கொள்வதில்லை. ஏனெனில், நிலத்தடி நீர் மட்டம் என்பது எப்போதும் ஒரே தன்மையில் இருப்பதில்லை. மேலும், நிலத்துக்கு மேலிருக்கும் நீர் குறித்த வழக்கில்தான் ஒரு நீதிமன்றம் தீர்ப்பு சொல்ல முடியுமே தவிர, நிலத்துக்கு அடியில் உள்ள நீரைக் கணக்கெடுத்து, அதை அடிப்படையாக வைத்துத் தீர்ப்பு சொல்வது விந்தையானது; சட்ட நெறிமுறைகளுக்கு அப்பாற்பட்டது. எல்லாவற்றையும்விட தமிழகத்தின் நிலத்தடி நீரைக் கணக்கிலெடுத்துக்கொள்வதாகச் சொன்ன உச்ச நீதிமன்றம், கர்நாடகாவின் நிலத்தடி நீரைக் கணக்கிலெடுத்துக் கொள்ளாதது அநீதி.

இதே அநீதிதான் இரண்டாவது காரணத்தின் அடிப்படையிலும் உள்ளது. பெங்களூரு நகரத்தின் குடிநீர்த் தேவையைக் கணக்கிலெடுத்துக்கொண்ட உச்ச நீதிமன்றம், தமிழகத்தைப் பொறுத்தவரை காவிரிப் பிரச்னையை வெறுமனே விவசாயம் தொடர்பான பிரச்னையாகவும் டெல்டா மாவட்டப் பிரச்னையாகவும் மட்டுமே சுருக்கிப் பார்க்கிறது என்பதே அர்த்தம். ஆனால், உண்மையில் காவிரி நீர் விவசாயத்துக்கு மட்டுமில்லாமல் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களின் குடிநீர்ப் பயன்பாட்டுக்கும் ஆதாரமாக இருக்கிறது.

காவிரி: துரோகத்தின் போர் - சுகுணா திவாகர்


இந்த விஷயங்களைக் கணக்கில் எடுத்துக்கொள்ளாததால்தான் தமிழகத்துக்கு அநீதி இழைக்கப்பட்டது. நிச்சயமாக இது பெரிய இழப்பு என்றாலும் காவிரி நடுவர்மன்றத்தின் தீர்ப்பை மறுஉறுதி செய்தது என்ற வகையில் உச்ச நீதிமன்றத் தீர்ப்பு முக்கியமானது. நீரின் அளவைக் குறைத்ததைத் தவிர, நடுவர்மன்றத்தின் மற்ற பரிந்துரைகள் அனைத்தையும் உச்ச நீதிமன்றம் ஏற்றுக்கொண்டது. குறிப்பாக, காவிரி மேலாண்மை வாரியம், காவிரி ஒழுங்காற்றுக் குழு எனும் பரிந்துரைகளை ஏற்றுக்கொண்ட உச்ச நீதிமன்றம் அதை நேரடியாகச் சொல்லாமல் ஆறு வாரங்களுக்குள் ‘ஸ்கீம்’ உருவாக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு உத்தரவிட்டது.

இங்கு  நடுவர்மன்றத்தின் பரிந்துரைகளை ஏற்றுக்கொள்வதாக உச்சநீதிமன்றம் சொல்லும்போது, ‘ஸ்கீம்’ என்று குறிப்பிடப்படுவது மேலாண்மை வாரியத்தையும் ஒழுங்காற்றுக் குழுவைவும்தான் குறிப்பிடுகிறது என்பது தெளிவாகிறது. ஆனாலும், ‘ஸ்கீம்’ என்பது காவிரி மேலாண்மை வாரியத்தைக் குறிக்கவில்லை என்று வார்த்தை விளையாட்டு விளையாடிய மத்திய அரசு, ஆறு வாரக் கெடு முடிந்த நிலையில் ‘ஸ்கீம்’ என்றால் என்ன என்று உச்ச நீதிமன்றத்திடம் மனுத்தாக்கல் செய்தது கழுத்தறுக்கும் துரோகம்.

மேலும், ‘கர்நாடகத் தேர்தலுக்கும் காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதற்கும் ஒரு தொடர்பும் இல்லை’ என்று தேர்தல் ஆணையம் திட்டவட்டமாகத் தெரிவித்த நிலையிலும் ‘தேர்தல் காலத்தில் காவிரி மேலாண்மை வாரியத்தை அமைத்தால் கர்நாடகத்தில் சட்டம் ஒழுங்கு கெடும்’ என்று தன் மனுவில் மோடி அரசு தெரிவித்திருப்பது பச்சை அநீதி. தேர்தல் நடக்காத காலத்தில் சட்டம் ஒழுங்கு குலைந்தால் பரவாயில்லையா என்ன? மத்திய அரசுதான் அப்பாவித்தனப் பாவனையில் ‘ஸ்கீம் என்றால் என்ன?’ என்று மனுதாக்கல் செய்தது என்றால், உச்ச நீதிமன்றமும் அதுகுறித்தத் தெளிவான விளக்கத்தை அளிக்காமல் மங்கிய சூழலை இன்னும் குழப்புவது நம் ஐயத்தின் பரப்பை அதிகரிக்கச் செய்கிறது.

காவிரி: துரோகத்தின் போர் - சுகுணா திவாகர்

இப்போது கர்நாடகாவைப் பொறுத்தவரை காவிரிப் பிரச்னை என்பது பா.ஜ.க-வின் கையில் உள்ள துருப்புச்சீட்டு. வடக்கிலும் வடகிழக்கிலும் தன் காவிப் பரப்பை அதனால் வெற்றிகரமாக விஸ்தீரணப்படுத்த முயன்றாலும் தெற்கு அதன் தோல்வி முகமாகவே இருக்கிறது. கேரளாவில் மார்க்ஸிஸ்ட், காங்கிரஸ் என்ற இரு துருவங்களைத் தாண்டி, பா.ஜ.க. வளர்வது என்பது இயலாததாக இருக்கிறது. ஆந்திராவில் கூட்டணிக்குள் இருந்த சந்திரபாபு நாயுடு, பா.ஜ.க. கூட்டணியைவிட்டு வெளியேறியதோடு, மோடி அரசு மீது நம்பிக்கையில்லாத் தீர்மானத்தைக்கொண்டுவரும் முனைப்பிலும் இருக்கிறார். தெலங்கானாவிலோ முதல்வர் சந்திரசேகர ராவ், பா.ஜ.க - காங்கிரஸ் அல்லாத மூன்றாவது அணியை உருவாக்கும் முயற்சியில் இருக்கிறார். எனவே, தெற்கில் பா.ஜ.க-வால் வெற்றிபெறச் சாத்தியமுள்ள ஒரே மாநிலம் கர்நாடகாதான். ஆனால், அங்கேயும் சித்தராமய்யாவின் மாநில உரிமைக் குரல்களும் எழுத்தாளர்கள், கலைஞர்கள், மனித உரிமை ஆர்வலர்களின் இந்துத்துவ எதிர்ப்புச் செயற்பாடுகளும் பா.ஜ.க-வுக்கு அச்சத்தை விளைவித்துள்ளன. சென்றமுறை எடியூரப்பா முதல்வர் ஆனதில் லிங்காயத்துகளின் வாக்குகள் கணிசமானவை. இம்முறை ‘லிங்காயத்துகள் இந்துக்கள் அல்ல’  என்றும் ‘லிங்காயத்துகளைத் தனிமதமாக அங்கீகரிக்க வேண்டும்’ என்றும் சித்தராமய்யா பரிந்துரை செய்திருப்பது பா.ஜ.க-வுக்குத் தேர்தல் களத்தில் பின்னடைவை ஏற்படுத்துவதோடு, அதன் இந்துத்துவ அரசியல் அடிப்படைக்கே வேட்டு வைப்பதும்கூட. எனவே, ‘காவிரிப் பிரச்னையில் தமிழகத்துக்குத் துரோகம்’ என்னும் நிலைப்பாட்டை எடுத்து, கன்னட இனவெறியைத் தூண்டி அரசியல் ஆதாயம் பெறுவதே பா.ஜ.க-வின் தேர்தல் உத்தி. வரலாற்றில் பா.ஜ.க. பெற்ற பெருவாரியான வெற்றி என்பது வெறியூட்டலின் அடிப்படையில் அமைந்ததுதான்.

காவிரி: துரோகத்தின் போர் - சுகுணா திவாகர்


மேலும், தென்னிந்தியாவில் மற்ற மாநிலங்களில் எல்லாம் கூட்டணிக் கட்சி என்ற அளவிலாது பா.ஜ.க. ஒரு மரியாதையான இடத்தில் இருக்கிறது. ஆனால், தமிழகத்திலோ, தமிழர்கள் பா.ஜ.க-வை உதிரிக்கட்சிகளுக்கும் கீழான இடத்தில் வைத்திருக்கின்றனர். பெரியார் உருவாக்கிய கருத்தியலின் பலத்தால் எழும் தமிழகம் பா.ஜ.க-வுக்கு எப்போதும் அடைய முடியாத கொடுங்கனவாகவே இருக்கிறது. அம்பேத்கர் பெரியார் படிப்பு வட்டம் தொடங்கி, சமீபத்தில் பெரியார் சிலை தொடர்பான ஹெச்.ராஜாவின் திமிர்ப்பேச்சு வரை பா.ஜ.க-வுக்கு மரண அடியைக் கொடுத்திருக்கிறது தமிழகம்.

‘தமிழகத்தில் இப்போதைக்கு ஆட்சிக்கு வர முடியாது’ என்ற பா.ஜ.க-வின் வன்மமும் காவிரிப் பிரச்னையில் அது இழைக்கும் அநீதிக்கு முக்கியமான காரணம். தமிழகத்தைப் புறக்கணிப்பது, கன்னட இனவெறியைத் தூண்டுவது என்ற வழிகளின் வழியே கர்நாடக ஆட்சி நாற்காலியைக் கைப்பற்றத் துடிக்கிறது மோடியின் பா.ஜ.க. ஆனால், அதன் கருத்தியலுக்கு எதிராகத் தன்னை எப்போதும் உயர்த்திப் பிடிப்பதன் அடையாளமாகக் கறுப்புக்கொடியைத் தூக்கிப்பிடித்த தமிழகம், இந்தியாவில் வேறெந்த மாநிலத்திலும் இல்லாத அளவுக்கு மோடியின் முகத்தில் அவமானத்தைப் பூசி அனுப்பியிருக்கிறது. ‘எங்களால் அவமானப்படுத்தப்பட்டவர்தான் நரேந்திர மோடி’ என்ற செய்தியையும் உலகளவில் கொண்டுசென்றிருக்கிறது. இந்த அவமானக் கறையுடன்தான் சர்வதேசப் பயணத்துக்குக் கிளம்பியிருக்கிறார் மோடி.

கருத்தியல் வன்மத்துடன் மோடி அரசு தொடுக்கும் போரின் இன்னொரு வடிவம்தான் காவிரிப் பிரச்னையில் தமிழகத்துக்குத் தொடர்ந்து இழைக்கப்படும் துரோகம்.