
“நிலம் தொலைத்த மனிதர்களின் பயணத்தை எழுதுகிறேன்!”படங்கள் : சொ.பாலசுப்ரமணியன்
நாவல் எழுதுவது என்பது, நான் எழுதத் தொடங்கிய காலத்திலிருந்தே என்னுடைய மிக பிரத்யேகமான கனவு என்று சொல்லலாம். நான் ஏன் என் எழுத்துவாழ்வை சிறுகதையிலிருந்து தொடங்கினேன் என்பதே எனக்கு விளங்கவில்லை. ஏனேனில், நான் சிறுகதைகளைவிட நாவல்களையே அதிகம் வாசித்திருக்கிறேன். என் வாசிப்பின் தொடக்கமே நாவல்கள்தாம். அதனால், என் எழுத்துவாழ்வு நாவலிலிருந்துதான் தொடங்கியிருக்க வேண்டும். ஆனால், ஏன் நான் நாவலிலிருந்து தொடங்கவில்லை என்பதை இந்த நாவலை எழுதத் தொடங்கியிருக்கும் வேளையில் அறிந்துகொண்டேன்.
நாவல் எழுதுவது என்பது மிகப்பெரிய discipline. அதற்கு நீங்கள் உங்களை ஒப்புக்கொடுக்க வேண்டும். ஒரு குறிப்பிட்ட காலத்துக்குள் உங்கள் நாவல் வெளிவர வேண்டுமென்றால், நீங்கள் குறிப்பிட்ட நாள்களை அதற்கு ஒப்புக்கொடுக்க வேண்டும். நான் சினிமா இயக்கும் பயிற்சியில் தீவிரமாக இருந்த காலத்தில் எழுதத் தொடங்கியதால், என்னால் முழுதாக நேரத்தை எழுத்துக்கு ஒதுக்க முடியாததுதான் நாவல் எழுத முடியாததற்கான காரணம். என்னால் ஓர் இரவில் ஒரு சிறுகதையை எழுதிவிட முடியும். நாவல்... அது முடியாதில்லையா?

எழுதத் தொடங்கிய இந்தப் பத்து வருடங்களில் நாவல் எழுதுவதற்கான அரிதான நேரங்களைத் தேடிக்கொண்டேயிருந்தேன். என் மனதில் நாவல் எழுத வேண்டும் என்ற எண்ணம் ஓயாமல் அலையாக அடித்துக்கொண்டேயிருந்தது. ஒரு புனைவெழுத்தாளராக நாவல் வடிவத்தைத் தொடாதது மிகப்பெரிய குறையாகவே இருந்துகொண்டிருந்தது. மனதில் அதன் அழுத்தம் எப்போதும் இருந்துவந்தது. உண்மையைச் சொல்ல வேண்டும் என்றால், நாவல் எழுதுவதற்கு எந்தக் களத்தை எடுத்துக்கொள்வது என்பது அதன் பின் மிகப்பெரிய கேள்வியானது. நாவலாக உருவாகவேண்டிய பல கதைக்கருக்களை நான் சிறுகதைகளாக எழுதியிருந்தேன். அதனால், எனக்கு ஒரு புதிதான களம் தேவைப்பட்டது. நான், கற்பனைக் கதைகளை எழுதும் எழுத்தாளர் அல்ல; என்னைச் சுற்றியிருக்கும் வாழ்விலிருந்து மிக இயல்பான கதைகளை எழுதக்கூடியவள். சிறுவயதில் என் பெற்றோரிடமும் உறவினர்களிடமும் எப்போதும் அவர்களின் வாழ்க்கைக் கதைகளைக் கேட்டுக்கொண்டே இருப்பேன். குறிப்பாக என் அப்பா, நான்

தூங்குவதற்கு முன் எனக்கு கதை சொல்வார். அப்படி அவர் ஓர் இரவில் சொன்ன கதைதான் இந்த நாவலுக்கான கதைக் கரு. அப்போது எங்கள் சொந்தக்காரர்களில் பலர் (என் பாட்டி உள்பட) வருசநாட்டுப் பக்கம் குடியிருந்தனர். அப்போது நான் அப்பாவிடம், “ஏம்ப்பா பாட்டி, பெரியப்பா, அத்தையெல்லாம் அந்த ஊர்ல இருக்காங்க... நாம இங்க கூடலூர்ல இருக்கோம்?” என்று கேட்டதும், ‘வாழ்வாதாரத்துக்காக அவர்கள் விவசாயம் செய்ய நிலம் தேடி வருசநாட்டுப் பகுதிக்குப் போன கதை’யை என்னிடம் சொன்னார். அது மனதுக்குள் ஆழமாகப் பதிந்திருந்தது. அப்போது சிறுவயது என்பதால், விளக்கமாக அந்தக் கதை குறித்து அப்பாவிடம் கேட்கவில்லை. இப்போது நிலம் தேடி இடம்பெயர்ந்த அவர்களின் வாழ்வை நாவலாக எழுதலாம் என்றால், அந்தக் கதை குறித்த விளக்கங்களைக் கேட்க அப்பா உயிருடன் இல்லை. ஆனாலும் நாவலின் களம், கதைக்கரு இதுதான் என்று முடிவுசெய்துவிட்டேன்.
எப்போதும் கனவுகளைத் துரத்திக்கொண்டே ஓடும் வாழ்வு என்னுடையது. திரைத்துறையில் படம் இயக்கும் வாய்ப்புகளைத் தேடி வந்த எனக்கு, அந்த வாய்ப்பு கிடைக்காமல் மிகப்பெரிய விரக்தியில் வாழ்ந்துகொண்டிருந்தேன். சினிமா முயற்சியில் என் நேரமெல்லாம் கரைந்துகொண்டிருந்த அந்த நாள்களில் சிறுகதைகளை எழுதுவதற்குக்கூட நேரமும் அதற்கான மனமும் வாய்க்கவில்லை. மிகப்பெரிய உணர்ச்சிக் கொந்தளிப்போடும் அழுத்தத்தோடும் வாழ்ந்து வந்ததால், என்னால் அப்போது கவிதைகளை மட்டுமே எழுதமுடிந்தது. ஆனால், என்னுடைய இலக்கிய நண்பர்கள் பலரும் நான் சிறுகதைகளையோ, நாவலையோ எழுத வேண்டும் என்று என்னிடம் சொல்லிக்கொண்டே இருந்தனர். எனக்குள்ளும் வாழ்வுக்கான மிகப்பெரிய நெருக்கடி தொடர, நாவல் எழுதுவது என்று முடிவெடுத்து அந்த நாவலை எழுதுவதற்கான பயணத்தைத் தொடங்கிவிட்டேன்.

நேரடியாக நாவல் களத்துக்குச் சென்று அங்கிருக்கும் மக்களைப் பார்த்துப் பேசி எழுதலாம் என்ற முடிவில், ஒரு கோடை காலத்தில் என் பயணம் தொடங்கியது. முதலில், அந்த நாவல் நிகழும் காலத்தில் வாழ்ந்த என் வீட்டுப் பெரியோர்களிடம் பேசி அவற்றைப் பதிவுசெய்தேன். பிறகு, நாவலின் களமான வருசநாட்டுப் பகுதிக்குச் சென்றேன். காலியாகக் கிடந்த ஊர்களில் வயதானவர்களே மிஞ்சி இருந்தார்கள். வயதானவர்கள் மட்டும் வாழும் ஊர், பழைய நினைவுகளை மட்டும் உள்ளடக்கிய துயரம் நிறைந்த வாழ்வை வெக்கையாக வீசிக்கொண்டிருந்தது. வாழ்வின் அந்திமக் காலங்களை எதிர்நோக்கியிருக்கும் மக்களிடம், அவர்களின் நினைவுகளைப் பின்னோடச்செய்து, நிலம் தேடி அலைந்த அவர்களின் வாழ்வு, அந்த நிலத்தைப் பெற அவர்கள் செய்த அரசியல் போராட்டங்கள் என எல்லாவற்றையும் பதிவுசெய்தேன். ஒட்டுமொத்த தமிழ்நாட்டிலும் ஆங்கங்கே விவசாயம் பொய்த்துப் போயிருக்கும் இவ்வேளையில் அந்த வறண்ட கரட்டுப்பட்டியில் மட்டும் விவசாயம் எப்படி வாழும்... விவசாயமற்ற ஊரில் மனிதர்கள் எப்படிக் குடியிருக்க முடியும்... அந்த நிலத்தைப் பெறுவதற்கு எத்தனை போராட்டங்களை அந்த மக்கள் நடத்தியிருக்கிறார்கள். ஆனால், வறட்சி அந்த மக்களை எந்தப் போராட்டமும் இல்லாமல் அந்த இடத்தைவிட்டு வெளியேற்றி விட்டது. போராடிப் பெற்ற நிலத்தைவிட்டு மக்கள் வெளியேறியது குறித்தான வாழ்வுதான் நாவலின் உயிர்.
நாவலில் நிகழும் காலத்துக்கு நான் பயணப்பட்டேன். நாவலின் கதாபாத்திரங்கள் என்னோடு உறவாடிக்கொண்டிருந்தன. நாவலுக்கான எல்லா தரவுகளையும் திரட்டி நாவலை எழுதலாம் என்று மனம் உறுதிகொண்டபின், மீண்டும் சினிமாக் கனவு கல்லெறிய... என்னால் நாவலை எழுத முடியவில்லை. எனக்கு படம் இயக்குவதற்கான வாய்ப்பு கிடைத்தது. இரண்டு வருடங்களாக வேறு சிந்தனை இல்லை. ஆனால், என் உறவினர்கள் நான் ஊருக்குப் போகும்போதெல்லாம், “எங்கள்ட்ட கேட்டியே அந்தக் கதைய எழுதிட்டியா?” என்று கேட்டுக்கொண்டேயிருந்தார்கள். “கொஞ்சம் சினிமா வேலை, அதை முடிச்சிட்டு சீக்கிரம் நாவலைத் தொடங்கிடுவேன்” என்று சமாளித்துக்கொண்டிருந்தேன். இப்போது சினிமா வேலை முடிந்துவிட்டது. எப்போதும் என்னைத் துரத்திக்கொண்டிருந்த நாவல் இப்போது விழித்துக்கொண்டது. இனியும் நாள்களைக் கடத்த முடியாது என்று தோன்ற, ஒரு ஞாயிற்றுக்கிழமையின் அதிகாலை எந்தத் தயக்கமும் இல்லாமல் நாவலை எழுதத் தொடங்கிவிட்டேன்.
இப்போது, 100 பக்கங்களுக்கும் மேல் நாவல் உருவாகிவிட்டது. அவ்வப்போது மனநிலையையும் நேரத்தையும் ஒழுங்குபடுத்த முடியாமல் நாவல் எழுதுவதில் சிறு பின்னடைவு ஏற்படுகிறது. ஏற்கெனவே நான் குறிப்பிட்டதுபோல நாவல் எழுதுவது என்பது ஒரு Discipline. இப்போது என் சொந்த ஊருக்குப் பயணப்பட்டுவிட்டேன். வேறு எதிலும் கவனம் செலுத்தாமல் நாவலை முழுமையாக்கிவிட்டுத்தான் சென்னை திரும்புவேன். இன்னும் நாவலுக்கான தலைப்பை முடிவுசெய்யவில்லை, கதை போகும்போக்கில் தகுதியான தலைப்பு தானே வந்து சேரும் என நம்புகிறேன். நான் இல்லாதிருந்த அந்தக் காலத்தில், அந்தக் காலத்தின் மனிதர்களில், நானும் ஒருத்தியாக வாழ்ந்துகொண்டும் எழுதிக்கொண்டுமிருக்கிறேன்.