
இங்கேயும்... இப்போதும்...

கோனூர் வைரமணி
“நான் கிராமத்தின் பிள்ளை. என் மூப்பன் கட்டியாண்ட வழக்காறுகளைக் கலப்படமற்ற மொழியில் பதிவுசெய்கிறேன். எனக்கென ஒரு பண்பாடு உண்டு; தொன்மம் உண்டு; வரலாறு உண்டு. பனையோட்டுச் சில்லு தேடியலையும் ஒரு குழந்தையாக நான் அவற்றைத் தேடியலைந்து சொற்களாகச் சேகரிக்கிறேன். ஒருவகையில், நான் கவிதையாகப் பெயர்ப்பவை வேர் ஊடாடித் திரியும் என் வரலாற்றைத்தான். நாளை அவைதான் என் சந்ததிக்கான ஆவணங்கள்.”
மேட்டூர் அணையைச் சேர்ந்த கோனூர் வைரமணி, கோனூரில் ஒரு பல்பொருள் அங்காடி நடத்துகிறார். ‘தப்புச்செடி’, ‘மனங்கொத்தி’ உள்பட மூன்று கவிதைத் தொகுப்புகள் வெளியாகியுள்ளன. இரண்டு கவிதைத் தொகுப்புகள் விரைவில் வெளியாகவுள்ளன.

கே.ஸ்டாலின்

“ஏதோவொரு கணத்தில் எனை வந்தடையும் ஒற்றைச் சொல்லை, ஒரு பறவையென கவ்விக்கொண்டு கவிதைக்கூட்டை முடைகிறேன். ஒரு வலசைப் பறவையாக இந்தப் பூவுலகில் எங்கு திரிந்தாலும் என் உயிர்ப்பு, கூட்டின் கதகதப்பையே நாடுகிறது. என் மொழி, விரிந்துகிடக்கும் வானத்தின் வெற்றிடத்தைப் போன்றது. அனுபவங்கள் அனைத்தையும் அது தன்னுள் பொருத்திக்கொள்கிறது.”
விழுப்புரம் மாவட்டம், கள்ளிப்பாடியைச் சேர்ந்த கே.ஸ்டாலின், மணலூர்ப்பேட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் கணிதப் பட்டதாரி ஆசிரியராகப் பணிபுரிகிறார். ‘பயண வழிக்குறிப்புகள்’, ‘பாழ் மண்டபமொன்றின் வரைபடம்’, ‘வனமிழந்த கதை’ ஆகிய கவிதைத் தொகுப்புகளை வெளியிட்டுள்ளார். ‘அப்பாவின் நண்பர்’ என்ற கவிதைத் தொகுப்பு விரைவில் வெளியாகவிருக்கிறது.

க.ஆனந்த்
“மூச்சென கவிதையும் இயல்பாக நிகழ்ந்துகொண்டிருக்கிறது. கழுத்தை நெறிக்கும் நெருக்கடிகளையும், துரத்தும் அவசரங்களையும் கடந்து இந்த வாழ்வை சுவாரஸ்யப்படுத்துவது எழுத்து ஒன்றுதான். நான் எழுதியவற்றின் கூட்டுத்தொகைதான் நான் வாழ்ந்த காலத்தின் கணக்கு. வாழ்வின் போக்கில் பொங்கி வழிகிற சொற்களை அள்ளி அள்ளி அடுக்குகிறேன். அவையே என் பிறப்பின் ஆகச் சிறந்த சேகரிப்புகள்.”
நாமக்கல் மாவட்டம், பழையபாளையத்தைச் சேர்ந்த க.ஆனந்த், எடப்பாடியில் தமிழ்நாடு மின்சார வாரிய உதவி செயற்பொறியாளராகப் பணிபுரிகிறார். ‘ஒவ்வொரு மழையிலும்’, ‘கனவுகள் பூட்டிய தேர்’, ‘நிறம் மாறாத சொற்கள்’, ‘நாணத்தின் மறுபக்கம்’ ஆகிய கவிதைத் தொகுப்புகளை வெளியிட்டுள்ளார். இரண்டு கவிதைத் தொகுப்புகள் விரைவில் வெளியாகவிருக்கின்றன.

மு.கீதா
“சமூகத்தின் அடிப்புறத்தில் யுகங்களாக உறைந்திருக்கும் ஆதிக்கப் படிமங்களை எரித்தொழிக்கக் கிளம்பும் பெருந்தீயில், ஒற்றைக் கந்தகப்பூவாக என் கவிதையும் இணைகிறது. நாற்றமெடுத்துக்கிடக்கும் என் நிலத்தில் புதுவாசனையைப் பரப்பும் புது மலராகவும் அது உருமாறுகிறது. தடங்களை நிலைக்கவிடாமல் அழித்துக்கொண்டேயிருக்கும் அலையென, அவை எக்காலமும் இந்த உலகின் பரப்பில் உலவிக்கொண்டேயிருக்கும்.”
புதுக்கோட்டை, சந்தைப்பேட்டை அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி இடைநிலை ஆசிரியரான மு.கீதா, தற்போது, பள்ளிக் கல்வித்துறைக் குழுவொன்றில் சென்னையில் பணிபுரிகிறார். ‘விழி தூவிய விதைகள்’, ‘ஒரு கோப்பை மனிதம்’, ‘மனம் சுடும் தோட்டாக்கள்’ ஆகிய மூன்று கவிதைத் தொகுப்புகளை வெளியிட்டுள்ளார். ‘கே.ஜீவபாரதியின் வேலுநாச்சியார் நாவலில் பெண்ணியச் சிந்தனைகள்’ என்ற ஆய்வு நூலையும் எழுதியிருக்கிறார். மாணவர்களுக்கான கட்டுரை நூல் ஒன்று விரைவில் வெளிவரவிருக்கிறது.