
படங்கள் : ஆர்.எம்.முத்துராஜ்
காலை நேரம்... சிவகாசி பட்டாசுத் தொழிற்சாலைகளுக்கும் காலண்டர் தயாரிக்கும் ஆலைகளுக்கும் கிளம்பிச் சென்றுகொண்டிருக்கும் எளியவர்கள் நிறைந்த சாலை... சாலையிலிருந்து சற்று தொலைவிலுள்ளது எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனின் வீடு. மஞ்சள் பூக்களாக உதிர்ந்துகிடந்த முற்றத்தில் நின்றபடி வரவேற்றார். வரவேற்பறைக்கும் சமையலறைக்கும் நடுவே அழகாக ஒரு நூலகம் அமைத்திருக்கிறார். புத்தகங்கள் வரவேற்க, நூலகத்துக்குள் நுழைந்தோம்.
எழுத்தாளர், பொதுவுடமை இயக்கச் செயற்பாட்டாளர், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் தலைவர் எனப் பன்முகம் கொண்டவர் ச.தமிழ்ச்செல்வன். அவரைப்போலவே அவரது நூலகமும் பன்முகத்தன்மையோடு இருக்கிறது. புத்தகங்களை அடுக்கிலிருந்து எடுக்கும்போதும், அதன் பக்கங்களைப் புரட்டும்போதும் பிறந்து இன்னும் கண்திறக்காத நாய்க்குட்டியைக் கையாள்வதைப்போன்ற கவனம் கொள்கிறார். அம்பேத்கர் - பெரியாரிய நூல்கள், மார்க்ஸிய நூல்கள், சினிமா நூல்கள், நாவல்கள், சிறுகதைகள், கட்டுரைகள், பெண்ணெழுத்து எனப் புத்தகங்கள் தனித்தனி அடுக்குகளில் வகைமை சார்ந்து ராணுவ ஒழுங்கோடு அடுக்கிவைக்கப்பட்டிருக்கின்றன.நூலகத்தின் சுவற்றில் கம்பீரமான ஓர் ஓவியம் மாட்டப்பட்டிருக்கிறது. “அந்த ஓவியத்தில் இருப்பது யார்?” என்ற கேள்விக்கு, “நீங்க கிளம்புறப்ப பதில் சொல்றேனே!” எனச் சிரித்த முகத்துடன் தனது வாசிப்பு, நூலகம் என மனதின் பக்கங்களைப் புரட்ட ஆரம்பித்தார்...

“ஃபிரடெரிக் எங்கெல்ஸ் எழுதிய ‘குடும்பம், தனிச்சொத்து, அரசு ஆகியவற்றின் தோற்றம்’ என்ற நூலின் வெவ்வேறு காலகட்டத்திய நான்கு பிரதிகள் என்னிடம் இருக்கின்றன. ஆனால், வாசிக்கவோ குறிப்பெடுக்கவோ, வாய்ப்பு ஏற்படும்போதெல்லாம் ஒவ்வொரு முறையும் முதன்முறை வாங்கிய அந்தப் பழுப்பேறிய புத்தகத்தை நோக்கித்தான் கைகள் போகின்றன. இந்தியா - பாகிஸ்தான் பிரிவினையின்போது, பெண்கள் பட்ட துயரம் குறித்து ஊர்வசி புட்டாலியா எழுதிய புத்தகம் ‘The Other Side Of Silence’. முதன்முறை அதை ஒரு நூலகத்திலிருந்து ஜெராக்ஸ் எடுத்துவந்தேன். பின்புதான் அந்த நூலை வாங்கினேன். இன்று அந்த நூல் இருந்தாலும்கூட, முதன்முறை எடுத்து வந்த ஜெராக்ஸில்தான் இன்றைக்கும் குறிப்பெடுக்கிறேன். புத்தகங்களுடனான உறவு மிகவும் வித்தியாசமானது.
என் தாத்தா எழுத்தாளராக இருந்த காரணத்தால், சிறு வயதிலிருந்தே எங்கள் வீடு முழுக்க புத்தகங்களாகத்தான் இருந்தன. ஆனாலும், முதன்முதலாக ‘டப்பாச்சி’ என்ற குழந்தைகளுக்கான நாவலை 5-ம் வகுப்பு படிக்கும்போது, நென்மேனி மேட்டுப்பட்டி கிளை நூலகத்திலிருந்து எடுத்து முழுதாகப் படித்தேன். அதைப் பார்த்து ஆச்சர்யப்பட்ட நூலகர், அதன் பிறகு நிறைய புத்தகங்களை எனக்குக் கொடுத்தார். அதன் பிறகு 7-ம் வகுப்பு படிக்கும்போது, வீட்டிலேயே அட்டைப் பெட்டிகளை அடுக்கிவைத்து நானும் கோணங்கியும் ஒரு நூலகம் ஆரம்பித்தோம். ‘அன்பு நிலையம்’ என அதற்குப் பெயர்வைத்தோம். அந்த நூலகத்திற்காக, எங்கள் ஊரிலிருந்து சாத்தூர் வரை எட்டு கி.மீ நடந்து சென்று ‘கண்ணன்’ என்ற சிறுவர் இதழ் வாங்கி வருவோம். காசு சேர்த்து ‘முத்து காமிக்ஸ்’ உள்ளிட்ட புத்தகங்கள் வாங்கி சேகரிக்க ஆரம்பித்தோம். அந்தப் புத்தக சேகரிப்பு எங்கள் இளமைக்காலம் வரை தொடர்ந்து வந்தது. எனக்குத் திருமணமான பிறகு, நான் சில புத்தகங்களை மட்டும் என்னோடு எடுத்துவந்துவிட்டேன்.

புத்தக சேகரிப்பும் வாசிப்பும் மாறத் தொடங்கின. புத்தகத்தின் மூலமாக எனக்குள்ளும் நிறைய மாற்றங்கள் வந்துசேர்ந்தன. நா.பார்த்தசாரதியின் கதைகளில் வரும் தேசபக்தியும், காதலுணர்வும் அந்தக் காலகட்டத்தில் என்னை மிகவும் பாதித்தன. அதன் விளைவாகத்தான் நான் ராணுவத்தில் சேர்ந்தேன். அதுபோலவே ஜார்ஜ் பொலிட்சரின் ‘மார்க்ஸிய மெய்ஞானம்’ புத்தகம் என்னை பொதுவுடைமை இயக்கத்திற்கு அழைத்துவந்தது. இப்படி, எனது வாழ்க்கையைத் தீர்மானிக்கும் சக்தியாக எப்போதும் புத்தகங்கள் இருந்திருக்கின்றன. என் வாழ்வில் என்னை அடையாளம் கண்டுகொள்ள, இந்த உலகை விசாலமாகவும் அதேசமயம், மக்களை நெருக்கமாகவும் அணுகவைத்தவை புத்தகங்கள்தாம்.
வாழ்வின் ஒவ்வொரு காலகட்டத்திலும் ஒவ்வோர் எழுத்தாளரின் எழுத்துக்களால் என் பொழுதுகளை நிறைத்திருக்கிறேன். நா.பார்த்தசாரதி, ஜெ.கிருஷ்ணமூர்த்தி, கமலாதாஸ், வண்ணநிலவன், வண்ணதாசன் என அந்தப் பட்டியல் சற்றே நீளமானது. பல எழுத்துகளை இன்று படிக்கும்போது, ‘இதைப் படித்தா அவ்வளவு சிலாகித்தோம்’ எனத் தோன்றுவதுண்டு. ஆனால், அந்தந்த காலகட்டத்தில் அவற்றின் மீது பித்தேறிக் கிடந்தேன் என்பதும் உண்மைதான்.
கிட்டத்தட்ட 50 வருடங்களுக்கும் மேலாக வாசித்துவருகிறேன். இதுநாள் வரையில் புத்தகத்திற்காக செலவு செய்வதை நான் பெரிதும் விரும்பியிருக்கிறேன். முன்பு பழைய வீட்டிலிருக்கும்போது, புத்தகங்களை வீட்டின் பல அறைகளில் கவனமின்றி வைத்துவிடுவது உண்டு. என்னைச் சந்திக்க வரும் நண்பர்கள் திரும்பிச் செல்லும்போது, புத்தகங்கள் சிலவற்றை ‘மகாராஜாவின் பார்வை படாமல் இளவரசியைக் கவர்ந்து செல்லும் ராஜகுமாரன்களைப்போல’ எடுத்துச் சென்றுவிடுவார்கள். அதனால், சில ‘திறமைவாய்ந்த’ நண்பர்கள் வீட்டுக்கு வந்துசெல்கையில் அவர்களின் பைகளை இரண்டாம்கட்ட மூன்றாம்கட்ட சோதனைகளுக்கு உட்படுத்திய பின்னரே அனுப்பிவைத்திருக்கிறேன்.
புத்தகங்களைத் திருடுவது என்பது எல்லோரும் விரும்பிச் செய்யும், தண்டனைக்குப் பதிலாக அறிவு கிடைக்கும் ஒரு செயல். எனக்கும் அதுபோன்ற அனுபவம் உண்டு. மாநகராட்சி அலுவலகம் ஒன்றின் நூலகத்தில், பயன்படுத்தப்படாமல் தூசி படிந்துகிடந்த, ‘இந்தியா பாகிஸ்தான் பிரிவினையைப் பற்றி’ மத்திய அரசு வெளியிட்ட புத்தகத்தை எடுத்துவந்தேன். இப்போதும் எங்காவது ஒரு பயன்படுத்தப் படாத நூலகத்தைப் பார்க்கும்போது, அங்கு நிச்சயம் ஒரு நல்ல புத்தகம் புழுதிக்குள் மூச்சு முட்டிக் கொண்டு, தன்னை எடுத்துச் செல்லவிருக்கும் வாசகருக்காகக் காத்திருக்கும் எனத் தோன்றும்.
மீண்டும் மீண்டும் ஒரே புத்தகத்தை, கதைளை, குறிப்பிட்ட சில கட்டுரைகளை வாசிப்பதென்பது, வாசிப்பு நமக்குள் ஏற்படுத்தும் உணர்வுப்பிணைப்பு. மறுவாசிப்பு என்பது என்னைப் பொறுத்த வரை புத்தகத்தை மீண்டும் ஒருமுறை வாசிப்பதல்ல. நம்மை நாமே குறிப்பிட்ட காலத்திற்கொரு முறை நம் அனுபவம், வாசிப்பு குறித்து சுயபரிசோதனை செய்துகொள்வது. 20 வயதில் வாசித்த புத்தகத்தை 40 வயதில் மறுவாசிப்பு செய்யும்போது நமக்குள் ஏற்படும் புரிதல்கள், அனுபவங்கள் நிச்சயம் வேறுபட்டவையாக இருக்கும். சில புத்தகங்கள், கதைகள் கடலைப்போன்றவை, எல்லா காலகட்டங்களிலும் அவை பிரமிப்பை ஏற்படுத்திக்கொண்டே இருக்கும்.
எப்போது வாசித்தாலும், முதல் தடவை தந்த அதே உணர்வைத் தரும் அம்பை எழுதிய, ‘வெளிப்பாடு’ எனும் சிறுகதையை இதுவரை 100 தடவைக்கும் மேல் வாசித்திருப்பேன். எப்போது வாசித்தாலும் முதன்முறை வாசிக்கும் உணர்வையே அடைகிறேன். பெண் விடுதலைக்கான உலகப் புகழ்பெற்ற புத்தகமான சிமன் டி ப்யுவரின் ‘தி செகண்ட் செக்ஸ்’ புத்தகத்தைப் பலமுறை பல தரவுகளுக்காக வாசித்திருக்கிறேன்.ஆண்டன் செக்காவின் ‘ஆறாவது வார்டு’, மார்க்ஸிம் கார்க்கியின் ‘ஜிப்ஸி’, சிங்கிஸ் ஐத்மாத்தவின் ‘ஜமீலா’ போன்ற புத்தகங்கள் எனக்கு எப்போதைக்குமானவையாக இருக்கின்றன. சமயவேல் மற்றும் சுகுமாரனின் கவிதைகள், கு.அழகிரிசாமியின் கதைகள் எனக்கு மிகவும் பிடித்தமானவை; மனதிற்கு நெருக்கமானவை. வீட்டைவிட்டு வெளியே பறந்துசென்று திரும்பும் புறா, எப்படி ஒரு புறாக் கூட்டத்தையே அழைத்து வருமோ, அப்படித்தான் புத்தகங்களும். ஒரு புத்தகம் உங்களிடம் நூறு புத்தகங்களை அழைத்துவரும். உங்கள் வாசிப்பின் தளத்தை விரிவுசெய்யும் புத்தகங்களோடு நாம் கொள்ளும் உறவு எதன் பொருட்டும் முடிவுருவதில்லை.

அ.கரீம் எழுதிய ‘தாழிடப்பட்ட கதவுகள்’ புத்தகமும் கோவைக் கலவரத்தை மையப்படுத்தி எழுதப்பட்ட சம்சுதீன் ஹீராவின் ‘மௌனத்தின் சாட்சியங்கள்’ புத்தகமும் சமீபத்தில் என்னை மிகவும் பாதித்தவை. தற்போது வாசித்துக்கொண்டிருக்கும் ‘Sapiens’ கூட அப்படியான ஒரு புத்தகம்தான். இரவு நேரங்களில் தத்துவம், வரலாறு சார்ந்த புத்தகங்களை வாசிக்கிறேன். பகல்களில் இரவு வாசித்ததன் தொடர்ச்சியான நாவல்களை சிறுகதைகளை வாசிக்கிறேன். பயணங்களின்போது, பெரும்பாலும் கதைகளை வாசிப்பதை மட்டுமே பழக்கத்தில் வைத்துள்ளேன். பயணங்களில் வாசிப்பதற்கேற்ற பெரிய எழுத்து வடிவமைப்புகொண்ட புத்தகங்களை பதிப்பகங்கள் பதிப்பிப்பதில்லை. அப்படிப் பதிப்பித்தால் வாசகர்களுக்கு மிகவும் வசதியாக இருக்கும்.
வாசிப்பின் வழியே புத்தகங்களைத் தொடர்ந்து அறிமுகம் செய்யும் நண்பர்கள் எல்லோருக்குமே இருப்பார்கள். வீ.அரசு எனக்கு அப்படி நிறைய புத்தகங்களைப் பரிந்துரை செய்திருக்கிறார்; வாசிப்பதற்கும் கொடுத்திருக்கிறார். பொதுவுடைமை இயக்கத் தோழர்களுக்கு வகுப்பெடுக்கும்போதும் கல்லூரிகளுக்குச் சென்று மாணவர்களிடையே பேசும்போதும் வாசிப்பின் அவசியத்தைப் பற்றித் தொடர்ந்து வலியுறுத்திவருகிறேன். ஏனென்றால், வாசிப்பு மட்டும்தான் அவர்களைச் சுயமாகச் சிந்திக்கத் தூண்டும். வாழ்வின் இருண்மையான பொழுதுகளில் புத்தகங்களே திசைகாட்டும்.
நல்ல புத்தகங்களைத் தேடி அலைந்து, அவற்றை அடையும்போது ஏற்படும் மகிழ்ச்சியும் நிம்மதியும் அலாதியானது. நான் பல வருடங்களாகத் தேடியது, நேதாஜியின் மரணம் தொடர்பாக அவரது படைத்தளபதி ஷானவாஸ் கான் எழுதிய My Memories ( I.N.A & It’s Nethaji) புத்தகம். நேருவின் முன்னுரையுடன் வெளிவந்த இந்தப் புத்தகம் நேதாஜியின் மரணம் தொடர்பான மிக முக்கியமான புத்தகம். இந்தப் புத்தகத்தை நான் கண்டடைந்தது பெங்களுர் பழைய புத்தகக் கடையில். இப்படி என் நூலகத்திலுள்ள ஒவ்வொரு புத்தகமும் ஒவ்வொரு தனித்துவமான பின்கதையைக் கொண்டவைதான்.
வாசிப்பதைப்போன்றே புத்தகங்களைப் பராமரிப்பதும் ஒரு ரசனையான அனுபவம். விரும்பிய புத்தகங்களை வாங்கி அவற்றிற்காக ஓர் அறையை ஒதுக்கி, தனித்தனி அடுக்குகள் அமைத்து அவற்றைப் பராமரித்துவைப்பது அலாதியான அனுபவம். முறையாக அடுக்கிவைக்கப்பட்டிருக்கும் புத்தகங்களைப் பார்க்கும்போது, என்னை அறியாமல் ஏதாவது ஒரு புத்தகத்தை எடுத்து வாசிக்கத் தொடங்கிவிடுவேன். புத்தகங்களிடம் நம்மை இழப்பது பெருமதியான அனுபவம்.
அவசியம் வாசிக்க வேண்டிய நூல்களைப் பட்டியல் இடும் வழக்கம் பொதுவானதுதான். ஆயினும், யாரும் கேட்டவுடன் சட்டென பட்டியல் தருகிற ஆள் இல்லை நான். கேட்கும் நபர் யார், அவர் என்ன வாசித்திருக்கிறார், எதை நோக்கி வாசிப்பில் பயணிக்க விரும்புகிறார் என்றெல்லாம் விசாரித்துப் புரிந்துகொண்ட பின்தான் பரிந்துரைப்பேன். அந்தவகையில் உங்களுக்காக ஓர் எளிய பட்டியலை இங்கு தருகிறேன்.
1.கு.அழகிரிசாமி கதைகள்
2.புதுமைப்பித்தன் கதைகள்
3.மார்க்சிய மெய்ஞ்ஞானம்-ஜார்ஜ் பொலிட்ஸர்
4.அம்பை சிறுகதைகள்
5.நெற்குஞ்சம்-தேன்மொழி
6. பாட்டும் தொகையும் தொல்காப்பியமும் தமிழ்ச் சமூக உருவாக்கமும் -ராஜ்கௌதமன்
7.பெரியார்-சுயமரியாதை, சமதர்மம்
-எஸ்.வி.ராஜதுரை, வ.கீதா
8.புரட்சியில் பகுத்தறிவு-ப.கு.ராஜன்
9.அடித்தள மக்கள் வரலாறு -ஆ.சிவசுப்பிரமணியன்
10. பண்பாட்டு அசைவுகள்-தொ.பரமசிவன்
சுவற்றில் மாட்டப்படிருக்கும் இந்த ஓவியத்தில் இருப்பது யார் என்று கேட்டீர்கள் அல்லவா... இவர் கவிஞர் தமிழ்ஒளி. 40-களில் அகில இந்திய முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் தமிழகப் பிரிவு பொதுச் செயலாளராக இருந்தவர். 40-களில் இந்தியாவில் கம்யூனிஸ்ட் இயக்கம் தடைசெய்யப்பட்டிருந்தபோது, அதன் இயக்கத் தலைவர்கள் பலரும் கைது செய்யப்பட்டனர். பலரும் தலைமறைவாக வாழ்ந்துவந்தார்கள். கட்சியின் அலுவலக நூலகங்களிலிருந்த புத்தகங்களையெல்லாம் போலீஸார் பறிமுதல் செய்துவந்தனர். புத்தகங்களைப் பாதுகாப்பது பெரும் போராட்டமாக இருந்தது. அப்போது கட்சி அலுவலகத்தின் நூலகத்திலிருந்த புத்தகங்களையெல்லாம் கவிஞர் தமிழ்ஒளியிடம் கொடுத்து, பாதுகாக்கச் சொல்லியிருக்கிறார்கள். அவரும் பல இடங்களில் புத்தகங்களுடன் தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்து வந்திருக்கிறார். தலைமறைவு வாழ்க்கையால் வேலைக்குச் செல்லவும் வழியின்றி பசியால் தவித்திருக்கிறார். பசிக்கொடுமையில் வேறு வழியின்றி அந்தப் புத்தகங்களை விற்றுப் பசியாறத் தொடங்கியிருக்கிறார். தலைமறைவுக்காலம் முடிந்து, இயல்புநிலை திரும்புவதற்குள் அவரிடமிருந்த அனைத்து புத்தகங்களையும் விற்றுத் தீர்த்துவிட்டார். சிறையிலிருந்து வெளிவந்த பி.ராமமூர்த்தி, தமிழ்ஒளியிடம் புத்தகங்களைப் பற்றிக் கேட்க, இவர் நடந்ததைக் கூற, ராமமூர்த்தியும் நிலைமையைப் புரிந்துகொண்டார். ஆனால், புத்தகங்களை ஒவ்வொன்றாக விற்றபோது, தமிழ்ஒளிக்கு எவ்வளவு குற்றவுணர்ச்சி ஏற்பட்டிருக்கும்... எவ்வளவு வருந்தியிருப்பார்... அவரது அந்த குற்றவுணர்ச்சியைப் போக்கத்தான் அவரின் ஓவியத்தைச் சட்டகமிட்டு இவ்வளவு புத்தகங்களுக்கு நடுவிலே வைத்துள்ளேன்.
ஓவியத்திலிருக்கும் தமிழ்ஒளி மெள்ளப் புன்னகைப்பதுபோலிருந்தது. ச.தமிழ்ச்செல்வனின் ஆயிரக்கணக்கான புத்தகங்கள் மௌனமாக அதை ஆமோதித்தன.
சந்திப்பு : சக்தி தமிழ்ச்செல்வன்