கட்டுரைகள்
Published:Updated:

அவற்றின் கண்கள் - பா.திருச்செந்தாழை

அவற்றின் கண்கள் - பா.திருச்செந்தாழை
பிரீமியம் ஸ்டோரி
News
அவற்றின் கண்கள் - பா.திருச்செந்தாழை

ஓவியங்கள் : ரமணன்

வில்சன் - மேரி, ஓய்வுபெற்ற ஆசிரியத் தம்பதி. மேரி இன்று இறந்துவிட்டிருந்தார். பணி நாளினிடையே ஒரு மரணக் குறிப்பானது கார்ட்டூன் தோற்றம் பெற்றுவிடுகிறது. ஹவுசிங்போர்டு முட்டுச்சந்தில் அவர்களின் வீடு இருந்தது. நீராதாரம் இழந்துவிட்டு வீடுகளைக் கைவிட்டுச் சென்றுவிட்டவர்களால் அந்தத் தெரு சூன்யமடைந்திருந்தது. இயல்பாகவே முட்டுச்சந்து வீடுகள் காலத்தில் அதிர்ச்சியடைந்து அமைதியானவை. அநாதைக் கூழாங்கற்களில், மரங்களில், ஜன்னல்களில் பிணங்களைப்போல இறுகிவிட்ட ஈரத்திற்காகக் காயவைக்கப்பட்ட கொடித்துணிகளில் முட்டுச்சந்துகள் தங்களின் துக்கத்தை வளர்க்கின்றன. அதேவேளையில், பருவகால நோயொன்றிலிருந்து மீண்டுகொண்டிருப்பவனுக்கு முட்டுச்சந்து வீடுகள் தருகின்ற அமைதி தனித்துவமிக்கது. கிறித்தவ வீடுகளுக்கே உரிய ஒரு மருத்துவ நிசப்தமும், லேசாகக் கண்ணாடிப்பொழிவு ஏறிவிட்ட சிமிட்டித் தரையும்கொண்ட எளிய வீடு அது.

வில்சன் - மேரி தம்பதிக்குக் குழந்தைகளில்லை. குழந்தையற்றவர்கள் தங்களின் வயது மீதான ஓர்மையை இழந்துவிடுவதோடு, துக்க நாடகத்தின் சாயலோடு குழந்தையின் துடுக்குத்தனங்களையும் பிரதி செய்கிறார்கள். வில்சனும் மேரியும் சர்ச்சுக்குச் செல்கையில் தங்களுக்குள் சிறுசிறு சண்டைகள் பழிப்புகள் செய்துகொள்வார்கள். பிரார்த்தனை முடிந்து திரும்புகையில் சிறிய பழங்கள், கிழங்குகளைக் கொறித்தபடி சாலையோர நிழலில் நடந்து செல்வார்கள்.

அவற்றின் கண்கள் - பா.திருச்செந்தாழை

மேரியின் பாதத்தின் கீழே ஐஸ்பார் வைக்கப்பட்டிருந்தது. சர்ச்சுக்குத் தயாரான பாவனையுடன் அவர் கிடத்தப்பட்டிருந்தார். நீண்டகாலமாகச் சிதையாத மௌனம் விரிந்திருந்த அவ்வீட்டில், விவரிக்கவியலாத ஒரு தயக்கத்தை நான் உணர்ந்தேன். குழந்தைகளற்ற வீட்டின் பொருள்கள் வயதேறி உருகுகின்றன. பிறகு, அவற்றுக்குக் கண்கள் திறக்கின்றன. இரு மனித பொம்மைகளின் தினசரியை அவை அசுவாரஸ்யமாகப் பார்க்கின்றன. ஒரு நாவலின் இறுதிப் பக்கத்தின் கருமையை வீட்டின் சுவர்கள் வடிக்கத் தொடங்குகையில், அவர்களில் ஒருவர் மரணிக்கிறார்.

பெண்களே இல்லாத மரண வீடு இது. ஆகையால் இந்த மரணம் தன் சம்பிரதாயங்களை இழந்திருக்க, சொற்பக் கண்களின் கூட்டமானது ஓர்அலுவலகத் தன்மையை அபத்தமாகப் பிரதிபலித்தது. வில்சன் தன் சட்டையை இன் செய்திருக்க, அவரது பல்செட் ஒரு நிரந்தரச் சிரிப்பை வழியவிட்டபடியிருந்தது. பிளாஸ்டிக் சேரில் கிடந்த ஆங்கில தினசரியைத் துல்லியமாக மடித்தப்படி உள்ளே கொண்டு சென்றார். வெளியில் வரும்போது அந்தப் பல்செட் புதியவர்களைப் பார்ப்பதுபோல மீண்டும் சிரித்தது.

அவற்றின் கண்கள் - பா.திருச்செந்தாழை


வந்திருந்த சொற்பக் கண்களும் வெளியில் கிடந்த சேர்களில் காரிய நிமித்தமாக அமர்ந்து, அந்தத் தெருவின் நடமாட்டமிழந்த வெறுமையைப் பார்த்துக்கொண்டிருந்தோம். எனக்கு லேசாக தலை வலித்தது. ஒரு தேநீருக்காக நான் நடக்கவேண்டிய தொலைவை அஞ்சி, இருக்கையிலேயே தொய்ந்தேன். வீட்டினுள்ளே மிக மெல்லியதாக வில்சன் யாருடனோ பேசிக்கொண்டிருப்பது கேட்டது. சில நிமிடங்களுக்குப் பிறகு, அவர் மட்டுமே எதிர்க்குரலற்று பேசிக்கொண்டிருப்பதை உணர்ந்து மெதுவாக எழுந்து எட்டிப் பார்த்தேன். ஞாபகம் வந்தவரைப்போல வில்சன், ஓர்அறையிலிருந்து மேரியின் பைபிளை எடுத்துவந்து தலைமாட்டில் வைத்தார். மேரியின் விரல்தடம் பதிந்து பதிந்து எண்ணெய் கக்கிய கறுப்பு ரெக்சின் போட்ட பைபிள், மினுங்கும் காகத்தைப்போலிருந்தது. மேரியின் முகத்திலிருந்து ஓர் ஆமோதிப்பைப் பெற்றுவிட்ட திருப்தியுடன் தலையசைத்துக்கொண்டார். மேரியின் பின்பாதங்கள் ஐஸ்பாரை பிறை வடிவத்தில் கரைத்தபடி உள்ளிறங்கிக்கொண்டிருக்க, உருகி வழிந்த நீரின் மேல் கால்மிதியைப் போட்டுவைத்தார். ஒரு மௌனச் சடங்குபோல எல்லாம் நிகழ்ந்துகொண்டிருந்தன. நான் முன்னறையைத் தாண்டி உள்ளே செல்ல யோசித்திருக்க, கால்மிதியை நீவிவிட்டபடி என்னை ஏறிட்ட வில்சன், முற்றிலும் அந்நியமான ஒரு பார்வையுடன் மேரியின் பக்கம் திரும்பிக்கொண்டார்.

கல்லறைத்தோட்ட வாகனம் வருவதற்கு தாமதமாகுமெனத் தெரிந்தது. நாங்கள் மூன்று பேர் மட்டுமே எஞ்சியிருந்தோம். வில்சன் வெளியே வந்து சில பிளாஸ்டிக் சேர்களை ஒன்றிணைத்து ஆள்களற்ற எதிர் வீட்டினோரம் வைத்துவிட்டு வந்தார். எங்கள் பக்கம் திரும்பாமல் கானல் நெளியத் தொடங்கிவிட்ட தெருமுனையை உற்று நோக்கியபடியே சில நொடிகள் நின்றார். என்னுடன் மீந்த இரண்டு பேரும், வில்சன் வீட்டிற்குள் சென்றதும் நழுவிவிடத் தயாரானார்கள். என்னால் யூகிக்கவே முடியவில்லை தனியனாக அந்தத் தெருவில், அந்த வீட்டில் எனது இருப்பை.

இறந்த மனைவியின் ஊறிய பாதங்களில் வழியும் குளிர்ந்த நீரைத் துடைத்தபடி அவளுடன் பேசிக்கொண்டிருக்கும் மனிதன்... கண் விழித்துவிட்ட அறைப் பொருள்களின் பார்வைகள் உயிர்ச்சலனம் இல்லாத சூன்யத் தெருவில் மெருகைப்போல சிதைகின்ற வீடுகளின் அரற்றல்கள்... மேலும், என்னை மிரளச் செய்யும்விதம் எப்போது வேண்டுமானாலும் கா... வெனக் கரைந்துவிடுகின்ற மினுக்கத்தில் ஒரு பைபிள்.