
மெய்ப்பொருள் காண்

நீசக்காரியம் - ஆதவன் தீட்சண்யா
படங்கள் : வீ.சதீஷ்குமார்
`தாத்ரிக்குட்டியின் ஸ்மார்த்த விசாரம்’ ஆலங்கோடு லீலாகிருஷ்ணனின் மலையாள நூல். யூமா வாசுகியால் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டது. தாத்ரிக்குட்டி, நம்பூதிரிப் பார்ப்பனப் பெண். ஆசாரக்கேடாகப் பல பேருடன் பாலுறவுகொண்டிருந்தாள் என்கிற குற்றச்சாட்டின் பேரில் விசாரணைக்கு ஆளாகிறாள். விசாரணையைப் பயன்படுத்திக்கொள்ளும் அவள், நம்பூதிரிகளின் குடும்ப அமைப்பு, அது பெண்கள் மீது பாலியல் சுரண்டலையும் ஒடுக்குமுறைகளையும் நிகழ்த்த ஆண்களுக்கு வழங்கியுள்ள அதிகாரம், பாசாங்கான ஒழுக்கவிதிகள், மனிதத்தன்மையற்ற சடங்குகள் ஆகியவற்றைத் தன்போக்கில் அம்பலமேற்றுகிறாள். அடுத்து வந்த காலத்தின் மாற்றங்களுக்கு, அவளே இவ்வாறாக விதையூன்றிப் போனாள் என்பதை விவரிக்கும் இந்த நூலில் `நீசக்காரியம்’ என்றொரு சடங்கு குறிப்பிடப்படுகிறது.
நம்பூதிரிக் குடும்பங்களில் மூத்த ஆண் மட்டுமே அதே சாதிக்குள் மணம்முடிக்கும் உரிமையுடையவர். இளையவர்கள் நாயர் சாதியில்தான் மணம் முடித்தாக வேண்டும். இந்த வழக்கத்தினால், நம்பூதிரிப் பெண்களை மணப்பதற்குப் போதுமான நம்பூதிரிகள் கிட்டாத நிலை. எண்ணிக்கையில் நிலவிய இந்தச் சமமின்மை, ஒரு நம்பூதிரிக்கு (வயது வித்தியாசம் பாராது) பல நம்பூதிரிப் பெண்களைக் கட்டிக்கொடுக்கும் அவலத்தை உருவாக்கியது. `நீசம்’ என்பதற்கு, `பொருத்தமில்லாத ஆண்-பெண்களின் புணர்ச்சி’ என்றொரு பொருளுண்டு. அந்த வகையில் நம்பூதிரிகளின் பாலுறவுதான் ‘நீசக்காரியம்’ எனச் சுட்டப்பட்டிருக்க வேண்டும். ஆனால், அது சுட்டுவதோ வேறொன்றை.

ஆண் தட்டுப்பாட்டினால் நம்பூதிரிப் பெண்கள் பலர் திருமணமின்றி முதிர்கன்னிகளாகவே மடிந்தனர். திருமணம் ஆகாத (கன்னிகழியாதவர்கள் என நம்பப்படுகிற), திருமணம் ஆகியும் கன்னிகழியாத இந்தப் பெண்கள், அதன்பொருட்டு சாபம்விடக்கூடும் என்கிற அச்சம் நம்பூதிரிகளுக்கு உண்டு. சாபம் பலிதமாவதைத் தடுக்க, திருமணம் ஆகாமல் இறக்கும் பெண்ணின் பிணத்தைப் புணர்ந்து, கன்னிகழிக்கும் `நீசக்காரியம்’ என்னும் பரிகாரச் சடங்கைச் செய்கின்றனர். நீசக்காரியத்தை நிறைவேற்றுகிறவர் ‘நீசக்காரியன்’. தீண்டப்படாத சாதியினர் இதற்காகப் பணிக்கப்பட்டனர்.
பொருத்தமான இணையைத் தேடிக்கொள்வதிலிருந்து பெண்ணைத் தடுத்துவிடுகிற சாதியம், இறந்த பிறகு அவளை சாந்தப்படுத்த மனிதத்தன்மையற்ற இந்தச் சடங்கை கைக்கொண்டிருக்கிறது. பிறர் கண்ணில்படாது வீட்டுக்குள்ளேயே பதுக்கி வைக்கப்பட்ட, வெளியே நடமாடினாலும் தாழம்குடையால் முகம் மறைக்கும்படி பணிக்கப்பட்ட, நம்பூதிரிப்பெண் இறந்ததுமே கன்னிகழிக்க ஒரு தீண்டத்தகாதவரிடம் ஒப்படைக்கப் படுகிறாள். அந்த ஆண்தான் இதற்காக ‘நீசக்காரியன்’ என்று இழித்துரைக்கப் படுகிறார். பிணமாகவேனும் நீசக்காரியத்தில் பங்கெடுக்கவைக்கப்படுகிற அவள் ‘நீசக்காரியள்’ என்றாகிவிடுவதில்லை. அதாவது, அவர்களது சாதிப் புனிதத்துக்கு எந்த பங்கமுமில்லை. புனிதத்துக்கான வரையறை நம்பூதிரிகளின் தேவைகளுக்கு உட்பட்டதுதான்.
பிணம் தழுவுதல் என்று வள்ளுவரும், அருவருப்பான மணவகை என்று அபே துபுவாவும் இந்த நீசக்காரியத்தைக் குறிப்பிடுவதாக ஒரு வாதமுண்டு. இந்தச் சடங்கு இன்று, மூலவடிவை இழந்து, சந்தனம் தழுவுதலாக பூடகமாகிவிட்டது. இது முற்றாக வழக்கொழிந்தும்போகலாம். ஆனால், தம் பெண்களுக்கும் தீண்டப்படாதாருக்கும் நம்பூதிரிகள் இழைத்த `நீசக்காரியம்’ மொழிக்குள் உறைந்திருந்து அவர்களை கொடும்பலி கேட்கும்.

மன்னி - சோ.தர்மன்
படம் : எம்.விஜயகுமார்
டெல்லியிலிருந்து மேடம் வசந்த சூர்யா அவர்கள், தொலைபேசியில் அழைத்தார். என்னுடைய `கூகை’ நாவலை ஆக்ஸ்ஃபோர்டு யுனிவர்சிட்டி பிரஸுக்காக ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர். “தர்மன், இப்போது நான் ஆழ்வார் பாசுரங்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துக்கொண்டிருக்கிறேன். அதில் ஓர் இடத்தில் `மன்னிக்கிடந்தேன் மாதவனோடு’ என்று வருகிறது. `மன்னிக்கிடத்தல்’ என்றால் என்ன என்று புரியவில்லை. நான் எதிலெல்லாமோ தேடிப்பார்த்தேன். யார் யாரிடமோ கேட்டுப்பார்த்தேன். நான் பார்க்காத தமிழ் அகராதி இல்லை. உங்களிடம் கேட்கச் சொன்னார்கள்” என்றார்.
“ `மாரிமலைமுழஞ்சில் மன்னிக்கிடந்துறங்கும்’ என்று ஆண்டாள் தன்னுடைய 23-ம் பாடலில் குறிப்பிடுகிறார் பார்த்தீர்களா?” என்றேன். அவருக்கு ஒரே சந்தோஷம்.
மாரி-மழைக்காலம்; முழஞ்சில்-குகை; மன்னி-இணையுடன் பொருந்தி. இந்த வார்த்தை, எங்கள் பகுதியான தெக்காட்டில் குறிப்பாகக் கரிசல் பிரதேச விவசாய வேலைகள் செய்வோர் பயன்படுத்தும் வார்த்தை. களத்தில் சாக்குப்பைகளில் தானியத்தை அள்ளி நிரப்பும்போது `சாக்கை நல்லா மன்னிப்பிடிடா’ என்று சொல்வார்கள். அதாவது சுருட்டிவைத்துக்கொள்வது. தானியத்தை சாக்கில் போடப் போடச் சுருளைக் கொஞ்சம் கொஞ்சமாக அவிழ்த்துவிடுவது.

அதேபோல, நிறைமூடையில் தானியம் குறையக் குறைய சாக்கை வட்டமாகச் சுருட்டி வைத்துக்கொள்வது. மொத்தத்தில் `காண்டம்’ பயன்படுத்துவது மாதிரி. ஒரு பெண் லேசாக ஆடை விலக உட்காந்திருந்தால், `நல்லா உக்காரும்மா... சேலையை மன்னிவெச்சு உக்காருமா’ என்று சர்வசாதாரணமாகச் சொல்வார்கள். அதாவது சுருட்டிக்கொள்வது. ஆக, ஆண் சிங்கமும் பெண் சிங்கமும் ஒன்றையொன்று சுருட்டி, பின்னிப்பிணைந்து உறங்குவதைத்தான் ஆண்டாள் `மன்னிக்கிடந்துறங்கும்’ என்கிறாள். முக்கியமான விஷயம், ஆண்டாள் தெக்கத்துக்காரி என்பதையும் நாம் நினைவில்கொள்ள வேண்டும்.
வசந்த சூர்யா மேடத்துக்கு ஒரே சந்தோஷம். அர்த்தம் கச்சிதமாகப் பொருந்திவிட்டதாம். `அர்த்தம் சொன்னவர் சோ.தர்மன்’ என்று மொழிபெயர்ப்பில் குறிப்பிடுவேன் என்று சொல்லியிருக்கிறார். இதுபோல் ஏராளமான வார்த்தைகளுக்கு நான் அர்த்தம் சொல்லிக்
கொண்டிருக்கிறேன்.
கிராமங்களில் குழி தோண்டும்போது, மண் கடுமையாக இறுகிக் கெட்டியாக இருக்கும். அதை எளிதில் தோண்டவோ அல்லது உடைக்கவோ முடியாது. `நல்ல வசமாப்போயி மன்னிக்கிருச்சு’ என்பார்கள். கிணறு வெட்டுபவர்கள் கற்பாறைகளைப் பிளப்பதற்காக ஆழமாகக் குழியடித்து, கருமருந்தை உபயோகித்து வெடிவைத்துத் தகர்ப்பார்கள். அதற்குப் பெயர் `மருந்து கிட்டித்தல்’. அப்போதும் இதே வார்த்தையைப் பயன்படுத்துவார்கள். அதாவது, நல்லா `மன்னிக்கிட்டிருச்சு’ என்று.
ஆக, இந்த `மன்னி’ என்கிற பழைமையான வார்த்தைக்கு, சுருட்டுதல், பிணைத்தல், இறுகக் கட்டிக்கொள்ளுதல், கிட்டித்தல், பிரிக்க முடியாதபடி கட்டிக்கொள்தல் என்று பல அர்த்தங்கள் உள்ளன. கிராமங்களில் இந்த வார்த்தை இன்று அருகிவருகிறது. கிணறுகள் இல்லை, சேலை அணிவது இந்தத் தலைமுறையில் குறைந்துவிட்டது. ஒரு வார்த்தைக்கு அர்த்தம் தெரியவில்லை என்றால், `அந்த வார்த்தை தொழில்படுகிற இடத்தில்போய் விசாரி’ என்கிறது தொல்காப்பியம். தொழில்கள் முற்றாக அழியும்போது அதோடு சம்பந்தப்பட்ட பல வார்த்தைகளும் அழிந்துபோகின்றன. மொழியை விடாது மன்னிக்கொள்ள வேண்டியது நம் கடமை.
தூமை - லீனா மணிமேகலை
மொழியை ஆண்களும் பயன்படுத்து கின்றனர்; பெண்களும் பயன்படுத்து கின்றனர்; பாலியல் சிறுபான்மையினரும் பால்புதுமையர்களும் பயன்படுத்துகின்றனர். ஆனால், இவர்கள் யாவரும் ஒரே தகுதிப்பாட்டு மொழியில் இனம் காணப்படுகின்றனரா என்றால், இல்லை என்ற பதில்தான் கிடைக்கும்.
உற்பத்திக் கருவியான மொழியை, அதிகாரம் கைப்பற்றி உடைமை வர்க்க, உயர் சாதிய, ஆண் மய்ய மொழியாக வளர்த்தெடுத்ததில், பெண் மய்ய சொற்களும், சொல்லாடல்களும் அப்புறப்படுத்தப்பட்டுள்ளன அல்லது மறைபொருளாக்கப்பட்டுள்ளன. கிளவி, மறைத்தனர் கிளத்தல், மங்கல மரபு, இடக்கரடக்கல் போன்ற கருத்தாக்கங்கள் மூலம் வரையறுக்கப்படும் அவையில் எவற்றையெல்லாம் சொல்லலாம், சொல்லக் கூடாது, தவிர்க்கப்பட வேண்டியதைச் சொல்வதாயின் எப்படிச் சொல்ல வேண்டும் போன்ற விதிமுறைகள் யாருக்கு சேவகம் செய்கின்றன என்று கூர்ந்து கவனித்தால், அதிகாரத்தின் நுண்ணரசியலைப் புரிந்துகொள்ள முடியும். `சுடுகாடு’ என்று சொல்லாதே, `நன்காடு’ என்று சொல், `சூத்து கழுவி வந்தேன்’ என்று சொல்லாதே, `கால்மேல் நீர்பெய்தேன்’ என்று சொல், பெண்ணுறுப்பை `கருமுகம்’ என்று சொல், எச்சிலை `உமிழ்நீர்’ என்று சொல், மனிதப் பீயை அவையில் சொன்னால் குற்றம் பயக்கும் என்றெல்லாம் சொல்கின்றன இலக்கண நூல்கள். இந்த ஒதுக்கல்களையும், மறைத்தல்களையும், புனிதப்படுத்தல்களையும் அலசிப் பார்த்தால், எப்படி சமூக ஏற்றத்தாழ்வுகள் மொழியில் கட்டப்பட்டு பிறகு, அந்த மொழியே சமூக ஏற்றத்தாழ்வுகளைக் காட்டும் நிலைக்கு வந்தடைகிறது என்பதை அறியலாம். தமிழில் ஏன் சமத்துவம்கூடிய வாக்கியங்களை எழுதிமுடிக்க முடிவதில்லை என்பதற்கான ஆதாரங்களை, மொழியின் அமைப்பை, அதன் கூறுகளைக் கலைத்துப்போடுவதன் மூலம் கண்டடையலாம்.

ஒரு பெண்ணாக எழுத வந்த எனக்கு, என் மொழி என் வெளிப்பாட்டுக்கான ஆற்றலை முழுமையாகக் கொண்டிருக்கவில்லை என்பதுதான் நான் சந்தித்த முதல் பெரும் சவால். என் மொழியில் என் உடல் பாகங்கள் இழிவானதாகவும், என் பாலியல் உணர்வுகள் விலக்கப்பட்டவையாகவும், என் பாலினத்தைக் குறிக்கும் `ள்’ விகுதி மதிப்பு குறைந்ததாகவும், போதாமை நிறைந்ததாகவும் இருந்தது, என்னை மொழி மீட்புப் போர்க்களத்துக்கு இட்டுச்சென்றன. மொழியால் `முடியாது’ என்பதைவிட மொழியால் `கூடாது’ என்ற நியதிகளை அந்த மொழியாலேயே உடைப்பது என்பது கவிதையால் மட்டுமே சாத்தியப்பட்டது. மொழியை விமர்சிக்க, நிலைகுலையவைக்க, புதிதாக நிர்மாணிக்க கவிதையைத் தவிர வேறோர் இலக்கிய வடிவம் இல்லை. `நீ தாழ்வானவள்’ என்று என்னை எந்தப் பக்கம் திருப்பினாலும் செவிட்டில் அறையும் மொழியின் கழுத்தைப் பிடித்து, அதன் நரம்பைத் திருகி, `உன் பொய்களை நிறுத்து’ என்று சொல்ல கவிதை கைகொடுத்தது. சமூகம் என்பது மொழியின் புனைவென்றால், அது என்னை ஒடுக்குமென்றால், அந்தப் புனைவை மாற்றி எழுதுவதுதான் என் படைப்பின் முதல் நோக்கம்.
எனது உடலைப் பிரதியாக்கி, என் கால்வழி இறங்கும் உப்புநீர்த் தாரையை வார்த்தைகளாக்கியதில் பிறந்தது என் `உலகின் அழகிய முதல் பெண்’ கவிதைத் தொகுப்பு.

`தீட்டென்றும்
பெண்ணின் தேகத்துக்குள்ளிருக்க
தேகமேல் முழுகிவிட்டால்
தீட்டோடிப் போமோ,
ஆசாரமாச்சுதென்று
ஐந்தாநாள் முழுகி
அகத்திலுள்ள பொருள் தொடுவாய்
அகத்தீட்டு போச்சோ?’ என்று என் மூத்த கலகக்காரி 17-ம் நூற்றாண்டுக் கவி ஆவுடையக்காள் கேள்விக்குட்படுத்திய மாதவிடாயைப் பேசுபொருளாக்கிக் கொண்டாட வேண்டும் என்று முடிவெடுத்ததில் உருவாக்கியவைதான் அந்தத் தொகுப்பில் உள்ள தூமைக் கவிதைகள். க்ளிட்டோரியஸ், ஜி-ஸ்பாட், ஆர்கசம் என, பெண்ணின் வேட்கையை எழுத தமிழில் நிகர்சொற்களை புதிதாக உருவாக்க நிகண்டுகளைப் புரட்டுவதும் அகராதிகளை நோண்டுவதுமாகத் திரிந்ததில் `தூமை’ என்ற சொல் தட்டுப்பட்டது. சித்தர் பாடல்களில் இந்த வார்த்தைப் பயன்பட்டிருப்பதும், அங்கும் ஓர் இழிச்சொல்லின் இடத்திலேயே வைக்கப்பட்டிருந்ததும் கவனத்துக்கு வந்தது. ஒரு நிகண்டு, தூமைக்கு `தூய’ `மை’ என்று அர்த்தம் தந்திருந்தது. நிந்தனைச் சொல்லாக வழக்கத்தில் இருக்கும் தூமையின் வேர் தெரிந்த பிறகு அதைக் கைப்பற்றும் வெறி வந்தது. தூமை ரத்த ஆற்றின் கரையோரத்தில் சம்மணமிட்டு அமர்ந்து, வரலாற்றையும் வேட்கையையும் எழுதிப்பார்த்தேன். அந்தக் கவிதைகளின் மூலம் `தூமா’ என்ற காதலனை உருவாக்கி, தூமத்திப்பூ சோலைகளை உருவாக்கி, தூமை ரத்தத்தில் ஓவியம் பழகி, தூமை வாசம் துலங்கும் பலகாரங்கள் செய்து தின்னக் கொடுத்து, மாதந்திர வசந்தமாக தூமையைக் கொண்டாட அழைத்தேன். தூமை கசியும் யோனியில், கோப்ரோ கேமிராவை நுழைத்துப் பார்த்து என் உடலின் மாயத்தை கவிதையின் மூலம் அறிந்துகொள்ள முயன்றேன். `பனுவல் அகப்பட்டதும் நினைவுப் பதிவகப் பெட்டி என மொழியை அடைந்ததும், வேட்டையின் சங்கேதங்கள் புலப்பட்டதும் தூமையைக் குடித்துப் பழகிய நாள்களில்தான்’ என்று எழுதினேன். தூமை மட்டுமல்ல, பெண் தன் வேட்கையை தானே நிர்வகிக்கும் பொறுப்பை ஏற்றுக்கொண்டுவிட்டால், மொழியும் சமூகமும் கலாசாரமும் அதிகாரத்தின் பீடங்களிலிருந்து இறங்கிவந்து வழிவிட வேண்டியதிருக்கும்.
மர்ஃபத் மரபைப் பின்பற்றும் சூஃபி ஃபக்கிர்கள், தங்கள் பெண் துணைகளின் மூன்றாம் நாள் தூமை ரத்தத்தை அருந்தி அவர்களின் காதலை ஏற்றுக்கொள்ளச் சொல்வது வழக்கமாம். இந்தச் சடங்கு, பெண்களோடு தங்களைச் சமமாக்கிக்கொள்ள உதவுகிறது என்பது சூஃபி ஃபக்கிர்களின் நம்பிக்கை. பெண்கள், தங்கள் காதலர்களுக்கு இந்தச் சடங்கைப் பரிந்துரைக்கலாம். தன்னையும், தன் உடலையும், தன் விழைவுகளையும் சரியான அர்த்தத்தில் தன்னுணரும் பெண் மட்டுமே ஆணுக்கும் சமூகத்துக்கும் மொழிக்கும் அவற்றைச் சரியாக உணர்த்த முடியும்.