மற்ற எபிசோடுகள்
Published:Updated:

இருளில் பேரொளித் தருணங்களை உயிர்ப்பித்தவர்... - வெ.நீலகண்டன்

இருளில் பேரொளித் தருணங்களை உயிர்ப்பித்தவர்... - வெ.நீலகண்டன்
பிரீமியம் ஸ்டோரி
News
இருளில் பேரொளித் தருணங்களை உயிர்ப்பித்தவர்... - வெ.நீலகண்டன்

இருளில் பேரொளித் தருணங்களை உயிர்ப்பித்தவர்... - வெ.நீலகண்டன்

வித்தியாசமான மனிதர்களைப் பார்த்துவிட்டால்  எப்படியும் அவரைத் தன் கேமராவில் பதிவுசெய்துவிட வேண்டும் என்பதில் விடாப்பிடியாக இருப்பார் இசக்கி அண்ணாச்சி. ஒரு அலைகுடி மனிதர், வண்ணத்துணிகளால் போர்த்தப்பட்ட பூம்பூம் மாட்டைப் பிடித்துக்கொண்டு நடந்துசென்ற தோரணை அவருக்குப் பிடித்துவிட்டது. அவசரமாக, ஒரு திருமண விழாவைப் புகைப்படம் எடுக்கச் சென்று கொண்டிருந்தவர், அந்த வேலையை மறந்துவிட்டு, அந்த மனிதரின் பின்னாலேயே சுற்றித்திரிந்து பிலிம் ரோலை எல்லாம் படங்களாக்கிவிட்டார்.  இவர் பின்தொடர்வதைப் பார்த்து, அந்த மனிதர் பிழைப்பைவிட்டுவிட்டு மாட்டைப் பிடித்துக் கொண்டு ஓடியது தனிக்கதை.

இருளில் பேரொளித் தருணங்களை உயிர்ப்பித்தவர்... - வெ.நீலகண்டன்

இப்படித்தான் கடந்தது இசக்கி அண்ணாச்சியின் வாழ்க்கை. கசங்கலில்லாத வெள்ளை வேட்டி சட்டை, கையில் ஒரு குடை, ஒரு பழைய சைக்கிளைத் தள்ளிக்கொண்டே நடக்கும் போட்டோக்காரராகத்தான் நெல்லை மக்கள் அவரை அறிந்திருந்தார்கள். சிறந்த, ஓவியர்களில் ஒருவராகவும், அழகியல் ததும்ப புகைப்படம் எடுக்கும் கலைஞராகவும் அவரை அறிந்தர்கள் சொற்பம்பேர்தான் ச.தமிழ்ச்செல்வனின் மொழியில் சொல்ல வேண்டுமென்றால், ‘குறைந்த ஒளியில் வாழ்ந்து மறைந்த மகா கலைஞன்’.

83 ஆண்டு காலம் வாழ்ந்தார் அண்ணாச்சி. 2010 ஜூன் 1-ம் தேதி காலமானார். சுமார் 65 ஆண்டு காலம் நெல்லையின் மண் தேயத் தேய நடந்திருக்கிறார். அங்குலம் அங்குலமாக அந்த நகரத்தின் வளர்ச்சியையும் மாற்றத்தையும் வாழ்க்கையையும்  புகைப்படங்களாக, ஓவியங்களாகப் பதிவு செய்திருக்கிறார். அவர் எடுத்த புகைப்படங்களும் வரைந்த ஓவியங்களும் நெல்லையின் ஒரு நூற்றாண்டு வரலாற்று ஆவணங்கள்.

ஒரே ஒருமுறை, சிங்கம்பட்டியிலிருந்து புன்னைக்காயல் வரை, தாமிரபரணி நதிக்கரையில் பயணித்தது தவிர, நெல்லையைத் தாண்டி வேறெங்கும் பயணமே செய்திராத மனிதர் அவர். ஆனால், அவரது தேடலும் கனவுகளும் சிந்தனைகளும் உலகம் தாண்டி விரிந்திருந்தது. வான்கா, கிளாடு மோனே, பிக்காஸோ போன்ற உலகளாவிய ஓவியர்களைக் கற்று, அவர்களின் கோட்பாடுகளைத் தமிழுக்கேற்ப மாற்றிக்கொண்டு வரைந்த சித்திரக்காரர்.

இருளில் பேரொளித் தருணங்களை உயிர்ப்பித்தவர்... - வெ.நீலகண்டன்

நெல்லை பழைய பேருந்து நிலையத்திலிருந்து நடக்கும் தூரத்தில் இருக்கிறது உடையார்பட்டி. அண்ணாச்சி,  ஸ்டுடியோவாக, டார்க் ரூமாக, வாசிப்பிடமாக, வசிப்பிடமாக, கற்றல் கூடமாகப் பயன்படுத்திய அந்த சின்ன அறை, இப்போது குடித்தனமாகிவிட்டது.ஒரு ஆள் மட்டுமே நுழைய வாய்ப்புள்ள கதவு, எட்டுக்குப் பத்து அறை. இதுதான் அந்தக் கலைஞனின் உலகம். இந்த அறையை  மனைவி மக்களுக்கு மேலாக நேசித்தார் அண்ணாச்சி. சின்ன குண்டூசியைக்கூட நேர்த்தியாக அடுக்கிவைத்திருப்பார். உள்ளே அட்டைகளில் தடுக்கப்பட்ட, டார்க் ரூம்.  எல்லாவற்றுக்கும் சேர்த்து ஒரு 40 வாட்ஸ் பல்பு மட்டும் எரியும். ஒரு யாஷிகா மேட் 124 ஜி கேமரா... சிறிதும் பெரிதுமாக கொஞ்சம் தூரிகைகள்...  விக்டர் பெரார்டின் அனாடமி மேனுவல், கலர் காம்போசிசன் என 400-க்கும் மேற்பட்ட புத்தகங்கள்... குவியல் குவியலாக நெகட்டிவ் பிலிம்கள்... இவைதான் அண்ணாச்சியின் சொத்துகள். தன் வாழ்நாளின் பெரும்பகுதியை இந்த அறைக்குள்தான் கழித்தார் இசக்கி அண்ணாச்சி.

யாரும் இந்த அறைக்குள் நுழைந்துவிட முடியாது. அந்த அலைகுடிப் பெண் மட்டும் உரிமையாக நுழைவாள். ‘அய்யா... என்னை ஒரு போட்டோ எடுய்யா...’ என்று சுவரில் சாய்ந்தபடி போஸ் கொடுப்பாள். மகளைப்போல உரிமையாக அவள் தலையை நிமிர்த்தி, கழுத்தை திருப்பி நிற்கவைத்து அண்ணாச்சி படம் எடுப்பார்.  கலாப்பிரியாவும், தோப்பில் முகமது மீரானும் அண்ணாச்சியைச் சந்திக்கும்போதெல்லாம், “அந்தக் குறத்தி படத்தை எனக்குத் தரமாட்டீரா?” என்று கேட்டுக்கொண்டே இருந்தார்கள். இன்று பல படைப்பாளிகளின் வீடுகளில் அந்தத் தருணம் புகைப்படமாகத் தொங்கிக் கொண்டிருக்கிறது.

அலைகுடி மனிதர்கள் பற்றி அண்ணாச்சி உயிர்ப்புள்ள பல புகைப்படத் தொகுப்புகளையே உருவாக்கி வைத்திருந்தார். தருணங்கள்தான் அந்த புகைப்படங்களின் உயிர். ஒரு அலைகுடி இளைஞன் கவணைக்கொண்டு மேலே இருக்கும் ஏதோவோர் இரையைக் குறிவைக்கிறான். அவன் கழுத்தில் கிடக்கிற சிறுவனின் பார்வையும் அந்த இரையின் மீதே இருக்கிறது. உடல்முழுதும் கலை நிரம்பித் ததும்பும் ஒரு கலைஞனுக்கு மட்டுமே வாய்க்கும் படம் இது. நெற்றியில் ஒற்றை ரூபாய் நாணயம் அளவுக்கு பொட்டிட்டு மதர்ப்பாக நின்று வாய்நிறைய சிரிக்கும் அந்த அலைகுடிப் பெண்ணைப் பார்த்தால் உள்ளம் கிளர்ச்சியுறும். அண்ணாச்சி எந்த உணர்ச்சியை மனதில் தேக்கிப் படம் எடுக்கிறாரோ அந்த உணர்ச்சி  அப்படியே படத்தில் தேங்கியிருக்கும்.

இருளில் பேரொளித் தருணங்களை உயிர்ப்பித்தவர்... - வெ.நீலகண்டன்

அண்ணாச்சியின் ஸ்டுடியோவை ஒட்டி சந்துக்குள் இருக்கிறது அவரது வீடு. ஓடுகள் பெயர்ந்து, சிதிலமடைந்த ஒரு பழைய சத்திரத்தின் நிலையிலிருக்கும் அந்த வீட்டில் இன்னும் வண்ணக்குழைவின் வாசனை ஒட்டியிருக்கிறது. முகப்பில் ஒரு புகைப்படத்தில் இருக்கிறார் அண்ணாச்சி. வெறுமை சூழ்ந்திருக்கிறது வீட்டில்.

அண்ணாச்சி சேகரித்திருந்த பல அபூர்வ சித்திர நூல்களும், கோட்டோவியக் காகிதங்களும் பழைய புத்தகக்கடைக்குப் போய்விட்டன. அவர் பயன்படுத்திய பழைய கேமராவையும், சில சித்திரக் காகிதத் துண்டுகளையும் சேகரித்து வைத்திருக்கிறார், அண்ணாச்சியின் கடைசி மகன் ராஜேஸ்வரன். மற்றபடி அந்த மகா கலைஞனை ஆவணப்படுத்தப் போதுமான சித்திரங்களோ, புகைப்படங்களோ இல்லை என்பது பெருந்துயரம்.

இசக்கி அண்ணாச்சியின் வாழ்க்கை, அவரது ஆக்கங்களைப்போலவே கலாபூர்வமானது. பணத்தையும் அங்கீகாரத்தையும் அவர் ஒரு பொருட்டாகக் கருதியதேயில்லை. நினைத்திருந்தால் மாதமொரு கண்காட்சி நடத்திக் காசு பார்த்திருக்கலாம். ஆனால், எப்போதும் தன் படைப்புகளை முன்னிறுத்தியதே இல்லை அவர். எத்தனையோ படைப்பாளிகள், “எனக்கோர் அட்டைப்படம் எடுத்துக் கொடுங்கள்’ என்று அவர் வீட்டுக்கு நடையாக நடந்திருக்கிறார்கள். மனிதரிடம் அவ்வளவு எளிதாக வாங்க முடியாது. “இன்னும் முடியலை சார்வாள்” என்ற ஒற்றைப் பதில் மாறுவதேயில்லை.

இருளில் பேரொளித் தருணங்களை உயிர்ப்பித்தவர்... - வெ.நீலகண்டன்

ச.தமிழ்ச்செல்வனுக்கும், கிருஷிக்கும் தான்  அது வாய்த்தது.

அண்ணாச்சியின் அப்பா, ஓட்டுநர். இவர் ஒற்றைப் பிள்ளை. ஓவிய ஆர்வம் இசக்கி அண்ணாச்சியிடம் இயற்கையாகவே இருந்தது. 10-ம் வகுப்பு வரை படித்தார். படிக்கும் காலத்திலேயே அறிவுபூர்வமாக ஓவியத்தை அணுகும் நுட்பம் கைவந்துவிட்டது. பொதுவுடமை இயக்க முன்னோடிகளில் ஒருவரான சிந்துப்பூந்துறை சண்முகம் பிள்ளை, ‘நெல்லை பப்ளிஷிங் ஹவுஸ்’ என்ற பதிப்பகத்தை நடத்தினார். அவர் வெளியிடும் ரஷ்ய இலக்கிய நூல்களுக்கு அட்டைப்படங்கள் வரைந்து கொடுக்கத் தொடங்கினார் அண்ணாச்சி.  அப்படியே வாசிப்பும் பற்றிக்கொண்டு விட்டது. இடதுசாரி இயக்கத்தின் மீது ஈடுபாடு வந்தது. ‘என் படைப்புத்திறனை மேம்படுத்தியது ரஷ்ய இலக்கியங்கள் தான்’ என்று பதிவு செய்திருக்கிறார் அண்ணாச்சி.

இருளில் பேரொளித் தருணங்களை உயிர்ப்பித்தவர்... - வெ.நீலகண்டன்


சென்னை ஓவியக் கல்லூரியில் படிக்க வேண்டும் என்பது அண்ணாச்சியின் கனவு. லாரி ஒன்றில் ஏறி சென்னை புறப்பட ஆயத்தமானவரை சண்முகம் பிள்ளை தடுத்து, ‘நீங்கோ லாரியில எல்லாம் போகக் கூடாது. பத்திரமா பஸ்ல போங்கோ’ என்று கைநிறைய பணம் கொடுத்து அனுப்பி வைத்தார். ஆனால், அண்ணாச்சிக்கு சென்னை உகந்ததாக இல்லை. சில பிரச்னைகள் காரணமாக மீண்டும் நெல்லைக்கே வந்துவிட்டார். ஆனாலும், ஓவியப் படிப்பு தீராக் கனவாக இருந்தது. நண்பர்களின் வழிகாட்டுதல்படி திருவனந்தபுரம் ஸ்கூல் ஆப் ஆர்ட்ஸில் சேர்ந்து ஏழு சான்றிதழ்கள் வாங்கினார்.

அண்ணாச்சி வாழ்ந்த வாழ்க்கையை யாரும் வாழவே முடியாது. 40 வயது வரை திருமணத்தின் மீது அக்கறையே இல்லாமல் திரிந்தார் அண்ணாச்சி. நாலரை மணிக்கு எழுந்து பறவைகளைப் பார்க்கப் போவார். பறவைகளைப் பற்றி பெரிய அளவில் ஆராய்ச்சியே செய்திருக்கிறார். ‘ஒவியனுக்கு, பறவைகள், மனிதர்கள், விலங்குகளின் வாழ்க்கை முழுமையாகத் தெரிய வேண்டும்’ என்பார். இரண்டு நாய்கள் சண்டை போட்டுக்கொண்டிருந்தால்கூட சைக்கிளை நிறுத்திவிட்டு அமர்ந்து வேடிக்கை பார்ப்பார். காகம் அவருக்கு மிகவும் பிடித்தமான பறவை. பலமணி நேரம் ஒரே இடத்தில் நின்று காகங்களைப் பார்த்துக் கொண்டிருப்பார். அவை கூடு கட்டுவது குறித்து வியந்து பேசுவார். ‘காகத்தின் சிறகில் உள்ள மினுமினுப்பைப் பிரதியெடுக்க வேண்டும். அப்படி எடுப்பவன்தான் தேர்ந்த ஓவியன்’ என்பார்.

இருளில் பேரொளித் தருணங்களை உயிர்ப்பித்தவர்... - வெ.நீலகண்டன்

மனைவி உலகாம்பாளுக்கும் அண்ணாச்சிக்கும் 20 வயதுக்கும் மேல் வித்தியாசம். காதல் மிகுந்த வாழ்க்கை.

9 பிள்ளைகள். ஆனால், பிள்ளைகள் என்ன படிக்கிறார்கள் என்பதைக்கூட தெரிந்துவைத்திருக்க மாட்டார்.  வீட்டுப் பொறுப்பு முழுவதையும் உலகாம்பாள்தான் சுமந்தார். அண்ணாச்சிக்கு ஓவியமும், சித்திரமும்தான் வாழ்க்கை.

தன்னை ஓர் ஓவியனாக அடையாளப் படுத்துவதையே பெருமிதமாகக் கருதினார் அண்ணாச்சி. பிழைப்புக்காகத்தான் போட்டோகிராபர் வேலை. அதையும் விருப்பத்தோடே செய்தார். ஓவியங்களுக்கு புகைப்படங்களை ரெபரன்ஸாக பயன்படுத்தினார். போட்டோஷாப் அறிமுகமில்லாத அந்தக் காலத்திலேயே பிரஷால் சின்னச் சின்ன மாற்றங்கள் செய்து புகைப்படங்களை உயிர்ப்பிப்பார். மரங்களில் ஏறுவார். கோயில் கோபுரத்தின் உச்சிக்குப் போவார். நெடுநேரம் அமர்ந்திருந்து  நிலவெளியை வெளிச்சங்களை நிழல்களை அவதானிப்பார். நெல்லை மீது அவருக்கு பெரும் காதல் இருந்தது.

ஓவியங்களுக்கு மட்டுமில்லாமல் புகைப்படங்களுக்கும் கோட்பாட்டை உருவாக்கி அதை மீறாமல் செயல்பட்டவர் அண்ணாச்சி. தன்னை நாடி வந்த இளம் ஓவியர்களுக்கும் புகைப்படக்காரர்களுக்கும் தன் அறிவையும் அனுபவத்தையும் கடத்தினார். கண்டிப்பான தந்தையைப்போல அவர்களுக்கு நுட்பங்களைக் கற்றுத் தந்தார்.

இருளில் பேரொளித் தருணங்களை உயிர்ப்பித்தவர்... - வெ.நீலகண்டன்

அண்ணாச்சி தன் டார்க் ரூமை morque  என்பார். morque என்றால், சவக்கூடம் அல்லது புத்தகக் கூடம்.  “எல்லாவற்றுக்குமான ரெபரன்ஸ் புத்தகங்கள். அவை அங்கே இருக்க வேண்டும். இல்லாவிட்டால், அது சவக்கூடம்தான்” என்பார். எது பற்றிக் கேட்டாலும் ஒரு மணி நேரம் பேசுவார் அண்ணாச்சி.  fibonacci series, Golden ratio, இலைகளின் நரம்பமைவு, சங்கின் உட்புற வடிவமைப்பு, நட்சத்திரங்களின் சுழற்சி, பிரபஞ்ச வளையம், சூரியகாந்திப் பூவின் விதையமைப்பு என எல்லாவற்றையும் ஓவியத்தோடு இணைத்துப் பேசுவார். படித்தது பத்தாம் வகுப்புதான் என்றாலும், மிகவும் சிக்கலான மொழியமைப்புள்ள ஆங்கில நூல்களைக்கூட வாசிப்பார். பேச்சினூடே புதிது புதிதாக ஆங்கில வார்த்தைகளை உபயோகிப்பார்.

மிக நுட்பமான அரசியல் அவருடைய படைப்புகளில் இழையோடுகிறது. பணக்கார மனிதர்களை அவர் போட்டோ எடுத்ததே இல்லை. விளிம்புநிலை மனிதர்கள், மனப்பிறழ்வுக்கு ஆளானவர்கள் என எல்லோரும் ஒதுங்கிப் போக நினைக்கிற மனிதர்களை மட்டுமே  தேடிப்போய் படம் எடுத்திருக்கிறார். கேட்டால், “இந்த மனிதர்களிடம் ஓர் அபூர்வ அழகு இருக்கிறது.” என்பார்.

“அண்ணாச்சியின் எவ்லாப் புகைப்படங்களிலும் ஏதோ ஓர் இயக்கம் (movement) இருக்கும். ஓவியங்களில், காட்சிகள் ஒரு பரப்புக்குள் சுருங்காது. மூன்று முதல் நான்கு லேயர்கள் சித்திரத்துக்குள் இருக்கும். நாற்று நடும் பெண்கள் குறித்த சித்திரம் என்றால், முதல் லேயரில் இரண்டு பெண்கள் குனிந்து நாற்று நடுவார்கள். அடுத்த லேயரில் நிமிர்ந்து நிற்பார்கள். மூன்றாவது லேயரில்  இடுப்பைப் பிடித்துக்கொண்டு சில பெண்கள் நிற்பார்கள். நாற்று நடுதலின் மொத்தக் காட்சியும் அந்த சித்திரத்துக்குள் விரிந்து கிடக்கும். அலைகுடி மக்களின் வாழ்க்கையை வெகு நேர்த்தியாக ஆவணப்படுத்தி இருக்கிறார். ஆனால், அவருடைய ஏராளமான ஓவியங்களும் புகைப்படங்களும் அழிந்துவிட்டன.” என்று வருத்தமாகப் பேசுகிறார் எழுத்தாளர் கிருஷி.

இருளில் பேரொளித் தருணங்களை உயிர்ப்பித்தவர்... - வெ.நீலகண்டன்

‘உங்கள் புகைப்படங்களைக் கண்காட்சியாக வைக்கவேண்டும்’ என்று நிறைய படைப்பாளிகள் கோரிக்கை வைத்தபோதெல்லாம் ஒரு புன்னகையால் கடந்துவிடுவார் அண்ணாச்சி. 81 வயதில்   அப்படியோர் எண்ணம் அவருக்கு வந்தது.. கிருஷி, ராஜகோபால், பொன்.ஆனந்த் உள்ளிட்ட பலர் தோள் கொடுக்க, தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கம் மூலம் திருநெல்வேயில் அந்தக் கனவு நிறைவேறியது. பல முக்கிய ஆளுமைகள் அதில் பங்கேற்று இசக்கி அண்ணாச்சியின் பங்களிப்பை சிலாகித்துப் பேசினார்கள். சென்னையிலும் அந்தப் படங்கள் காட்சிப்படுத்தப்பட்டன. படங்களைப் பார்த்த பாலுமகேந்திரா மணிக்கணக்காக அண்ணாச்சியிடம் பேசி சிலாகித்தார்.

அண்ணாச்சி 83 வயதில் காலமானார்.  வயிற்றில் பிரச்னை வந்துவிட்டது. ஒரு மாதம் படுத்த படுக்கையாகிவிட்டார். அவரின் இறுதிநாள் வரை, அவருக்குப் பிடித்தப் படைப்பாளிகளைத் தினமும் ஒருவராக  வீட்டுக்கு அழைத்துச் சென்றார் கிருஷி. அவர்களிடம் நிறைய விஷயங்களைப் பேசி மகிழ்ந்தார் அண்ணாச்சி. ஒருநாள் அதிகாலை எல்லோரும் விழிக்கும் நேரத்தில் அவர் கண்மூடிக் கொண்டார்.

அவரது பிள்ளைகள் பாலகுருமூர்த்தி, அருண் குட்டி, ராஜேஷ்வரன் மூவரும் போட்டோகிராபர்கள். ஆனாலும், இசக்கி அண்ணாச்சியின் படைப்புகள் முறைப்படி சேகரிக்கப்படவில்லை. அவர் ஆசை ஆசையாக வாங்கி, இறுதிக்காலம் வரைப் பயன்பத்திய, ‘யாஷிகா மேட் 124 ஜி’ கேமரா செயலற்றுப்போய் கிடக்கிறது. அவரது பங்களிப்பு பற்றி எந்த ஆவணமும் இல்லை.

‘கலைஞன் வியாபாரியாக அறியப்படக் கூடாது. பணத்தைத் தேடி ஓட ஆரம்பித்தால் இலக்கு மாறிப் போய்விடும்’ என்பார்.  அழியா வண்ணங்களால் காலத்தின் மேனியில் வரையப்பட்ட சித்திரம், இசக்கி அண்ணாச்சி. அவரைக் கொண்டாடுவதன் மூலம் தமிழர்கள் பெருமிதம்கொள்ளலாம்.  அவருக்கென நூல்கள், ஆவணப்படங்கள் உருவாக்கப்பட வேண்டும். அவரது சீடர்கள் அதைச் செய்ய வேண்டும்!