
டாபியும் அம்பேத்கரும் - நஞ்சுண்டன்
அவர் அப்படிச் சத்தமில்லாமல் கனமான அடியூன்றி
நிறைந்த தீவிரத்துடன் கன்னத்துக்குக் கைகொடுத்து உட்கார்ந்து
இந்த உலகத்தின் இந்த மக்களின் இதயங்களில்
தண்ணென்ற தீபம் ஏற்றி
சதா ஆகாயத்துக்குக் கை ஏந்தும் தேகங்களை
இந்த நிலத்தின் விரிசல்களில் அடுக்கிக்
களிம்பு தடவும் அடுத்தடுத்த
விஷயங்களில் பதித்த கண்ணை எடுக்காமல்
அநாயசமாக வரும் என்னைக் கண்டு
சிந்தனை மாற்றிக்கொண்டு உடனே புன்னகைப்பார்
கொஞ்சிக் கொஞ்சி உடம்பைத் தடவும்போது
ரகசியமாக மறைந்து வரும் அகிம்சை முகமூடியின் மென்மைப் பூனையை
‘ச்சீ போ’ என்று விரட்டியடிப்பார்
என் எஜமானர்.

அவர் எங்கேயும் எழுதவில்லை
என் எஜமானர் என்று
அங்கேயென்றால் அங்கே இங்கேயென்றால் இங்கே
எங்கெங்கும் அவர் பின்னால் திரிந்து
ஒவ்வோர் அடியையும் வெறுமனே பின்தொடர்ந்து
எல்லாப் புலன்களும் சகல சுகங்களையும் பெறும் புண்ணியம்
இங்கே என்னைவிட்டால் வேறெந்த ஜீவனுக்கு இருக்கிறது?
ஊர் சேரி தேசம் சுற்றி
சுயராஜ்ஜியம் முரண்பாடு சுதந்திரங்களில்
வெற்றுப் பெருமைகளில் எவ்வளவு ஆயாசம்கொண்டாலும்
பீமமார்க்கத்தின் என் சாகேப்
தனிப்பட்ட முறையில் காட்டிய
அன்பின் உறவில்

சுகம் ஆனந்தத்தில்
பரிவின் ஈரத்தில்
இந்த ஜென்மத்துக்குப் போதும் எனப் பரிசுத்தமாக்கியது
எந்தக் காலத்துத் தோழமை?
சதா யுத்தங்களையே தியானித்து
அபகரிப்பு ஆதிக்கங்களிலேயே திளைத்து
மனிதனின் முன்னேற்றம் மட்டுமே பண்பாடு எனத் தோன்றும்
உங்கள் வரலாற்றின் மங்கிய பக்கங்களில்
பாபா சாகேப் என்னும் தூய மனிதனுக்கும்
டாபி என்னும் நாய்க்குமான ஒப்பற்ற பந்தத்தைப் பிடித்துக்காட்ட
எந்த வார்த்தையும் முதிரவில்லையோ . . .
கடைசிக் கடைசியாக அவர்
என் காதில் சொன்ன பிரணவ மந்திரத்தைச்
சொல்கிறேன், நீங்களும் சொல்லுங்கள் -
‘புத்தம் சரணம் கச்சாமி
தர்மம் சரணம் கச்சாமி
சங்கம் சரணம் கச்சாமி.’
கன்னட மூலம்: ஆனந்த் குஞ்சனூர்
தமிழில்: நஞ்சுண்டன்

குறிப்பு:
அண்ணல் அம்பேத்கர் செல்லமாக வளர்த்த நாயின் பெயர் Tobby. இந்தக் கவிதை ‘கன்னட பிரபா’ நாளிதழில் 14 ஏப்ரல் 2018 அன்று வெளியானது.
ஆனந்த் குஞ்சனூர்:
13, ஜூலை 1981 அன்று கர்நாடகத்தின் பாகல்கோட் மாவட்டத்தில் பிறந்த ஆனந்த், கைத்தறிகளின் ஓசையில் தன் படைப்பாற்றலை வளர்த்துக்கொண்டவர். எம்ஃபார்ம் படித்து, தற்போது பெங்களூரில் மருந்து ஆய்வு நிறுவனம் ஒன்றில் பணிபுரிகிறார். இதுவரை இரண்டு கவிதைத் தொகுதிகளையும் ஒரு சிறுகதைத் தொகுதியையும் வெளியிட்டுள்ள ஆனந்த், பல இலக்கியப் பரிசுகளைப் பெற்றுள்ளார்.