
ஒரு மொழிபெயர்ப்புக் கவிதையால் என்ன செய்துவிட முடியும்? - ராணிதிலக்
கடும்கோடை. ஆற்றின் ஓரத்தில் இருந்த மரத்தடியில், வேலையற்று இருந்த காலத்தில், வேப்பமரத்தின் நிழலில் நான் வாசித்த ஒரு மொழிபெயர்ப்புக் கவிதையை இப்போதும் நினைவுகூர முடிகிறது. நான் வாசித்த முதல் கவிதை எது? நாவல் எது? சிறுகதை எது? என்கிற குழப்பம் இப்போதும். ஆனால், நான் வாசித்த ஒரு மொழிபெயர்ப்புக் கவிதை இப்போதும் நினைவில் தங்கிவிட்டது. எப்படித் தங்கியது என்பது இன்னும் குழப்பமாகவே இருக்கிறது.

இயேசு குறித்து லாங்ஸ்ன் ஹ்யூக்ஸ், ‘கறுப்பு இயேசுநாதர்’ என்ற கவிதையை எழுதியுள்ளார். அக்கவிதை, ‘அறைக்குள் வந்த ஆப்பிரிக்க வானம்’ தொகுப்பில் உள்ளது. அத்தொகுப்பின் அட்டையும் கறுப்பு நிறம்தான்.
“இயேசுவானவர்
ஒரு கறுப்பனாகத் திரும்பி வருவாரானால்
அது நல்லதல்ல.”
எனத் தொடங்கும் அக்கவிதையை வாசித்த பின், அருகிலிருக்கும் ஜோன் போஸ்கோ பள்ளியில் உள்ள தேவலாயத்துக்குச் சென்று இயேசுவைத் தரிசித்தேன். வெள்ளை நிறத்தில் இருந்த ஏசு, என் கண்ணிற்கு மட்டும் ஏன் அப்போது கொஞ்சம் கொஞ்சமாகக் கறுப்பாகிக்கொண்டிருந்தார் என்ற மயக்கம் இன்னும் தெளியவில்லை. ஹ்யூக்ஸின் வார்த்தைகள் எப்படி கறுப்பு மாயத்தை உருவாக்குகின்றன என்பது அபூர்வமான ஒன்று. கொத்தடிமைகளின் தேசமாக இன்னும் மாறாமல் இருக்கும் ஆப்பிரிக்காவில் வாழும் கறுப்பர்களின் கருப்புக் கோபத்தை நாம் எப்படி எதிர்கொள்வோம்?
ஒரு மொழிபெயர்ப்பால் என்ன செய்துவிடமுடியும்? இது ஒரு கேள்வி. ஒரு மொழியில் புதிய இலக்கியத் தோற்றத்தையே உருவாக்கிவிட முடியும். உதாரணம், தமிழ் இலக்கியம். தமிழில் ஐரோப்பியர் வருகை, ஐரோப்பிய இலக்கியத்தின் வருகை மட்டும் நிகழாமல் போயிருந்தால், இங்கே புதுக்கவிதை, சிறுகதை, நாவல், நவீன நாடகம் எனப் பலதரப்பட்ட வடிவங்கள் இல்லாமல் போயிருக்கும். ந.பிச்சமூர்த்தியும் தி.ஜானகிராமனும் இல்லாமல் போயிருப்பார்கள். இலக்கியத்தில் ஒரு நூற்றாண்டு வெற்றிடமாகவே போயிருந்திருக்கும். ஒரு தேசம், வேறு ஒரு நாட்டின் மொழியால் ஆளப்படுவதுபோல், ஒரு மொழியின் இலக்கியம், இன்னொரு மொழியால் தகவமைக்கப்படுவதும் யதார்த்தம்தானே. ஒரு நாட்டின் கலாசாரத்தை, பண்பாட்டைப் புரிந்துகொள்ள, பகிர்ந்துகொள்ள மொழிபெயர்ப்பு இலக்கியத்தைத் தவிர, வேறு எது சரியாக இருக்கும் என்று நாம் நம்புவது?
தமிழ்ச்சூழலில் ஆரம்பகாலத்தில் வால்ட்விட்மனும் வேர்ட்ஸ்வொர்த்தும் கவிதையில் பெரும் அளவில் தாக்கத்தை உண்டாக்கியிருக்கிறார்கள். பாரதியின் வசனகவிதை உருவாக யார் காரணம்; ந.பிச்சமூர்த்தி யாரைப் பின்பற்றி கவிதை எழுதினார் என்பது நமக்குத் தெரியாதா என்ன? சிறுகதையில் மாப்பசான் பாதிப்பில்லாமல் புதுமைப்பித்தனால் எழுதியிருக்க முடியுமா? பிரதாப முதலியார் சரித்திரத்தின் பின்னணியில் ஏன் ஒரு மொழிபெயர்ப்பு நூல் இருக்கிறது? இப்படி அடுக்கடுக்கான கேள்விகளால் மட்டுமே தமிழ் இலக்கியம் வளர்ந்துகொண்டிருக்கிறது.
70-களில் நிகழ்ந்த நெருக்கடிக் காலகட்டத்தில் எப்படி ‘வானம்பாடிகள்’ தோன்றினர் என்பது வெளிச்சம். முதலாளித்துவத்துக்கு எதிரான, வாழ்வின் ரசனை மிக்க எழுத்துகள் ரஷ்ய இலக்கியத்திலிருந்தே நமக்குக் கிடைத்தன. 80-களின் தொடக்கத்தில் வந்த ‘ழ’, ‘ஸ்வரம்’, ‘மீட்சி’ ஆகிய சிறுபத்திரிகைகளில் வந்த மொழிபெயர்ப்புக் கவிதைகள்தான் ‘வானம்பாடி’ கவிதைகளிலிருந்து நம் எழுத்தை மீட்கவைத்தன. ‘உலகத்தன்மை’ என்கிற உணர்வு நம் கவிதைகளில் வளர ஐரோப்பியக் கவிதைகளின் தாக்கம் ஒரு முக்கியமான காரணம் என்பதை யாரும் மறுக்க இயலாது.
80-களின் இறுதியில் வந்த ‘உலகக்கவிதை’ என்கிற தொகுப்பு, இன்றளவும் நவீன தமிழ்க் கவிதையை வடிவமைத்ததில் கனிசமான பங்கு வகிக்கிறது. எதிர்க்கவிதைகள் என்ற இயக்கம் ‘ழ’ காலகட்டத்தில் வளர, ப்ரெக்டின் கவிதைகள் உதவி நின்றன. இதற்கு இணையான இன்னொரு கோடுதான் தலித்தியம். தலித்தியம் பற்றிய புரிதலுக்குத் தமிழில் வெளிவந்த மராத்தி மற்றும் கன்னட எழுத்துக்கள் பெரிதும் உதவின. ஆதிக்கச் சாதிக்கு எதிரான எழுத்துகள் அவை. தலித் அழகியல் என்ற ஒன்றை உருவாக்கியவை அவை.
90-களின் இறுதியில் வெளியான ழாக் ப்ரெவெரின் ‘சொற்கள்’ கவிதைத் தொகுதி, அதிகளவு தமிழ்க் கவிதையை மாற்றம் செய்தது. 2000-த்தின் தொடக்கத்தில் இந்தப் புத்தகம் வரும்போது, தமிழ்க் கவிஞர்களிடையே இனம்காணாத சந்தோஷம் தளும்பத் தொடங்கிவிட்டது. மொழியின் இருண்மையிலிருந்தும் வடிவத்தின் சிக்கலிலிருந்தும் தமிழ்க் கவிஞர்களைப் ப்ரெவெர் விடுவித்துவிட்டார். அவர் கவிதைகளின் தாக்கம் எல்லா வகைக் கவிஞர்களிடத்தும் புகுந்தன. அவரிடம் இருந்த அன்பை, சங்கர ராமசுப்ரமணியன் தன் தொகுப்பின் முன்னுரையிலேயே பகிர்ந்துகொண்டிருக்கிறார். அவரது கவிதையின் வடிவத்தை, கதை சொல்லல் முறையை ஸ்ரீநேசன் தனக்கானதாக ஸ்வீகாரம் செய்துகொண்டிருக்கிறார்.

தன் உணர்ச்சியை வெளிப்படுத்த தமிழ்க் கவிஞர்கள், அதிகம் உருவகத்தையும் உவமையயும் பின்புலமாகப் பயன்படுத்திய காலம் அது. அதிலிருந்து வெளிவர இயலாமல் மேலும் மேலும் அதற்குள் பின்னிக்கொண்டவர்கள் அவர்கள். பிரெவெர் அவர்களின் விரல்களை அப்பின்னல்களிலிருந்து விடுவித்து எழுதவைத்தார். என் முதல் தொகுப்பான, ‘நாகதிசை’யிலிருந்து ‘காகத்தின் சொற்கள்’ வேறு வடிவத்திற்கும் மொழிக்கும் மாற, ழாக் ப்ரெவெர் முக்கியமான காரணமாக இருந்தார். என் கவிதையில் உணரக் கிடைக்கும் அமைதிக்கும் அமைதியின்மைக்கும் அவர்தான் காரணம். அக்காலகட்டத்தில் எப்போதெல்லாம் கவிஞர்கள் சந்தித்துக்கொள்கிறோமோ, அப்போதெல்லாம் எங்கள் பேச்சில் ழாக் ப்ரெவர் புகைபிடித்தபடி அமர்ந்து கொண்டிருப்பார். ‘இந்தக் காதல்’ குட்டி ரேவதியாலும், ‘ஓ பார்பரா’ சங்கர ராமசுப்ரமணியனாலும், ‘மக்குப்பையன்’ ஸ்ரீநேசனாலும், ‘பறவையின் உருச்சித்திரம்’ கண்டராதித்தனாலும் அடையாளப்படுத்தப்பட்டது எதனால்? அவருடைய கவிதைகளை வாசிக்கும் தருணம் ஏன் கொண்டாட்டமாக மாறுகிறது, மனதில்...
ஓசிப் மென்டல்ஷ்டாமின் கவிதைகளை வாசிக்கும் ஒரு நபர், தன்னை வாசிப்பதாகவே நினைத்துக்கொள்வது நிஜம். ‘விருட்சம்’ வெளியிட்ட ஓர் எளிய கவிதைத் தொகுதி அது.
கவிதை எண் 303
என்ன தெரு இது?
மெண்டல்ஷ்டாம் தெரு.
என்ன நாசமாய்ப் போன பெயர் அது?
எந்தப் பக்கம் திரும்பினாலும்கூட
இது கோணல்மானலாகவே வருகிறது.
அவரும்கூட நேரான ஆள் இல்லை
துல்லியமான வகையில்.
அவரது அறநெறிகள் லில்லி மலரை
ஒத்திருக்கவில்லை.
மேலும் அக்காரணத்தினால்தான் இந்தத்
தெருவுக்கு (மாறாக, நேர்மையாகச் சொல்வதானால், இந்தச் சாக்கடைக்கு)
மெண்டல்ஷ்டாம் என்று பெயர் தரப்பட்டது.
இந்தக் கவிதையை நண்பர்கள் பலரும் ‘தன்னுடைய கவிதை’யாகச் சொல்லிக் கொண்டதும் நிஜம். தன்னை ஒரு தகுதியற்றவனாக, அதிக அன்புடையவனாக பகிரும் கவிஞனை, அவனின் வரிகளை, மற்ற கவிஞர்கள் அது தான்தான்... அது தன்னுடைய வரிகள்தான் என நினைக்கும் தருணத்தை ஓசிப்பின் கவிதைகள் உருவாக்கிவிடுகின்றன.
கவிதை எண் 17
குளம் எங்கே அசுத்தமாகவும் கலங்கலாகவும் இருக்கிறதோ
அங்கே நான் வளர்ந்தேன் ஒரு சலசலக்கும் நாணலாக
மேலும் ஒரு தளர்ந்த, மென்மையான பேராசையுடன்
சுவாசிக்கின்றேன் எனக்கு மறுக்கப்பட்டிருக்கிற ஒரு வாழ்வினை.
மண்ணினுள் ஒரு குளிர்ந்த வளைக்குள் நான் கீழே அமிழ்ந்து
போவதை
எவரும் பார்ப்பதில்லை
இலையுதிர் காலத்தின் சிறிய இடைவெளியில்
ஒரு சரசரப்பு என்னை வரவேற்கும் பொழுதில்.
நான் எனது குரூர வலியில் கொண்டாடுகிறேன்
மேலும் என் வாழ்வில், அது கனவுபோலிருக்கிறது,
ரகசியமாக நான் எல்லா மனிதர் மீதும் பொறாமைப்படுகிறேன்
மேலும் ரகசியமாக அவர்கள் அனைவரையும் நேசிக்கிறேன்.
இக்கவிதை ஒன்றே மொழிபெயர்ப்பின் அவசியத்தை உணர்த்திவிடுகிறது. இம்மனநிலையைப் புரிந்துகொள்ளும் கவிஞன் எழுதப்போகும் கவிதை என்னவாக வெளிப்படும் என்று நினைக்கிறீர்கள்?
தமிழில் அதிகம் தாக்கத்தை ஏற்படுத்திய கவிதைகள் என்று ‘ஹைகூ’ வடிவத்தை சொல்லலாம். இன்றளவும் பாஷோவின் கவிதைகளைப் பின்தொடராத தமிழ்க் கவிஞர்கள் இல்லை. ஒரு கவிஞர் அல்லது வாசகர் வாசிக்க வேண்டிய கவிதைத் தொகுதிகள் என்று சிலவற்றைச் சொல்ல முடியும்.
1. மிளகுக்கொடிகள் - வி.எஸ்.அனில்குமார், பாரதிபுத்திரன்
2. உலகக் கவிதை - பிரம்மராஜன்
3. ஓசிப் மெண்டல்ஷ்டாம் கவிதைகள் - பிரம்மராஜன்
4. மரினா ஸவத்தேவா கவிதைகள் - பிரம்மராஜன்
5. அன்னா அக்மதோவா கவிதைகள் – வயல்
6. ழாக் ப்ரெவர் - வெ.ஸ்ரீராம்
7. தாமஸ் ட்ரான்ஸ்ட்ரோமர் – சபரிநாதன்
8. தலைப்புச் செய்திகள் – நெடுஞ்செழியன்
9. அறைக்குள் வந்த ஆப்பிரிக்க வானம் – இந்திரன்
10. ஆலன் கிங்க்ஸ்பெர்க், ஹௌல் மற்றும் சில கவிதைகள் – பாலகுமார் விஜயராமன்
11. கல்லின் கடுங்கோபம்: மரியா ரேமோன்தஸ் -தமிழச்சி தங்கபாண்டியன்
12. காற்றில் மிதக்கும் சொற்கள் : லத்தீப் மொஹிதீன்
-எம்.ஏ.நுஃமான்
ஒரு மொழிபெயர்ப்புக் கவிதையை நாம் வாசிக்கும்போது அங்கே நாடு, மொழி, இனம் என யாவும் உடைந்துவிடுகிறது. பக்கத்தில் அமர்ந்திருக்கும் ஒருவரின் தோளில் கைபோட்டபடி உரையாடும் ஓர் அன்பே, மொழிபெயர்ப்புக் கவிதைகள். ஒரு கவிதையின் சிறந்த மொழிபெயர்ப்பு என்பது அந்த மொழியை நினைவூட்டுவதல்ல. மாறாக, அதன் உணர்வை நினைவூட்டுவது மட்டுமே.
கவிதை எழுதவரும் வாசகர் ஒருவர், முதலில் வாசிக்க வேண்டியது தமிழ்க் கவிதையை அல்ல. பிறமொழிக் கவிதைகளைத்தான். ஒரு கவிதை உங்களை என்ன செய்ய முடியும் என்பதைப் புரிந்துகொள்ளத்தான் இது தேவைப்படுகிறது. உங்களுக்குத் தேவைப்படும் உருவஅமைதி, உத்தி, வாழ்நிலை, மனம் என அடுக்கக்கடுக்கான இதழ்களைக்கொண்ட ஒன்றே, மொழிபெயர்ப்பு.
மொழிபெயர்ப்புக் கவிதை என்பது வேறொன்றுமில்லை நண்பர்களே... அது நடமாடும் நிழல் மட்டுமே!