
ஓவியம் : ரமணன்

மூளையின் மேற்பரப்பில் ஒழுங்கீனக்கோடுகள்
வழியறியா நண்டுகள்
முட்டி முட்டித் திரும்பி ஊர்ந்தலைய
இந்தச் சுவர்களற்ற வெளியில்
தலையை எங்ஙனம் நான் முட்டிக்கொள்வது
வாகனத்தை மரத்தினடியில் நிறுத்திவிட்டு
தூக்கிட்டுக்கொள்ளலாம்
ஆனால், இந்த ஓவியத்திற்குள்
ஹாரனை எப்படி ஒலிக்கச்செய்வேன்

கத்தியின் பதத்தில்
பயணிக்கும் கட்டைவிரலே
நீயாவது கவனி
டி.ஆரின் பாடலுக்குப் பின்
குரல்வளை மென்னிக்குக்
கூடுதல் மிருது கிடைத்துவிடுகிறது பார்...
ஐந்து அரளிக்கொட்டையில்
ஒரு கடல் விளைவதாய்
கனவு வருகிறது
வயிற்றில் விதையிட்டால்
வாயில் அலையடிக்கும்
கிணற்றில் குதிக்கும் முன்
நீரில் முகம் பார்த்துச் சிரித்துக்கொள்ளலாம்.
நம்மை நாம் அன்பு செய்ய
அதுவே எளிய வழி
ஆனால், நீருள்ள கிணற்றுக்கு எங்கே போவேன்.