
மக்களிலிருந்து வந்தவர்கள் - இரா.முருகவேள்
19-ம் நூற்றாண்டில் மாபெரும் இலக்கியவாதிகள் ரஷ்யாவில் தோன்றினார்கள். `ரஷ்ய வாழ்க்கையின் ஒவ்வோர் அம்சமும் இவர்களது எழுத்தில் நுட்பமாகப் பதிவாகியுள்ளது’ என்று உலகம் கொண்டாடியது. டால்ஸ்டாய் உள்ளிட்ட இந்த எழுத்தாளர்கள், உலகின் ஆறில் ஒரு பகுதியை ஆண்ட ஜார் சக்கரவர்த்தியின் உறவினர்களாகவும், பிரபு வம்சத்தைச் சேர்ந்தவர்களாகவும் இருந்தனர். மிகச்சிறந்த கல்வியறிவு பெற்றிருந்தனர். ஒடுக்கப்பட்ட, ஏழை மக்கள் மீது அன்புகொண்டவர்களாகவும், எழுத்தில் நேர்மையுள்ளவர்களாகவும் இருந்தனர். இவ்வளவு இருந்தும், உழைக்கும் மக்களின் வாழ்வைப் பாட்டாளி வர்க்கத்தினரைக்கொண்டே எழுதவைக்கும், உழைக்கும் மக்களின் எழுத்தை ஓர் இயக்கமாக்கும் முதல் முயற்சிகள், புரட்சிக்கு முந்தைய ரஷ்யாவில்தான் தோன்றின. போல்ஷிவிக்குகளின் தொழிற்சங்க ஏடுகளில் ஒவ்வோர் இதழிலும் இரண்டு மூன்று தொழிலாளர்களின் கவிதைகளாவது இடம்பெறச் செய்யப்பட்டன. `கெஸட்டா கோபெர்க்கா’ (பைசா இதழ்) என்ற பெயரில் தொழிலாளர்களும் வாங்கும் வகையில் மலிவான விலையில் இலக்கிய இதழ்கள் வெளியிடப்பட்டன.
இந்த முயற்சிகளின் பிதாமகனாக மாக்ஸிம் கார்க்கி இருந்தார். `ஸனனீ’ (Znanie) என்ற இதழில் ஆசிரியாக அவர் 1900-ம் ஆண்டு பொறுப்பேற்றுக்கொண்டதும், அதில் தொழிலாளர்களின் எழுத்துகளுக்கு முக்கிய இடம் கொடுக்கத் தொடங்கினார். அவரது முயற்சியால், `ரஷ்ய இலக்கியத்தில் பள்ளி, கல்லூரிப் படிப்பு இல்லாமல் சுயமாகக் கற்றுக்கொண்ட எழுத்தாளர்கள்’ என்ற தனிப்பிரிவே உருவானது. ‘1906-ம் ஆண்டிலிருந்து 1910-ம் ஆண்டு வரை தன்னிடம் ஆலைத் தொழிலாளர்கள் எழுதிய 400 கையெழுத்துப் பிரதிகள் வந்து சேர்ந்தன’ என்றார் அவர். இவர்களுக்கு `மக்களிலிருந்து வந்தவர்கள்’ என்று பெயரிட்டவரும் கார்க்கிதான்.

தொழிலாளர்களின் எழுத்துகள், தொடக்கத்தில் இலக்கணப் பிழைகளுடன் குழந்தைத்தனமாக இருந்தன. அதிநுட்பங்களையும் நேர்த்தியையும் நளினங்களையும் விரும்பும் அறிவுஜீவிகள், இதுகுறித்து குறை சொன்னபோது கார்க்கி கூறினார், ``நான், இயல்பாகவே எழுத்துக்கலை கைவரப் பெற்றவர்களைக் குறித்துப் பேசவில்லை; கலையைப் பற்றியும் பேசவில்லை. உண்மையைப் பற்றியும் வாழ்க்கையைப் பற்றியும் பேசுகிறேன். எல்லாவற்றுக்கும் மேலாக செயல்படக்கூடியவர்களாகவும், உத்வேகம் உள்ளவர்களாகவும், மனித மாண்பை நேசிக்கக்கூடியவர்களாகவும் இருப்பவர்களைப் பற்றிப் பேசுகிறேன்.”
இதுவே புரட்சிக்குப் பிறகு சோஷலிச யதார்த்தவாதமாக வளர்த்தெடுக்கப்பட்டது. நிக்கொலாய் ஓஸ்திரோவ்ஸ்கி, சிங்கிஸ் ஐத்மாத்தவ், ஷோலகவ், பாஸு அலியவா போன்ற அற்புதமான எழுத்தாளர்கள் ரஷ்ய, தாஜிக், கிர்கிஸ் மொழிகளில் தோன்றினர். புரட்சிக்கு முன்னர் எழுத்தே இல்லாமலிருந்த எஸ்கிமோ மொழிக் குடும்பங்களில் இருந்தும்கூட மிகச் சிறந்த இலக்கியங்கள் உருவாகின.
`ஓர் ஓடை, மலையிலிருந்து பாய்ந்தோடி வந்துகொண்டிருந்தது. அதன் கீழ்ப் பகுதியில் ஓர் ஆட்டுக்குட்டி தண்ணீர் குடித்துக் கொண்டிருந்தது. மேல் பகுதியில் தண்ணீர் குடித்துக்கொண்டிருந்த ஓர் ஓநாய், ``ஆடே... நீ ஏன் நான் குடிக்கும் தண்ணீரைக் கலக்கிவிடுகிறாய்?” என்றது.

``அது எப்படி, கீழே நீர் அருந்தும் நான், மேலே இருக்கும் நீங்கள் குடிக்கும் நீரைக் கலக்கிவிட முடியும்?’’ என்றது ஆட்டுக்குட்டி.
``நீ செய்யாவிட்டால் உன் அப்பன் செய்திருப்பான்’’ என்று கூறி, அந்த ஓநாய், ஆட்டுக்குட்டியை விழுங்கிவிட்டது’ - இது ஓர் ஈசாப் கதை. இதை அறியாதவர்கள் இருக்க முடியாது. ஆனால், அவ்வளவாகத் தெரியாத செய்தி ஒன்று உண்டு. ஈசாப் ஓர் அடிமை. அவர் கிறிஸ்து பிறப்பதற்கு 600 ஆண்டுகள் முன்பு கிரேக்க நாட்டில் வாழ்ந்திருந்தார். அவரால், ஏழைகளின் வாழ்வைச் சுரண்டிக் கொழுக்கும் ஆள்வோரின் கதையை இப்படி ஒளித்து மறைத்துத்தான் சொல்ல முடியும்.
அன்றைய கிரேக்கத்தில் காவியங்களும் இதிகாசங்களும், வீரத்தையும் தியாகத்தையும் உயிர்வழங்கும் உறுதியையும் மிக உன்னதமான மொழியில் போற்றிப் பாடிக்கொண்டிருந்தன. சோபக்ளீஸ் போன்றோரின் நாடகங்கள் பெரும்புகழ் பெற்றிருந்தன. அதே காலத்தில்தான் கிரேக்க நாட்டில் ஓநாய்கள் பற்றியும், அவற்றுக்கு இரையாகும் ஆட்டுக்குட்டிகள் பற்றியும், தவளைகளைக் கொட்டும் தேள்களைப் பற்றியும் மிக எளிய மொழியில் இன்னோரு குரல் ஒலித்துக்கொண்டிருந்தது. குழந்தைக் கதைகள்போலத் தோன்றும் அவற்றின் உண்மைப் பொருளைத் தேடிக் கண்டுபிடிக்க அறிவு மட்டும் போதுமானதல்ல... கொஞ்சம் அரசியலும் தேவைப்படும்.
பஞ்சதந்திரக் கதைகளுக்கும், ஈசாப் கதைகளுக்கும் மிகப்பெரிய ஒற்றுமை உண்டு. காதும் இதயமும் இல்லாத கழுதைபோன்ற கதைகள் இரண்டிலும் உண்டு. இரண்டிலும் விலங்குகள், மனிதர்களைப் போலவே நடந்துகொள்கின்றன; தந்திரங்களில் ஈடுபடுகின்றன; தங்கள் செயல்களில் வெற்றி அல்லது தோல்வி அடைகின்றன. ஆனால், இதைவிட பெரிய வேற்றுமை இரண்டுக்கும் இடையே இருக்கிறது.
பஞ்சதந்திரக் கதைகளின் அடிப்படை ஐந்து வகையான தந்திரங்களைப் பயன்படுத்தி, எதிரிகளை ஒழித்துக் கட்டுவதாகும். இது அரசியலில் ஈடுபட்டவர்களுக்கான மிகச்சிறந்த பாடப்புத்தகமாக ஈரானிலிருந்து தென்கிழக்கு ஆசியா வரை கருதப்படுகிறது. பல புத்த ஜாதகக் கதைகளும், பஞ்சதந்திரக் கதைகளும் ஒன்றுபோலவே இருக்கின்றன. பல ஆண்டுகள் புத்த மதம், அரச மதமாக இருந்த நிலையில், இது புரிந்துகொள்ளக் கூடியதே.

பஞ்சதந்திரக் கதைகள் யாருக்கு வேண்டுமோ, அவர்கள் அதை எடுத்துக்கொண்டார்கள். ஈசாப் கதைகள், உலகம் முழுவதும் உள்ள ஏழை எளிய மக்களைச் சென்றடைந்தன. ஒரே நிகழ்வை, மக்கள் இலக்கியம் எப்படிப் பார்க்கிறது, செவ்வியல் இலக்கியம் எப்படிப் பார்க்கிறது என்பதற்கான எடுத்துக்காட்டை, நமது சிலப்பதிகாரத்திலும் காண முடியும். இளங்கோவடிகளின் சிலப்பதிகாரம், பாண்டியன், சேரன், சோழன் என மூவேந்தர்களையும் உன்னதமானவர்களாகக் காட்டி, கோவலன் கொலை அறியாமல் நடந்த தவறு என்றும் நிறுவ முயல்கிறது. அதற்கு விலையாக, பாண்டியனும் பாண்டிமாதேவியும் தங்கள் உயிர்களைக் கொடுக்கின்றனர். ஆனால், பூம்புகார் ஆதிதிராவிட மக்களின் கதைகளும், மீனவர் கதைகளும், கொடுங்கலூர் பகவதியம்மன் கதையும் பாண்டியன் கொடுங்கோலன் என்று தயக்கமின்றிக் குற்றம்சாட்டுகின்றன.
மக்கள் இலக்கியம், செவ்வியல் இலக்கியம் விதித்த இலக்கண, இலக்கிய, அரசியல், நாகரிகக் கட்டுப்பாடுகளுக்கும் வெளியே நிற்கிறது. “நீ எல்லா விதிகளையும் நொறுக்கிவிட்டாய். ஆனாலும் நீயே வென்றாய்” என்று மைக்கேல் ஏஞ்செலோ பற்றி அவரது நண்பர் சொல்வதாக, `தி அகனி அண்டு த எக்ஸ்டஸி’ நாவலில் இர்விங் ஸ்டோன் சொல்வாரே, அது மக்கள் இலக்கியத்துக்கும் நன்றாகப் பொருந்துகிறது.
மக்கள் இலக்கியத்தைப் பற்றிப் பேசும்போது, நமது சங்ககாலத் தமிழ் இலக்கியத்தின் தனித்தன்மையைப் பற்றிப் பேசாமல் இருக்க முடியாது. புறப்பாடல்களில் மூவேந்தர்கள் சிறப்பித்துப் பாடப்பட்டிருந்தாலும், சங்கப்புலவர்கள் குறுநில மன்னர்களான வேளிர்களின் பக்கமே நிற்கின்றனர். மூவேந்தர்களால் கொல்லப்பட்ட பாரி, அதியமானின் புகழையே ஒளவையாரும் கபிலரும் பாடுகின்றனர். ஆனால், கேரளாவின் வயநாடு பிரதேசத்தில் உள்ள கும்பளராஜா கதை வேறுவிதமான சித்திரத்தை வழங்குகிறது. வேட்டைக்கு வரும் கும்பளராஜாவை பழங்குடி மன்னன் ஒருவன் சிறைப்பிடித்து தன் மகளைத் திருமணம் செய்துகொள்ளும்படி வற்புறுத்துகிறான். கும்பளராஜா, ``திருநெல்லிக் கோயிலில் சத்திரிய முறைப்படிதான் என் திருமணம் நடத்தப்பட வேண்டும்’’ என்று கூறுகிறான். பழங்குடி மன்னன் ஒப்புக்கொண்டதும், தனது நண்பர்களான கீழ் தேசத்து மன்னர்களுக்கு சங்கேத மொழியில் ஓலை அனுப்ப, அவர்கள் திருமணத்தன்று படையுடன் வந்து பழங்குடி மன்னனைக் கொன்று சத்திரிய தர்மத்தைக் காக்கின்றனர்.

தமிழ்மொழி, பழங்குடி மக்கள்பால் அன்புகொண்டது. மலையாளம் அவ்வாறு இல்லை என்பதல்ல இதன் பொருள். சங்க இலக்கியம், கும்பளராஜா கதைக்கு ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டது; மலைகளின் மீது சமவெளி அரசுகளின் ஆதிக்கம் முழுமையாக நிலைநாட்டப்படாத காலத்தில் எழுதப்பட்டது. ஆனால் பின்னது, மக்கள் அந்தத் தலைவர்கள் மீது கொண்டிருந்த அன்பு, கவிதைகளின் அழகு ஆகியவற்றாலும் பழங்குடி மன்னர்கள் பலர் அழிக்கப்பட்டு, மீதி இருந்தவர்கள் மன்னராட்சி முறையால் முழுமையாக உள்வாங்கப்பட்டுவிட்டதாலும், இனி பழைய தலைவர்களைப் புகழ்ந்து பாடும் பாடல்களால் ஆபத்து இல்லையென்பதால் அவை அனுமதிக்கப்பட்டன.
இதே தமிழ்நாட்டில், கொங்குநாட்டுப் பழங்குடி தெய்வம் ஒன்று, காடு கெடுத்து நாடாக்கிய மன்னனிடம் `என் காட்டை அழித்துவிட்டாயே!’ என்று கோபம்கொண்டாதாகவும், மன்னன், தெய்வத்தின் கோபத்தைத் தணிக்க இரண்டு குழந்தைகளைப் பலிகொடுத்து `நீ உமையாக இறைவனின் இடதுபக்கம் இரு’ என்று சொன்னதாக கதை உண்டு. வர்க்கமும் சாதியும் நிலைபெற்றுவிட்ட மத்திய காலம்தான், அதிகாரத்துக்கு எதிராக மக்களின் குரலை ஒலித்த இலக்கியங்களின் பொற்காலமாகும். மதுரைவீரன், முத்துப்பட்டன், காத்தவராயன் கதைகள் ஒடுக்கப்பட்டவர்களின் வலியையும், துயரம் தோய்ந்த வாழ்வையும், அதிலிருந்து விடுவித்துக்கொள்ள அவர்கள் நடத்திய போராட்டத்தையும் அற்புதமாகச் சித்திரிக்கின்றன.
கூளப்ப நாயக்கன் காதலும், கூளப்ப நாயக்கன் விறலி விடு தூதும், மதுரைவீரன் கதைப்பாடலும் ஏறக்குறைய ஒரே காலத்தைச் சேர்ந்தவை. கூளப்ப நாயக்கன் பாடல்களில் மன்னனைப் பார்த்து பெண்கள் ஏங்கிப் பெருமூச்செறிகிறார்கள். இந்தப் பாடல் முதலில் திருமலை நாயக்கரின்மேல்தான் இயற்றப்பட்டது. திருமலை நாயக்கருக்கு ஏற்கெனவே ஏகப்பட்ட மனைவிகள். அது தவிர, அரசுரீதியில் ஏராளமான பிரச்னைகள். தமிழ் வேறு புரியவில்லை. `அரவம் அத்வானம்’ என்று சொல்லிவிட்டார். கடுங்கோபம்கொண்ட கவிராயர், பாடலை கூளப்ப நாயக்கன் என்ற இன்னொரு குறுநில மன்னன்மேல் ஏற்றிப் பாடினார். புலவனின் அறச்சீற்றத்துக்கும் கவிதையின் சிருங்கார நயத்துக்கும் தமிழ் இலக்கியத்தில் ஓர் இடம் இருக்கிறது. ஆனால், அது மதுரைவீரனுக்குத் தரப்படவில்லை.

தமிழ்நாட்டில் திருமலை நாயக்கரைத் தெரியாதவர்கள் இருக்கலாம். ஆனால், மதுரைவீரனைத் தெரியாதவர்கள் இருக்க முடியாது. மதுரைவீரன் கூத்து நடக்காத கிராமங்கள் இல்லை. மதுரைவீரன் கோயில் இல்லாத கிராமங்கள் இல்லை. இந்தக் கூத்தை நடத்தியவர்கள்; கேட்டவர்கள்; வணங்கியவர்கள் எல்லோரும் தலித்துகள் என்று சொல்லிவிட முடியாது. தலித்துகளுக்கு, அவன் விடுதலையின் வடிவம். மற்றவர்களுக்கு, அவன் வரம் தரும் கடவுள். ‘மனிதர்களுக்கு மனம், ஆழ்மனம் என்று இருப்பதைப்போல சமூகத்துக்கும் ஆழ்மனம் உண்டு’’ என்கிறார் கார்ல் யுங். பொதுச்சமூகத்தின் ஆழ்மனதில் படிந்துவிட்ட குற்ற உணர்வும் வீழ்த்தப்பட்டவர்களின் மீதான மரியாதையுமே இந்தக் கதைகளில் வெளிப்படுகின்றன.
மக்கள் மொழியில் அமைந்த இந்த மதுரைவீரன் கதைப் பாடல், காத்தவராயன், முத்துப்பட்டன் பாடல்களைக் கல்விச்சாலைகள் ஒருபோதும் செவ்வியல் இலக்கியங்களாக ஏற்றுக்கொள்ளவில்லை. ஆனால், மக்கள் இவற்றைக் கொண்டாடினார்கள். வாய்மொழி வழியாக தலைமுறை தலைமுறையாக இவை மாற்றிக்கொடுக்கப்பட்டன. இந்த அம்மானைகளையும் கதைப்பாடல்களையும் எழுதியவர்கள் யாரென்றே தெரியாது. பாடியவர்கள், இவற்றை மேலும் மேலும் வளர்த்தெடுத்தார்கள். இந்தப் பாடல்களை தங்களுடையதாகக் கருதியதால், அதற்கான உரிமை தங்களுக்கு இருப்பதாகக் கருதினார்கள். ஆனால், அந்தக் காலகட்டத்தில் நேரடியாக அரசியல் பேசும் சூழல் இல்லை. மாயவாதத் தன்மைகளில் ஒளித்து மறைத்தே பேசவேண்டியிருந்தது. உழைக்கும் மக்கள், நேரடியாகத் தங்கள் குரலை ஒலிக்க 200 ஆண்டுகள் காத்திருக்கவேண்டியிருந்தது. புதிய இலக்கிய வடிவத்திற்கான தூண்டுதலும் சிறுகதை, நாவல் போன்ற வடிவங்களும் நம்மை அடிமைப்படுத்திய நாடுகளிலிருந்தே நமக்குக் கிடைத்தன என்பது இலக்கிய வரலாற்றில் ஒரு முரண்நகை.
1870-ம் ஆண்டில் ஆலிவர் கோல்ட்ஸ்மித்தின் நீண்ட கவிதையான `தெ டெசெர்டெட் வில்லேஜ்’ வெளியானது. எளிமையும் இன்பமும் நிறைந்ததாக இருந்த கிராமங்கள் வெறிச்சோடிப்போகின்றன. குழந்தைகள், அமெரிக்காவுக்கும் லண்டனின் சேரிகளுக்கும் குடிபெயர்கின்றனர். சேரிகளில் திருடியதற்காகத் தூக்கிலிடப்பட்டவர்களின் பிணங்கள் தூக்குக் கம்பங்களில் தொங்கிக்கொண்டு இருக்கின்றன. கிராமங்கள் வெறிச்சோடுவதற்கு என்ன காரணம் என்பதை கோல்ட்ஸ்மித் வெளிப்படையாகச் சொல்வதில்லை. ‘ஊருக்கு பொதுவானவையாக இருந்த மேய்ச்சல் நிலங்களையும் நீர்நிலைகளையும் புதிதாக உருவான நகர்ப்புற முதலாளித்துவ வர்க்கம் வேலி போட்டு தனியுடைமை ஆக்கிக் கொள்கிறது’ என்பதாகக் குறிப்பால் உணர்த்துகிறார்.
18-ம் நூற்றாண்டில் இங்கிலாந்தின் தெருக்களில் சிம்னிகளில் தெருவிளக்குகள் வைக்கப்பட்டன. அவற்றில் படியும் புகையைத் துடைத்து சுத்தம்செய்வதற்காக நான்கு அல்லது ஐந்து வயதுடைய குழந்தைகள் விலைக்கு வாங்கப்பட்டு பயன்படுத்தப்பட்டனர். அவர்களாலேயே அந்தச் சிம்னிக்குள் நுழைந்து சுத்தம் செய்ய முடியும். வில்லியம் பிளேக்கின் `சிம்னி ஸ்வீப்பர்ஸ்’ என்ற கவிதை, இந்தக் குழந்தைகளின் நிலையைப் பதைபதைக்க வர்ணித்தது.
உள்ளத்தை உருக்கும் துன்பமயமான கவிதைகள் ஒருபுறம் இருக்க, முதலாளித்துவ நிறுவனங்களையும், அவை ஏற்படுத்தும் தாள முடியாத வறுமையையும் அடிமைகளைத் தயாரிக்கும் கல்விமுறையும் அப்பட்டமாகத் தோலுரித்துக் காட்டியவர் சார்லஸ் டிக்கின்ஸ். அவருக்குப் பிறகு, கொடும்வறுமையைக் குறிக்க `டிக்கின்ஸியன்’ என்ற சொல்லே உருவானது. பிரிட்டிஷ் நீதித்துறை, பணக்காரர்களுக்குச் சாதகமாக அமைந்திருப்பதையும் அது ஏழைகளைக் கசக்கிப் பிழிவதையும் அவரது ‘பிக்விக் பேப்பர்ஸ்’, ‘பிளாக் ஹவுஸ்’ நாவல்கள் அப்பட்டமாகக் காட்டுகின்றன.
`பிளாக் ஹவுஸ்’ நாவலின் கதாநாயகி லிட்டில் டோரிட், கடன்காரர்களுக்கான சிறையிலிலேயே பிறந்தவள். தன் வாழ்க்கையில் பெரும்பகுதியை சிறையிலேயே கழிக்கிறாள். நம் நாட்டில் சிவில் சிறைச்சாலை என்ற பெயருள்ள கடன்காரர்களை அடைத்துவைக்கும் சிறையை, ‘பிக்விக் பேப்பர்ஸிலும்’ காண முடியும். ஏழை மக்கள் கடன்காரர்கள் ஆக்கப்படுவதையும், மீள வழி இல்லாமல் இருட்டுக் குகைகளான இந்தச் சிறைகளில் வீசி எறியப் படுவதையையும் அதீத உணர்வுகளின்றி அலட்சியமாகச் சொல்லிச் செல்வார் டிக்கின்ஸ்.

இப்போது இருக்கும் பள்ளிக் கல்விமுறையை, ``ஆலைத் தொழிலாளர்களாக மாறுவதற்காகக் குழந்தைகளைப் பயிற்றுவிக்கும் கல்விமுறை’’ என்கிறார் நோம் சாம்ஸ்கி. சுயசிந்தனையைவிட கட்டுப்பாட்டுக்குப் பழக்கப்படுத்துவதே இதன் நோக்கம். 1800-களில் இங்கிலாந்தில் பள்ளிகள் இருந்த கோரமான நிலையை அப்பட்டமாக வருணிக்கிறது ‘நிக்கலஸ் நிக்கிள்பி’. டிக்கின்ஸின் `கிரேட் எக்ஸ்பெக்டேஷன்ஸ்’ நாவலில், ஓர் இளைஞனுக்கு எங்கிருந்தோ பணம் வருகிறது. அவனை ஆடம்பரமாக இருக்கத் தூண்டுகிறது. தனக்கு வரும் பணம் மிக நாகரிகமான, செல்வச் செழிப்புள்ள உலகிலிருந்து வருவதாக அவன் கற்பனை செய்துகொள்கிறான். அது ஒரு சுரங்கத் தொழிலாளி தன்னையே உருக்கிக்கொண்டு அனுப்பிய பணம் என்பது, பிறகு தெரியவருகிறது. செல்வம் எங்கிருந்து வருகிறது என்பதை இதைவிட குறியீடாகச் சொல்ல முடியுமா?
ஆனால், உயர் இலக்கியவட்ட நுட்பங்களின் மேல் அலட்சிய பாவம்கொண்ட ஓர் எழுத்தாளன் மேல் விமர்சனங்கள் இல்லாமல் இருக்குமா? வர்ஜீனியா உல்ஃப் போன்றோர் `டிக்கின்ஸின் நாவல்களில் உளவியல் நுட்பங்கள் இல்லை. ஆழமில்லை’ என்ற விமர்சனங்கள் வைத்துள்ளனர். பதில் ஒன்றுதான் - நுட்பம், ஆழம், உளவியல் போன்ற சொற்களுக்கான பொருள், எல்லோருக்கும் ஒன்றுபோல இருப்பதில்லை.
சரி, நமது தற்காலத் தமிழுக்கு வருவோம். பட்டியல்கள் எப்போதுமே ஆபத்தானவை. சற்றே மரபு மீறலாக பலமுறை பேசப்பட்ட `பஞ்சும் பசியும்’, `தாகம்’, `தோழர்’, `வில்’ போன்ற நாவல்களையும், மிகவும் புகழ்பெற்ற எழுத்தாளர்களின் எழுத்துகளையும் தவிர்த்து அதிகம் கவனம் பெறாத நூல்களையும், புகழ்பெற்றவையாக இருந்தாலும் இந்தக் கோணத்தில் பார்க்கப்படாதவற்றையும் மட்டும் இங்கே குறிப்பிட்டுள்ளேன்.
கல்கியின் `சோலைமலை இளவரசி’, `அலையோசை’, சி.சு செல்லப்பாவின் `சுதந்திர தாகம்’ இவற்றிலெல்லாம் அந்நியர் ஆட்சிக்கு எதிரான மனநிலை படம்பிடிக்கப்பட்டாலும், வெள்ளையர் நம் நாட்டுக்கு என்ன செய்தனர் என்பது இதில் இருக்காது. அதை முதலில் பேசிய குறுநாவல் `துன்பக்கேணி’. எனவே, அது தனிச்சிறப்பானது. மாபெரும் அநீதி இழைக்கப்படும்போது வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கக் கூடாது என்ற மனிதநேயம்கொண்ட எழுத்தாளரின் தார்மிகக் கடமையாகவே `துன்பக் கேணி’யை புதுமைப்பித்தன் எழுதினார். அதில், அந்தக் காலம் சார்ந்த தகவல்கள், தேயிலைத் தோட்டங்கள் குறித்த தகவல்களைச் சேகரிப்பதில் உள்ள சிரமத்தை நாமிப்போது உணர முடியும். `துன்பக்கேணி’ முடியும் இடத்தில் டி.செல்வராஜின் `தேனீர்’ தொடக்குகிறது. ஆனால், `தேனீரி’ல் முக்கியக் கதாபாத்திரமாக ஒரு கங்காணி வரும்போது அதில் சிக்கல் ஏற்படுகிறது.

`தேனீரி’ல் காணும் அதே தடுமாற்றத்தை, `சயாம் மரண ரயிலி’லும் காண முடிகிறது. கதாநாயகன் சலுகை பெற்றவன். நாவலில் சொல்லொணா துயரங்கள் மற்றவர்களுக்கு மட்டுமே ஏற்படுகின்றன. நாவலில் போர்க்கைதிகளாகப் பிடிக்கப்பட்டுள்ள ஆங்கிலேயரின் வீரம், நாட்டுப்பற்று ஆகியவை விதந்தோதப்படுவது, ஜப்பானியர்கள் மட்டுமே கொடுங்கோலர்கள் என்பது, அதேநேரம், ஜப்பானியரின் நண்பரான நேதாஜியிடம் முகாமில் அன்றாடம் வதைபட்டுக்கொண்டிருக்கும் மக்கள் நேசம்கொள்வது என முரண்பாடான அம்சங்களை அதில் காண முடிகிறது. இரண்டாம் உலகப்போருக்குப் பிறகு, ஆங்கிலேயர்கள் பொதுவுடைமைப் புரட்சியின்போது மலேய மக்களை இதேபோன்ற படுமோசமான கொலை முகாம்களில் அடைத்து வதைப்பதை, ஆசிரியர் `கம்யூனிஸ்ட்களை ஒழிக்க இது தேவை’ என்று முகாமில் வதைபட்ட தமிழர்களே கூறுவதாகக் கூறுவது ஆச்சர்யமளிக்கிறது.
வங்கத்தின் மாணிக் பந்தோபாத்யாயாவின் `பத்மா நதிப் படகோட்டி’ என்ற நாவல், தனித்த தீவுகளில் (சுந்தரவனக் காடுகளில்?) மக்களைக் குடியேற்றும் ஆங்கிலேயரின் நடவடிக்கையை அடிப்படையாகக் கொண்டது. `பதிமா நதிர் மோஜி’ என்ற பெயரில் கௌதம் கோஷ் எடுத்த படத்தின் மூலம் இந்த நாவல் உலகப் புகழ்பெற்றது. நாவல், தீவுகளைவிட பத்மா நதியையே மையமாகக்கொண்டிருக்கும். மாணிக் பந்தோபாத்யாயாவுக்கு தீவுகளில் குடியேற்றப்படும் மக்களின் அவலவாழ்வு பற்றிய செய்திகள் குறைவாகவே தெரிந்திருக்கின்றன அல்லது நேரடி அனுபவம் இல்லை என்பதை நாவலைப் படிக்கும்போது உணர முடியும். பி.ஹெச்.டேனியலின் `ரெட் டீ’யையும் தமிழ் நாவல் என எடுத்துக்கொண்டால், நமது நாவல்கள் தேயிலைத் தோட்டங்களை அங்குலம் அங்குலமாக நம்முன் வைக்கின்றன; மாணிக் பந்தோபாத்யாயாவைக் கடந்து செல்கின்றன. சறுக்கல்கள் இருந்தாலும், இந்திய மொழிகளில் - மக்கள் வாழ்க்கையைப் பேசுவதில் தமிழ் இலக்கியங்கள் தனிச்சிறப்பானவைதான். அலெக்ஸ் ஹேலியின் ரூட்ஸுக்கு இணையாக ஈழ எழுத்தாளர் கே.டேனியலின் `அடிமைகள்’, `பஞ்சமர்’, `தண்ணீர்’, `கானல்’ நாவல்களைச் சொல்லலாம்.
தலித்துகள் பண்ணையடிமைகளாக விலங்குகளைப்போல நடத்தப்படுவதில் இருந்து (அடிமைகள்), விடுதலைக்காக அவர்கள் மதம் மாறுவது, அதில் ஏமாற்றமடைவது, போராடுவது (கானல்), தங்களுக்கென கிணறு வெட்டுவது (தண்ணீர்) என்று ஒவ்வொரு கட்டமாக மாறிச் செல்வதையும் பெரும்புயலாக ஈழவிடுதலைப் போராட்டம் வருவதையும் அதனோடு தலித்துகள்கொள்ளும் உறவையும் முரணையும் (பஞ்சமர்) அற்புதமாகப் பேசுகின்றன இந்த நாவல்கள். ஆனால், இன்னும் போதுமான அளவு தமிழ் வாசகர்களிடத்தில் இந்நாவல்கள் கவனம் பெறவில்லை. ஈழப் போராட்டத்துக்கு முழுமனதுடன் ஆதரவு கொடுக்காததும், யாழ்ப்பாண வட்டாரவழக்கும் இதற்கான காரணமாக இருக்கலாம். கதை நிகழ்வுகளைத் தனிச் சம்பவங்களாகப் பார்க்காமல், பெரிய அரசியல் போக்கின் பகுதியாகப் பார்த்தார் டேனியேல்.
சுப்ரபாரதி மணியன், தமிழ்ச் சமூக வரலாற்றின் குறிப்பிடத்தக்க பகுதிகளைப் பதிவுசெய்தவர். பிறகு, நாட்டையே அதிர்ச்சியுறவைத்த ஒரத்துப்பாளையம் அணை உருவாவதற்கான சூழலை முன்கூட்டியே தனது `சாயத்திரை’ நாவலில் சொன்னவர். `புத்துமண்’ இன்று திருப்பூர் கோவைப் பகுதிகளில் பஞ்சாலைகளில் நிலவும் `கேம்ப் கூலிமுறை’ எனப்படும் புதுவிதமான ஒடுக்குமுறையைப் பேசுகிறது. ‘நைரா’ திருப்பூரில் குடியிருக்கும் நைஜீரியர்களின் வாழ்க்கை, நைஜீரியர்களைத் தலித் சமூகத்தின் நீட்சியாகப் பார்க்கும் சாதி ஆணவ மனநிலையை ஆகியவற்றை நாவலில் காணலாம்.

பாரதிநாதனின் `தறியுடன்’, ஜலகண்டபுரம் பகுதியில் தறித் தொழிலாளர்களின் போராட்டம், அவர்களிடையே நக்ஸல்பாரி அமைப்பான, ‘மக்கள் யுத்தக் கட்சி’யின் தொழிற்சங்கச் செயல்பாடுகள் ஆகியவற்றின் பின்னணியில் அமைந்த குறிப்பிடத்தக்க நாவல். அப்பு, பாலன் சிறைத் திறப்பு, தேவாரம் ஆபரேஷனுக்குப் பிறகு அங்கே இரவுகளில் நிலவிய இறுக்கமான அச்சமூட்டும் சூழல், வழக்குரைஞர் சங்கரசுப்புவின் பங்களிப்பு போன்ற உண்மையை ஒட்டிய நிகழ்வுகளை நாவல் மிகுந்த நேர்மையுடன் பதிவுசெய்கிறது. சி.பி.எம்., சி.பி.ஐ-க்கு வெளியே 80-களில் இந்தியாவின் பல பகுதிகளில் போர்க்குணமுள்ள தொழிலாளர் இயக்கங்கள் தோன்றின. சிங்கரேணி சுரங்கத் தொழிலாளர் இயக்கம் (சிகாஸா), சங்கர் குகா நியோகியின் ‘சத்தீஸ்கர் முகதி மோர்ச்சா’ போன்றவை தொழிற்சங்க இயக்கத்தில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தின. அதன் தொடர்ச்சியாக தமிழகத்தில் செய்யப்பட்ட முயற்சிகளைப் பற்றிப் பேசும் ஒரே நாவல் `தறியுடன்’.
வீரப்பன் வேட்டையின்போது தமிழகம், வீரப்பன் ஆதரவு - எதிர்ப்பு என்ற கறுப்பு-வெள்ளை நிலை எடுத்தபோது, மலைகளுக்குச் சொந்தக்காரர்களான பழங்குடி மக்கள் பற்றியும், மலைகளின் மீது அவர்களுக்கு இருந்த உரிமை பற்றியும் பேசிய முதல் நாவல் `சோளகர் தொட்டி’. அரச பயங்கரவாதத்தின் கோரமுகத்தையும், தமிழர்கள், கன்னடர்கள், பழங்குடி மக்கள் இந்தக் கொலைவெறி தாண்டவத்துக்குப் பலியானது பற்றியும் பேசியதோடு, பழங்குடி மக்களின் நிலங்கள் கீழிருந்து வரும் குடியேறிகளால் பறிக்கப்படுவதையும் வனத்துறை அவர்களை அடக்கி ஒடுக்குவதையும் துல்லியமாகக் காட்டுகிறது. இந்த விதத்தில் மகாஸ்வேதா தேவியின் `காட்டில் உரிமை’ நாவலைவிட ஆழமானதாக அமைந்திருக்கிறது.
செயல்பாட்டாளர்களாகவோ பாட்டாளி வர்க்கக்திலிருந்து வந்தவர்களாகவோ இல்லாவிட்டாலும், வேறு சில எழுத்தாளர்களின் நாவல்களும் குறிப்பிட்ட காலச்சூழலில், நிலப்பகுதியில் மக்கள் வாழ்க்கையும் அரசியல் பொருளாதாரத்தையும் ஆழமாகப் பேசுகின்றன. குமாரசெல்வாவின் `குன்னிமுத்து’, குமரி மாவட்ட மக்களின் வாழ்க்கையில் மதத்தின் தாக்கத்தையும் சமீப வளர்ச்சியில் ஏற்பட்ட மாற்றங்களையும் அதிர்ச்சியூட்டும் அளவுக்கு உண்மைக்கு நெருக்கமாக எழுதிச் செல்கிறது. குமரியைத் தவிர தமிழகத்தின் வேறு எந்தப் பகுதியிலாவது கட்சிகள், தலைவர்கள் மத நிறுவனங்களின் பெயர்களை இவ்வளவு வெளிப்படையாகக் கூற முடியுமா என்பது சந்தேகம்தான். இதேபோல 80-களின் திருப்பூரை எம்.கோபாலகிருஷ்ணனின் `மணல்கடிகை’யும், கடந்த 70-80 ஆண்டுகளில் திராவிட இயக்கத்தின் எழுச்சி, பிறகு அதற்கு சவாலாக வளர்ந்துவரும் தமிழ்த் தேசிய உணர்வு ஆகியவற்றை தமிழ்மகனின் `வெட்டுப்புலி’யும் அக்கறையுடன் பதிவுசெய்கிறன.
இந்த வரிசையில் செல்வமும் அதிகாரமும் குவிந்துகிடக்கும் தமிழகத்தின் தலைநகரில் புறம்தள்ளப்பட்டு சமூகத்தின் மற்ற பிரிவுகளிலிருந்து விரட்டப்பட்ட குடிசைவாழ் மக்களின் வாழ்வைப் பேசும் கரன் கார்க்கியின் `கருப்பர் நகரம்’, துப்புரவுத் தொழிலாளர்களின் வாழ்வை அடிப்படையாகக்கொண்ட அறிவழகனின் `கழிசடை’, மலர்வதியின் `தூப்புக்காரி’ நாவல்களையும் சேர்த்துக்கொள்ளலாம்.
மக்கள் இலக்கியம் அல்லது இடதுசாரி இலக்கியம் என்பதில் பக்கத்துக்குப் பக்கம் செங்கொடி பறக்க வேண்டும் என்பதோ, மார்க்ஸ், லெனின், மாவோ கொட்டேஷன்கள் விரவிக் கிடக்க வேண்டும் என்பதோ அவசியமில்லை. மேட்டுக்குடிகள் அல்லாத மக்களின் வாழ்வையும் அவர்கள் எதிர்கொள்ளும் அரசியல் தத்துவப் போராட்டங்களையும் நேர்மையுடன் விவரித்தாலே போதும்.
இறுதியாக ஒரு கவிதைத் தொகுப்பைச் சொல்லியே ஆக வேண்டும்.
அவன் பட்டுவேட்டியைப் பற்றி
கனவு கண்டுகொண்டிருந்தபோது
கட்டியிருந்த கோவணமும்
களவாடப்பட்டது.
எங்கள் வாய்க்கால்கள்
பள்ளங்களை ஏமாற்றிவிட்டு
மேட்டுக்கே பாய்ந்துகொண்டிருக்கின்றன...
போன்ற கவிதைகள் கலகங்களின் காலமான 70-களின் குழந்தைகள். `இவற்றை நேருவியத்தின் தோல்வி, உணவுக் கலகங்கள், மக்கள் மனதில் கனன்றுகொண்டிருந்த கோபம் ஆகியவற்றின் வெளிப்பாடு’ என இடதுசாரிகள் சொல்வதும், `வானம்பாடி கவிதைகள், வெறும் முழக்கங்கள், நுட்பங்களற்றவை’ என்று வலதுசாரிகள் விமர்சிப்பதும் வழக்கம்.
இரண்டு பிரிவினருக்கும், அவரவருக்கான தளங்கள் உண்டு. சமீபகாலமாக இடதுசாரி கவிதைத் தளத்தில் ஏற்பட்டிருந்த தேக்கத்தை அடியோடு தகர்த்தது கலைவாணனின் `சவரக்காரனின் கவிதை மயிறுகள்’. தன்வரலாறு பேசும் பாணியையும், கவித்துவத்தையும், அழகியலையும், கடுங்கோபத்தையும் துல்லியமாக இழைத்த இந்த `சவரக்காரனின் கவிதை மயிறுகள்’, மக்கள் தங்கள் வாழ்க்கையைப் பேசுவதையும் பாடுவதையும் எந்த நுட்பம் பற்றிய விமர்சனமும் தடுத்துவிட முடியாது என்பதைத்தான் காட்டுகிறது.
உலகமயமாக்கல் சூழலில் புலம்பெயர் வாழ்க்கையையும், பெரும் நிறுவனங்களில் பணிபுரியும் வாழ்க்கையையும், சுற்றுச்சூழல் அரசியலையும் பேசும் நக்கீரனின் `காடோடி’, மீரான் மைதீனின் `அஜ்னபி’ ஆகியவை, தமிழ் எழுத்தாளர்கள் பேசவேண்டிய எல்லா அரங்கிலும் பேசும் அளவுக்கு தங்களை வளர்த்துக்கொண்டுள்ளார்கள் என்பதற்கான எடுத்துக்காட்டுகள்.
கோவை நவம்பர் கலவரமும் அதைத் தொடர்ந்த குண்டுவெடிப்பும் மிக முக்கியமான தாக்கங்களை அரசியல் பொருளாதார அரங்கில் ஏற்படுத்தின. ஃபிர்தவ்ஸ்ஸ் ராஜகுமாரனின் `ரணங்கள்’, கரீமின் `தாழிடப்பட்ட கதவுகள்’, சம்சுதீன் ஹீராவின் ‘மௌனத்தின் சாட்சியங்கள்’ ஆகியவை சூழலின் உக்கிரத்திலிருந்து எழுந்துவந்த மிக முக்கியமான எழுத்துகள். அவற்றில், கீழ்நடுத்தரவர்க்கம் அனுபவித்த கொடும்வேதனைகள் அற்புதமாகப் பதிவுசெய்யப்பட்டுள்ளன. அதேநேரம், கலவரங்களுக்கு முன்னும் பின்னும் நடந்த அரசு நகர்வுகள், கலவரத்தை முன்னுணர்ந்த புலனாய்வு அறிக்கைகளை அரசும் ஆளும்வர்க்கங்களும் எதிர்கொண்டவிதம் போன்றவற்றை நோக்கி இன்னும் இந்த இலக்கியங்கள் நகரவில்லை. உதாரணமாக, குறிப்பிட்ட ஒரு நபரை அரசாங்க வழக்குரைஞராக அல்லது புலனாய்வு அதிகாரியாக நியமிப்பதற்குப் பின்னுள்ள அரசத் தந்திர நுட்பங்கள், அதிலுள்ள முரண்பாடுகள், கலவரங்களிலும் குண்டுவெடிப்பிலும் உள்ள உயர்மட்டத் திட்டமிடல், அவற்றைக் கையாள்வதில் பல்வேறு அரசுத் துறைகளின் பங்களிப்பு, சிந்தனை முறை ஆகியவை பற்றியெல்லாம் இன்னும் தேடப்படவும் எழுதப்படவும் வேண்டியுள்ளது.
இந்தக் குறையை, தமிழ் இலக்கியத்தின் எல்லா தளங்களிலும் காணலாம். பொதுவாக, தமிழ் இலக்கியவாதிகள் மத்தியத்தர வர்க்கத்தைச் சேர்ந்தவர் களாகவும் செயற்பாட்டாளர்களாகவுமே இருக்கிறார்கள். இவர்களுக்கு அரசு உயர்மட்டங்களோடு எந்தத் தொடர்பும் இல்லை. எனவே, ஒரு 2ஜி-யைப் பற்றியோ, முல்லைப் பெரியாறு, காவிரி விவகாரங்களில் பல மட்டங்களில் நடக்கும் நுட்பமான அரசியல் நகர்வுகள் பற்றியோ, பல லட்சம் உறுப்பினர்களைக்கொண்ட கட்சிகளில் செயல்படும் பல்வேறு வர்க்க நலன்கள் பற்றியோ எழுதும் வாய்ப்புகள் கிடைப்பதில்லை. இது தமிழ் வரலாற்று நாவல்களுக்கும் பொருந்தும். பிரபஞ்சனின் `வானம் வசப்படும்’, `மானுடம் வெல்லும்’ நாவல்களைத் தவிர, பெரும்பாலான நாவல்கள் கறுப்பு-வெள்ளைதான். அகழாய்வு, மானுடவியல் நோக்கு, பண்டைய இலக்கியம், அறிவியல் பார்வை ஆகியவற்றின் அடிப்படையில் நம்பகத்தன்மையுடன் எடுத்துக்கொண்ட காலகட்டத்தைப் படம்பிடிக்கும் வரலாற்று நாவல்கள் இன்னும் வரவில்லை. `ஸ்டேட்கிராஃப்ட்’ எனப்படும் இந்த ஆளும் முறையையும் மக்கள் இலக்கியம் ஒருநாள் முழுமையாகப் புரிந்துகொள்ளும். சூழலின் உக்கிரமும் அதைத்தான் கோருகின்றது. எதிர்காலம், வலுவான இலக்கியங்கள் உருவாவதற்கானதாக இருக்கும் என்று நம்புவோம்.