மற்ற எபிசோடுகள்
Published:Updated:

கொஞ்சம் ப்ளஸ்... நிறைய லாபம்! - பளிச் வருமானம் கொடுக்கும் பப்பாளி! - 18

கொஞ்சம் ப்ளஸ்... நிறைய லாபம்!
பிரீமியம் ஸ்டோரி
News
கொஞ்சம் ப்ளஸ்... நிறைய லாபம்! ( துரை.நாகராஜன் )

மதிப்புக் கூட்டல் தொடர் - 18

ல்லாக் காலங்களிலும் கிடைக்கக்கூடிய ஒருசில பழ வகைகளில் குறிப்பிடத்தக்கது,  பப்பாளி. இந்தப் பழத்தில் விட்டமின் ஏ மற்றும் விட்டமின் சி உள்ளிட்ட 18 வகையான சத்துகள் உள்ளன. மதிப்புக் கூட்டல் பொருள்களுக்கு முக்கியமானது, அனைத்து சீசனிலும் மூலப்பொருள்கள் கிடைத்துக் கொண்டிருக்க வேண்டும். தன் தொழிலுக்குத் தேவையான மூலப்பொருள்களில் ஊட்டச் சத்துகளும் அதிகமாக இருக்க வேண்டும்.

மேற்கண்ட இரண்டு காரணங்களும் இருந்தால்தான் தயாரிக்கும் பொருள்களைத் தடையில்லாமல் தயாரிக்கவும், சந்தையில் விற்பனை செய்யவும் முடியும். அத்தகைய சிறப்பு வாய்ந்த பப்பாளி மதிப்புக் கூட்டல் பொருள்களைத் தயாரிப்பவர்களை விரல்விட்டு எண்ணிவிடலாம்.

பப்பாளி மதிப்புக் கூட்டல் தொழிலில் நல்ல அனுபவம் வாய்ந்தவரான சிவகாசியைச் சேர்ந்த ஏ.பி.ஜே குரூப் ஆஃப் கம்பெனீஸ் நிறுவனர் சலீம், பப்பாளி மதிப்புக் கூட்டல் தயாரிப்புகளைப் பற்றி விளக்கமாகச் சொல்கிறார். 

கொஞ்சம் ப்ளஸ்... நிறைய லாபம்! - பளிச் வருமானம் கொடுக்கும் பப்பாளி! - 18

   ஏன் பப்பாளி?

பப்பாளியில் மதிப்புக் கூட்டல் செய்வது தமிழ்நாட்டில் மிகச் சிலர்தான். பப்பாளியை மதிப்புக் கூட்டல் செய்வதன் மூலம் நல்ல லாபம் கிடைக்கும் வாய்ப்புகள் அதிகம்.

வெளிநாடுகளைப் பொறுத்த வரை, பப்பாளியை மதிப்புக் கூட்டல் செய்து அதிகமான பொருள்கள் தயாரிக்கப் படுகின்றன.  இன்று பெரும்பாலான பியூட்டி பார்லர்களில் முகப் பொலிவுக்காக அதிகமாகப் பயன்படுத்தப்படும் பொருள்களில் பப்பாளியும் ஒன்று.

  எப்படி மதிப்புக் கூட்டலாம்?

பப்பாளியைப் பொடியாக  மாற்றி மதிப்புக் கூட்டினால்,  இன்றைய மக்கள் அதை விரும்ப மாட்டார்கள். இன்றைய இளைஞர்கள் விரும்புகிற மாதிரி  ஃபேஸ்வாஷ் கிரீம்கள், சோப்புகள், ஜாம், தலைமுடி எண்ணெய்கள் என வகை வகையாகக் கொடுக்க வேண்டும். அப்போதுதான் மதிப்புக் கூட்டல் தொழிலில் முழுமையான லாபம் பெற முடியும். தொடர்ந்து தொழிலை நடத்தவும் முடியும். நான் பப்பாளியைப் பயன்படுத்தி சோப்பு, தலைமுடி எண்ணெய், ஷாம்பூ, முகப்பரு கிரீம், முகப்பொலிவு கிரீம், பப்பாளிக் கற்றாழை ஜூஸ், தோல் பாதுகாப்பு கிரீம் எனப் பல பொருள்களைத் தயாரித்து வருகிறேன்.

  சந்தை வாய்ப்பு

கொஞ்சம் ப்ளஸ்... நிறைய லாபம்! - பளிச் வருமானம் கொடுக்கும் பப்பாளி! - 18

இயற்கைச் சார்ந்த மதிப்புக் கூட்டல் பொருள்களுக்கு எப்போதுமே சந்தையில் நல்ல வரவேற்பு உண்டு . அந்த வகையில் பப்பாளிக்கு சந்தை வாய்ப்பு அமோகமாக உண்டு. இயற்கை விவசாயிகளுடன் ஒப்பந்தம் செய்துகொள்வதன் மூலம், நம் பொருள்களைத் தரத்துடன் உற்பத்தி செய்ய முடியும். நம் பொருள்களுக்கு சந்தை வாய்ப்பும் அதிகமாக இருக்கும்.

பொருள்களின் தரத்தைக் கூட்டுவதில் எந்த அளவுக்கு முக்கியத்துவம் தருகிறோமோ, அந்த அளவுக்கு மார்க்கெட்டிங் கிற்கும் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். என்னிடம் உள்ள நல்ல மார்க்கெட்டிங் டீம்தான் என் பொருள்கள் சந்தையில் அதிகமாக விற்பனையாவதற்கு முக்கியமான காரணம். பப்பாளியை வைத்து  மதிப்புக் கூட்டி விற்கும்  பொருள் கள் இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் விற்பனை யாகிறது.

  முதலீடு

1,000 சதுர அடி முதல் 2,000 அடி வரையில் உள்ள இடத்தில் பப்பாளி மதிப்புக் கூட்டல் தொழில் ஆரம்பிக்கக் குறைந்த பட்சம் ரூ.5 லட்சம் வரைக்கும் செலவாகும். ஆனால், மூலப் பொருள்கள் வாங்கத் தனியாக ரூ.2  லட்சம் வரைக்கும் செலவாகும்.

மூலப்பொருள்களுக்குத் தேவையான பப்பாளியை என் நண்பரும், நானும் இணைந்து விவசாயம் செய்து வருகிறோம். இதுதவிர, பக்கத்தில் இருக்கும் விவசாயிகளிடமிருந்தும் வாங்குகிறோம். இந்தப் பழங்கள் எல்லாமே இயற்கை முறையில்தான் விளைவிக்கப்படுகிறது.

கொஞ்சம் ப்ளஸ்... நிறைய லாபம்! - பளிச் வருமானம் கொடுக்கும் பப்பாளி! - 18

  எந்த வகையில் மதிப்புக் கூட்டல்? 

மதிப்புக் கூட்டல் பொருள்களைப் பொறுத்தவரை, எந்தப் பொருள் என்பது முக்கியமல்ல. ஆனால், வடிவம் மிக முக்கியம். அந்த வடிவத்தைக் கொண்டு ஒருவரை நமது பொருளை வாங்க வைத்துவிட்டால் போதும், அடுத்தது அவர்கள்தான் நமது விளம்பரதாரர்கள். நாம் தயாரிக்கும் பொருள்களை மக்கள் ஒருமுறை வாங்கி, அது நன்றாக இருப்பதாக நினைத்து விட்டால் நிச்சயமாக அடுத்தமுறையும் வாங்குவார்கள். அந்த வகையில் பப்பாளி எனக்கு நம்பிக்கை கொடுத்த தொழில் என்றே சொல்லலாம்.

  அமோக லாபம்

எனக்கு பப்பாளியில் வருடத்திற்கு ரூ.10 லட்சம் வரை வருமானம் கிடைக்கிறது. அதில் மூலப்பொருள்கள், மார்க்கெட்டிங், மின்சாரம், போக்குவரத்து எனச் செலவுகள்போக லாபமாக ரூ.4 லட்சம் கிடைக்கும். முதலீட்டுக்கு ஏற்ப லாபத்தைப் பெறலாம்.

  கவனிக்க வேண்டிய விஷயங்கள்

“நாம் தயார் செய்யும் பொருள்களுக்குக் கொடுக்கும் முக்கியத்துவம் வெளிபக்க அட்டைகளுக்குக் கொடுக்க வேண்டியதும் அவசியம். மதிப்புக் கூட்டல் பொருள்களின் பேக்கிங்குகள் மக்களைப் பார்த்தவுடன் கவரச் செய்வதாக இருக்க வேண்டும். கவர்ச்சியில் கவனம் செலுத்திவிட்டு, தரத்தில் சமரசம் செய்து கொள்ளவும் கூடாது. தரம்தான் நமது முதல் மார்க்கெட்டிங் ஏஜென்ட். இரண்டாவது, என்னுடைய மார்க்கெட்டிங் டீம். எனவே, பொருளுக்குத் தரமும், மார்க்கெட்டிங்கும் அதிக முக்கியம்.

அதேபோல, பப்பாளியில் மதிப்புக் கூட்டல் தொழில் ஆரம்பித்து முதல் மூன்று வருடங்கள் வரை வருமானம் இல்லை. அதனால் வேறு தொழில் செய்யலாம் என நான் மாறிவிடவில்லை. புதிய பொருளைத் தயாரித்து மார்க்கெட்டிங் செய்யும்போது முதல் மூன்று வருடங்களில்   அப்படித்தான் இருக்கும். ஆனால், மூன்று ஆண்டுகள் பல்லைக் கடித்துக்கொண்டு சந்தையில் இருந்துவிட்டால், அடுத்து நீங்கள் வெற்றிப்பாதையை நோக்கிச் செல்வீர்கள்” என்கிறார் சலீம்.

மக்கள் எதிர்பார்க்கும் பொருள்களைத் தயாரித்துக் கொடுப்பதில்தான் மதிப்புக் கூட்டலின் ரகசியம் அடங்கியிருக்கிறது. அந்த ரகசியத்தைப் புரிந்துகொண்டு ஜெயிக்கும் வழிகளைக் கண்டறிந்துவிட்டால் நீங்களும் தொழில்முனைவர் ஆகலாம். 

(மதிப்புக் கூடும்)

-துரை.நாகராஜன்

படம்: ஈ.ஜெ.நந்தகுமார்

கொஞ்சம் ப்ளஸ்... நிறைய லாபம்! - பளிச் வருமானம் கொடுக்கும் பப்பாளி! - 18

“அந்த பேங்க் கொஞ்சம் உஷார்”

“எப்படிச் சொல்றீங்க?”

“லோன் கொடுக்குறப்பவே வெளிநாட்டிலிருக்கும் உறவினர்கள் முகவரிகளையும் உஷாரா வாங்கி வைக்கிறாங்க!”

-தெ.சு.கவுதமன்