நடப்பு
தொடர்கள்
Published:Updated:

இன்னும் அதிக வளர்ச்சி வேண்டும்!

இன்னும் அதிக வளர்ச்சி வேண்டும்!
பிரீமியம் ஸ்டோரி
News
இன்னும் அதிக வளர்ச்சி வேண்டும்!

ஹலோ வாசகர்களே..!

மது நாட்டின் வளர்ச்சி பற்றிய பாசிட்டிவான செய்திகள் மீண்டும் வரத் தொடங்கி இருக்கின்றன. நம் நாட்டின் வளர்ச்சி நடுத்தரக் காலத்தில் ‘BBB-’ என்கிற அளவில் ‘நிலையாக’ (Stable) இருப்பதாக ஃபிட்ச் (Fitch) தரக்குறியீட்டு நிறுவனம் வெளியிட்டிருக்கும் கருத்து நமக்கு ஆறுதலை அளிக்கிறது. நமது வளர்ச்சியில் மேல்நோக்கியும், கீழ்நோக்கியுமான ரிஸ்க் சமமான அளவில் இருப்பதாக ஃபிட்ச் நிறுவனம் சொல்லியிருக்கிறது.

இன்னும் அதிக வளர்ச்சி வேண்டும்!


அதுமட்டுமல்ல, வெளிநாட்டு நிறுவனங்கள் நம் நாட்டில் முதலீடு செய்வதற்கு பாசிட்டிவாக இருக்கும் நான்கு முக்கியமான காரணங்களை வரிசைப்படுத்தி இருக்கிறது சுவீடன் நாட்டின் நிதி நிர்வாக நிறுவனமான ஜூலியஸ் பேயர். நாற்பது வயதுக்கும் கீழே இருப்பவர்கள் அதிக அளவில் இருப்பது; ஏற்கெனவே கொண்டுவந்த பொருளாதாரச் சீர்திருத்தங்களைச் செயல்படுத்துவதில் சில சிக்கல்கள் இருந்தாலும், இதன்மூலம் பாசிட்டிவான விளைவுகள் ஏற்படத் தொடங்கியிருப்பது; கார்ப்பரேட் நிறுவனங்கள் கடந்த நான்கு ஆண்டுகளில் முதல்முறையாக லாபம் காணத் தொடங்கியிருப்பது; உள்நாட்டுப் பணச் சுழற்சி உறுதியாக இருப்பது போன்ற காரணங்கள் இந்தியாவில் முதலீடு செய்வதற்குக் கவர்ச்சியான அம்சங்களாக உள்ளன. கச்சா எண்ணெய் விலை உயர்வதினாலும், டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்புக் குறைவதினாலும் நம் நாட்டின் வளர்ச்சி பெரிதாகப் பாதிப்படையாது என ஜூலியர் பேயர் நிறுவனம் சொல்லியிருப்பது உண்மையிலேயே நமக்கு மகிழ்ச்சியளிக்கும் விஷயமே.

ஆனாலும், சர்வதேச நிறுவனங்கள் தரும் இந்தப் புள்ளிவிவரங்களைப் பார்த்து நாம் திருப்தி அடைந்துவிட முடியாது. மத்திய அரசாங்கம் எடுத்துவரும் நடவடிக்கைகள் நீண்ட காலத்தில் நல்ல வளர்ச்சியைக் கொண்டுவரும் என்பது நிஜம் என்றாலும், நிகழ்கால நிலையைக் கவனிக்காமல் இருக்க முடியாது. இதற்கு ஓர் உதாரணம், கடந்த ஆறு மாத காலத்தில் 35 லட்சம் புதிய வேலைவாய்ப்புகள் உருவாகியிருப்பதாக நிதி ஆயோக் சொல்லியிருப்பது. ஒவ்வோர் ஆண்டும் குறைந்தபட்சம் ஒரு கோடி அளவுக்குப் புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட வேண்டிய நிலையில், 35 லட்சம் புதிய வேலைவாய்ப்பினை உருவாக்கியிருப்பது எந்த மூலைக்கு?

‘‘நாட்டின் வளர்ச்சிக்காக இந்த அரசாங்கம் எடுத்திருக்கும் நடவடிக்கைகள் பற்றி மக்களிடம் எடுத்துச்சொல்லி வாக்குக் கேளுங்கள்’’ என கர்நாடக பா.ஜ.க தலைவர்களிடம் பேசியிருக்கிறார் பிரதமர் நரேந்திர மோடி. நாட்டின் வளர்ச்சிக்காகக் கடந்த நான்கு ஆண்டுகளில் இந்த அரசாங்கம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்திருப்பதை மறுப்பதற்கில்லை. ஆனால், இந்த வளர்ச்சியே பிரமாதம் என்று நினைத்து, நாம் திருப்தி அடைந்துவிட முடியாது. இன்னும் அதிக வளர்ச்சியை நாம் நீண்ட காலத்துக்குக் காண வேண்டும். அதற்குத் தேவையான நடவடிக்கைகளை இந்த அரசாங்கம் எடுத்தால், சட்டமன்ற, நாடாளுமன்றத் தேர்தல்கள் பற்றிய கவலையே இல்லாமல் இருக்கலாம்!

- ஆசிரியர்