
சந்திப்பு: வெய்யில் - படங்கள்: கே.ராஜசேகரன்
கூழாங்கல்லைக் கொடுத்தால், நட்சத்திரமாக்குவார்; நட்சத்திரத்தைக் கொடுத்தால், கூழாங்கல்லாக்குவார்.இரண்டும் தன்னளவில் இயற்கையின் பேரழகுகள்தான் என்றாலும், அதை உருமாற்றும் மந்திரவித்தையை சினிமாவுக்குள் ஒரு ஜனநாயக அரசியலாகவே செய்தார் பாரதிராஜா. தமிழர்களின் அழகியல் உணர்வை சினிமா வழியாக பாதித்தவர்களில் தவிர்க்க இயலாதவர். இவரும் இவரது சீடர்களுமாகத் தமிழ் சினிமாவை ஆண்டதொரு பொற்காலம். விவரம் அறிந்த நாள் முதல் கலையைப் பற்றிக்கொண்டவர், தனது 76-வது வயதிலும் முன்பைவிட வேகமாக இயங்கிக்கொண்டிருக்கிறார். ‘ஓம்’ படத்துக்கு பின்னணிக் குரல்கொடுக்கக் கிளம்பிக்கொண்டிருந்தவரை அவரது அலுவலகத்தில் சந்தித்தோம். சொற்களைவிட அதிகம் பேசுகிறது உடல்மொழி, உதடுகளைவிட அதிகம் சிரிக்கின்றன கண்கள்...

“சினிமாவில் நடிக்கும் கனவோடு அல்லிநகரத்தைவிட்டுக் கிளம்பி, சென்னைக்குப் பயணமான அந்த நாளைப் பற்றிச் சொல்லுங்கள்?”
“சுகாதாரத் துறை வேலையை விட்டுட்டேன். சினிமா கனவு பிடிச்சு ஆட்டுது; உள்ளுணர்வு, ‘இதுதான் உன் நேரம்’னு சொல்லுது; மெட்ராஸ் கிளம்பியே ஆகணும்னு வீட்டுல அடம்பிடிக்கிறேன். ‘நல்ல வேலையை விட்டுட்டு இப்படி மெட்ராஸ் கெளம்பணும்ங்கிறானே, பொறுப்பில்லாம இருக்கிறானே’னு அப்பாவுக்கு என் மேல கோபம். என் நாடகங்களும் என் நடிப்பும் அப்பாவுக்குப் பிடிக்கும். ஆனா, ‘எல்லாத்துக்கும் ஒரு காலநேரம் இருக்கு, இப்பிடி அவசரப்படுறானே’னு கோபமா இருந்தார். அம்மா ரொம்ப நல்ல மனுஷி. என் மேல அவ்வளவு பாசம். என்னை சமாதானப்படுத்திக்கிட்டே இருக்கும். இதுக்கு மேல பொறுமையா இருக்கக் கூடாது; ஒரு நாடகத்தப் போட வேண்டியதுதான்னு முடிவு பண்ணேன். கொஞ்சம் கொஞ்சமா மனநலம் பாதிக்கப்பட்டுக்கிட்டே வர்ற மாதிரி வீட்ல நடிச்சேன். வீட்டுக்குள்ளிருந்து பவுடர் டப்பாவை, சீப்பைத் தூக்கித் தெருவுக்கு வீசுவேன். வீட்டுக்குள்ள கதவைப் பூட்டிக்கிட்டு ஏதாவது சினிமா வசனத்தைச் சத்தமாப் பேசுவேன். பையன் எங்க புத்தி சுவாதீனம் இல்லாமப்போயிருவானோனு அம்மாவுக்கு பயம். ‘என்னய்யா வேணும்’னுச்சு, ‘மெட்ராஸுக்குப் போகணும்’னேன். 300 ரூபா கடன் வாங்கித் தந்துச்சு. ஒரு டிரங்குப் பெட்டி, அதுல நாலு சட்டை, நாலு பேன்ட், நாலு சிஸர் சிகரெட் பாக்கெட். ஒரு லாரி புரோக்கர்கிட்ட பேசி, ஏத்திவிட்டாங்க. சினிமா காட்சிகள்ல வர்ற மாதிரி ச்சோனு மழை கொட்டுது; அம்மாவும் சித்தியும் கண்ணீரும் கேவலுமா கை காட்டுறாங்க. அப்பழுக்கில்லாத ரெண்டு மனுஷிங்க... அவங்க கண்ணீர்தான் என்னை வழி நடத்துச்சு. வலுத்து மழை பெய்யும்போதெல்லாம் அந்த ரெண்டு மனுஷிகளோட நம்பிக்கையும் கையசைப்பும் நினைவில் வந்துபோகும், இப்பவும்.”
“இதற்கு இடையில் ராணுவத்தில் வேலை செய்தீர்களாமே..?”
“அது ஒரு பெரிய கதை. ‘மெட்ராஸ் இன்ஜினீயரிங் குரூப்’ங்கிற பேரைப் பார்த்துட்டு, இன்ஜினீயரிங் படிக்கலாம்னு பெங்களூர் கிளம்பிப் போய்ட்டேன். போனதுக்கு அப்புறம்தான் தெரியும், அது ராணுவத்துக்கு ஆள் எடுக்கிற இடம்னு. தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம்னு நான்கு மொழிக்காரனுங்களும் இருக்கோம். பயிற்சி முடிச்சவங்க, வளாகத்துக்குள்ள வெளியில சுதந்திரமா இருப்பாங்க. எங்களைப் போல புது ஆள்களை இருட்டுன உடனே உள்ள தள்ளிப் பூட்டி, விளக்கை அணைச்சிருவாங்க. நம்ம கையும் காலும் சும்மா இருக்குமா? ராத்திரி ஆச்சுனா, இருக்கிற பெட்டுகளையெல்லாம் அடுக்கி மேடையாக்கி, நாடகம், பாட்டு, கூத்துனு ஏதாவது பண்ணிக்கிட்டிருப்பேன். அங்கே, உயர் அதிகாரிகளெல்லாம் எப்படி அதிகாரமா நடந்துக்கிறாங்க, பேசுறாங்க, கோபப்படுறாங்கனு நடிச்சுக்காட்டுவேன். அதகளம் பண்ணுவோம். ஒருநாள் நான் நடிச்சிக்கிட்டிருக்கிறப்போ, அதிகாரி வந்துட்டான். பயங்கரமான பனிஷ்மென்ட் கொடுத்துட்டான். அந்த நேரத்துல கோவாவுல போர் நடந்துக்கிட்டிருந்தது. லாரியா லாரியா சோல்ஜர்ஸ் ஏறிப் போறாங்க. என்னடா இது ஜெயில் மாதிரி, சுதந்திரமில்ல... காம்பவுண்ட், துப்பாக்கி, ராணுவம், பனிஷ்மென்ட்னு இது ஒரு கலைஞனுக்கான இடமா இல்லையேனு தோணுச்சு. வீட்டுக்கு லெட்டர் எழுதினேன். பழைய, சுகாதாரத் துறை ஆபீஸிலிருந்து ‘முறையா எதையும் ஒப்படைக்கல. உடனே அனுப்பிவைக்கவும்’னு ஒரு லெட்டர் வந்தது. தப்பிச்சோம்னு வெளியே வந்தேன். கையில காசு இல்ல. வாட்சை வித்து, ஊர் வந்து சேர்ந்தேன். இதெல்லாம் நடந்தது ஒரு மாச காலத்துக்குள். அங்கே இன்னும் பல விஷயங்கள் நடந்துச்சு. அதையெல்லாம் வெளியில சொல்ல முடியாது.” (சிரிக்கிறார்)

“எந்த வயதில் நடிப்பின் மீது ஆர்வம் வந்தது?”
“சின்ன வயசுலேயே உண்டான ஆர்வம் அது. ரெண்டாப்பு படிக்கும்போதே குறத்தி வேஷம் போட்டேன். ஒன்பதாப்புல படிக்கும்போது, எங்க தமிழாசிரியர் துணையோட ஏழு நாடகங்கள் போட்ருக்கேன். பெஸ்ட் ஆக்டர், பெஸ்ட் டைரக்டர்னு பரிசுகள் வாங்கியிருக்கேன். பிறகு, மேடைகள்ல தொடர்ந்து நடிக்க ஆரம்பிச்சேன். ஊருக்குள்ள ‘அல்லி கலா நாடக மன்றம்’னு ஆரம்பிச்சு, ‘ஓ... நெஞ்சே’, ‘பரிகாரம்’னு ஏகப்பட்ட நாடகங்கள் போட்டோம். அப்போ, கம்யூனிஸ்ட்கள் சார்பா தி.மு.க-வை விமர்சிச்சு நாடகம் போடுவோம். அதில், ‘பாசறை பலிகடாக்கள்’ ரொம்பப் பிரபலமான நாடகம். தஞ்சாவூர், பட்டுக்கோட்டை வரை வந்து நாடகம் போட்ருக்கோம். அந்தக் காலகட்டத்தில்தான் நானும் இளையராஜாவும் சந்திச்சோம். என் நாடகங்களுக்கு அவர்தான் மியூசிக் போடுவார். நாடகம்தான் இந்தத் தமிழ் மண்ணின் வெக்கையை, புழுதியை எங்களுக்கு அறிமுகம் செஞ்சுவெச்சது. அந்தக் காலகட்டத்துல கிராமம் கிராமமாச் சுத்தி அலைஞ்சோம். மக்களை அவர்களோட பல்வேறுபட்ட வாழ்க்கைப்பாடுகளை அவதானிச்சோம். நாடகம், நடிப்பு, இசை, பாட்டு தவிர, வேறு ஏதும் இல்லாத ஒரு வாழ்க்கை. எங்களை அறியாம இந்த மண்ணைக் கலைமனம்கொண்டு வாசிச்சுத் திரிஞ்ச காலம் அது. பின்னாடி, எங்களுடைய படைப்பு மனசுக்கு உரமா இருந்தது, அந்தக் காலகட்ட அனுபவங்களும் நினைவுகளும்தான்.”
“உங்களுடைய கலை ஊடகம் சினிமாதான் என்று எப்போது முடிவு செய்தீர்கள்?”

“பெரும்பாலும் சம்ஸ்கிருதம் கலந்த தமிழில் வசனங்களும் பாடல்களும் வெளிவந்துகொண்டிருந்த சமயம், ஒரு புயல்போல ‘பராசக்தி’ வெளியானது. தமிழன் அதுவரை திரையில் கேட்டிராத தமிழ், சிம்மக் குரலோன் சிவாஜியின் கம்பீரக்குரல் பட்டிதொட்டியெல்லாம் ஒலிக்குது. ஒல்லி இளைஞனா, தீர்க்கமான கண்களோட சிவாஜியோட நடிப்பு ஈர்க்குது. சடங்கு வீடு, கல்யாண வீடுனு மைக்கைக் கெஞ்சிக் கேட்டு வாங்கி, ‘நீதிமன்றம் பல விசித்திரமான வழக்குகளை சந்தித்திருக்கிறது...’னு பேசித் திரிஞ்சோம். ஒரு நடிகனாக சிவாஜி என்னை ரொம்பவே பாதிச்சார். அப்புறம், சினிமா பார்க்கிறது ஒரு கனவு உலகத்துக்குள்ள போறது மாதிரி இருந்தது. அரண்மனைகள், சண்டைக் காட்சிகள், மேகங்களில் மிதக்கிற தேவதைப் பெண்கள்னு, சினிமா கொஞ்சம் கொஞ்சமாக எனக்குள் ஒரு கனவு உலகை உருவாக்குச்சு. நாடகம் போடும்போதே, சேலைகளை அசைத்து புகைமூட்டம் போட்டு இந்த எஃபெக்ட்ஸையெல்லாம் முயற்சி பண்ணியிருக்கேன். ஒருநாள் ஷூட்டிங் பார்க்கணும்னு சொல்லி, எங்க ஊர்க்காரர் விக் மேக்கர் கந்தசாமி மூலமா, ‘விக்ரம் ஸ்டூடியோ’ போனேன். ‘விஜயபுரி வீரன்’ ஷூட்டிங். எங்கிருந்தோ சத்தமா குரல், ‘லைட்ஸ்!’ அவ்வளவுதான், நூறு சூரியன்கள் பிரகாசிக்குது. என்னடா ஒளி இதுனு பிரமிச்சுப்போய் நின்னேன். அந்த ஒளி எனக்குள்ள ஓர் இனம்புரியாத சந்தோஷத்தைக் கடத்துச்சு. ‘ஆக்ஷன்’ சொன்னதும் சி.எல்.ஆனந்தன் கத்தியைச் சுழட்டி சுழட்டி சண்டை போடுறார். இதுதான்... இதுதான்... நம்மோட இடம்னு மனசு அன்னிக்கே முடிவு பண்ணிடுச்சு.”
“நடிகனாகும் கனவில் சென்னைக்கு வந்த நீங்கள், எந்தச் சூழ்நிலையில் இயக்குநராவது என்று முடிவுசெய்தீர்கள்?”
“தொடக்கத்துல நடிகனாகத்தான் முயற்சி பண்ணேன். ஒரு சீனுக்கு ரெண்டு சீனுக்கு கூப்பிடுவாங்க. ‘டாக்டரா வர்றியா’னு கூப்பிடுவாங்க. ‘என்னடா இது ஹீரோவாகணும்னு வந்தா, சூழல் இந்த மாதிரி இருக்கே’னு ஒரே குழப்பம். ஒரு பெட்ரோல் பங்க்ல வேலை செஞ்சுக்கிட்டே வாய்ப்பு தேடிட்டிருந்தேன். அப்போ, பெட்ரோல் போட வரும் காருக்குள்ள ஜெமினி கணேசன், சிவாஜி கணேசன், எஸ்.எஸ்.ஆர், விஜயகுமாரினு, ஃபுல் மேக்அப்ல மெழுகு பொம்மையாட்டம் உட்காந்திருப்பாங்க. ஒரு கட்டத்துக்கு மேல, சினிமா இந்த முகத்தை ஹீரோவா ஒத்துக்கிறது கஷ்டம்னு தெரிஞ்சது. சரி, எப்படியாவது சினிமாவுக்குள்ள போகணும்னு உதவி இயக்குநரா நுழைஞ்சேன். அது ஒருவிதமான நிர்பந்தம். இப்போ நினைச்சுப் பார்க்கும்போது, ஆச்சர்யமா இருக்கு. Really I am Proud be a Director!”
“தமிழில் இவ்வளவு இயக்குநர்கள் இருந்தும், ஏன் புட்டண்ண கனகலிடம் உதவியாளராகச் சேர நினைத்தீர்கள்?”
“பாண்டி பஜார்ல இருக்கிற ‘கீதா கபே’ல டிஃபன் சாப்பிடப் போனேன். கையில 90 காசு இருந்தது. பக்கத்துல ‘ராஜகுமாரினு’ ஒரு தியேட்டர் உண்டு. சும்மா எட்டிப் பார்க்கலாமேனு போனேன். கறுப்பு வெள்ளையில போட்டோ கார்ட்ஸ் ரொம்ப அழகா இருந்தது. ‘பெல்லி மோடா’னு ஒரு கன்னடப் படம். டிபனைத் தியாகம் பண்ணிட்டு, படத்துக்கு டிக்கெட் எடுத்துட்டேன். கல்பனாவும் கல்யாண்குமாரும் நடிச்சிருந்தாங்க. பிரமாதமான ஷாட்ஸ்... படம் எனக்கு ரொம்பப் பிடிச்சுப்போச்சு. பெங்காலி படங்கள் பார்த்து, என்னோட சினிமா டேஸ்ட் மாறிக்கிட்டிருந்த டைம் அது. இயக்குநர் பெயர், புட்டண்ண கனகல். ‘உதவியாளராச் சேர்ந்தா, இவர்கிட்டதான் சேரணும்’னு முடிவு பண்ணிட்டேன். அப்போ, ஜி.கே.வெங்கடேஷ்கிட்ட அசிஸ்டென்ட்டா கிடார் வாசிச்சுக்கிட்டு இருந்தார் இளையராஜா. விஷயத்தைச் சொன்னேன். இளையராஜா, வெங்கடேஷ்கிட்ட சொல்லி, அவர் என்னை அழைச்சிட்டுப்போய் புட்டண்ணாவுக்கு அறிமுகப்படுத்தினார்.
ஆழ்வார்பேட்டையிலுள்ள வீனஸ் காலனியிலிருந்தது பி.ஆர்.பந்துலுவின் வீடு. அவர் வீட்டு கார்ஷெட்டை வீடாக மாற்றியமைத்திருக்கிறார்கள். அதில்தான் இயக்குநர் குடியிருந்தார். நாங்க போகும்போது, புட்டண்ணா பியானோ வாசிச்சிட்டிருந்தார். என்னை அறிமுகப்படுத்திவெச்ச ஜி.கே.வெங்கடேஷ், நான் எம்.ஏ. படிச்சிருக்கேன்; தமிழ்ல பெரிய இலக்கியவாதினு என்னென்னவோ எனக்குப் புரியாத பல விஷங்களைப் பற்றிச் சொல்லிட்டு இருக்கார். எனக்கு வயித்தக் கலக்குது. ‘why you want to become a Director?’ னு கேட்டார். நான், ‘உங்க படம் பார்த்தேன் சார். ரொம்பப் பிடிச்சிருந்தது. உங்ககிட்ட வொர்க் பண்ணனும்னு நினைக்கிறேனு’ சொன்னேன். அவர், ‘பாரதி... Direction not a teaching job, its an observation job’-ன்னார். ‘ஒரு நல்ல நாள் பார்த்து வா’ன்னு சொன்னார், போனேன். கார்ல ஏறிக்கச் சொன்னார். அந்த மழை நாளை நினைச்சுக்கிட்டேன். அவரோட ஃபியட் கார் ஜெமினி ஸ்டூடியோவுக்குள்ள நுழையுது. ஜெமினியோட அந்த ரெண்டு குழந்தைங்க பீப்பீ ஊதிக்கிட்டு நிக்குதுங்க. அந்தத் த்ரில் ஃபீல் இப்பவும் அப்பிடியே இருக்கு. என்னுடைய சினிமா வாசலை ஜி.கே.வெங்கடேஷும் புட்டண்ண கனகலும் திறந்துவெச்சாங்க. They are Great Persons!”

“சரி, உண்மையைச் சொல்லுங்க. யார் அந்த மயிலு?”
“எங்க ஊர் ஆள்கள் பலருக்கும் தெரியும். என்ன ஒண்ணு, அந்த மயிலுக்கு இப்பிடி ஒரு சப்பாணி இருந்தான்; இருக்கான்னு தெரியவே தெரியாது. (சிரிக்கிறார்) ஆனாலும், மயிலு என் வாழ்க்கையில பெரிய இன்ஸ்பிரேஷன். காதல்தான் கலைஞனோட பிரதானமான எனர்ஜி. கவிஞனோ, ஓவியனோ, இசைக்கலைஞனோ காதலால் இயக்கப்படுறவன்தான். அது ஒரு பெண்ணின் மீதான காதலா இருக்கலாம். சமூகத்தின் மீதான, இயற்கையின் மீதான காதலா இருக்கலாம். ஆனா, அந்தக் காதல் அவசியமானது. சமூக விதிகள் அந்தக் காதலுக்குக் குறுக்கே வரும்போது, சாதாரண மனிதன் உடைஞ்சுபோயிடுறான். ஆனால், படைப்பாளி அந்த விதிகளை மனதாலோ, உடலாலோ தாண்டிச் செல்கிறான். எல்லைகள் அவனுக்குப் பொருட்டு கிடையாது. சமூகம், தவறு என்று சொல்கிற எல்லா விஷயங்களையும் அப்படியே தவறு என்று நம்புகிறவன் அல்ல கலைஞன். அவன் இலக்கணங்களை, விதிகளை, கோடுகளை மீறுவான். ரோஜாத் தோட்டமும் பாலை நிலமும் ஒன்றுதான் கலைஞனுக்கு. காதல் - காதல்தோல்வி - தோல்விக்குப் பிறகு மீண்டும் காதல் - இதில் என்ன பிரச்னை இருக்கிறது இந்தச் சமூகத்துக்கு. கலைஞன் சில எல்லைக்கோடுகளைத் தாண்டுவான். விதிகளை மீறாதவன் கலைஞனாக முடியாது. இன்று வரலாறு அடையாளப்படுத்துகின்ற சிறந்த கலைஞர்கள் எல்லோருமே, கொஞ்சமேனும் எல்லைக்கோட்டைத் தாண்டிச் சென்றவர்கள்தான். ஆனால், தாண்டிக் கடந்துசெல்ல முடியாத காலக்கோட்டுக்கு அப்பால் நிற்கிறாள் மயிலு.”
“ஸ்டூடியோவிலிருந்து வெளியேறி இயற்கைவெளிகளுக்குப் படப்பிடிப்புத் தளத்தை இடம்மாற்ற வேண்டும் என, எது உங்களை உந்தியது அல்லது நிர்பந்தித்தது?”
“ஸ்டூடியோக்கள் மிகச் செயற்கையாக இருந்தன. நான் ஒரு மழைக்காலத்தைப் படம்பிடிக்க நினைக்கிறேன். சோளக்காட்டுச் சரசரப்பு, தட்டான் பூச்சிகளும் பட்டாம்பூச்சிகளும் தலைக்கு மேல சுத்தித் திரியிற சத்தம், மண்ணு... மண்ணு மேல கிடக்கிற சாண வாசம்னு எனக்கு வேண்டிய ஸ்மெல் செட்ல இல்ல. முழுக்க பெயின்ட் வாசனை. ஆறுனா ஆறு, குளம்னா குளம், அருவினா அருவி வேணும்னு நெனைச்சேன். முயற்சி பண்ணி பார்க்கலாம்னு கேமராவைத் தூக்கிக்கிட்டு கிளம்பினேன். அது சாத்தியமாச்சு. இன்னும் சொல்லப்போனா, முன்பைக்காட்டிலும் குறைந்த பட்ஜெட்ல அந்தப் படப்பிடிப்பை முடிச்சோம். வயல்காட்டுல போய் நின்னா, வயல் பேசும். அதுவரை இல்லாத கற்பனையைத் தரும். ஒரு மரம், அதோட நிழல், நிழல்மீது கிடக்கிற சருகுகள், சடசடத்துப் பறக்கிற பறவைகள், ‘இந்த காட்சியை இங்கே எடு’னு கூப்பிடும். அங்க வெச்சிப் பார்க்கிறப்ப, அழகே இல்லாத விஷயங்களெல்லாம் அழகாத் தெரியும். இயற்கை உங்க அழகுணர்ச்சியைக் கூட்டும். That’s why I love the Nature and took the Camera.”
“நீங்கள் இயக்குநராகி எடுத்த முதல் ஷாட் பற்றிச் சொல்லுங்கள்...”
“ ‘செந்தூரப்பூவே’ பாடல் காட்சியைத்தான் முதல்ல ஷூட் பண்ணேன். எக்ஸாம் எழுதப்போற மாணவன் மாதிரி அந்த முதல்நாள், விவரிக்க முடியாத என்னென்னவோ உணர்வு. ‘செந்தூரப்பூவே...’னு இல்லாத ஒரு பூ பேர்ல பாடல் எழுதிட்டான் கங்கை அமரன். பாட்டை ரெக்கார்டு பண்ணி எடுத்துக்கிட்டு ஸ்பாட்டுக்குப் போயிட்டேன். எங்கெங்கோ ஒருநாள் முழுக்கத் தேடி, ஒரு வழியா செந்தூர நிறத்தில பூ நிறைஞ்சிருக்கிற ஒரு மரத்தைப் புடிச்சாச்சு. ஸ்ரீதேவிக்கு அந்த மரத்துக் கிளையில சாஞ்சுக்கிற மாதிரி பொசிஷன் கொடுத்துட்டு, ட்ராலி போட்டு கேமரா வழியா பார்க்கிறேன். ஆஹா... கேமரா மூவ் ஆகி, பூக்களைக் கடந்து கடந்து ஸ்ரீதேவி முகம் என்ட்ரியாகி, ஜூம் அவுட் பண்ணி ஒரு ஷாட். அவ்வளவு அழகா வந்தது. அப்படி ஆரம்பிச்சது பயணம். ஸ்கிரிப்ட் பேப்பர் வெச்சுக்கிட்டு, ஷாட் பிரிச்சு சீன் எடுத்தது இல்ல. மனசுக்குள்ள என் படம் ஓடும். அதை மனசுக்குள்ளேயே எடிட் பண்ணி எடுத்துக்கிட்டே இருப்பேன். எப்படி அந்தத் திறமை எனக்குள்ள வந்ததுனு இன்னைக்கும் தெரியலை. இயற்கையை நேசிக்கிறவனுக்கு, நம்மை எப்படியெல்லாம் ரசிக்கிறான்; நேசிக்கிறான்னு இயற்கையாப் பார்த்து கிஃப்ட் பண்ணியிருக்கும்னு நெனைக்கிறேன். முதல் நாள் ஷூட் பண்ண அந்த நாளை மறக்கவே முடியாது. வாழ்வின் கடைசி நொடியிலும்கூட செந்தூரப் பூவேங்கிற அந்தப் பாட்டும் அந்த முதல் ஷாட்டும்தான் நெஞ்சுக்குழியில் வந்து நிக்கும்.”
“மனதுக்குள் நீங்கள் ஓட்டிப் பார்க்கிறபடி யெல்லாம், காட்சிகளை எடுத்துவிட முடிகிறதா?”
“மனதுக்குள் இருக்கிற படம் நீங்க நினைக்கிற மாதிரி கிரிஸ்டல் கிளியரா இருக்காது. ஒரு ஐடியாவா, மாற்றத்துக்கு உட்பட்ட வகையில ஒரு Mood ஆக இருக்கும். காட்சியை எடுக்கும்போது இடத்துக்கு தகுந்த மாதிரி சிலநேரம் காட்சிகளை மாத்திருவேன். ரொம்ப அடமென்ட்டா இருக்க மாட்டேன். பூமி எல்லா இடத்துலயும் நாம் விரும்புறபடியா இருக்கும்? அது பலவிதமா இருக்கும். அதை நோக்கிப் போகும்போது, நாம நம்ம கலையை அதுகிட்ட கொஞ்சம் விட்டுக்கொடுக்கணும். அது நமக்குக் கொஞ்சம் விட்டுக்கொடுக்கும். இயற்கையை நோக்கிப் படம் எடுக்கப் போறவன், இயற்கையோட இந்தப் பரஸ்பரப் பரிமாற்றத்தைப் பண்ணணும். நான் படித்துறையில வெச்சு ஒரு காட்சி எடுக்க நினைச்சுப் போவேன். அந்தக் குளம் காஞ்சுபோய்க் கிடக்கும். சுத்துமுத்தும் பார்த்தா, வெயிலுல ஒரு நடுகல் மட்டும் நிக்கும். ‘சரி, நடுகல் மேல ஹீரோயினை உக்கார வை; ஹீரோவை அங்கிருந்து ஓடி வரச்சொல்லு; அந்த மாட்டுக்காரர்கிட்ட சொல்லி மாடுகளைக் கொஞ்சம் க்ராஸ் பண்ணச் சொல்லு; கொஞ்சம் புழுதி கிளப்பு’னு சொல்லிட்டு ஃபிரேம் பிக்ஸ் பண்ணி எடுக்க ஆரம்பிச்சிருவேன். சமயத்துல நான் எடுக்க நினைச்சதைவிட அந்த ஷாட் நல்லா வந்துடும். வந்ததும் உண்டு.”
“உங்கள் படங்களில் பலவிதமான பெண் பாத்திரங்கள் மிக வலுவாக இடம்பெற்றிருக்கும். இத்தனை பெண் உலகங்கள் உங்களுக்குள் எப்படி வந்தன?”
“அஞ்சு வயசு வரைக்கும் தாய்ப்பால் குடிச்சு வளர்ந்தவன் நான். அந்த உலகம் எனக்குள்ள இல்லைன்னாதான் ஆச்சர்யப்படணும். ஒரு நிமிஷம், பெண்கள் இல்லாத உலகத்தை நினைச்சுப் பாருங்க, மொத்தமா சூன்யமாகிடும். பெண்களோட உலகம், அவ்வளவு அற்புதமானது; எளிமையானது; தியாகங்கள் நிறைஞ்சது. சின்னச்சாமியை பாரதிராஜாவாக மாற்றியது பெண்கள்தான். கதைகள், புராணங்கள், காவியங்கள்னு நம் மண்ணில் பெண்களின் கதைகள் எத்தனை ஆயிரம் இருக்கு. எல்லாவற்றுக்கும் மேலாக என்னுடைய கதாசிரியர்களின் பங்களிப்பு அபாரமானது. அவர்கள் இல்லாமல் பாரதிராஜா இல்லை; பாரதிராஜாவின் படங்கள் இல்லை. ஆனால், பாரதிராஜா மீது விழுந்த அதீத வெளிச்சத்துல அவங்க மக்களின் கண்களுக்குத் தெரியாமப் போயிட்டாங்க. அந்த வருத்தம் என் மனசுல ஒரு தீராத வடுவா இருக்கு. ஆர்.செல்வராஜ், பாக்யராஜ், கலைமணி, கலைஞானம், ரத்னகுமார் - இவர்களின் பங்களிப்பு இல்லாம பாரதிராஜா எப்படிப் படம் எடுப்பான். சோர்ஸ் வேணுமில்லையா... அவங்க நெல்லக் குடுத்தாப் போதும். அரிசி, தவிடு, குருணைனு பிரிச்சு எனக்கு என்ன தேவையோ, அதை எடுத்துக்குவேன். என் கதாசிரியர்கள், பூக்கள் மாதிரி. நான் வண்டுபோல அவர்கள்கிட்டயிருந்து என் படத்துக்குத் தேவையான தேனை உறிஞ்சிக் குடிச்சிருக்கேன். இப்பவும் சில நேரம் என் படங்களைப் பார்க்கும்போது, ‘கலைமணி இல்லையே’னு கண்கலங்கும். நீங்கள் பார்க்கிற என்னுடைய படங்கள்ல விரிகிற பெண் உலகங்கள் நான் மட்டும் உருவாக்கியவை அல்ல. அவற்றில் பலரின் பங்களிப்பு இருக்கிறது. பலர் ஒருவராக, ஒருவர் பலராக எனப் பிரிக்க முடியாத வகையில் பாத்திரங்களாக வடிவமைக்கப்பட்ட மனுஷிகள் திரையில் மறுஉயிர் பெற்று உலவிக் கொண்டிருக் கிறார்கள். அவர்களுக்குத் தெரியும் அவர்களின் கர்த்தாக்கள் குறித்து.”

“இவ்வளவு அழகியல் உணர்ச்சி உங்களுக்கு எங்கிருந்து வந்தது...?”
“தேனியில பொறந்து வளர்ந்தவன்கிட்ட இந்தக் கேள்வியைக் கேட்கறீங்களே... அந்த மாதிரி ஒரு நிலவெளியில வாழ்கிறவனுக்குள்ள அவனறியாம காட்சித் துண்டுகளாக, ரிதமாக, இயற்கை பதிவாகிடும்னு நெனைக்கிறேன். எவ்வளவு விதவிதமான பருவநிலைகள், வாசனைகள், ஒலிகள், சுவைகள் நமக்குள்ள சேகரமாகிருக்கு. இதெல்லாம் ஏதாவதொரு வகையில் வெளிப்படுவது இயல்புதானே. எல்லாருக்குள்ளும் இருக்கிறதுதான். வெளிப்படுத்த வாய்ப்பு கிடைக்கும்போது அவனின் அழகியல் உணர்ச்சி ரசிக்கப்படுது. பாட்டுப் பாடி ஆடுகளை ஒண்ணு சேர்க்கிறவன்கிட்ட, துளிப் பிசகு இல்லாம மாற்றி மாற்றி மாவிடிக்கிற பெண்கள்கிட்ட இல்லையா அழகியல் உணர்ச்சி. மனிதர்கள் எல்லோருமே அழகியல் உணர்ச்சி கொண்டவங்கதான்.”
“உங்களுடைய படங்களிலிருந்து பிரிக்க முடியாத வகையில், இன்னோர் ஆளுமையின் பங்களிப்பு கலந்திருக்கிறது என்று நீங்கள் நினைத்தால் அது எது?”

“இளையராஜாவின் இசையைத்தான் சொல்ல வேண்டும். தமிழ் நிலத்தின் பச்சையம் குறையாத இசை. எடுக்க வேண்டிய காட்சிகளை மனசுக்குள் ஓட்டிப் பார்க்கும்போதே, இளையராஜாவின் பின்னணி இசைதான் உள்ளுக்குள் கேட்கும். பாடல்கள் ஒரு பக்க சாதனை என்றால், பின்னணி இசை இன்னொரு பக்க சாதனை. பல இசையமைப்பாளர்களுடன் வேலை செஞ்சிருக்கேன், அவருக்கு இணையாக இன்னும் யாரையும் நான் கண்டுபிடிக்கவே இல்லை. ஏழு ஸ்வரங்களை வைத்துக்கொண்டு அந்தக் கலைஞன் எத்தனை பாடல்களை இசைத்துத் தள்ளியிருக்கிறார். தமிழ்த்திரையில் இளையராஜா என்ற கலைஞனின் பங்களிப்பு நூற்றாண்டுகள் கடந்தும் பேசப்படும்; கொண்டாடப்படும்.”
“ஓவியம் வரைவீர்களாமே, ஓர் இயக்குநராக உங்களுக்கு அது எந்த அளவில் உதவியிருக்கிறது?”
“ஓவிய ரசனை இல்லையென்றால், ஃபிரேமே வைக்க முடியாதே. வண்ணங்கள் பற்றிய ரசனை இல்லாமல் எப்படி ஒரு சினிமாக் கலைஞன் இயங்க முடியும். இளையராஜாவுக்கும் ஓவியம் வரையத் தெரியும். ரெண்டு பேரும் பந்தயம் கட்டியெல்லாம் பெயின்டிங் வரைவோம். அழகுணர்ச்சியின் முதன்மையான வெளிப்பாடுகளில் ஒன்று ஓவியம். அது சினிமா கலைஞனுக்கு ரொம்பவே பயன்படக்கூடியது; அவசியமானது.”
“பலவிதமான கதைக்களங்களில் படங்கள் இயக்கியிருக்கிறீர்கள். எதில் அதிக அழுத்தத்துடன் பாரதிராஜா வெளிப்பட்டிருக்கிறார்?”
“எல்லாப் படங்களுக்குமே அதே உழைப்பையும் கவனத்தையும்தான் கொடுத்திருக்கிறேன். கிராமம் சார்ந்த கதைகளில், மண்ணின் மாந்தர்களைப் பற்றிய படங்களில் நான் கூடுதலாக வெளிப்பட்டிருப்பதாகச் சொல்லலாம். அதில் கூடுதல் மகிழ்ச்சிதான். 18 வயதுவரை நான் விளையாடித் திரிந்த என்னுடைய பால்ய காலத்தின் நினைவுகள், அதன் மீதான கூடுதல் உணர்ச்சிப் பங்களிப்பிற்கு காரணமாக இருக்கும். ‘முதல் மரியாதை’, ‘டிக் டிக் டிக்’, ‘ஒரு கைதியின் டைரி’, ‘என் உயிர்த் தோழன்’, ‘கருத்தம்மா’, ‘பொம்மலாட்டம்’ என ஒன்றுக்கு ஒன்று தொடர்பில்லாத வேறு வேறு மனிதர்களின், சூழல்களின் கதைகளைத்தான் பதிவுசெய்து வந்திருக்கிறேன். எனக்குத் தேடுவதில் ஆர்வம் உண்டு. இன்றைக்கும் தேடல் தீராதவன்தான் இந்த பாரதிராஜா. தயாராகிக்கொண்டிருக்கும் ‘ஓம்’ படம் உங்களுக்கு அதை உணர்த்தும். லண்டன், இஸ்தான்புல், துருக்கி, இமாச்சலப் பிரதேசம்னு பல நிலங்கள்ல ஷூட் பண்ணியிருக்கேன். படத்துல தெரிஞ்ச முகம்னா நான் மட்டும்தான். அந்தந்த ஊர்ல கிடைச்ச ஆள்களை நடிக்கவெச்சிருக்கேன். ‘ஓம்’ நிச்சயமா ஒரு நல்ல அனுபவமா இருக்கும்.”
“ ‘பதினாறு வயதினிலே’ படத்தில் இளநீர் தவறுவது, ‘என் உயிர்த் தோழன்’ படத்தில் ஒலிபெருக்கி ஒரு குறியீடாக வருவது என கதாபாத்திரங்களின் உணர்வுகளை, சூழ்நிலைகளை காட்சிப்படிமங்கள் வழியாக உணர்த்துவது என்கிற உத்தியை...”
(இடைமறிக்கிறார்) “அந்தக் காலத்துக்கு அது ஓகே. இப்போது நீங்கள் ஒவ்வொன்றாகக் குறிப்பிட்டுச் சொல்கிற மாதிரி படத்தில் அது வெளிப்படையாகத் தெரியக் கூடாது. அப்போ நானும் ரசிச்சேன்; மக்களும் ரசிச்சாங்க. இன்னிக்கு ஒரு டைரக்டரா படம் இயக்கும்போது அதை நான் செய்ய மாட்டேன்; இன்றைக்கு மக்களும் அதை ரசிக்க மாட்டாங்க.”
“உங்கள் கதைச் சூழலுக்கு வைரமுத்து எழுதிய வரிகளில் உங்களுக்குப் பிடித்தவை?”
“அது நிறைய இருக்கு. ஆனால், முதல்முறை அவர் என்னிடம் தந்த அவரது கவிதைத் தொகுப்பு, ‘திருத்தி எழுதிய தீர்ப்புகள்’ எனக்குப் பிடிக்கும். என்னைச் சந்திக்க, ஆர்ட்டிஸ்ட் உபால்டு வந்திருந்தார். Very good designer! அவருடன் வைரமுத்துவும் வந்திருந்தார். கிளம்பும்போது, ‘திருத்தி எழுதிய தீர்ப்புகள்’ புத்தகத்தைத் தந்து, கை கொடுத்தபடி ‘என்னைப் பயன்படுத்திக்கொள்ள முடிந்தால், பயன்படுத்திக்கொள்ளுங்கள்’னு சொல்லிட்டுப் போயிட்டார். ஸ்ரீலங்காவுக்கு ஒரு வேலை விஷயமா விமானத்துல போறேன். போகும்போது புத்தகத்தை வாசிக்கிறேன். பிரமாதமா இருக்கு. எல்லாத்துக்கும் மேல, கவிதைகள்ல பெரியகுளம் வருது; மேற்குத் தொடர்ச்சி மலை வருது; என் மண்ணு, என் மேகங்கள் வருது. ஊருக்கு வந்த உடனே, ஆளைப் புடிச்சு கொண்டுவாங்கனு சொல்லிட்டேன். ‘நிழல்கள்’ பட வேலைகள் நடக்குது. இளையராஜாவும் நானும் கம்போஸிங்ல இருக்கோம். மிடுக்கான உடை, கர்வம்கொண்ட பார்வை, முறுக்கப்பட்ட மீசை, உள்ளே நுழைந்தவுடன் இனிப்பு கொடுத்தார் வைரமுத்து. ‘என்ன விஷயம்’னேன். ‘மகன் பிறந்திருக்கிறான்’னார். மதன் கார்க்கி அப்பதான் பிறந்திருக்கான். இளையராஜாகிட்ட அறிமுகப்படுத்தி வெச்சேன். ராஜா, ‘பொன்மாலைப் பொழுது’ ட்யூனை தத்தகாரத்தில் வாசிச்சுக் காண்பிக்கிறார். ஒரு பேப்பரை வாங்கி வரிகளை எழுத ஆரம்பிச்சிட்டார் வைரமுத்து. இளையராஜா மீட்டருக்கு கரெக்டா இருக்கானு செக் பண்றார். கச்சிதமாவும் இருக்கு... கவித்துவமாவும் இருக்கு. ரெண்டு பேருக்கும் பிடிச்சுப்போச்சு. பிறகு, நிறைய படங்களுக்கு இளையராஜா, வைரமுத்துவை சிபாரிசு செய்தார். வீரிய வித்தான வைரமுத்து விருட்சமாக வளர்ந்தார். அவரவர் சக்திக்கு அவரவருக்கான உயரம்.”

“ ‘குற்றப்பரம்பரை’ படம் என்ன ஆச்சு?”
“தற்சமயம் ரெண்டு படங்களுக்கான வேலைகள் நடந்துகிட்டிருக்கு. அது முடிஞ்சதும் ‘குற்றப்பரம்பரை’தான். ரெண்டு மணி நேரத்துக்குள் எடுத்து முடிச்சிர முடியாத வரலாறு அது. பெரிய பட்ஜெட் தேவைப்படும். இன்றைக்கு எவ்வளவோ தொழில்நுட்பங்கள், வெளியீட்டு விஷயங்கள் வந்தாச்சு. ஒரு நீளத் தொடராப் பண்ணலாம்னு ஒரு ஐடியா இருக்கு, கண்டிப்பா சீக்கிரம் பண்ணுவேன்.”
“ஈழப்பிரச்னை குறித்து படம் ஒன்றை இயக்கித் தரச் சொல்லி பிரபாகரன் கேட்டிருந்தாராமே, என்ன ஆச்சு... ஏன் அதைச் செய்ய முடியாமல் போச்சு?”
“என் வாழ்வில் பெரிய குறையாக அது நிகழ்ந்துவிட்டது. எவ்வளவு பெரிய தலைவன் பிரபாகரன். ஈழம் சென்றபோது, எல்லா இயக்கக் கட்டுப்பாடுகளையும் தளர்த்திக்கொண்டு என்னை கட்டியணைத்து க்கொண்டார். தமிழ்ச்செல்வன்தான் என்னை அழைத்துச் சென்றார். பிரபாகரன், தமிழ்ச்செல்வன், பொட்டுஅம்மான், சூசை நால்வருடனும் ஒரே நேரத்தில் அமர்ந்து பேசுவது என்பது மிகப் பெரிய விஷயம். அந்த வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. ‘மண்வாசனை’ படம் வெளியானபோது மதுரையில் தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்துகொண்டிருந்தேன். அப்போதே உங்களைச் சந்திக்க முயற்சித்தேன். பின்னொரு முறை வீரமணி அண்ணனிடம் சொல்லி சந்திக்க முயற்சித்தேன். முடியாமல் போய்விட்டது. நான் உங்கள் ரசிகன். நீங்கள் வருகிறீர்கள் என்றதும் உங்களிடம் பேசுவதற்காக ‘கண்களால் கைது செய்’ படம் வரை அத்தனைப் படங்களையும் போட்டுப் பார்த்தேன்’ என்றார் பிரபாகரன். அது அமைதிக்காலம். திருமாவளவனும் அப்போது அங்குதான் இருக்கிறார் என்று சொன்னார்கள். ரெண்டு நாள் இளைஞர்களுக்கு நான் சினிமா குறித்து வகுப்பெடுத்தேன். ‘எங்கள் பிள்ளைகளுக்கு முழுமையான வகுப்பெடுக்க வேணும்’னார். நான், ‘எங்கெங்கோ ஷூட்டிங்கில இருப்பேன்’னேன். ‘நீங்கள் இடத்தைச் சொல்லுங்கள். விசா இல்லாமல் எங்கள் பிள்ளைகள் அங்கு வந்து சேர்ந்துவிடுவார்கள்’ என்றார். ‘நான் ஒரு சராசரி மனிதன். எனக்கு சில குடும்பக் கடமைகள் இருக்கு. அதை முடிச்சுட்டு கண்டிப்பா வர்றேன். இங்கேயே வந்து தங்கி இருந்து வகுப்பெடுக்கிறேன். படமும் எடுக்கிறேன்’னேன். எனக்கு அப்போது அந்தத் தீவிர உணர்வு இருந்தது. என்னென்னமோ நடந்து முடிந்துவிட்டது. காலங்கள் ஓடிவிட்டன. எவ்வளவு பெரிய வீரர்கள் அந்த இளைஞர்கள். பெண் புலிகளைப் பார்த்து வியந்துபோயிருக்கிறேன். அவர்களைப்போல் போராளிகளைப் பார்ப்பது அரிது. இங்கிருந்துகொண்டு, நாம் தமிழ் இனம், தமிழ்மொழி என்று பேசுகிறோம். ஆனால், இனம், மொழி, நிலம், குறித்துப் பேச கூடுதல் உரிமை கொண்டவர்கள் ஈழத்தமிழர்கள்தான். உண்மையில், பிரபாகரனின் விருப்பத்தை நிறைவேற்ற முடியாமல் போனது குற்ற உணர்ச்சியாக இருக்கிறது.”
“ ‘ஆயுத எழுத்து’ படத்தில் எதிர்மறைப் பாத்திரத்தில் நீங்கள் நடித்தது பிடிக்கவில்லை என்றாராமே பிரபாகரன்?”
“ஆமாம். ‘அந்தப் பாத்திரத்தில் உங்களைப் பார்க்கப் பிடிக்கவில்லை’ என்றார். அதிலும் குறிப்பாக, ‘நீங்கள் கறுப்புச் சட்டை போட்டு நடித்ததில் வருத்தம்’ என்றார். Such a great Man!”
“உங்கள் படங்களில் நடித்த நடிகர் நடிகைகளில் மிகப் பிடித்தவர் யார் என்ற கேள்விக்கு, ‘ஹீரோ முதல் காமெடியன் வரை எல்லோரிலும் பிரதிபலிப்பது நானே. எனவே, என்னைத்தான் எனக்குப் பிடிக்கும்’ என்று சொல்லியிருந்தீர்கள். இதுவரை நீங்கள் உருவாக்கிய பாத்திரங்களில் நிஜ பாரதிராஜா வெளிப்பட்டிருக்கிறாரா?”
“இதுவரை இல்லை. அதை எடுக்க நினைத்துதான் ஒரு ஸ்கிரிப்ட் தயார் பண்ணினேன். என் வாழ்க்கையில் என்னைக் கடந்துபோன ஏழு பாத்திரங்கள்... அவர்களின் நான் என்பது மாதிரி ஒரு கதை. அதுக்குள் ‘ஓம்’ படம் செய்யவேண்டியதாகி விட்டது. But no issues!”

“ ‘என்னுயிர்த் தோழன்’ படம் அப்போது மக்களால் எப்படி எதிர்கொள்ளப்பட்டது? அரசியல் கட்சிகளிடமிருந்து ஏதேனும் அழுத்தங்கள் வந்தனவா?”
“படம் ரிலீஸுக்குத் தயாராகிட்டிருந்த நேரம். கலைஞர் அந்தப் படத்தைப் பார்க்க விருப்பப்பட்டார். அரசியல் படம், ஏதாவது மனசு வருத்தப்படக் கூடாது என்று நான் காட்டவில்லை. ரிலீஸ் செய்துவிட்டேன். எங்கிருந்தும் என்னவிதமான பிரச்னைகளும் இல்லை. தென்னாற்காடு வடஆற்காடு பகுதிகளில் மட்டும் சில குறிப்பிட்ட காட்சிகள் தியேட்டரில் வெட்டப்பட்டதாகச் சொன்னார்கள். நான் பெரிதுபடுத்தவில்லை. போகட்டும் என விட்டுவிட்டேன். எனது மற்றப் படங்களின் மீதான எதிர்பார்ப்பில் வந்த ரசிகர்களுக்குப் படம் ஏனோ, அந்தச் சமயத்தில் பிடிக்கவில்லை. சினிமா என்பது அடிப்படையில் ஒரு பொழுதுபோக்கு மீடியம். முழுமையாக மருத்தைக் கொடுக்கக் கூடாது. இனிப்பு கலந்துதான் கொடுக்கணுங்கிறதைப் புரிஞ்சுகிட்டேன். ஒரு பெரிய மனுஷன் சொன்னார், ‘யோவ்... படத்தை தியேட்டர்ல உட்கார்ந்து பார்க்க முடியல. குப்பத்து ஸ்மெல் அடிக்கிற உணர்வே வந்திருச்சு’ன்னார். நான் சொன்னேன், ‘யோவ்... அதுதான் படத்தோட வெற்றினு. அவருக்குப் புரியல. சில நேரம் சில விஷயங்கள் புரியாமலோ, புடிக்காமலோ போயிடும். ஆனா, புது டைரக்டர்ஸ் பல பேர், ‘என் உயிர்த்தோழன்’ இப்போ வர வேண்டிய படம் சார்’னு சொல்றாங்க. உண்மைதான். இன்றைய அரசியல் சூழ்நிலைக்கு அதன் ரெண்டாம் பாகத்தை எடுக்கலாம்.”
“விளிம்புநிலை மக்களின் ‘மெட்ராஸ் மொழி’ துல்லியமாகப் பதிவுசெய்யப்பட்ட படம் அது. எப்படி அதைச் சாத்தியப்படுத்தினீர்கள்?”
“வசனம் எழுதியது கலைமணி. அதுக்கு உயிர்கொடுத்து, அந்த பாஷையின் ஜீவன் கெடாமக் கொண்டுவந்தவன் பாபு. அவன் நடிச்ச கேரக்டர்ல வேறு ஒருத்தர் நடிச்சிட்டிருந்தார். பாபு எல்லாருக்கும் சொல்லிக் கொடுத்திட்டிருந்தான். அவன் சொல்லிக் கொடுக்கிற விதத்தைப் பார்த்தேன், ‘நீயே நடி’ன்னு சொல்லிட்டேன். தயங்கினான்... பிறகு நல்லா பண்ணினான்.”
“தமிழ் வட்டார மொழிகள்ல எந்த மொழி உங்களுக்கு ரொம்பப் பிடிக்கும்?”
“கொங்குத் தமிழ் பிடிக்கும். ஆனா, மதுரை மொழிபோல மனசுக்கு நெருக்கமா வேறொன்ன என்னளவுல சொல்ல முடியாது.”
“அரசியல் ரீதியாக உங்களை எப்படி அடையாளப்படுத்திக்கொள்வீர்கள்?”
“நல்ல ஜனநாயகக் குடிமகன் நான். என் மக்கள் மீதும் என் மொழி மீதும் சிறு கீறல் ஏற்பட்டாலும் அதற்காகக் குரல்கொடுக்கக்கூடிய உணர்வாளன். எனது சமூக அக்கறை என்பது, ஒருவகையில் சுயநலமானது. அம்மா மீதான பாசத்தைப்போல இந்த மண்ணின் மீது, மொழியின் மீது, மக்களின் மீதான ஒரு முரட்டுப் பாசம். அவ்வளவுதான். இங்கே பலரும் பலவிதமாகப் பிரிந்துகிடக்கிறோம். யார் எப்படியோ, தமிழ் மண்ணின் மகன் நான் என்பதைவிட வேறு அடையாளங்கள் எனக்கு வேண்டாம். நான் எல்லாப் பொதுமேடைகளிலும் காலங்காலமாகச் சொல்லி வருகிறேன். ‘உங்களுடைய தனிப்பட்ட அரசியல் அடையாளங்களை துறந்துவிட்டு தமிழன் என்ற அடையாளத்தோடு போராட வாருங்கள்’. நல்லகண்ணு, பழ.நெடுமாறன், திருமாவளவன், ஜான்பாண்டியன் உள்ளிட்ட பலர் மேடையில் இருந்தபோது நான் சொன்னேன், ‘இந்த மேடையிலிருக்கும் நீங்கள் அனைவருமே மொழிரீதியாக ஒன்றுபட்டு விட்டுக்கொடுக்காமல் போராடுகிறீர்கள், நல்ல விஷயம். ஆனால், உங்களுக்கு என்று தனித்த கூடாரங்கள், அடையாளங்கள், கொடிகளை வைத்திருக்கிறீர்கள். கொஞ்சம் சிந்தியுங்கள், கவனமாக இருங்கள். புழக்கடைப் பக்கமாக யாரோ வந்துகொண்டிருக்கிறார்கள்; ஏதோ நுழைந்துகொண்டிருக்கிறது; நாமோ திண்ணையில் உட்கார்ந்து கதை பேசிக் கொண்டிருக்கிறோம். நாம் கவனமற்று இருக்கிறோம். நமது மொழியை பண்பாட்டை அழிக்க நினைக்கும் அதிகாரம், கொஞ்சம் கொஞ்சமாக நாம் அறியாத வண்னம் உள்ளே ரகசியமாக நுழைந்துகொண்டி ருக்கிறது. நம் மொழிக்கும் பண்பாட்டுக்கும் ஆபத்து நெருங்குகிறது’ என்று பேசினேன். முத்துக்குமார் தன்னை மாய்த்துக் கொண்டபோதே, தமிழ் என்கிற ஒரே குடையின் கீழ் அனைவரும் ஒன்றுசேர்ந்து போராடியிருக்க வேண்டும். அப்படிக் கூடி வலுவாகப் போராட்டத்தை முன்னெடுத்துக் குரல்கொடுத்திருந்தால், ஈழம் மலர்ந்திருக்கும். நாம் தவறவிட்டுவிட்டோம். இனியும் ஏமாறக் கூடாது என்று கவலைப்படுபவனாக இருக்கிறேன்.”

“உங்களுடைய வாசிப்பு உலகம் எப்படியானது?”
“எல்லா வகைமையிலான புத்தகங்களையும் வாசிச்சிருக்கேன். ‘எழுத்து’, ‘கசடதபற’, ‘கணையாழி’, ‘தீம்தரிகிட’ போன்ற சிறுபத்திரிகைகளைத் தொடர்ந்து வாசிச்ச காலமும் உண்டு. கல்கி, அகிலன், ஜெயகாந்தன், நா.பார்த்தசாரதி போன்றவர்களை இரவு பகலாக வாசித்து விவாதிச்சிருக்கேன். ‘சமூகம் என்பது நாலு பேர்’ கதையைப் படமெடுக்க ஆசைப்பட்டேன். சினிமாவுக்கு வந்த பிறகு, சினிமா கதாசிரியர்களுக்குள்ளேயே என் வட்டம் முடிந்துவிட்டது. சமீபத்தில் பெரியார் திடலில் ஒரு புத்தகக் காட்சிக்குப் போயிருந்தபோதுதான் உணர்ந்தேன், ‘அய்யோ... நம்மை நாமே தொலைச்சிட்டோமே... புத்தகங்களால் ஆன ஓர் அற்புதமான உலகை கண்டுகொள்ளாமல் இருந்துவிட்டோமே’னு பெரிய குற்ற உணர்ச்சியாகிப் போச்சு. பலரும் அன்பளிப்பா பல புத்தகங்களைக் கொடுத்தாங்க. வாங்கிவெச்சிருக்கேன், வாசிக்கணும். மறுபடியும் முதல்லயிருந்து ஆரம்பிக்கப் போறேன். இலக்கியத்துடனான எனது தொடர்பில் எனது மதிப்புமிக்க நினைவாக ஜெயகாந்தன் இருக்கிறார். நான் வாசித்துப் பிரமித்த ஒரு ஆளுமை எனக்குப் பழகக் கிடைத்தார். ஒருமுறை இளையராஜா, நான், கங்கைஅமரன் மூவருமாக ஒரு நாடகம் பார்க்கப் போயிருந்தோம். அங்கே வந்திருந்த ஜெயகாந்தனிடம், ‘சமூகம் என்பது நான்கு பேர்’ கதையை நாடகம் போடணும்; உங்க அனுமதி வேணும்’னு கேட்டேன். ‘எதுக்கு அனுமதி? அதெல்லாம் ஒண்ணும் வேணாம். நாடகத்தை நல்லாப் பண்ணுங்கன்னார்.’ அதுதான் பெருந்தன்மை. அவரது இறுதி நாள்களில் நான் போய் சந்தித்தேன். ‘ஒண்ணும் இல்ல சரியாகிடும்’ என்றார். அந்த முகம் கண்ணுக்குள் அப்படியே இருக்கிறது.”
“மூன்று தலைமுறையைப் பார்த்துவிட்டீர்கள்... இந்தத் தமிழ்ச் சமூகம் எவ்வளவு முன்னேறியிருக்கிறது? எவ்வளவு விஷயங்களை இழந்திருக்கிறது?”
“இன்றைக்குத் தமிழ் இளைஞன், தன்னோட பெருமையை வரலாற்றை அறிஞ்சிருக்கானா? அவன் மண்ணுக்கு என்ன நேர்ந்துக்கிட்டிருக்குனு அவனுக்குப் புரியுதா? பிறமொழிக்காரன் இங்கே வந்து அண்ணன் தம்பியாகப் பழகி மெள்ள மெள்ள அதிகாரம் வரைக்கும் வந்துடுறான். ஆனால், தமிழன் தனக்கான அடிப்படை உரிமைகளைக்கூட விட்டுக்கொடுத்துட்டு நிற்கிறான். வெளி மாநிலத்தின் பல பண்டிகைகளுக்கு இங்கே விடுமுறை விடுறோம். எதுக்கு? இங்க வாழ்ற அவங்க கொண்டாட. ஆனா, எத்தனைத் தமிழ்ப் பண்டிகைகளுக்கு மற்ற மாநிலங்கள்ல விடுமுறை விடுறாங்க. சீமான் சரியாத்தான் கேட்கிறான். ஒரு கட்சியும் கொடியுமா நின்னு பேசுறதுல எனக்கு அவன்கிட்ட முரண்பாடு இருக்கு. ஆனா, கருத்து சார்ந்து இல்ல. அந்தத் தனிப்பட்ட அடையாளத்தை துறந்து, ஓட்டு அரசியல், ஆட்சி அதிகாரம்னு இல்லாம வந்தான்னா, முதல் ஆளா அவன் பின்னாடி போய் நிற்பேன். இன்றைக்கு இந்த மக்களுக்கும் மண்ணுக்கும் மொழிக்கும் உணர்வுப்பூர்வமாக நிற்கும் ஒருவன் சீமான் மட்டும்தான். பெற்றதும் இழந்ததும் நிறைய இருக்கு. ஆனா, தமிழன் என்கிற அடையாளத்தோடு ஒன்றிணையாமல் எதையும் மீட்க முடியாது!”
“ஐ.பி.எல் போட்டியை நடத்த எதிர்ப்பு தெரிவித்த போராட்டத்தில், இந்த ஒன்றிணைவு சாத்தியப்பட்டதா?”

“தமீம் அன்சாரி, தனியரசு, மணியரசன், சீமான் போன்றவங்க தங்களோட கொடி இல்லாமல், கட்சி அடையாளங்களை ஒதுக்கிவச்சுட்டு போராட்டத்தில் கலந்துக்கிட்டாங்களே... எவ்வளவு முக்கியமான விஷயம். இந்த ஒற்றுமை எவ்வளவு பெரிய வெற்றி... இந்த வெற்றியை தமிழகம் முழுக்கக் கொண்டுபோனால், இந்தப் போராட்ட முறையைக் கொண்டு போனால், எந்தப் பிரச்னையிலும் ஜெயிக்கலாமே! நல்லது நடக்கணும்னு நெனச்சா எல்லாமே சாத்தியம்தான்.”
“முழு முற்றான சாதி ஒழிப்பு சாத்தியமா? அதற்கு மிக முக்கியமான தீர்வாக என்ன இருக்க முடியும்?”
“எல்லாருக்குள்ளயும் சாதி உணர்வு இருக்கு. அல்லது எல்லார் மேலயும் சாதி சார்ந்த சந்தேகம் இருக்கு. இதெல்லாம் மறைஞ்சுபோகணும். சாதி ஒழிப்புக்கு, முதல்ல பள்ளிக்கூடத்தில் புதுசா சேர வர்றவன்கிட்ட என்ன சாதினு கேட்டு பதியக் கூடாது. அங்கிருந்துதான் இந்த உணர்வு ஆரம்பமாகுது. என்ன சாதி... என்ன மதம்... ரெண்டுலயும் ‘தமிழன்’னு போடு. சாதி பதிவதில், பதியாமல் விடுவதில் சிலருக்கு சாதக பாதகங்கள் இருக்கு. அதை எப்படிச் சரிசெய்றதுனு கூடிப் பேசுவோம்; திட்டமிடுவோம். ஆனா, பள்ளிக் கூடத்துலத் தொடங்கி பிள்ளைகள் மேல படியிற இந்தச் சாதியை வேரறுத்தாகணும். தெருப் பெயர்களில் இருந்த சாதிப் பெயர்களையெல்லாம் அழிச்சீங்களே... அதைப்போல பள்ளிக்கூட ரெக்கார்ட்-லிருந்து சாதியை அழிக்கணும். இன்னொரு வகையில், சாதிகளை ஒழிப்பதற்கு, காதல் திருமணங்கள், சாதி மறுப்புத் திருமணங்கள்தான் வலுவான தீர்வாக இருக்கும். சாதியை வளர்க்க நினைப்பவர்கள் காதல் எனும் உணர்வுக்கே எதிரானவர்கள். என் மகள் ஆஸ்திரேலியாவுக்குப் படிக்கப்போனபோது, ‘உனக்கு விருப்பமிருந்தா உனக்குப் பிடிச்ச பையனைக் காதலித்துத் திருமணம் செய்துகொள்ளலாம். எதைப் பற்றியும் கவலைப்படாதே’னு சொல்லி அனுப்பினேன். எந்த அப்பனாவது பெத்த மகள்கிட்ட அப்படிச் சொல்வானா? நான் சொன்னேன். காதல் மேல எனக்கு நம்பிக்கை இருக்கு, அது சாதித் தடைகளை மீறி மனிதர்களை ஒன்று சேர்க்கும்.”

“எல்லா முதலமைச்சர்களிடமும் நட்புகொண்டவராக இருந்திருக்கிறீர்கள். அது, ஏதேனும் ஒரு வகையில் படைப்பாளியான பாரதிராஜாவுக்கு சிரமமானதாக, அழுத்தமாக இருந்திருக்கிறதா?”
“ஒருபோதும் அப்படி இருந்ததில்லை. ஏனென்றால், அவர்கள் முதலமைச்சர்கள் என்றும் பாராமல், தொடர்ந்து பல விஷயங்களுக்காக அவர்களுடன் சண்டை போட்டவன் நான். கருணாநிதி, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகிய மூன்று பேரிடமும் முரண்பட்டிருக்கிறேன்; சண்டை போட்டிருக்கிறேன். ஆனால், நான் ஒரு கலைஞன் என்பதால், மூவரும் என்னை அன்பால் அரவணைத்துக்கொண்டார்கள். யாருக்குமே கிடைக்காத பேறு அது. அது என்னுடைய தனிப்பட்ட குணம் என்பதைப் புரிந்துகொண்டார்கள். அவர்களிடம் எவ்வளவு பிரச்னை செய்தாலும், என்னை என் விருப்பத்துக்குரிய வழியில் போக அனுமதித்த பெருந்தன்மை மூவருக்குமே உண்டு.”
“ ‘வேதம் புதிது’ படத்தின் சென்சார் சான்றிதழுக்கு ‘காஞ்சிபுரத்தில்’ கடிதம் வாங்கிவரச் சொன்னார்கள் என்று ஒரு செய்தி உண்டு. அதை எப்படி எதிர்கொண்டீர்கள்?”
“அந்தப் படத்தின் சென்சார் பிரச்னைகளைச் சரிசெய்ய எம்.ஜி.ஆர், பல முயற்சிகளைச் செய்துகொண்டிருந்தார். அவருக்கு உடல்நிலை சரியில்லாமலிருந்தது. நான் பொறுத்துப் பொறுத்துப் பார்த்துவிட்டு, ஒருநாள் சென்சார் ஆபீஸ் போனேன். என்ன பிரச்னைனு கேட்டேன். அந்தக் காட்சியில அப்டி, இந்தக் காட்சியில இப்டினு எதையும் முழுசாச் சொல்லாம, அப்டி இப்டினு இழுத்தடிக்கிறாங்க. ‘என்ன விஷயம் தெளிவா சொல்லுங்க. நான் என்ன செய்யணும்’னு கேட்டேன். ‘காஞ்சிபுரம் போய் சின்னதா ஒரு நோ அப்ஜெக்ஷன் சர்ட்டிஃபிகேட் வாங்கிட்டு வந்திருங்க’னு சொன்னாங்க. நான், ‘அப்டியா... சரி நாளைக்கு காலையில, என் இனிய தமிழ் மக்களேனு ஒரு அறிக்கை விட்டுட்டு, படத்தோட மொத்த நெகட்டிவையும் எடுத்துட்டு வந்து இந்த வாசல்ல வெச்சு கொளுத்துவேன். மொத்த தமிழ்நாட்டுக்கும் சொல்லிட்டுக் கொளுத்துவேன்... பார்த்துக்கங்க’னு சொல்லிட்டுவந்துட்டேன். 24 மணி நேரத்தில சர்ட்டிஃபிகேட் கொடுத்துட்டாங்க.”
“மனதளவில் முதுமையை உணர்ந்ததுபோலவே தெரியவில்லையே?”
“என்ன பண்றது... எனக்கு முதுமையாகலையே. இல்லாத ஒன்றை நான் இருப்பதாகச் சொல்ல முடியுமா? அப்படி எனக்கு வயசான மாதிரி உங்களுக்குத் தோணுச்சுன்னா, உங்க பார்வையிலதான் ஏதோ பிரச்னைனு அர்த்தம்.” (சிரிக்கிறார்)
“உங்களுடைய 76 ஆண்டு கால வாழ்வனுபவத்தின் உயரத்தில் நின்று, ஒரு டாப் ஆங்கிள் ஃபிரேமில் உங்கள் வாழ்க்கையைப் பார்க்கும்போது என்ன தோன்றுகிறது?”
“ஏன்டா ராஸ்கல்... ஒளிவுமறைவு இல்லாமலேயே வாழ்ந்திருக்கியேடா... கொஞ்சம் சூதானமா இருந்திருந்தா, இன்னும் நல்ல மாதிரியா வேற வாழ்க்கை கிடைச்சிருக்குமே... ஆனா, அந்த வாழ்க்கை ருசிச்சிருக்காது... இப்போ இருக்கிற இடம்தான் உனக்குச் சரியான இடம். தக்க வெச்சிக்கிட்ட. Good!”
“பாரதிராஜா எதில் தோற்றவர், எதில் ஜெயித்தவர்?”
“சமூகத்தின் எல்லா விஷயங்களிலும் ஜெயிச்சிருக்கேன். ஆனால், எனது தனிப்பட்ட வாழ்வில் ஒரு சின்னத் தோல்வி நேர்ந்திருச்சு. I am sorry! அதை உங்களோடு பகிர்ந்துக்க முடியாது.”
“காதல் என்கிற உணர்வைப் பற்றி உங்களுடைய புரிதல் என்னவாக இருக்கிறது?”
“நிலா கையில் கிட்டாத வரை அதன் மீது காதல் இருந்தது. அதன் மீது கால்வைத்த அன்றே அதன் மீதான பிரமிப்பு போய்விட்டது. அது மனிதன் கால்வைத்த ஒரு தரையாகிவிட்டது. நிலா மீதான எல்லா புனைவுகளும் முடிந்துபோய்விட்டன. எனக்கு அவள் கிட்டாத வரை காதல் ஜீவிதம். கிடைத்துவிட்டால் அங்கே யாவும் முடிவுக்கு வந்துவிடும். பார்க்க முடியாத, தொட முடியாத தூரம்... ஏக்கம்... நெஞ்செல்லாம் தொட்டுவிடும் ஆசை... ஆனால், காலமோ யாரையும் கேட்காமல் நரைத்துவிட்டது. உலகக் காவியங்கள் எல்லாம் அப்படித்தான். அம்பிகாபதி - அமராவதி, லைலா - மஜ்னு, ரோமியோ - ஜூலியட் என எந்த உலக இலக்கியத்திலும் காதல் ஒன்று சேர்ந்ததில்லை. ஒன்று சேர்ந்துவிடும்போது, அதில் காவியத் தருணங்கள் ஏதும் இல்லை. ஏங்கிக்கொண்டே இருக்க வேண்டும் இறப்பு வரை. அந்தக் காதல் உணர்வு மகத்தானது.”
“தொடர்ந்து போராட்டங்களில் அரசியல் சார்ந்த பிரச்னைகளில் குரல்கொடுத்து வருகிறீர்கள். தேர்தல் அரசியலுக்கு வரும் எண்ணம் உண்டா?”
“துளியளவுகூடக் கிடையாது. எப்போதும்!”
“இவ்வளவு நேர நெருக்கடிகளுக்கு மத்தியில் உங்களை எப்படி ரிலாக்ஸ் செய்துகொள்கிறீர்கள்?”
“இரவு எட்டு மணிக்கு மேல் என் உலகத்தில் நான் இருப்பேன். அந்த உலகம் குறித்து உங்களுக்கு ஆயிரம் கருத்துகள் இருக்கலாம். அது எனக்கேயான இடம். அங்கே உங்கள் அறிவுரைகள் நுழைவதற்கான ஜன்னல்களே கிடையாது.” (சிரிக்கிறார்)

“இந்த ஜீன்ஸ் உடை உங்கள் விருப்பம். ஆனால், ஏன் வேட்டி அணிவதே இல்லை?”
“இந்த உடைக்கு நான் பழகிவிட்டேன். வேறு எந்தக் காரணமும் கிடையாது. மேலும், எனது work Nature -க்கு இந்த ஆடை More comfortable. ஒவ்வொருவருக்கும் physical ஆக ஓர் அடையாளம் உருவாகியிருக்கும். அப்படி என்னுடைய அடையாளமாக இந்த ஜீன்ஸ், டீ ஷர்ட் ஆகிவிட்டது. நான் வேஷ்டி சட்டை என்று ஆடையை மாற்றிக்கொண்டால், இன்றைக்கு அரசியல் பேசுவதால், வேஷம் போடுவதாகப் பார்க்கப்படும். உடையை விட்டுத்தள்ளுங்கள், உடைக்குள் இருக்கிற இந்த பாரதிராஜா இந்த மண்ணின் பிள்ளைதான்.”
“உங்களுடைய ஆன்மிக நம்பிக்கை எப்படியானது?”
“பிடித்த மனிதர்கள், இடங்கள், பொருள்கள், என் மூதாதையர்கள் எல்லாருமே நான் வழிபடுகிற விஷயங்கள்தான். என்னைச் சுற்றியுள்ள அனைத்திற்கும் உயிர் இருக்கிறது என்று நம்புகிறேன். அதை வணங்குகிறேன். மற்றபடி மதம் சார்ந்த நம்பிக்கைகள் இல்லை.”
“பாரதிராஜாவுக்கு முந்தைய சின்னச்சாமியை நினைத்துப் பார்ப்பது உண்டா?”

“இழப்பதற்கு ஒன்றுமில்லை என்று வாழ்கிற வாழ்க்கை இருக்கே, அவ்வளவு சுகமானது. இழப்பதற்கு இருப்பவர்கள் அது குறித்த பயத்திலேயே காலம் முழுதும் வாழ வேண்டும். ஞானம் சொல்கிறது, இது உன்னுடையதில்லை என. ஆனால், உணர்ச்சி கேட்கமாட்டேன் என்கிறது. இல்லாமையின் சுகம், இருப்பதில் இல்லை. வீடு, வாசல், கார் என எல்லாமே இருக்கிறது. ஆனால், உண்மை இல்லை. இந்த வாழ்வில் உண்மைதான் அடையமுடியாத செல்வமாக இருக்கிறது. உண்மைதான் நமது அகத்தையும் புறத்தையும் விமர்சித்துச் சிரிக்கிறது. கோவணம் கட்டி வாழ்றவன் வாழ்க்கையில இருக்கிற சுகம், உண்மை, இந்தக் கோட் சூட் போட்டுக்கிட்டு வாழ்ற வாழ்க்கையில இல்ல. என்னுடைய பழைய வாழ்க்கை கோவணம் கட்டி வாழ்ந்த வாழ்க்கை, ஒப்பனை இல்லாத வாழ்க்கை. சின்னச்சாமியோ பாரதிராஜாவோ ரெண்டு பேருமே உண்மைக்கு நெருக்கமாப் பேசி, வாழ விரும்புகிற மனிதர்கள்தான். உண்மைக்கும் எனக்குமான நட்பில், முரணில் வாழ்க்கை நகர்ந்துபோகிறது.”
“சினிமா இயக்குநராவதற்கான அடிப்படைத் தகுதி என்று எதைக் குறிப்பிடுவீர்கள்? புதிதாக சினிமாவுக்கு வருபவர்களுக்கு என்ன சொல்ல விரும்புகிறீர்கள்?”
“புதிதாகக் கற்றுக்கொள்ள வருகிற ஒருவனிடம் எதையும் சொல்லி முதலில் பயமுறுத்த விரும்பவில்லை. தேடல் உள்ளவன் கண்டடைவான். நீட் தேர்வு மாதிரியெல்லாம் இங்கே நியாயமற்ற அறிவுக் கெடுபிடிகள் தேவையில்லை. அப்படி இருந்திருந்தால், பாரதிராஜா என்ற ஒரு இயக்குநர் இன்று கிடையாது. தினமும் எத்தனை பேரோ சென்னையில் வந்து இறங்குறார்கள். எட்டாவது பெயில், பத்தாவது பெயில் பண்ணிட்டு வர்றான். அவனை முதலில் விடுங்கள், அவன் காலை ஊன்றி அவனே எழுந்திருப்பான்.
இப்போது இன்ஸ்டிட்யூட் ஆரம்பித்திருக்கிறேன். பயிற்சி தர தனியே ஆள்கள் இருக்கிறார்கள். அங்கேயும் நான் எதையும் போதிப்பது இல்லை. மாணவர்களிடம் என்னுடைய அனுபவங்களைப் பகிர்ந்துகொள்கிறேன், அவ்வளவுதான். சினிமாவுக்கு நிரந்தரமான இலக்கணங்கள் கிடையாது. சினிமாவில் இன்னும் நான் கற்றுக்கொண்டிருக்கிற மாணவன்தான். சினிமா தொழில்நுட்பங்கள் குறித்தெல்லாம் முழுமையாக எனக்குத் தெரியாது. அந்த ஷாட் இந்த ஷாட்னு சொல்வார்கள். ஆனால், எனக்கு அதெல்லாம் தெரியாது. கோட்பாடுகளைக் கற்றுக்கொண்டு பாரதிராஜா வரவில்லை. அவன் உள்ளுணர்வின் வழியில் செல்லும் கலைஞன். நான் சாதித்திருப்பவையாக நீங்கள் குறிப்பிடுகிற விஷயங்களையும்கூட, நான் எனக்குள்ளிருந்து பீறிட்டுக் கிளம்பிய கலை வேட்கையில்தான் செய்து முடித்தேன். பதிவுசெய்யப்படாத என் மண்ணையும் மக்களையும் அவர்களின் கொண்டாட்டங்களையும் துயரங்களையும் எங்கள் கலாசார வெளியில் பரவிக்கிடக்கும் அழகியலையும் பதிவுசெய்தேன். இன்னும் கற்க வேண்டிய விஷயங்கள், ஓட வேண்டிய தூரங்கள் நிறைய இருக்கின்றன. எனக்கு முன்பிருந்தவர்களிடம் இல்லாத ஒன்று, நான் உள்நுழைந்த நேரத்தில் என்னிடம் இருந்தது. என்னிடம் இல்லாத ஒன்று இன்றைக்கு இயங்கிக்கொண்டிருக்கிற இளைஞர்களிடம் இருக்கிறது. அது எது என்று தேடி ஓடுகிறேன். சில விஷயங்களில் உடன்பாடு இருக்கிறது; சில விஷயங்களில் இல்லை. ஆனாலும் இன்றைய இளைஞர்கள், திறந்துகிடக்கிற அறிவு வெளியிலிருந்து ஏதையெதையோ அப்சர்வ் செய்து, அதை சினிமாவுக்குள் கொண்டுவருகிறார்கள். கற்றுக்கொள்கிற ஆர்வம் இருக்கும் வரைக்கும் எனக்கு வயசு ஆகாது. கற்றுக்கொள்ளும் யாருக்கும் வயசு ஏறாது.”