
ஓவியம் : வேல்

முழுவதும் எழும்பாத சிறு பனை நிழலில்
செம்போத்து தன் இணை சேர்கையில்
கள்ளின் மணம் நாறும்
கறுத்த பனைஅழகன் வந்தான்.
சப்பாத்திக்கள்ளியின் பரு மொட்டென
வெயில் ருசித்த வியர்வை வழியும்
கிறுக்கன் அவன்
கிளை இழுக்கும்
வளை கம்பொன்று
கண்ணிழுக்கும் அரை நொடியில்
மனமிழுத்துக் கொய்து நிமிர்ந்தது.
தீக்கங்கின் சர்ப்பமென உயிர் கொத்தி
உள்ளிழுத்த அவன் மூச்சில்
வெள்ளெருக்கு சிவந்தேவிட்டது.
கள்ளி முட்கள் காதுரசுவதுபோல்

அவன் அடர் மீசை அருகே வர
காத்திருக்கும் நொடி அறிந்த
கருவேல முள்நுனி சுருங்கிக் கூர்த்தது.
பேச்சற்ற பெருந்தாபத்தைப்
பாதை நெடுகக் கிடத்தியிருந்த
மஞ்சணத்திப் பூக்களோ வெட்கையின்
கவுச்சையுடன் கண்மூடிக் கிறங்கியிருந்தன.
வெயிலன் அவன்
கண் எறிந்த சொல்லைக்
களவாடிப் பறந்த குளவியொன்று
என் கண்ணில் இறக்கிவைத்துத்
தேன் கரிக்கப் பறந்தது.
பித்தம் பெருங் கயிறெனச் சுருண்டிருந்த
கரும்பன் அவன்
கருங்கழுத்தின் தாயத்தை
வாய் கவ்வி வெட்கம் தொலைக்கத்
துடித்த உதடுகளை
ஈக்கள் மோகித்து அலைந்தன.
வம்பன் அவன்
அகன்ற கரும்பலகை மார்பு
நகக்குறி வேண்டி நிற்பதைத் தேன்சிட்டு
சிற்றடி வைத்துச் சிணுங்கிக் காட்டியது.
அறிவிக்கப்படாத காதலை
அத்துமீறுகின்ற காமம்
பனம்பழ வாசமேறி வழிமொழிந்தது.
இடைத்துண்டு நெகிழ்த்தி
அழுக்கன் அவன்
எடுத்த என் கைவளையல்
நீரற்ற கண்மாயின் சுடுவெயிலாய்
சுட்டுவிரல் தொட்டுப் பற்றுகிறது.
அரவமற்ற அப்பொழுதின்
அசுரக் காதலை
முதல் மடையிலிருந்து
கடை மடை வரை அறிவிக்கிறான்
இடை மடையிலிருந்த
அருவாக் கறுப்பன்!