மற்ற எபிசோடுகள்
Published:Updated:

தெய்வ மனுஷிகள் - வீமாயி - 6

Mayi amman: Divine human Gods stories - Aval Vikatan
பிரீமியம் ஸ்டோரி
News
Mayi amman: Divine human Gods stories - Aval Vikatan

தெய்வ மனுஷிகள்வெ.நீலகண்டன் - படம் : ம.அரவிந்த் - ஓவியம் : ஸ்யாம்

பாண்டிக்கருப்பன் பெரிய பணக்காரன். ஏகப்பட்ட நிலபுலங்கள் கெடக்கு. கிராமம் கிராமமா விவசாயம் நடக்குது. ஊருக்கு நடுவுல அரண்மனை மாதிரி பெரிய வீடு. மொத்தம் ஆறு பயலுவ. எல்லாம் சூரப்புலிக. ஆனாலும், பாண்டிக்கருப்பனுக்கும் அவன் பொண்டாட்டிக்கும் ஒரு மனக்குறை உண்டு. ‘இத்தனை ஆம்பளைச் செல்வத்தைக் கொடுத்த அந்த முனியாண்டி, அள்ளிக்கொஞ்ச ஒரு பொம்பளப் புள்ளையக் கொடுக்கலையே’ன்னு. ஆனா, முனியாண்டி அந்தக் கவலையையும் தீர்த்துட்டான். ஏழாவதா ஒரு பெண் குழந்தை பிறந்தா. அந்தப் புள்ளைக்கு ‘வீமாயி’ன்னு பேரு வெச்சாக.  

Mayi amman: Divine human Gods stories - Aval Vikatan
Mayi amman: Divine human Gods stories - Aval Vikatan

வேணுங்கிறதையெல்லாம் வாங்கிக் கொடுத்து வீமாயியைத் தேவதை மாதிரி வளர்த்தாக. அண்ணங்காரன் ஆறு பேத்துக்கும் தங்கச்சின்னா உசுரு. அதுலயும் அந்த ஆறாவது பய தூண்டிக்கருப்பன், வீமாயி இல்லாம ஒரு நிமிஷம் இருக்க மாட்டான். அப்படியொரு பாசம். ஊரே ராஜகுமாரி மாதிரி வீமாயியைக் கொண்டாடுது. ஒரு தெய்வக்குழந்தையா அவ ஊருக்குள்ள வலம் வந்தா.

வீமாயிக்குப் பதினாறு வயசாச்சு. அக்கர இலக்கணத்துல இருந்து  அலங்கார சாஸ்திரம் வரைக்கும் ஆய கலைகள் அத்தனையும் கத்துக்கிட்டா. அங்க லட்சணத்தோட தங்கரதம் மாதிரி வளர்ந்து நின்னா வீமாயி. பல சீமைகள்ல இருந்து ராஜாக்கள்  பொண்ணு கேட்டு வந்து நின்னாங்க.  ‘தம் மவளுக்கு இணையா, கலைகள்ல தேர்ச்சியான தன் சாதிக்காரனுக்குத்தான் கட்டிக்கொடுப்பேன்’னு உறுதியா இருந்தான் பாண்டிக்கருப்பன். அண்ணங்காரங்களுக்கும் அதுதான் ஆசை.

அந்த ஆசைக்கு வெனையா வந்தான் வீரபத்திரன். பாண்டிக்கருப்பன் வீட்டுல கருவூலக் காவலனா இருந்தான். ஒரு வகையில வீமாயிக்குச் சொந்தக்காரன்தான். ஆனா, வசதியில்லாத பய. ஆளு திடகாத்திரமா இருப்பான். ஈட்டியை விட்டு எறிஞ்சான்னா எவ்வளவு தூரத்துல இருந்தாலும் சரியா இலக்குல போய்க் குத்தும். அந்த அளவுக்குக் குறி பாக்குறதுல கெட்டிக்காரன். வீரபத்திரனோட அப்பங்காரன் வேட்டைக்குப் போன நேரத்துல புலியடிச்சுச் செத்துப்போனான். அம்மாக்காரிதான் வளர்த்தா. வீரபத்திரனோட வீரத்தைப் பாத்துத்தான் கருவூலத்துக்குக் காவக்காரனாப் போட்டான் பாண்டிக்கருப்பன்.

ஒருக்கா, வயக்காட்டுல அறுப்பு வேலை நடந்துக்கிட்டிருந்துச்சு. வீமாயி வரப்புல நின்னு, வேலை செய்யிற பொம்பளைகள் கிட்ட பேசிச்சிரிச்சுக்கிட்டு இருந்தா. அப்போன்னு பாத்து, ஒரு நாகம் அவ கால்ல ஏறப் பாத்துச்சு. பக்கத்துல நின்னு நெல்லு மூட்டைகளைக் கணக்குப் பாத்துக்கிட்டிருந்த வீரபத்திரன், வீமாயி கால்ல பாம்பு ஏறப்போறதைப் பாத்துட்டான். உடனே, அவ கையைப் புடிச்சு தம்பக்கம் இழுத்து, பாம்பை கழுத்துல குத்தி கொன்னுட்டான்.

அவன் கைபட்ட அந்த நொடியில வீமாயிக்குள்ள காதல் பூத்திருச்சு. அதுக்கப்பறம் அவ இயல்பே மாறிப்போச்சு.  அவனைப் பாக்குறபோதெல்லாம் வெக்கப்பட்டா. அவன் நிக்குற பக்கமா நடக்க ஆரம்பிச்சா. அவனைப் பாக்கலேன்னா எதையோ இழந்தது போல ஆகிப்போச்சு. சாப்பிடும்போது, தூங்கும்போதுன்னு எப்பவும் அவனே மனசுக் குள்ள வந்து வந்து நின்னான். ஒருநா, குடும்பத்தோட குலதெய்வக் கோயிலுக்குக் கிளம்புனான் பாண்டிக் கருப்பன். அன்னிக்கின்னு பாத்து குதிரைக்காரனுக்கு உடம்பு முடியாமப் போச்சு. வீரபத்திரன் வண்டியோட்டியா வந்தான். எல்லாரும் குலதெய்வத்தைக் கும்பிட்டிக்கிட்டிருக்கும்போது, வீமாயி வீரபத்திரன்கிட்ட வந்து, ‘என்னைக் கல்யாணம் கட்டிக்கிறியா’ன்னு கேட்டா. வீரபத்திரனுக்கு தூக்கிவாரிப் போட்டுருச்சு.  ‘தாயி... என்ன வார்த்தை பேசுறிய. ஏழூரு ராஜாக்களும் உங்களை கல்யாணம் முடிக்க உங்க வீட்டுவாசல்ல வந்து தவம் கிடக்குறாக.நான் ஓர் அத்தக்கூலி. உங்கக்கிட்ட இப்படி நின்னு பேசுறது தெரிஞ்சாலே உங்க அப்பாவும் அண்ணங்காரங்களும் என் குடலை உருவிப்போட்டுருவாக. இந்த நினைப்பை மாத்திக்கிங்க தாயி’னு கையெடுத்துக் கும்பிட்டுட்டு அந்த இடத்தை விட்டுக் கிளம்பிட்டான். 

Mayi amman: Divine human Gods stories - Aval Vikatan
Mayi amman: Divine human Gods stories - Aval Vikatan

அவ்வளவு சீக்கிரம் மாறிருமா என்ன மனசு? ரத்தமும் சதையுமா வீமாயியோட உயிர்ல ஒட்டிக்கிட்டிருந்தான் வீரபத்திரன். மறக்க முடியலே. சாப்பாடு இறங்கலே. தூக்கம் வரலே. முகமெல்லாம் வத்திப் போச்சு. கண்ணெல்லாம் உள்ளே போயிருச்சு. அப்பங்காரன் ‘புள்ளைக்கு ஏதோ உடல்நோவு வந்திருச்சு’ன்னு பதறிப்போயிட்டான். குடும்ப வைத்தியரை வரவழைச்சு வைத்தியமெல்லாம் செஞ்சானுக. வைத்தியத்தால தீருற வியாதியா அது..?

வீமாயியோட நிலைமையை நெனச்சு வீரபத்திரனுக்கு வருத்தமாப் போச்சு. ‘வீமாயி மாதிரி ஒருத்தி பொண்டாட்டியா வர்றது ஏழேழு ஜென்மத்துப் புண்ணியம். ஆனா, உண்ட வீட்டுக்கு ரெண்டகம் பண்ணலாமா? பாண்டிக்கருப்பனுக்கும் அண்ணங்காரங்களுக்கும் தெரிஞ்சா வம்பாப் போயிருமே. இந்த ஊருலயே இருக்கவிடமாட்டானுவளே’னு நிறைய குழப்பம். ஆனாலும், அவன் மனசுக்குள்ள  புகுந்துட்டா வீமாயி.

ஒருநாள், வீட்டுத் தோட்டத்துல மல்லிப்பூ பறிச்சுக்கிட்டிருந்த வீமாயிக்கிட்ட போனான் வீரபத்திரன். இவனைப் பாத்தவுடனே மல்லிப்பூவா மலர்ந்துச்சு வீமாயி முகம். “தாயி... நீங்க பெரிய எடத்துல ராணி மாதிரி வாழவேண்டிய பொண்ணு. எங்க வூட்டுல நீங்க உக்கார நல்ல முக்காலிகூட இல்லை. எல்லாத்தையும் தாண்டி நாம ஒண்ணு சேர்ந்தாலும் உங்க அண்ணங்காரனுங்க நம்மளை வாழ விட மாட்டாங்க. உங்க மனசை மாத்திக்குங்க தாயி’'ன்னு சொன்னான் வீரபத்திரன்.

‘`எனக்கு மாட மாளிகையெல்லாம் வேணாம். ஒண்டிக்க சின்ன குடிசை போதும். உங்கூடத்தான் வாழ்வேன். நீ இல்லாம என்னால வாழமுடியாது. எங்க அப்பா, அண்ணங்கல்லாம் நான் கேட்ட எதையும் மறுத்ததில்லை. அவங்க நம்ம காதலுக்குத் தடையா இருக்கமாட்டாங்க'’னு வெள்ளந்தியா சொன்னா வீமாயி. வீரபத்திரனுக்கு மனசு கரைஞ்சு போச்சு. ஆளுப்பேரு இல்லாத நேரத்துல ரெண்டு பேரும் காதலை வளத்துக்கிட்டாக.

மவளுக்கு வயசாவுறதை நினைச்சு பாண்டிக்கருப்பனுக்கு கவலையாப் போச்சு. நல்லவிதமா, ஊரே மெச்சுற மாதிரி கல்யாணம் முடிக்கணும். வந்த சாதகங்கள்ல பொருத்தமா ஒரு சாதகம் எடுத்து சோசியருக்குக் கொடுத்தனுப்புனான்.

வீமாயிக்குப் புரிஞ்சுபோச்சு. இனி அமைதியா இருந்தா சரியா வராதுன்னு தெரிஞ்சு, அம்மாகாரிக்கிட்ட கதையை அவுத்தா. `‘எனக்கு வீரபத்திரனைக் கல்யாணம் கட்டிவைங்க... வேற மாப்பிள்ளை வேண்டாம்’'னு அழுதா. அம்மாகாரிக்கு மயக்கமே வந்திருச்சு. ‘`ஏண்டி... நாம எங்கே... சாப்பாட்டுக்கே வழியில்லாத அந்தக் காவக் கார பய எங்கே? உங்க அண்ணங்காரங்களுக்குத் தெரிஞ்சா கூறுகூறா அவனை வெட்டிப் போட்டுருவானுங்கடி. ஒழுங்காப் போயி ஒறங்கு. அடுத்தவாரம் மேற்குச்சீமையில இருந்து உன்னைப் பொண்ணு பாக்க வர்றாங்க’'ன்னு திட்டி அனுப்பிட்டா.

அம்மா, அப்பங்காரங்கிட்டப் பேசி எப்படியும் வீரபத்திரனைக் கட்டி வச்சிருவானு நம்புன வீமாயிக்கு அந்த நம்பிக்கை போயிருச்சு. வீரபத்திரனை தேடிப்போனா. அவனைக் கட்டிக்கிட்டு அழுதா. ‘`நாம சேர ரெண்டு வழிதான் இருக்கு.ஒண்ணு, கிணறு குளம்னு எதிலாவது குதிச்சுச் செத்துப்போறது. இல்லேன்னா வா, எங்காவது கண்காணாத இடத்துக்கு ஓடிப்போய் நிம்மதியா வாழலாம்’'னு சொன்னா.

வீரபத்திரனாலயும் வீமாயி இல்லாத வாழ்க்கையை நி்னைச்சுக்கூடப் பாக்க முடியலே. அதுக்காக கோழை மாதிரி சாகவும் அவன் விரும்பலே. ‘`இன்னிக்கு ராத்திரி தயாரா இரு... இந்த சீமையை விட்டு கிளம்பிரலாம்''னு சொன்னான்.

எப்படா சூரியன் மறையும்; நிலவு மேலேறி வரும்னு கெடையாக் கெடந்தா வீமாயி. ராத்திரியாச்சு. அப்பன், அண்ணங்காரங்கல்லாம் அவுகவுக அறையில அசந்து தூங்குனாக. அவுக காலையெல்லாம் தொட்டுக் கும்பிட்டா. சத்தமில்லாம வெளியில வந்தா. வீரபத்திரன், தயாரா குதிரை வண்டியை பூட்டிக்கிட்டு நின்னான். வீமாயி வண்டியில ஏற, குதிரை கிளம்பிருச்சு.

மலை, கரடு, களிமண், காடுன்னு திசைபுரியாம பத்தின பக்கம் ஓடுது குதிரை. ராத்திரிப்பூரா நிக்காத பயணம். காட்டுக்கு மத்தியில விரிசலா ஒரு சமவெளி. பக்கத்துல ஓர் அய்யனார் கோயிலு. வண்டியை நிறுத்தினான் வீரபத்திரன். குதிரையோட வேகமும் பெத்து வளர்த்தவுகளை விட்டுட்டு வந்துட்டோமேங்கிற வருத்தமும் வீமாயியை வதக்கிப் போட்டுருச்சு. அவளை வண்டியை விட்டு இறக்கி, அய்யனாரு கோயிலுக்குள்ள கூட்டிக்கிட்டுப் போனான் வீரபத்திரன்.

விடிஞ்சுச்சு.

வீமாயியைக் காணலேன்னு ஊரே பதைபதைச்சுப்போச்சு. கூடவே வீரபத்திரனையும் காணலே. எல்லாருக்கும் புரிஞ்சுபோச்சு... ‘அந்தப்பயதான் புள்ளைய கொண்டுபோயிட்டான்...’ பாண்டிக்கருப்பன் கொதிச்சுப்போயிட்டான். அண்ணங்காரனுங்கல்லாம் வீச்சரிவாளை கையில வெச்சுக்கிட்டு வசைபாடத் தொடங்கிட்டாக. ‘உறவுக்காரப் பயலாச்சே... சோத்துக்கு சாவுறானேன்னு ஒரு வேலையைக் கொடுத்து உக்கார வெச்சா, நம்ம வீட்டு லட்சுமி மேலயே கைய வச்சுப்புட்டானே’ன்னு வசை வசையா வந்து விழுவுது வார்த்தை.

பாண்டிக்கருப்பன் புள்ளைகளைக் கூப்பிட்டான். “எலே... ஒத்தைப் பொழுதுதான் போயிருக்கு. எவ்வளவு தூரமாப் போயிருந்தாலும் நம்ம கரட்டுக்காட்டைத் தாண்டியிருக்க முடியாது. கிளம்புங்க. நம்ம புள்ளைக்குச் சேதாரம் கூடாது. அவளைத் தூக்கிட்டுப்போன பயலோட தலையும் வரணும்''னு சொல்லி, அனுப்பி வெச்சான்.

ஆறு பேரும் தயாராகிட்டானுவ. ஆறு குதிரைகளும் குதியாட்டம் போட்டுக் கிளம்பிருச்சு. சரியா, வீரபத்திரனும் வீமாயியும் போன வழித்தடத்துலேயே போறானுவ. பொழுது ராவாகப் போவுது. அதோ, அய்யனாரு கோயிலு. பக்கத்துல குதிரைவண்டி நிக்குது. ‘வீமாயியும் வீரபத்திரனும் இங்கேதான் இருக்காங்க’ன்னு தெரிஞ்சு போச்சு. ஆறு பேரும் குதிரையை நிறுத்திட்டு இறங்குறானுவ. கையில வேல் கம்பைப் புடிச்சுக்கிட்டு பூனை மாதிரி ஒளிஞ்சு ஒளிஞ்சு கோயிலுக்குள்ள நுழைஞ்சுட்டானுவ.

உள்ளே வீமாயி மடியில வீரபத்திரன் படுத்திருக்கான். அவன் தலையைக் கோதி விட்டுக்கிட்டு உக்காந்திருந்தா வீமாயி. கோயிலுக்குள்ள ஆளரவம் கேட்குது. நிமிர்ந்து பாத்தா... ஆறு அண்ணங்காரனுகளும் சுத்தி வளைச்சு நிக்குறானுவ. எல்லாரோட கண்ணுலயும் கொலைவெறி. ‘எலே... இளையவனே... குத்துறா அவனை’னு கத்துறான் மூத்தவன். ஈட்டியை வலுவாப் புடிச்சு ஓங்குறான் தூண்டிக்கருப்பன்.

அப்படியே வீரபத்திரன் மேல படுத்து கத்திக் கதறுறா வீமாயி... ஓங்குன கையி ஒருகணம் ஓங்குனபடி நிக்குது. ‘தங்கச்சியாச்சே’னு மனசு பதைபதைக்குது. ஆனா... உடம்பெல்லாம் கொலை வெறி. கண்ணை மூடிக்கிட்டு தன் வலுவெல்லாம் திரட்டி குத்துனான் ஒரு குத்து. வீமாயியைத் துளைச்சுக்கிட்டு வீரபத்திரன் நெஞ்சுல இறங்குச்சு ஈட்டி. ரெண்டு பேரு ரத்தமும் ஒண்ணாக் கலந்து அய்யனார் கோயிலை நிறைக்குது. சின்னதா ரெண்டு துடிப்பு. அவ்வளவுதான். அப்படியே அடங்கிப்போனாக வீமாயியும் வீரபத்திரனும்.

கொலை வெறி அடங்கினபிறகு கொஞ்சம் கொஞ்சமா புத்தி திரும்புது அண்ணங் காரனுகளுக்கு. ‘அய்யோ... முனியாண்டி... உசுருக்கு உசுரா வளர்த்த தங்கச்சியைக் கொண்டுட்டமே’ன்னு எல்லாப் பயலுவளும் அழுது புலம்புறானுவ. இளைய பய தூண்டிக்கருப்பன் தங்கச்சியை மடியில தூக்கி வெச்சுக்கிட்டு மாரடிச்சு அழுவுறான். வேதனை தாளலை. எழுந்தான் தூண்டிக்கருப்பன். ஈட்டிக்கம்பை எடுத்தான். ஒரே செருவு. தனக்குத்தானே செருவிக்கிட்டான். அதைப் பாத்த மத்த அஞ்சு பேரும் அதேமாதிரி தனக்குத்தானே ஈட்டியைச் செருவிக்கிட்டு உயிரை விட்டானுவ.

தங்கச்சியை மீட்கப்போன பயலுவலைக் காணுமேன்னே அங்கே தவிச்சுப் போயி உக்காந்திருக்கான் பாண்டிக்கருப்பன். ரெண்டு நாளா ஒரு தகவலும் இல்லை. ஏதோ விபரீதமாகிப் போச்சு. இனிமே காத்திருந்து பயனில்லை. சேனையைத் திரட்டிக்கிட்டு காட்டுக்குள்ள இறங்கித் தேட ஆரம்பிச்சான். அய்யனாரு கோயிலைச் சுத்தி கழுகுங்க பறக்குது. அந்தப் பகுதியில குடியிருந்த ஆட்கள்லாம் கூடி நிக்குறாக. கோயிலு ரத்தத்துல மிதக்குது. உள்ளே எட்டு பேரோட உடம்பும் கெடக்கு.

எல்லாமே வெறுத்துப்போச்சு பாண்டிக்கருப்பனுக்கு. ‘உசுருக்கு உசுரா வளத்த எல்லாப் புள்ளைகளும் போனபிறகு நமக்கென்ன வாழ்க்கை’ன்னு யோசிச்சான். உடம்புல கிடந்த அத்தனை நகை நட்டு களையும் அவுத்து அந்தூரு ஆட்கள்கிட்ட குடுத்தான். பட்டுத்துணியெல்லாத்தையும் கழட்டி வீசிட்டு, சின்ன துண்டை இடுப்புல உடுத்திக்கிட்டு அப்படியே கால்போன போக்குல நடக்க ஆரம்பிச்சுட்டான். அந்தூரு பெரியவுகள்லாம் ஒண்ணாக்கூடி உடம்புகளை எடுத்துத் தகனம் செஞ்சாக.

இது நடந்து கொஞ்சநாளுக்கப்புறம், ராத்திரி நேரத்துல அய்யனாரு கோயிலுக்குள்ள இருந்து ஒரு பொண்ணு அழுவுற சத்தம் கேட்கத் தொடங்குச்சு. அழுவுறது வீமாயிதான்னு தெரிஞ்சுக்கிட்ட ஊர்க்காரவுக, அய்யனாருக்குப் பக்கத்துலயே அவளுக்கும் ஒரு சிலையெடுத்து படையல்போட்டு வழிபட ஆரம்பிச்சாக.

தஞ்சாவூர் மாவட்டத்துல, பேராவூரணிக்குப் பக்கத்துல கருப்பமனைன்னு ஓர் ஊரிருக்கு. அந்த ஊரோட எல்லையில, உக்கிரமா நின்னுக்கிட்டிருக்கா வீமாயி. பக்கத்துலயே ஒரு கல்வடிவமா வீரபத்திரன் உக்காந்திருக்கான். இதுதான் சம்பவம் நடந்த எடம்கிறாக.

வீமாயி முகத்துல படிஞ்சிருக்கிற கோபம் இன்னமும் வெப்பமாத் தகிக்குது. யாரும் கிட்ட நெருங்க முடியலே. `இன்னும் அவளோட அழுகை அடங்கலே... அப்பப்போ கேட்குது'ன்னு ஊராளுக சொல்றாக.

- வெ.நீலகண்டன்

படம் : ம.அரவிந்த் - ஓவியம் : ஸ்யாம்