
ஷாலினி பாண்டேவின் 100% ஆரோக்கியம்!
தெலுங்கில் வெற்றிபெற்ற ‘அர்ஜுன் ரெட்டி’ படத்தின் ஹீரோயின் ஷாலினி பாண்டே. தற்போது அவர் ‘100% காதல்’, ‘கொரில்லா’, ‘மகாநதி’ ஆகிய தமிழ் படங்களில் நடித்து வருகிறார். ‘அர்ஜுன் ரெட்டி’ படத்தில் சற்றே பருமனான தோற்றத்தில் இருந்தவர் தற்போது உடல் மெலிந்து ஸ்லிம்மாக இருக்கிறார். “நான் ஜபல்பூர் பெண். சப்பாத்தி சாப்பிட்டாதான் ஃபிட்டா இருக்க முடியும்னு இவ்வளவு நாளா நெனச்சுட்டு இருந்தேன். அந்த எண்ணம் என் தமிழ் ஃப்ரெண்ட்ஸ் மூலமா மாறிடுச்சு....” என்பவர் தன் ஃபிட்னெஸ் ரகசியங்களைப் பகிர்ந்துகொள்கிறார்.
“சின்ன வயசுல நான் ஃபிட்டாதான் இருந்தேன். ‘அர்ஜுன் ரெட்டி’ படத்துல ப்ரீத்தி கேரக்டருக்காக வெயிட் போடவேண்டிய அவசியம் ஏற்பட்டது. குண்டாகணும்னா உடம்புல இருக்குற நல்ல கொழுப்பை அதிகமாக்கணும். அந்த நேரத்துலதான் நான் அரிசி உணவுகளை அதிகமா சாப்பிட ஆரம்பிச்சேன். கூடவே பழங்களையும் காய்கறிகளையும் எடுத்துக்கிட்டேன். அவகேடோ, மாம்பழம், பேரிச்சம்பழம், பாதாம் மாதிரியான உணவுகள் உடல் எடையை அதிகரிக்கும். அதே நேரம் உடம்புக்குத் தேவையான சத்துகளையும் முழுமையா கொடுக்கும். இப்படி ஹெல்த்தியா உடல் எடை கூடினா, அதைக் குறைக்கிறதும் ஈஸியா இருக்கும். எப்போதுமே நேரத்துக்குச் சாப்பிடணும். இல்லைன்னா உடல் எடை அதிகமாகும்.

வெயில்ல ஷூட் பண்ணும்போது கறுத்துப்போன முகம் பழையமாதிரி மாறணும்னா அதிகளவு கேரட் ஜூஸ், ஆரஞ்சு ஜூஸ் குடிக்கலாம். தினமும் எனக்கான மதிய உணவுல ஏதாவது ஒரு பழம் இருக்கணும். மாதுளம் பழமா இருந்தா ரொம்ப நல்லது. அது உடல் சூட்டைத் தணிக்கும். எனக்குப் பிடிக்காத விஷயங்களில் மேக்கப்பும் ஒண்ணு. அதிகமா மேக்கப் உபயோகித்தால், சருமத்தால் சுவாசிக்க முடியாது. அதனால ஷூட்டிங் நேரத்தைத் தவிர்த்து மற்ற நாள்கள்ல மேக்கப் போட மாட்டேன். வெளியில் போகும்போது சன்-ஸ்க்ரீன் லோஷன் மட்டும் அப்ளை பண்ணுவேன்.
வாக்கிங், ஸ்கிப்பிங் மாதிரியான பயிற்சிகளைத் தினமும் ஒருமணி நேரம் செய்வேன். ஏழு கிமீ வரை ஓடுவேன். மாலை நேரங்கள்ல வியர்வை அதிகமா வெளியாகும்படி வேகமா டான்ஸ் ஆடுவேன். இதை ஒரு வாரம் செய்தாலே சுமார் ஆறேழு கிலோ எடை குறைக்கலாம்.”
ஜம்முனு சொல்கிறார் ஜபல்பூர் பொண்ணு.
- சுஜிதா சென்