கட்டுரைகள்
Published:Updated:

நிம்மதியான சிகரெட் - பா.திருச்செந்தாழை

நிம்மதியான சிகரெட் - பா.திருச்செந்தாழை
பிரீமியம் ஸ்டோரி
News
நிம்மதியான சிகரெட் - பா.திருச்செந்தாழை

ஓவியங்கள் : ரமணன்

நிம்மதியான சிகரெட் - பா.திருச்செந்தாழை

ன்று வரும் வழியில் பாதிரி செல்லையாவைப் பார்த்தேன். காய்கறி வாங்கிக்கொண்டு சைக்கிளில் வந்தவர், என்னைப் பார்த்ததும் நிதானித்தார். “பச்சை படியும்விதம் ஷேவ் செய்யப்பட்டு, மீசையற்ற மொழுமொழு கன்னங்கள் கொண்ட ஆண்களைப் பார்த்தால் gay போலவே தோன்றுகிறது” என்றவுடன்,

நிம்மதியான சிகரெட் - பா.திருச்செந்தாழை

திடுக்கிட்டு கன்னத்தைத் தடவியபடி சிரித்தார். எனது வெள்ளைப் பக்கங்கள், அவரது கறுப்புப் பக்கங்கள் மீது இருவரும் பரஸ்பர மரியாதைகொண்டிருந்தோம். உரையாடலைக் காய்கறிகளின் நச்சுத்தன்மையிலிருந்து தொடங்கியவர் பிறகு, சர்ச்சில் சிறு வேலைகள் செய்யும் லாரன்ஸும், விக்டரும் குடித்துவிட்டு சர்ச்சுக்கு வருவது குறித்தும், தேர்தல் காலங்களில் தேவாலயத்தை அம்போவென விட்டுச் சென்றுவிடுவது பற்றியும் குறைபட்டுக்கொண்டு, “சர்ச்சுக்கு வரும் பெண் பிள்ளைகள் ஒரு கையில் பைபிளும், மறு கையில் மொபைல் போனும் வைத்தபடி ஜெப வேளைகளில் ரகசியமாக அதன் வெளிச்சத் திரைகளைப் பார்த்து கீழ்த்தரமாகச் சிரித்துக்கொள்வதெல்லாம் ஊழிக்காலத்தின் ஆரம்பமின்றி வேறில்லை” என்றார். நான் மெள்ளப் புன்னகைத்தபடி, “பேசாமல் இயேசுவை ஒரு APP-ஆக மாற்றிவிடுவதுதான் எதிர்காலத்தின் மீதான சிறந்த பணி” என்றேன். அவர் அறிவியல் நகைச்சுவைகள் தனக்குச் சட்டென புரியாதென்றார். நான் தோளைக் குலுக்கிக்கொண்டேன். பிறகு, என் எழுத்து வேலை குறித்து அவர் வினவியவுடன் நான் லேசாகச் செருமியபடி “நிகழ் சமூகத்தின் மூளை, குண்டியிலும்... இதயம் பாதத்திற்குக் கீழேயும் இடம்மாறிவிட்ட பின்பு அதன் மனம் குறித்தும் அறம் பற்றியும் மதிப்பீடு செய்ய, மீண்டுமொருமுறை பிறந்து வளர வேண்டுமெனக் குழம்பினேன். அவரும் என்னைச் சமாதானப்படுத்த “இப்போதெல்லாம் பாவமன்னிப்பு வேண்டி யாரும் வருவதில்லை” என்றார். நான் சன்னமாக, “இப்போது பாவமென்பதே இல்லை!” என்றேன்.

“பேசாமல் சொந்தமாக ஒரு கனவுநிலத்தை உருவாக்கி, அதிலேயே படைப்புகளை உருவாக்கவேண்டியதுதான்” என விரக்தி தளும்ப நான் கூறி முடிக்கும் முன் அவர் மிகவும் சிரத்தையாக, “பரமபிதாவின் ராஜ்ஜியம் அங்கும் விரியட்டும்” என்றார். நான் கொஞ்சம் சினமேறி வாயெடுப்பதற்குள் பக்கத்து டீக்கடை வானொலியில் “ஏங்க... நானே பீடி வாங்க பத்து காசில்லாம பிச்சையெடுத்துக்கிட்டிருக்கேன். இதுல நீங்க வேற...” எனக் குரல் ஒலித்ததும் நான் சட்டென அசரீரி கேட்டதுபோல லகுவானேன். பாதிரி செல்லையாவோ “இவன் வேற...” என்றார் சலித்தபடி. பிறகு, தீவிர முகபாவனையைக் கொண்டுவந்தபடி “80-களில் பிறந்து 90-களில் உலகம் புரிய ஆரம்பித்தவர்கள் கிளாஸிக்கிற்கு நுனிவாலையும் நவீனத்திற்கு தலையையும் கொடுத்துவிட்டு பல்லிகளைப்போல அப்பிக்கிடக்கவேண்டியதுதான். சரி... நான் கொடுத்த ரஷ்ய இலக்கியங்களிலிருந்து ஏதேனும் திரட்ட முடிந்ததா உன்னால்...” என்றார். நானும் இறுக்கமான குரலுடன், “ஓ... எல்லா இங்கிலிஷ் வார்த்தைக்குப் பின்னாலும் ஒரு விஸ்கி பாட்டிலை வைத்தால் சந்தேகமற்ற ஒரு ரஷ்யப் பெயர் கிடைத்துவிடும் என்றேன். நொடித் தாமதத்திற்குப் பின்னால் வெடித்துச் சிரித்தவர், நீண்ட நாள்களுக்குப் பின்பாக சிகரெட் ஒன்றை ரகசியமாக இரவல் வாங்கிச் சென்றார்.