ஹெல்த்
Published:Updated:

லேட்டா வந்தாலும் லேட்டஸ்ட்டா வர முடியுமா?

லேட்டா வந்தாலும் லேட்டஸ்ட்டா வர முடியுமா?
பிரீமியம் ஸ்டோரி
News
லேட்டா வந்தாலும் லேட்டஸ்ட்டா வர முடியுமா?

சித்ரா அரவிந்த், உளவியல் நிபுணர்

லரது வாழ்க்கைமுறையில் தாமதம், தவிர்க்க முடியாத விஷயமாகிவிட்டது. எங்கு செல்வதாக இருந்தாலும் திட்டமில்லாமல் கிளம்பிக் கடைசி நேரத்தில் பதைபதைப்போடு உள்ளே நுழைவதையே சிலர் வழக்கமாக வைத்திருப்பார்கள். மேலதிகாரியிடம் திட்டு வாங்குவது, பல நல்ல வாய்ப்புகளை இழப்பது எனப் பல பிரச்னைகளை எதிர்கொண்டாலும் சிலரால் தாமதத்தைத் தவிர்க்க முடிவதேயில்லை. இதற்குக் காரணம் அலட்சியம் மட்டும் தானா..? இல்லை... இதன் பின்னணியில் `ஒன் மோர் டாஸ்க் சின்ட்ரோம்’ (One More Task Syndrome) என்கிற பாதிப்பு இருக்கலாம். இந்தப் பிரச்னை உள்ளவா்கள் எப்போதும் எல்லா இடங்களுக்கும் தாமதமாகவே செல்வார்கள். இதை அவர்கள் வேண்டுமென்றே செய்வதில்லை; இதன் பின்னணியில் உளவியல் பாதிப்பும் இருக்கிறது. தாமதத்தை வழக்கமாகக் கொண்டுள்ளவர்கள் பல வகைப்படுவர். வேலையைக் கடைசி நிமிடத்தில் வேகவேகமாக, நெருக்கடியான சூழலில் முடிப்பதில் சிலருக்கு ஒருவித திருப்தி கிடைக்கும். அதற்காகவே அவா்கள் அப்படியொரு சூழலை உருவாக்கித் தங்களை ஊக்கப்படுத்தி, போரடிக்காமல் பார்த்துக் கொள்வார்கள். வேறுசிலா் குறைந்த நேரத்தில் நிறைய வேலைகளைச் செய்து முடிப்பதில் திருப்தி அடைவா்.

எப்போதுமே வேலை இருந்துகொண்டே இருக்கவேண்டும் என்று சிலர் ஆசைப்படுவா். இன்னும் சிலரோ, எல்லாவற்றிலும் கவனமற்று இருப்பார்கள். அவா்களது கவனம் சிதறும்; செய்யவேண்டிய வேலைகளை மறந்துவிடுவா். நேரத்தைப் பற்றி அக்கறையில்லாமல் இருப்பார்கள். சிலா், தங்களின் தாமதத்துக்கு ஏதாவது காரணம் சொல்லிக்கொண்டே இருப்பார்கள். சிலர், எதிர்க்கும் மனப்பான்மையுடன், தாமதமாக எல்லாவற்றிலும் பங்கேற்பார்கள்.

லேட்டா வந்தாலும் லேட்டஸ்ட்டா வர முடியுமா?

சிலா், சுயக்கட்டுப்பாடும் ஒழுக்கமும் இல்லாமல் எல்லாவற்றையும் தாமதப்படுத்துவார்கள். மற்றவர்கள் ஆலோசனை கூறினாலும்கூட இவா்களால் தங்களை அவ்வளவு எளிதாகத் திருத்திக்கொள்ள முடியாது. இதை ஒரு பழக்கம் அல்லது குணாதிசயம் தொடர்பான பிரச்னை என்றே சொல்லலாம். இந்தப் பழக்கம் உங்களுக்கும் பல வருடங்களாக இருக்கலாம். இதற்கு இரண்டு காரணங்கள் உண்டு. அதைப் புரிந்துகொள்ள, இந்தக் கேள்விக்கு நீங்கள் பதிலளிக்க வேண்டும்.

நீங்கள் எப்போதும் ஒரே மாதிரியாகத் தாமதம் செய்வீர்களா? அல்லது அதன் கால அளவீடு மாறுபடுமா?

ஒவ்வொருமுறையும், வெவ்வேறுவிதமாக தாமதம் செய்கிறீர்கள் என்றால், உங்களுக்குக் கால மேலாண்மைத் திறன் தேவைப்படும். ஆனால், எல்லா இடத்துக்கும், ஒரேமாதிரி குறிப்பிட்ட நேரத்தில் தாமதமாகச் செல்கிறீர்கள் என்றால் கால மேலாண்மைக் குறிப்பும் பயிற்சியும் வீண். ஏனென்றால், இதற்கு உளவியல் காரணம் இருக்கிறது. தாமதம் செய்பவா், எவ்வளவு சீக்கிரமாக முன்கூட்டியே தயாரானாலும், ஏதேனும் காரணத்தால் போகுமிடத்துக்கு 10-15 நிமிடம் தாமதமாகவே செல்வார். காரணமே இல்லாமல் கடைசி நிமிடத்தில்தான் புறப்படுவார். அதுமட்டுமன்றி, கிளம்பும்வேளையில் அவசர அவசரமாக மெயில் அனுப்புவது, பாத்ரூம் செல்வது, சுத்தம் செய்வது என ஏதேனும் ஒரு செயலில் ஈடுபடுவா். இவா்களுக்கு எப்போதும் எதையாவது செய்துகொண்டிருப்பது பிடிக்கும். குறைந்த நேரத்தில், நிறைய செயல்களைச் செய்ய வேண்டுமென்று விரும்புவார்கள். கொஞ்சம் ஃப்ரீயாக இருந்தால்கூட, மற்றொரு வேலையைக் கையில் எடுத்துக்கொண்டு பிஸியாகி விடுவாா்கள். அதுமட்டுமன்றி, இவா்களுக்குக் குறிப்பிட்ட நேரத்துக்கு முன்னரே கிளம்பிச் செல்வது சற்றும் பிடிக்காது. முன்பே சென்று காத்திருப்பது இவா்களுக்குப் பதற்றத்தை ஏற்படுத்திவிடும்.

லேட்டா வந்தாலும் லேட்டஸ்ட்டா வர முடியுமா?

இவா்களது திட்டமிடல் தவறாக இருக்கும். ஒரு வேலையைச் செய்ய 45 நிமிடம் தேவைப்படும் என்றாலும், இவா்கள் மேஜிக்கலாக அதற்கு 20 நிமிடமே ஒதுக்குவா். மேலும், ஓரிடத்துக்குச் செல்லக் குறைந்தது ஒருமணி நேரமாகும் என்றால், 40 நிமிடமே ஒதுக்குவா். இதனாலேயே, தாமதமாகிவிடும். ஓரிடத்துக்குச் செல்லும் நேரத்தைத் தவறாகக் கணக்கிடுவது மட்டுமன்றி, ஒரு வேலையைச் செய்யத் தேவைப்படும் சரியான நேரத்தைக் கணக்கிடத் தவறுவதால், எப்போதும் இவா்களுக்குத் தாமதமே. கூடவே மனஉளைச்சலும் ஏற்படும். இவர்கள் திறமையானவராக இருந்தாலும் தேவையில்லாத தாமதங்களால் குடும்பத்தினர், உறவினா்கள், நண்பா்கள் மத்தியிலும், அலுவலகத் திலும் கெட்ட பெயரே மிஞ்சும். இதனால் அவர்களது உடல்நிலை, மனநிலை, உறவு என எல்லாமே பாதிக்கும்.

இதிலிருந்து விடுபடுவது எப்படி?

சுயம் அறிதலே (Self awareness) இதற்கு முதல்படி. இத்தகைய குணத்தை மாற்றமுடியும். ஆனால் அது அவ்வளவு எளிதல்ல; நிறைய சுயஊக்கமும் முயற்சியும் தேவை. இந்தக் குணத்தை மாற்றிக் கொள்வதால் கிடைக்கப்போகும் நன்மையைச் சிந்தித்துப் பார்த்தாலே, தாமாகவே முயற்சி செய்யத் தோன்றும். உளவியல் ரீதியாக இதற்கான தீர்வுகளை அலசுவோம்.

சிறு முயற்சி!

சின்னச் சின்ன விஷயங்களுக்கு தாமதப்படுத்தும் செயல்பாடுகளை முதலில் மாற்றிப் பார்க்கலாம். அதில் வெற்றியடைந்தால், அதுவே உங்களைச் சற்றுக் கடினமான விஷயங்களைச் செய்ய ஊக்கப்படுத்தும். பக்கத்தில் உள்ள இடத்துக்கு வழக்கமாகச் செல்வதைவிடக் கொஞ்சம் முன்னதாகச் சென்று, எப்படி உணா்கிறீா்கள் என்பதைப் பார்க்க வேண்டும். அதை டைரியில் குறிப்பிட்டுப் பதற்றமாக உள்ளதா? பெருமையாக உள்ளதா? போராடித்ததா? என்று பார்க்க வேண்டும்.

கால அளவீடு!

 ஒரு காலத்தில் ஓரிடத்துக்குச் செல்ல 15 நிமிடம் எடுத்திருக்கலாம். ஆனால் அதே இடத்துக்குச் செல்ல, இப்போது 25 நிமிடம் தேவைப்படலாம். ஆனால் தாமதப்பிரச்னை உள்ளவர்கள், அந்த 15 நிமிடத்தையே மூளையில் உறைய வைத்துவிடு வார்கள். அதை உணா்ந்து மூளையில் ரீசெட் செய்து கொள்வது அவசியம்.

காத்திருக்கலாம்!

அன்றாட வேலைகளில், ஒரு சில விஷயங்கள் அவசரமானவையாக (எமா்ஜென்சி) இருக்கலாம்! ஆனால், ‘ஒன் மோர் டாஸ்க் சின்ட்ரோம்’ உள்ளவா்களுக்கு, எல்லாமே எமா்ஜென்சியாகத் தோன்றுவதில்தான் சிக்கலே.

அதனால், புது வேலைகள் தரப்பட்டாலோ, யாரும் ஏதேனும் உதவி கேட்டாலோ அது மிகவும் அவசரமா? முக்கியமா? உங்களால் இப்போது செய்ய முடியுமா? என்பதை ஆராய்ந்தபிறகே ‘யெஸ்’ சொல்லவேண்டும்.

  இப்படியாகக் கடைசி நிமிட வேலையைத் தவிர்க்கப் பழகினால் மட்டுமே, உங்களுக்குக் காலப் போக்கில், எது அவசரம் என்பதைப் புரிந்துகொள்ளும் பக்குவம் ஏற்படும்.

குஷன் டைம்!

ஓரிடத்திற்குச் செல்லவோ, ஒரு செயலைச் செய்து முடிக்கவோ, சரியான நேரத்தை மட்டுமே அளவிட்டுச் சொல்லாமல், சற்று `குஷன் டைம்’  (எக்ஸ்ட்ரா டைம்) வைத்துச் சொல்வது அவசியம். ஏனென்றால், அவசரமாக ஏதேனும் வேலை வந்தால், உங்கள் நேரக் கணக்கீடு தவறாகி விடும் அல்லவா? உதாரணமாக, ஓரிடத்துக்குப் போக 15 நிமிடம் ஆகும் என்றால், 25 நிமிடம் என்று கணக்குப் போடவும். திடீரென்று டிராஃபிக் நெரிசல் ஏற்பட்டாலோ அல்லது எதையாவது நீங்கள் எடுக்க மறந்தாலோ, இந்த `குஷன் டைம்’ உங்களுக்கு உதவும்.

காத்திருப்பதை ரசிக்கவும்!

தாமதப் பிரச்னை உள்ளவா்கள் பெரும்பாலும் காத்திருப்பதைத் தவிர்க்கவே தாமதம் காட்டுவா். எனவே அந்த எண்ணத்தைத் தவிர்க்க, சில விஷயங்களைத் திட்டமிடலாம். சீக்கிரமாகச் சென்றால், `நான் பாட்டு கேட்பேன்; நண்பருடன் போன் பேசுவேன்; புத்தகம் படிப்பேன்’ எனப் பிடித்த விஷயங்களைக் காத்திருக்கும் நேரத்தில் செய்ய ஆரம்பித்தால் மாற்றம் தெரியும்.

நோ சொல்லுங்கள்!

உங்கள் அவசரத்தை / முக்கியத்துவத்தைப் புரிந்து கொள்ளாமல், யாரேனும் உங்கள் நேரத்தை வீணடித்தாலோ அல்லது புதிய வேலைகளைத் திணிக்கப் பார்த்தாலோ தெளிவாக அவா்களிடம் `நோ’ சொல்லப் பழகுங்கள். அது உங்கள் தன்னம்பிக்கையை அதிகரிக்கும்.

ஸ்டாப் இட்!

கடைசி நிமிடத்தில் எதையாவது செய்யச் சொல்லி மனது தொந்தரவு செய்யும். அந்த செயலைச் செய்ய 2 நிமிடம் தானே ஆகும் என்று கை துறுதுறுக்கும். அப்போது, இதெல்லாம் உங்களைத் தாமதப்படுத்த மனம் செய்யும் உத்தி என்பதை உணா்ந்து அந்த எண்ணத்தில் இருந்து விடுபட முயற்சி செய்ய வேண்டும். முதலில் கடினமாகத் தெரியும். ஆனால் போகப்போகப் பெரிய நிம்மதியைத் தரும்.

உண்மையில் கால மேலாண்மைக்கான `பரேட்டோ கொள்கை’ (Pareto Principle) என்ன சொல்கிறதென்றால், நாம் 80 சதவிகித நேரத்தில் தேவையில்லாத வேலைகளைப் பார்க்கிறோம்; 20 சதவிகித நேரம் மட்டுமே உருப்படியான விஷயங் களைச் செய்கிறோம் என்கிறது.

 நம் மனம் எப்போதும் மகிழ்ச்சியாக இருப்பதற்காக, கடினமாக விஷயங்களைத் தள்ளிப்போடும். ஆனால், எல்லாவற்றையும் கடைசியில் சோ்த்து நீங்கள்தானே செய்யப்போகிறீா்கள் என்பதை உணர வேண்டும். `ஒன் மோர் டாஸ்க் சிண்ட்ரோம்’ இருப்பவா், தனக்கு அதிக கால மேலாண்மைத் திறன் உள்ளது என்று தவறாக நம்புகிறார். ‘குறைந்த நேரத்தில், நிறைய செயல்களைச் செய்துவிடுவாய்’ என்றும், ‘தாமதப்படுத்துவதால் நேரத்தை வீணடிக்காமல் மிச்சப்படுத்தி விட்டாய்’ என்றும் மனம் அவா்களை போலியான வெற்றி உணா்வில்  நம்ப வைக்கிறது.

சற்றுத் தெளிவாகச் சிந்தித்துப் பார்த்தால் உண்மையில், எவ்வளவு விஷயங்களை இழந்துள் ளோம் என்பதை உணரமுடியும். எத்தனை மன உளைச்சல், எத்தனை சண்டைகள், எத்தனை சந்தா்ப்பங்கள் கை நழுவிப்போயின என்பது புரியவரும். இவற்றையெல்லாம் ஈடுகட்ட உடனடி யாக இந்தப் பிரச்னைகளுக்கு முற்றுப்புள்ளி வையுங்கள். காலம் உங்கள் கையில்!

லேட்டா வந்தாலும் லேட்டஸ்ட்டா வர முடியுமா?

சுயம் அறிதல்

* முதலில் ஒரு டைரியில் உங்கள் தாமதமான செயல்பாடுகள் குறித்து எழுதுங்கள்.

 
* எப்போதுமே, எல்லா நிகழ்வுகளுக்குமே தாமதமாகத் தான் செல்கிறீர்களா? குறிப்பிட்ட விஷயங்களுக்கு மட்டும் தாமதமாகச் செல்கிறீர்களா?

தாமதமாகச் செல்லும்போது எப்படி உணா்கிறீா்கள்?

எதனால் இந்தத் தாமதம்?

குளித்தல், சாப்பிடுதல் போன்றவற்றுக்கு எவ்வளவு நேரம் ஒதுக்குகிறீா்கள்?

அந்தச் செயல்களைச் செய்து முடிக்க உண்மையில் எவ்வளவு நேரம் ஆகிறது?

இந்த விஷயங்களைக் குறைந்தபட்சம் இரண்டு வாரங்கள் டைரியில் குறிப்பிட்டால், உங்கள் தாமதப் பிரச்னை குறித்த திடமான ஐடியா கிடைத்து விடும். இதைத் தெரிந்துகொண்டாலே இதிலிருந்து விடுபட முதல்படி ஏறிவிட்டீர்கள் என அர்த்தம்.