Published:Updated:

அன்பும் அறமும் - 10

அன்பும் அறமும் - 10
பிரீமியம் ஸ்டோரி
News
அன்பும் அறமும் - 10

சரவணன் சந்திரன்

இரவு வெள்ளிகள்!

ர் இரவில், எனக்கு முன்னே நட்சத்திரக் கூட்டங்களை வாரி இறைக்கும் வடகிழக்கு வானத்தை வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தேன். லட்சக் கணக்கான  கூட்டங்களிலிருந்து ஒரு வெள்ளியை மட்டும் தனித்துப் பார்த்துவிடுகிற தவிப்பு. `வணிகன் குடிகெடுத்த வெள்ளி’ எனச் சொல்லப்படுவது அது. இருள் பிரிவதற்கு முந்தைய நேரத்தில் அதைக் கண்டுகொண்டேன். ஒரு பெரிய அளவிலான மின்மினிப்பூச்சி வானத்தில் அமர்ந்து மினுக்மினுக்கெனச் சிணுங்குவதைப் போல அது விட்டுவிட்டு ஒளிர்ந்தது. இவ்வளவு அழகான இந்த வெள்ளியைத்தான் ஒருகாலத்தில் `குடிகெடுத்த வெள்ளி’ என்று வர்ணித்திருக்கிறார்கள்.

இந்த வெள்ளியைப் பார்த்துவிட்டு ‘விடிந்துவிட்டது’ என நினைத்து தலைச்சுமையைத் தூக்கிக்கொண்டு

அன்பும் அறமும் - 10

வியாபாரிகள் அடுத்த ஊருக்குக் கிளம்புவார்களாம். உண்மையில் அது விடியலுக்கான நேரமல்ல; கள்வர்கள் உலவும் நேரம். இந்தக் காரணத்தினாலேயே அதைக் `குடிகெடுத்த வெள்ளி’ என்பார்கள். கள்வர்கள் இன்னமும் அந்த நேரத்தில்தான் விழித்திருப்பார்கள் என்கிறார்கள். எவரையும் போட்டுத் தள்ளிவிடும் தூக்கத்துக்கான நேரம். அப்போதுதான் கள்வர்கள் சுவர் தாண்டிக் குதிக்கிறார்கள். இன்னமும் பேப்பர்களைத் திறந்தால் `அதிகாலைகளில் கதவை உடைத்துக் கொள்ளை’ எனச் செய்திகள் நிதமும் வரத்தானே செய்கின்றன! கள்வர்கள் மட்டுமா இப்போது விழித்திருக்கிறார்கள்?

ஊரடங்கிய சாமம் என்ற வார்த்தைகள் நகரங்களுக்குப் பொருந்தாது. இரவு 8 மணிக்கே தூங்கி, அதிகாலை 5 மணிக்கு விழிக்கும் மனிதர்களுக்கு நடுவே இருந்துகொண்டு இதை எழுதிக்கொண்டிருக்கிறேன். எனக்கும் ஓர் இரவு வாழ்க்கை ஒருகாலத்தில் இருந்தது. அதிகாலை 2 மணியளவில் மீன் ஏலம் எடுக்க, சென்னைச் சாலைகளில் தனியாகச் சுற்றிக்கொண்டு இருந்திருக்கிறேன். நான் மட்டுமா அந்த நேரத்தில் தனியாக இருந்தேன்? என்னைச் சுற்றிலும் மனிதர்கள் இருந்தார்கள். அவர்கள் கள்வர்கள் அல்லர்: உழைக்கும் வர்க்கத்தினர். இரவுத் தூக்கத்தை உழைப்புக்குத் தானம் கொடுத்த கூட்டம் அது.

அன்பும் அறமும் - 10

பொதுவாக தமிழகத்தில் இரவு வாழ்க்கை என்பது, விரல்விட்டு எண்ணத்தக்க ஊர்களில் மட்டுமே ஒருகாலத்தில் இருந்தது. சந்தையை மையமாக வைத்து இயங்கும் ஊர்களுக்கு அப்படி ஒரு சிறப்புக் கிடைத்துவிடும். சந்தை தொலையும்போது இரவு வாழ்க்கையும் தொலைந்துவிடும். ஒருகாலத்தில் மதுரையைத் `தூங்கா நகரம்’ என்று சொல்வார்கள். 2 மணிக்கு நான்கு இட்லிகளுடன் தொட்டுக்கொள்ள மூன்று சட்னிகளை ஊற்றித் தர, ஆள்கள் இருந்தார்கள். ஒருதடவை போனபோது, 11 மணிக்கு நான்கு இட்லிகளுக்கு நாக்கு வியர்க்க அலையவேண்டியிருந்தது. ``ஜனத்தொகைப் பெருகப் பெருக சில கட்டுப்பாடுகளைப் போட்டாக வேண்டியிருக்கிறது’’ என்று காவல் துறை உயர் அதிகாரி ஒருவர் சொன்னார்.

``நைட் நாலு பேர் நடந்து வருவான். `எங்கடா போறீங்க?’ன்னா, `டீ குடிக்கப் போறேன்’பான். கடைய அடைச்சுட்டா, அப்படிச் சொல்ல முடியுமா? `கடையே இல்லாத இடத்துக்கு, நீ எதுக்கு டீ குடிக்கப் போற?’ன்னு கொத்தா சட்டையைப் பிடிச்சுத் தூக்கிடுவோம். அதுல பழைய குற்றவாளிகள் சிலர் மாட்டிக்குவாங்க” என்று விலாவாரியாகக் காரணத்தைச் சொன்னார். ஆனாலும் தூங்கா நகரத்தை இப்படிப் போட்டுச் சாய்த்துவிட்டார்களே என்ற வருத்தம் வராமல் இல்லை.

இரவு முழுவதும் இப்படி சந்தைகளில் மக்கள் குவிந்திருந்தாலும், தூக்கம் என்பதற்கு மிகச் சரியான இடத்தை முன்பெல்லாம் ஒழுங்காகத் தந்துகொண்டிருந்தனர். பகலில் மாட்டுக்குப் பக்கத்தில் குற்றாலத் துண்டை விரித்து இவர்களும் சேர்ந்து தூங்கிக்கொண்டிருப்பார்கள். ``கள்வன் மாதிரி ராத்திரி முழிச்சுக்கிட்டு இருக்கக் கூடாது” என ஒருத்தர் என்னிடம் கண்டிப்பான குரலில் ஒருதடவை சொன்னார். ஆனால், கள்வர்கள் விழித்திருக்கிற நேரத்தில் உழைத்து, காலத்தை ஓட்டவேண்டிய தேவையோடு மக்கள் விழித்திருக்கவேண்டிய கட்டாயம் வந்துவிட்டது. இரவுப் பணி என்பது, இப்போது வெகு சாதாரணமான சொற்பிரயோகம். ஒரு பொட்டுத் தூக்கம்கூட இருக்கக்கூடாது என்று சொல்லித்தான் வாட்ச்மேன்களையும் மென்பொருள் வல்லுநர்களையும் வேலைக்கே எடுக்கிறார்கள்.

அபரிமிதமான தேவை, அதிகமான நேரம் உழைக்க வைத்துவிடும். அபரிமிதமான பேராசைக்கும்கூட அதில் பங்கு உண்டு. `தூக்கத்தைத் தொலைத்த மனிதர்கள்’ என ஒரு சாதி மெள்ள உருவாகிக்கொண்டிருக்கிறது. அது கொடுக்கும் தாக்கத்தைச் சொல்லி மாளாது. இந்தியாவில் இப்போது மிரட்டுகிற வியாதி தூக்கமின்மைதான். அது இப்போது மிகப்பெரிய வணிகமும்கூட. தூக்கத்தைக் குறிவைத்து ஏகப்பட்ட மெத்தைகள்கூட வந்துவிட்டன.

ஒருதடவை நண்பர் ஒருவர் மெத்தைக் கடை ஒன்றுக்குப் போயிருக்கிறார். ஐந்து லட்சம் ரூபாய் விலை சொல்லியிருக்கிறார்கள். இவர் திகைப்படைந்து காரணத்தைக் கேட்டபோது, ``ஒரு நாளைக்கு நாலு மணி நேரம் காருக்குள்ள இருப்பீங்களா. அதுக்கு கோடி ரூபாய்கூட செலவழிக்கிறீங்க. தினமும் தூங்கிற எட்டு மணி நேரத்துக்கு இந்தக் காசுகூட செலவழிக்க மாட்டீங்களா?” என்று சொன்னாராம் கடைக்காரர்.

இந்த விலை உசத்தி விவகாரங்களை எல்லாம் விட்டுவிடுங்கள். இது உண்மையிலேயே மிக முக்கியமான பிரச்னை. தூக்கத்தைத் தொலைக்கிற காரணங்களால், ஆண்டுதோறும் இந்தியாவில் அது சார்ந்த நோயாளிகளின் எண்ணிக்கை பெருகியபடியே இருக்கிறதாம். உலகளவிலான போக்கு இது என்றாலும் இந்தியாவில்தான் இதன் தாக்கம் அதிகம் எனச் சொல்கிறார்கள்.

எனக்குத் தெரிந்த இளம்பெண் ஒருவர், மென்பொருள் நிறுவனத்தில் வேலைபார்த்தார். இப்போது தொழிலையே மாற்றிவிட்டார். இரவு   தொடர்ச்சியாகத் தூங்காத காரணத்தால் கோமா நிலைக்குப் போய்விட்டார். அதிலிருந்து அவரை மீட்க அவரது குடும்பத்தினர் பல லட்சங்களைச் செலவழித்தார்கள். பகலில் தூங்கிப் பழக்கப்படாததால் தூங்க முடியவில்லை எனக் காரணம் சொன்னார். தூக்கமின்மையை ஒருசிலரது உடல் ஏற்றுக்கொள்ளும். சிலரது உடல் ஏற்றுக்கொள்ளாது. இந்த எண்ணிக்கை ஆண்டுதோறும் பெருகியபடி இருக்கிறது. புள்ளிவிவரங்களைத் தேடி எடுத்துப் படித்துப்பாருங்கள்... திகைத்து விடுவீர்கள்!

இது வெறும் உடலை மட்டுமா பாதிக்கிறது? புதிதாகக் கல்யாணம் ஆன ஒரு நண்பன், இரவு வேலைக்குப் போய்விட்டு அதிகாலை வருவான். அவரது மனைவி அலுவலகத்தில் மாலை திரும்பி வரும்போது அவன் அலுவலகத்துக்குக் கிளம்பிப் போய்விடுவான். கிடைக்கிற ஒருநாள் விடுமுறையிலும் இவனுக்கு அக்கடாவென தூங்க ஆசை. ஆனால் அவனுடைய மனைவிக்கு, ஷாப்பிங் போக ஆசை. இந்தச் சச்சரவில் அவர்கள் விவாகரத்தில் போய் நின்றார்கள். அவனுடைய அலுவலகத்தில் கேட்டபோது, ``சம்மதிச்சுதானே அக்ரிமென்ட் போட்டீங்க? எதையும் சட்டப்படியாத்தான் எங்களால செய்ய முடியும்!” எனப் பொறுப்பாகப் பதில் தந்துவிட்டார்கள். இரண்டு பேர் வாழ்வும் எழுவதற்கு முன்பே கருகிப்போனது. இதற்கு யாரைக் குற்றம் சொல்ல முடியும்?

தேவைக்கு அதிகமாக ஒரு துளி ஊதினாலும் பலூன் பெருஞ்சத்தத்துடன் வெடித்துவிடும். அந்த வேலையைத்தான் உலகமெங்கும் செய்துகொண்டிருக்கிறார்கள். தமிழகம் மட்டும் அதற்கு விதிவிலக்கா என்ன? உடலும் ஓர் இயந்திரத்தைப்போலத்தான். அதை ஓட்டுகிறவிதத்தில் ஓய்வுகொடுத்து ஓட்டினால் ஒழுங்காக ஓடும். இல்லாவிட்டால் மக்கர் பண்ணத்தான் செய்யும். ஒருநாள் சாலையின் நடுவில் சத்தமின்றி நின்றுகொள்ளும். எதற்காக இவ்வளவு இரவுப் பணிகள்? பால், உணவு, பத்திரிகை எனத் தேவையின் நிமித்தமாக விழித்திருந்தவர்களை இந்த இடத்தில் சொல்லவில்லை. `தேவையிருப்பதால்தான் ஓடுகிறோம்’ என நியாயமான பதில்கூடச் சொல்லலாம்.

ஆனால், மனிதகுலம் சந்திக்கப்போகும் மிகப்பெரிய அச்சுறுத்தலின் நிமித்தமாக இதைப் பற்றி கொஞ்சம் யோசித்துப்பார்க்கலாம். `பகலில் தூங்கவேண்டியதுதானே!’ என்றும் கேட்கலாம். பகலிலும் தூங்க முடியாத கோடிக்கணக்கான வாழ்க்கையை முன்னிறுத்தியே இந்தக் கேள்வியைக் கேட்கிறேன். `எட்டு மணி நேர உழைப்பு, எட்டு மணி நேர இளைப்பாறுதல், எட்டு மணி நேர ஓய்வு’ என எட்டு எட்டாக மிகச் சரியாகப் பிரித்து வைத்திருப்பதை ஒரே எட்டில் தாண்டிவிட்டதால், அதன் பின்விளைவுகளை அனுபவித்துதான் ஆக வேண்டும். `தூக்கமின்மை’ என்கிற பேரரக்கன், தன் நாவுகளில் நோய் ஜூவாலைகளை ஏந்திக்கொண்டு உங்களை நோக்கித்தான் வேகமாக வந்துகொண்டிருக்கிறான். விழித்துக்கொள்ளவேண்டிய பொறுப்பு நம்முடைய கைகளில்தான் இருக்கிறது.

`வணிகன் குடிகெடுத்த வெள்ளி வாராதே வாராதே!’ என மறித்துக் கைகாட்டுவதுபோல எனக்கு மட்டும்தான் தோன்றுகிறதா? நள்ளிரவில் விழித்தபடி சாலைகளில் எதிர்காலத்தை விளம்பியபடி திரியும் குடுகுடுப்பைக்காரரின் வாக்காகக்கூட இதை எடுத்துக்கொள்ளுங்கள்!

- அறம் பேசுவோம்!