பேட்டி - கட்டுரைகள்
தொடர்கள்
Published:Updated:

சொல்வனம்

சொல்வனம்
பிரீமியம் ஸ்டோரி
News
சொல்வனம்

சொல்வனம்

ஏழு மலைகள், ஏழு கடல்களைத் தாண்டி!
 
ஏழு மலைகள் ஏழு கடல்களைத் தாண்டி
இளைப்பாறாமல் பயணித்து வந்த பறவை ஒன்று
என் வீட்டு மாடியில் வந்திறங்கியது
அதன் களைப்பு உணர்ந்த நான்
பாத்திரம் நிரம்பத் தண்ணீர் வைத்தேன்
அருந்தியது
கைப்பிடி அளவு தானியம் இட்டேன்
தின்றது
`இன்றிரவு ஓய்வெடுத்துவிட்டு நாளை போகலாமே!’ என்றேன்
விடைபெற்றுப் போகவேண்டிய
கட்டாயத்தை உணர்த்தியது
தொடர்ந்து விடைபெறும் முன்
அது இட்ட எச்சத்தில்
ஏழு கடல்கள் ஏழு மலைகளின்
உஷ்ணம் இருந்தது.


- கோவிந்த் பகவான்

சொல்வனம்

மேகங்களை ரசிப்பவள்

கோடை விடுமுறையில் லாவண் குட்டி வந்திருந்தாள்
அந்தி சாயும் சாம்பல் பொழுதுகளில்
மடியில் அமர்ந்தபடி
மேகங்களை ரசிப்பது அவள் விருப்பம்
வெள்ளை வெளேர் என்றிருந்த
மேகத்தைக் காட்டி
முயல்குட்டி என்றாள்
அடர் கறுப்பில் திரண்ட மேகத்தைக் காட்டி
யானை என்றாள்
நீள்சுருள் மேகத்தைக் காட்டி
கடற்குதிரை என்றாள்
நாள்தோறும்
தேவதை, தேர், சிங்கம், முதலை, டெடிபேர் என
அறிமுகம் செய்தவள்
விடுமுறை முடிந்து புறப்பட்டாள்.
இப்போது காணும் மேகங்களில் எல்லாம்
லாவண் குட்டியின் முகமே தெரிகின்றன.


- கோவிந்த் பகவான்

அப்பா...

அப்பா எப்போது
வெளியில் போய்
வீடு வந்தாலும்
ஆடு மாடுகள்
அத்தனையும்
பாசத்தில் கத்த ஆரம்பிக்கும்.
நாய் ஆசையோடு
வாலாட்டி வந்து அருகில் நிற்கும்.
நாங்கள் சத்தம் தவிர்த்து
வீட்டை
வலிந்து நிசப்தமாக்கிக்கொள்வோம்.


- சாமி கிரிஷ்

ரெகுலரோடு புலத்தல்


மனிதவாசம் பார்த்திராத
வனங்களுக்கு நடுவே
கூடாரம் போட்டு அதில் ஒளிந்துகொள்கிறார்கள்
 
பாராசூட்டைக் கட்டிக்கொண்டு
மலையுச்சியில் இருந்து
குதித்துவிடுகிறார்கள்

பாஷை புரியாத தேசங்களுக்கெல்லாம்
பரதேசியைப்போல சுற்றித்திரிகிறார்கள்
 
ரெகுலரிடம் இருந்து தப்பிக்க
இத்தனை பிரயத்தனங்கள் செய்தும்
தோற்றுப்போன மனிதர்கள்
திங்கள்கிழமையானதும்
ரெகுலரை மாட்டிக்கொண்டு ஆபீஸுக்குக் கிளம்புகிறார்கள்.

அவர்களின் முதுகில் `ரெகுலர்’
ஒரு சிலுவைபோல தொற்றிக்கொண்டிருக்கிறது.


- தி.விக்னேஷ்