
அதிஷா - ஓவியம்: கோ.ராமமூர்த்தி
ஐ லவ் யூ ஆன்ட்ராய்ட்!
அறிவுள்ள எந்திரங்களை மனிதர்களால் காதலிக்க முடியுமா?
தாத்தாவுக்கு தாத்தா காலத்து கான்செப்ட் இது. 1927ல் வெளியான ஜெர்மன் படமான ‘மெட்ரோபாலிஸி’லேயே (Metropolis) இது வருகிறது. படத்தின் (மனித) நாயகன் ஃப்ரெடர் (ரோபோ) நாயகியான ‘மரியா’வை நேசிப்பான். இயக்குநர் ஃப்ரிட்ஸ் லாங்கி(Fritz lang)ன் சிந்தனை இது. அதற்குப்பிறகு ஹாலிவுட்டில் நாலு டஜன் முறை மனிதர்கள் எந்திரங்கள் மீது மையல் கொண்டு காதலித்துக் கரம்பிடித்திருக்கிறார்கள். கடைசியாக ‘Ex-machina’ படத்தில் ‘அவா’ ரோபோ தன்னைக் காதலித்த நாயகனுக்கு அல்வா கொடுத்ததுதான் அப்டேட். புனைவுகளில் மாத்திரமில்லை சகாக்களே... நிஜத்திலும் இந்த Love Affair சாத்தியம்தான் என்கிறது அறிவியல். இதில் இரண்டு விஷயங்கள்...
A - காதலுக்கும் அறிவுக்கும் தொடர்பில்லை,
B - அறிவுள்ள எந்திரங்களை மட்டுமல்ல, சிந்திக்கமுடியாத எதையுமே கூட மனிதர்களால் காதலிக்க முடியும். இந்த மோகத்துக்கு அறிவியலில் ஒரு பெயர் இருக்கிறது. ஆந்த்ரோமார்பிஸம் (Anthropomorphism) - பொருட்களை, விலங்குகளை, கடவுள்களை மனிதர்களைப்போலவே உருவாக்குவது, அல்லது உணர்வது அல்லது கையாள்வது, பிரியமாயிருப்பது, பித்துப்பிடித்து அலைவது, அதன் இழப்பு தாங்காமல் தற்கொலைகூட செய்துகொள்வது.

சில உதாரணங்கள் - வாகனங்களுக்குப் பெண்களுடைய க்யூட்டான பெயர்கள் சூட்டி உயிருள்ள பொருளாக பாவிப்பது (‘படிக்காதவன்’ பட டாக்ஸி ‘லட்சுமி’). உயிரற்ற பொம்மைகளைக் கடவுளாக நினைத்து வழிபடுவது, அந்தக் கல் பொம்மைகளின் பேரால் மனிதர்களைக்கூட கொல்வது, நாய்கள் பூனைகளுக்கு சட்டை பேண்ட் மாட்டிவிட்டு வாயோடு வாய்வைத்து உம்மா கொடுப்பது (உவ்வ்வ்வ்வேக்). அவை செத்துப்போனால் அடக்கம்செய்து அஞ்சலி செலுத்துவது!
காலந்தோறும் இந்த ஆந்த்ரோமார்பிசிஸ்டுகள் வெவ்வேறு வடிவங்களில் உலகெங்கும் அவதரித்து வளர்ந்துவந்திருக்கிறார்கள். அவர்களுடைய சேட்டைகளும் கணக்கில்லாமல் அதிகரித்திருக்கின்றன. இப்போது அடுத்த லெவல், Machine love!
எப்படி இன்று உலகம் முழுக்க தன்பாலின ஈர்ப்பாளர்கள், சேர்ந்து வாழ்வதற்கான உரிமைக்காகப் போராடுகிறார்களோ அப்படி எதிர்காலத்தில் எந்திர ஈர்ப்பாளர்களும் சங்கம் வைத்துப் போராட்டத்தில் இறங்கலாம் எனக் கணிக்கிறார்கள் ஃபியூச்சரிஸ்டுகள்.

ஹெயிடர்-சிம்மல்
1940ல் ஃப்ரிட்ஸ் ஹெயிடர் மற்றும் மரியானே சிம்மல் என்ற இரண்டு விஞ்ஞானிகள் ஒரு குறும்படத்தின் வழி ஆந்த்ரோமார்பிஸம் குறித்து ஆராய்ச்சி செய்தனர். ‘Heider & Simmel Experiment’ என்ற இந்தப்படத்தை இங்கே காணலாம்.
https://youtu.be/wp8ebj_yRI4 . படத்தைப்பார்த்தாகி விட்டதா...
‘நகரக்கூடிய பொருட்களை நம் மூளை உயிருள்ள மனிதர்களைப்போலவே உணர்கிறது. உணர்வுரீதியில் தொடர்பு படுத்திக்கொள்ள முயல்கிறது.’ இதுதான் அந்த ஆராய்ச்சியின் முடிவு.
அமெரிக்காவைச் சேர்ந்த ‘பாஸ்டன் டயனமிக்ஸ்’ நிறுவனம் SPOT என்கிற ஓடக்கூடிய எந்திர நாய்களை உருவாக்கி இருக்கிறது. எதிர்காலத்தில் கண்காணிப்புக்கான புதிய காவலர்களாக இந்த ஸ்பாட்கள்தான் இருக்கப்போகின்றன. இந்த ஸ்பாட்டை அறிமுகப்படுத்துகிற வீடியோ ஒன்றை அந்த நிறுவனம் வெளியிட்டது. ( https://youtu.be/M8YjvHYbZ9w )
அந்த வீடியோவில் எந்திர நாயின் திறனைப் பார்வையாளர்களுக்குக் காட்ட ஸ்பாட்டை எட்டி உதைப்பார் ஆராய்ச்சியாளர். நாய் பாய்ந்து விழப்போய் தடுமாறி பேலன்ஸ் பண்ணி எழுந்து நிற்கும். இதைப்பார்த்த பார்வையாளர்கள் எல்லாம் ‘இப்படி உதைப்பது தவறு, கருணையற்ற செயல்’ என விமர்சித்தனர்.
எட்டி உதைப்பதால் அந்த எந்திர நாய்க்கு வலிக்கப்போவதில்லை, சொல்லப்போனால் உதைக்கப்படுகிறோம் என்பது கூட அதற்குத்தெரியாது. ஆனால் அதைக்கண்ட பார்வையாளர்ளுக்கு ஏன் அது பதற்றத்தை உருவாக்கியது? உதைப்பதும் அதனால் அந்த எந்திரநாய் தடுமாறுவதும் எமோஷனலாக நமக்குள் ஏன் மாற்றத்தை ஏற்படுத்துகிறது? இதுதான் எந்திர காதலுக்கான அடிப்படை.
எதுவுமே செய்யாத டெடிபியர் மாதிரியான பொம்மைகள் மீதே நமக்குப் பாசம் பொங்கும்போது, தினமும் நம்மோடு உரையாடி நம் மீது அக்கறையாக இருக்கப்போகிற அறிவுள்ள எந்திரங்கள் மீது நமக்கு நட்பும் காதலும் வராதா? என் இனிய Echoவே...

காதலின் இரண்டு விதிகள்
வெற்றிகரமான காதலுக்கு அவசியமான குணங்கள் யாவை?
படிக்க பத்து மார்க் கேள்விபோல இருந்தாலும் ஈஸியான இரண்டுமார்க் கேள்விதான். காதலுக்கு முக்கியமான குணங்கள் இரண்டு.
1 - புரிந்துணர்வுடன் ஏற்றுக்கொள்வது (Understanding)
2 - நிறைய பேசிக்கொண்டும் கேட்டுக்கொண்டும் இருப்பது (Converstation)
அவ்வளவுதான். அழகு, உருவம், புருவம், உடல், பொருள், அது, இது, எது எல்லாம் செகன்ட் யுனிட்தான். இந்த இரண்டு விஷயங்களின் வீழ்ச்சியில்தான் பெரும்பாலான காதல்கள் முறிந்துபோகின்றன. காதலிக்க ஆரம்பிக்கும்போது எல்லாவற்றையும் அப்படியே ஏற்றுக்கொள்கிற மனது போகப்போக தேய்ந்து தேய்ந்து எதையுமே ஏற்றுக்கொள்ளாத நிலையை எட்டிவிடும். ஆரம்பத்தில் இருக்கிற எக்கச்சக்கமான நள்ளிரவு, பின்னிரவு, முன்னிரவு, பகலிரவு உரையாடல்கள் எல்லாம் நாள்படத் தேய்ந்து GM,GN,k,mm,b4n ஆகச் சுருங்கிவிடும்.
ஆனால் இந்த விஷயத்தில் அறிவுள்ள எந்திரங்களோடு மனிதர்களால் போட்டியே போடமுடியாது. In love, machines are the best.
எந்திரக்காதலரால் நம்மை 360டிகிரியில் புரிந்துகொள்ள இயலும். எக்காலத்திலும் ஆசிட் அடிக்காது. பிறந்தநாளுக்கு விஷ்பண்ணவில்லை என்று கோபம் கொள்ளாது. வாய் வலிக்காமல் பேசிக்கொண்டே இருக்கும். பேசும்போது மொபைல் நோண்டாது, இஷ்டமில்லாமல் பேசாது, எதுவாக இருந்தாலும் உண்மையை மட்டும்தான் சொல்லும். ஃபேஸ்புக் பாஸ்வேர்ட் கேட்காது. அதன் ஒரே வேலை நம்மை மகிழ்ச்சியாக வைத்துக்கொள்வது அல்லது காதலித்தல் மட்டும்தான். நமக்கு என்ன தேவை என்பதை உணர்ந்து நடந்துகொள்ளும். `24மணிநேரமும் கொஞ்சு’ என ஆணையிட்டால் நான்ஸ்டாப்பாக கொஞ்சும்.
இப்படிப்பட்ட ஒரு கனவுக் காதலனை/ காதலியை நாமே வேண்டியபடி வடிவமைத்துக்கொள்ள முடிந்தால்... இவ்வளவு உயரம், இந்த Shadeல் நிறம், இந்த மாதிரியான குரல், இவ்வளவு அறிவு, குறிப்பிட்ட சப்ஜெக்ட்களில் ஆர்வம் என வேண்டியபடி டெய்லர்மேடில் உருவாக்கிக்கொண்டால்...அப்படிப்பட்ட காதலர் தொழிற்சாலைதான் ஹிரோஷி இஷிகுரோவின் கனவு!
கெட்ட பய சார் இந்த இஷிகுரோ...
‘`நான் ஏன் இந்த ரோபாடிக்ஸ் ஆராய்ச்சியைச் செய்கிறேன்? மனிதர்களைப் புரிந்துகொள்ள...’’
ரோபாடிக்ஸ் ஆராய்ச்சியாளர் ஹிரோஷி இஷிகுரோவுக்கு இன்னொரு பேரும் இருக்கு. ‘`The badboy of japanese robotics”. அச்சு அசலாக மனிதர்களைப்போலவே இருக்கிற ரோபோக்களைத் தயாரிப்பதில் கில்லி. தன்னைப்போலவே இருக்கிற ஒரு ரோபோ போலியை செய்துவைத்திருக்கிறார். இதன் பெயர் geminoid, சினிமாவில் நடித்து பேரும் புகழும் பெற்ற ரோபோ Geminoid - Fன் அண்ணன்.
தனியாக உரையாடக்கூடிய ரோபோக்களை முகத்தில் உணர்வுகளை வெளிப்படுத்தக்கூடிய ரோபோக்களை உருவாக்குவதுதான் இஷிகுரோவின் லட்சியம். இதுவரை 30+ ரோபோக்களை உருவாக்கியிருக்கிறார்.
ஜப்பானில் இஷிகுரோவை ஒரு சூப்பர்ஹீரோவைப் போலத்தான் பார்க்கிறார்கள். கொண்டாடுகிறார்கள். ஜப்பானிய அரசின் மிகப்பெரிய ரோபாடிக்ஸ் ப்ராஜக்டை செய்துகொண்டிருக்கிறார். பட்ஜெட் 576கோடி!
இஷிகுரோவின் ரோபோக்கள் ஹோட்டல்களில், டிபார்ட்மென்டல் ஸ்டோர்களில், பள்ளிகளில், சினிமாவில் என விதவிதமான இடங்களில் பயன்படுத்தப்படுகின்றன. ரோபாடிக்ஸ் துறையின் டாப்பில் இருக்கிறது அவருடைய இன்டெலிஜென்ட் ரோபாடிக்ஸ் லேப் (IRL) நிறுவனம். அவருடைய சில சாதா ரோபோக்கள் (Telenoid, Bug eyed Commu robot ) முதலானவை வயதானவர்களுக்கு உதவுவதிலும், ஆட்டிசம் குழந்தைகளுக்காகவும் உழைக்கின்றன!

இஷிகுரோ மனிதர்களைப்பற்றி அவர்களுடைய உணர்வுகள் பற்றி, அவர்களுடைய நடவடிக்கைகள், சிந்திக்கும் ஆற்றல், சுயமாக ஒரு செயலை எந்த உந்துசக்தியும் இல்லாமல் செய்வதன் ரகசியத்தை அறிந்துகொள்வதையே லட்சியமாகக் கொண்டிருக்கிறார். மனிதர்களால் எப்படி இன்னொரு மனிதனின் உணர்வுகளை உள்வாங்கிக்கொள்ள முடிகிறது என்பது தெரிந்துவிட்டால் எந்திரங்களால் இன்னும் சுலபமாக மனிதர்களின் இதயங்களை நெருங்கிவிடமுடியும் இல்லையா!
பள்ளிக்காலத்தில் எப்போதும் வரைந்துகொண்டே இருந்தவர் இஷிகுரோ. பள்ளியில் எப்போதும் எல்லாப் பாடங்களிலும் தோற்றுப்போன மாணவன். தனிமையே துணைவன், தனிமையே வாழ்க்கை என்று சுற்றிக்கொண்டிருந்தவர். எப்படியோ பார்டரில் பாஸாகி கல்லூரியில் சேர்ந்தபோதும் ஆர்வமின்றி பைக்கில் ஊர் ஊராகச் சுற்றி சுற்றிப் படம் வரைந்துகொண்டிருந்தார். கொஞ்சம் அதிலேயே மூழ்கியிருந்தால் ஜப்பானின் டாப் ஓவியர்களில் ஒருவராகி இருப்பார். ஏனோ கல்லூரியின் மூன்றாமாண்டில் ஓவியத்தையே கைவிட்டிருக்கிறார். கொஞ்சம் Eccentric ஆள்!
ஆனால் அதற்குப் பதிலாக கணினி வரைகலையில் இறங்கிவிட்டார். ரோபோக்கள் மீதான ஆர்வம் வந்தது அப்போதுதான். தன் குழந்தைக்கு இரண்டுவயதானபோது தன் பாப்பாவைப்போலவே ஒரு ரோபோவை செய்துபார்க்க முனைந்தார்... அப்போது ReplieeR1 என்கிற மகள் ரோபாவில் தொடங்கியது... இப்போது ‘தானே சிந்திக்கிற’ எந்திரக் காதலி எரிகாவில் வந்து நிற்கிறது!
இஷிகுரோவின் இந்த ரோபோ ஆர்வகுறுகுறுப்புக்கு பின்னால் இருக்கிற காரணம், தனிமை. இதுவரை இரண்டுமுறை தற்கொலை முயற்சியில் ஈடுபட்டிருக்கிறார். ஏராளமான ரசிகர்கள் இருக்கிறார்கள். புகழின் உச்சத்தில் இருக்கிறார். இருந்தும் இஷிகுரோ தனிமையில் இருக்கிறார். கோடி பேர் இருந்தாலும் மனதிற்குள் சூழுகிற தனிமையிலிருந்து தப்ப அவருக்கு வேறு வழிகள் இல்லை. அதுதான் அவரைச் செயற்கை மனிதர்களைத்தேடி ஓடவைத்திருக்கிறது... ரோபாக்கள் மீது பிரேமம் கொள்ளச்செய்திருக்கிறது.
இஷிகுரோவின் எந்திரங்கள் மனிதகுல வரலாற்றில் இதுவரைக்குமான உறவுமுறைகளில் மிகப்பெரிய மாற்றங்களைச் செய்யப்போகின்றன என்கிறார்கள். ஆணுக்குப்பெண்ணும் பெண்ணுக்கு ஆணும் தேவையில்லாமல் போகும்போது என்ன மாதிரியான மாற்றங்கள் நிகழுமோ என அஞ்சுகிறார்கள். காதல் ரோபோக்கள் மட்டுமல்ல செக்ஸ் ரோபோக்களும் தயாராகிக்கொண்டிருக்கின்றன...
எந்திரக்காதலால் இன்னும் என்னவெல்லாம் ஆகும்?
- காலம் கடப்போம்