மற்ற எபிசோடுகள்
Published:Updated:

வீரயுக நாயகன் வேள்பாரி - 81

வீரயுக நாயகன் வேள்பாரி
பிரீமியம் ஸ்டோரி
News
வீரயுக நாயகன் வேள்பாரி ( வீரயுக நாயகன் வேள்பாரி )

சு.வெங்கடேசன், ஓவியங்கள்: ம.செ.,

வாள்படைத் தளபதி சாகலைவன் வந்த தேர், இரவு முழுவதும் நாகக்கரட்டின் அடிவாரத்தில் நின்றது. அவன்தான் கபிலருக்கு அழைப்பு எழுதப்பட்ட சுருள்மடலை எடுத்து வந்தவன். பறம்புவீரர்கள் அதைப் பெற்றுக்கொண்டு இரலிமேட்டுக்குச் சென்றனர். ``மறுமொழி வரும் வரை காத்திருக்கிறேன்” என்று சொல்லிக் காத்திருந்தான் சாகலைவன். மூவேந்தர்களின் படை நிலைகொண்டுள்ள இடம்விட்டு மிகத் தொலைவில் வந்து பறம்பின் நிலப்பகுதிக்குள் இரவு முழுவதும் காத்திருந்தான் சாகலைவன்.

மறுநாள் பொழுது விடிந்தது. செய்தியை எதிர்பார்த்திருந்தான் சாகலைவன்.  நீண்ட நேரத்துக்குப் பிறகு கரட்டுமேட்டிலிருந்து ஆள்களின் வருகை தெரிந்தது. உற்றுப்பார்த்தான். நடுவில் வருபவர் கபிலர். அவன் கபிலருக்கு அறிமுகமானவன். மதுரையில் தங்கி இருக்கும்போது கபிலரை பலமுறை  கண்டு பேசியிருக்கிறான். அதனால்தான் இந்தப் பணிக்காக அவன் அனுப்பப்பட்டான்.

மேலே இருந்து இறங்கி வந்த கூட்டம், குறிப்பிட்ட இடத்தோடு நின்றுகொண்டது. அதற்குப் பிறகு கபிலர் மட்டும் வந்து கொண்டிருந்தார். அவரோடு சிறுவன் ஒருவனும் வந்தான். அவன் யாரென சாகலைவனுக்குத் தெரியவில்லை. உதவிக்கு அழைத்துவருகிறார் எனப் புரிந்தது.

வீரயுக நாயகன் வேள்பாரி - 81

கபிலர் தேரின் அருகில் வந்ததும் அவரை வணங்கி வரவேற்றான் சாகலைவன். முகம் பார்த்து மலரும் மனநிலையில் கபிலர் இல்லை. தலையை மட்டும் மெள்ள அசைத்தார். குறுக்குக்கட்டையை எடுத்து அவர் தேரில் ஏற வசதி செய்தபடி நின்றான். அவரோ உடன்வந்த அலவனின் தோளை அழுத்தி மேலேறி அமர்ந்தார். அலவனும் ஏறி அவர் அருகில் அமர்ந்துகொண்டான்.

தேர் புறப்பட்டு, சிறிது நேரத்தில் படைக்களத்துக்குள் நுழைந்தது. முதலில் இருந்தது காலாட்படைதான். கண்ணுக்கு எட்டும் தொலைவு வரை வீரர்கள் நிறைந்திருந்தனர். தேர் வேகம்கொண்டு சென்றது. நெடுநேரத்துக்குப் பிறகு காலாட்படையைக் கடந்து குதிரைப் படையின் எல்லையில் போய் வலதுபுறமாகத் திரும்பியது. வேகம் குறையாமல் பயணித்தாலும் படைகளைக் கடந்து நெடுந்தொலைவு போகவேண்டியிருந்தது. தேரோட்டும் வளவன், தேரை விரைவுபடுத்த முயன்றான். ஆனால், வீரர்களின் நெரிசல் அதிகமாக இருந்தது. நீட்டிப்பிடித்த வேற்கம்புகளும் ஈட்டிகளும் குதிரையின் மீது பட்டுவிடுமோ என்ற அச்சம் அவனுக்குள் இருந்தது.

ஆயுதங்கள் குவிக்கப்பட்டிருக்கும் படைக்கலப் பேரரங்குகள் மூன்றையும் தொட்டுப் பயணிப்பதைப்போல வழி சொல்லியிருந்தான் சாகலைவன். தேர், அந்தத் திசையிலேயே போய்க்கொண்டிருந்தது; வேகம் குறையாமல் தேர்ப்படையின் எல்லைக்குள் நுழைந்தது. இந்தப் பகுதியில் வீரர்களின் எண்ணிக்கை சற்று குறைவு. ஆனால், அங்குமிங்குமாக மரக்கட்டைகளும் குதிரைகளின் ஓட்டமுமாக இருந்தன. சற்றே கவனத்தோடு தேரைச் செலுத்தினான். அதைத் தொடர்ந்து சிற்றரசர்களும் தளபதிகளும் தங்கி இருக்கும் பகுதி இருந்தது. அதை ஓரமாகச் சென்று கடக்க முயன்றான்.

தொலைவில் யாரையோ பார்த்த கபிலர், ``தேரை நிறுத்து” என்றார். யாரைப் பார்த்துவிட்டு தேரை நிறுத்தச் சொல்கிறார் எனப் புரியாமல் விழித்தான் சாகலைவன். தேர் நின்றது. குறிப்பறிந்து அலவன் கீழே இறங்கினான். அவன் தோள் பிடித்து இறங்கினார் கபிலர்.

சற்று தொலைவில் வாள் பயிற்சியில் ஈடுபட்டிருந்த இருவர், தேரைவிட்டு இறங்கும் மனிதர் யார் என உற்றுப்பார்த்தனர். அடையாளம் கண்டறிந்த ஒருவன், ``தேர்விட்டு இறங்குவது பெரும்புலவர் கபிலர்” என்று சத்தமிட்டுக் கூறியபடி வாளைவிடுத்து ஓடோடி வந்தான்.

அவன் வரும் வேகம் கண்டு அலவன் சற்றே விலகி நின்றான். விரைந்து வந்து கபிலரின் கால் தொட்டு வணங்கினான். அவன் அறுகநாட்டின் சிறுகுடி மன்னன் செம்பன். அவனைக் கண்டதும் கபிலரின் முகம் மலர்ந்தது. ஒன்றரை ஆண்டுகளுக்கு முன் இவனது மாளிகையில் தேறல் அருந்தி மான்கறி சாப்பிட்டுக்கொண்டிருக்கும்போதுதான் பாரியைப் பற்றிய பேச்சுவந்தது. அவனது வள்ளல்தன்மையைப் பற்றி செம்பன் சொன்னதை ஏற்காத கபிலர், ``நாளையே நான் புறப்பட்டு பறம்புமலைக்குப் போகிறேன்” என்று சொல்லி புறப்பட்டுப் போனார். அதன் பிறகு இன்றுதான் மலைவிட்டு இறங்கி சமவெளிக்கு வந்துள்ளார்.

வீரயுக நாயகன் வேள்பாரி - 81

``யாரைப் பார்த்துவிட்டு பறம்பில் ஏறினேனோ, அவனைத்தான் பறம்புவிட்டு இறங்கியதும் முதலில் பார்க்கிறேன்” என்று சொல்லி அவனது தோள் தொட்டு மகிழ்ந்தார் கபிலர்.

சுற்றிலும் கூட்டம் கூடியது. அந்தப் பகுதியில் இருந்தவர்கள் எல்லாம் சிறுகுடி மன்னர்களும் தளபதிகளும் ஆவர். அனைவரும் கபிலரை அறிவார்கள். பேரரசர்கள் பணிந்து வணங்கும் பெரும்புலவன் நம்மோடு போர்க்களத்தில் நின்று உரையாடுகிறார் என்ற பெருமிதத்தோடு கூட்டம் கூடியது. ஆனாலும் அனைவரும் விலகியே நின்றனர்.

``நீ அன்று பாரியின் வள்ளல்தன்மை பற்றி வியந்து கூறினாய். நான் மறுத்துக் கூறி அதை சோதித்தறிய மலையேறினேன். ஒன்றரை ஆண்டுகளுக்குமேல் ஆகிவிட்டது. எனது வாழ்வின் மிகச்சிறந்த இந்தக் காலத்தைச் சொல்லால் வார்த்துச் சொல்கிறேன், `உனது வார்த்தையே மெய்’. அதை நான் பணிந்து ஏற்கிறேன்” என்று சொல்லி செம்பனை நோக்கிக் கைகுவித்தார் கபிலர்.

நடுங்கிப்போய் கபிலரின் கால் பற்றி வணங்கினான் செம்பன், ``தாங்கள் என்னை வணங்கக் கூடாது” என்றான்.

``நான் உன்னை வணங்கவில்லை. நீ சொன்ன உண்மையை வணங்குகிறேன்.”

``அந்த உண்மைக்கு எதிராகவே இப்போது வாள் ஏந்த வந்துள்ளேன். பேரரசின் ஆணை இது. என்னை மன்னியுங்கள்” என்றான் சற்றே கலங்கிய குரலோடு.

``உண்மையல்லாத ஒன்றை நான் எப்போதும் மன்னிப்பதில்லை” என்று சொல்லியபடி தேரில் ஏறினார் கபிலர். மற்றவர்களுக்கு என்ன நடக்கிறது எனப் புரியவில்லை.

குவித்த கையை விலக்காமல் அவரைப் பார்த்தபடியே நின்றான் செம்பன். 

தேர் ஏறிய கபிலர், அவனது கைகளைப் பார்த்துக்கொண்டே சொன்னார், ``இந்தக் கைகளால் அன்று கறித்துண்டங்கள் நிறைந்த குழிசிப்பானையை என்னை நோக்கித் தள்ள முடிந்திருந்தால், நாம் இந்நேரம் போர்க்களத்தில் சந்தித்திருக்க மாட்டோம் அல்லவா?”

கபிலரின் முகத்திலிருந்த மெல்லிய சிரிப்பு, செம்பனைக் கூனிக்குறுகச் செய்தது. தேர்ப்புழுதி மேலெழும் வரை அவன் அசைவற்று நின்றான்.

நேரம் அதிகமாகிக்கொண்டிருந்ததால் தேரை விரைந்து செலுத்தச் சொன்னான் சாகலைவன். அவனது சொல்லுக்கு ஏற்ப தேரின் வேகம் கூடியது. படைகளைக் கடந்து மூஞ்சல்நகர் நோக்கிச் சென்றது தேர். தனித்துவமிக்க இந்தப் பகுதியைப் பார்த்ததும் பேரரசர்களின் கூடாரப் பகுதி என்பது புரிந்தது. மூஞ்சலுக்குள் தேர் நுழைந்ததும் வரவேற்க அமைச்சர்கள் நின்றிருந்தனர்.

அவர்கள் நின்ற இடம்வந்து தேர் நின்றது. அமைச்சர்கள் மூவரும் பெரும்புலவரை வணங்கி வரவேற்றனர். முசுகுந்தரின் முகம் அளவற்ற மகிழ்வில் இருந்தது. எத்தனையோ மாலைப்பொழுதுகளை வைகைக் கரையில் கபிலரோடு உரையாடி மகிழ்ந்தவர் அவர்.

நாகரையனும் வளவன்காரியும் அவரின் கை தொட்டு வணங்கினர். அவர்கள் இருவருக்கும் கபிலரோடு உரையாடும் அளவுக்கு உறவு இல்லை. தேர்விட்டு இறங்கிய கபிலர் நடக்கத் தொடங்கினார். நினைவின் ஆழத்திலிருந்து கடந்தகாலம் மேலெழுந்து வந்துகொண்டிருந்தது. மூன்று பேரரசர்களுக்கும் தனக்குமான உறவின் வலிமை நினைவெங்கும் பரந்துவிரிந்தது. கடந்த காலத்தின் முன் மனம் கூசி நடுங்கியது. ஆனால், இன்னும் சிறிது நேரத்தில் அந்தக் கடந்த காலத்துக்குள்தான் நுழையப்போகிறார். அங்கிருந்து வந்துள்ள மனிதர்கள்தான் அவருக்காகக் காத்திருக்கின்றனர்.

`எனது புலமையைப் போற்றிக் கொண்டாடிய பேரரசர்களுக்கு எதிராக வந்து விழப்போகும் சொற்கள் என்னவாக இருக்கப்போகின்றன? அவை எனது வாழ்வின் முழுமையிலிருந்து விளைந்த சொற்களாக இருக்கப்போகின்றனவா அல்லது பறம்பிலிருந்து மட்டும் விளைந்த சொற்களாக இருக்கப்போகின்றனவா? சொல், நிலத்திலிருந்து எழுவதில்லை; மனதிலிருந்துதான் எழுகிறது. மனம் உண்மையோடு கரைகிறபோது சொல் தன்னியல்பில் முளைத்து மேலெழுகிறது. உண்மைகள் விளையவைக்கும் சொற்களைப் பற்றி நாம் ஏன் முன்கூட்டியே சிந்திக்கவேண்டும்?’ என்று கருதியபடி கூடாரத்துக்குள் நுழைந்தார் கபிலர்.

குலசேகரபாண்டியன் இருக்கைவிட்டு எழுந்து வந்து பெருமகிழ்வோடு வரவேற்றார். செங்கணச்சோழனும் உதியஞ்சேரலும் பொதியவெற்பனும் வணங்கி வரவேற்றனர். சோழவேலன் அணைத்து மகிழ்ந்தான்.

கூடாரத்தின் இடது ஓரம் இருந்த சிறு மேடையில் நால்வர் அமர்ந்து யாழ்மீட்டிப் பாடிக்கொண்டிருந்தனர். கபிலர் உள்நுழைந்ததும் பாடலை நிறுத்தி எழுந்தனர். மீட்டிய யாழையும் பிற இசைக்கருவிகளையும் வைத்துவிட்டு வெளியேறினர்.

அவர்கள் பாடிய `வேந்தே காண்...’ எனும் கபிலரின் பாடலைப் பாடியபடி அவரை இருக்கையில் அமரவைத்து தானும் இருக்கையில் அமர்ந்தான் குலசேகரபாண்டியன்.

``நீங்கள் இந்தப் பாடலை எழுதிய அன்று நமக்குள் நிகழ்ந்த உரையாடல் நினைவிருக்கிறதா?” என்று பேச்சை இயல்பாகத் தொடங்கினார் குலசேகரபாண்டியன்.

``நன்றாக நினைவிருக்கிறது” என்றார் கபிலர்.

வீரயுக நாயகன் வேள்பாரி - 81

மனிதர்களைக் கையாள்வதில் குலசேகரபாண்டியனுக்கு இருக்கும் அனுபவம் இணையற்றது என்று எப்போதும் கருதும் முசுகுந்தர், இப்போதும் அதையே நினைத்துக்கொண்டார். எதிரிக்கு தோழனாகக் கருதப்பட்ட பெரும்புலவரை, இவ்வளவு இயல்பாக உரையாடலுக்குள்ளே இழுத்துக்கொண்ட அவரின் ஆற்றல் வியப்பையே தந்தது.

`` `வேந்தனின் செங்கோன்மையை இதைவிடச் சிறப்பாய் இன்னொரு புலவன் சொல்லிவிட முடியாது’ என்று நான் சொன்னபோது அன்று நீங்கள் மறுத்தீர்கள் அல்லவா?” என்றார் குலசேகரபாண்டியன்.

``ஆம்” என்றார் கபிலர்.

``இன்று வரை இதற்கு இணையான பாடலை வேறு யாரும் எழுதிவிடவில்லை.”

``யாரும் எழுதிவிடாததாலேயே இது சிறந்த பாடலாகிவிடுமா?” எனக் கேட்டார் கபிலர்.

``இன்றைக்கும் இதுதான் சிறந்த பாடல்.”

``இல்லை. பிழையான பாடல்.”

அதிர்ந்தான் குலசேகரபாண்டியன். ``பெரும்புலவர் கபிலர் பிழையான பாடல் எழுதினாரா?” எனக் கேட்டான்.

``நான் பாடல் எழுதினேன். காலம் அதை பிழையென ஆக்கியுள்ளது.”

``எதை பிழையெனச் சொல்கிறீர்?’’

``செங்கோன்மைக்கு நான் சொன்ன உவமை பிழையெனக் கருதுகிறேன்.”

அவையில் அமைதி நீடித்தது. மற்றவர்களுக்கு அந்தப் பாடல் எது எனத் தெரியாததால், பேச்சில் பங்கெடுக்கவில்லை. முசுகுந்தருக்கு அந்தப் பாடல் நன்கு தெரியும். இந்தப் பேச்சு எதை நோக்கிப் போகிறது என்பதை உணரத் தொடங்கினார். 

கபிலர் தொடர்ந்தார், ``அரசன் நியதியை நிலைநாட்ட தண்டத்தைப் பயன்படுத்துவது பயிருக்குள் இருக்கும் களையை அகற்றுவது போன்றது எனக் குறிப்பிட்டுள்ளேன் அல்லவா அதைத்தான் சொல்கிறேன்” என்றார்.

``அது முற்றிலும் சரியான கருத்துதானே, அதிலென்ன பிழையுள்ளது?”

``அரசு அறத்தை நிலைநாட்ட தண்டத்தினைக்கொண்டு களையைப் பறிக்கலாம். ஆனால், பயிரைப் பறிப்பது எந்த வகை அறம்? அரசநியதியின் பெயரால் நிகழ்த்தப்படும் செயல்கள் அனைத்தும் செங்கோன்மைக்குப் பெருமை சேர்ப்பதாகா.”

கபிலர் சொல்லவருவது என்னவென்று எல்லோருக்கும் புரிந்தது. பேச்சு, எழுதப்பட்ட பாடலைப் பற்றியது அன்று; தூது அனுப்பப்பட்டதன் நோக்கத்தைப் பற்றியது; போர்க்களத்தின் அரசியல் பற்றியது. உரையாடல் தொடங்கும்போதே கபிலர் அவையை அந்த இடம் கொண்டுவந்து நிறுத்துவார் என யாரும் எதிர்பார்க்கவில்லை. இந்தத் தன்மையில் இந்தப் பேச்சு தொடங்கக் கூடாது; தொடரவும் கூடாது எனக் கருதிய முசுகுந்தர், ``முதலில் பயணக் களைப்பாற சுவைநீர் அருந்துங்கள். பிறகு உரையாடலாம்” என்று கை அசைத்தபடி சொன்னார். அவர் சொன்னதும் பணியாளர்கள் நீள்வாய்க்குவளையை உள்ளே கொண்டுவந்தனர். ஒவ்வொருவருக்கும் அழகிய பீங்கான் குவளையில் முந்நீர் வழங்கினர்.

முசுகுந்தர் கபிலரைப் பார்த்து, ``இது, குறும்பை நீரும் கரும்பின் சாறும் தெங்கின் இளநீரும் கலந்த முந்நீர்ச்சாறு. நீங்கள் அருந்தி நீண்டகாலம் ஆகியிருக்கும் அல்லவா?” என சற்றே எள்ளலோடு கேட்டார்.

குவளைநீரை வாங்கியபடி கபிலர் சொன்னார், ``குறும்பையும் தெங்கும் பறம்பில் நிறைய உண்டு. கரும்பை மட்டும் சமவெளி மக்களிடம் மான்தசையும் மதுவும் கொடுத்து வாங்குவர்” எனச் சொன்னவர், ``இன்னும் நீங்கள் கரும்பைப் பிழிந்து சாறெடுத்துதான் குடிக்கிறீர்களா?” எனக் கேட்டார்.

அவையோர் அதிர்ச்சியடைந்தனர். ``கரும்பைப் பிழிந்துதானே சாறெடுக்க முடியும்... வேறெப்படி எடுப்பது?” எனக் கேட்டார் சோழவேலன்.

``கரும்பின் மூன்றாவது கணு மட்டும் சிறு துளையுடையது. விளைந்த கரும்பை செம்மண்ணால் குழைத்த துணிகொண்டு அடி முதல் நுனி வரை இறுகக் கட்ட வேண்டும். மூன்றாவது கணு மட்டும் வெளியில் தெரிவதைப்போல் இருக்க வேண்டும். அதில் குவளையைக் கட்டிவைத்துவிட்டால் பனையில் கள் இறங்குவதுபோல கரும்பின் சாறு இறங்கும். பத்து கரும்புகளுக்கு ஒரு மிடறு சாறு கிடைக்கும். அதற்கு இணையான சுவைநீர் உலகில் வேறில்லை.”

கேட்டுக்கொண்டிருந்தவர்களின் நாக்கில் மூன்றாம் கணுவின் நீர் இறங்கத் தொடங்கியது.

கபிலர் தொடர்ந்தார், ``அதை மட்டுமே குடிக்க வேண்டும் என்று குவளை நிறைய நாள் தவறாமல் எனக்குத் தருவான் பாரி.”

எங்கே தொடங்கினாலும் முடிக்கவேண்டிய இடத்தில் வந்து முடிக்கிறார் கபிலர். குவளையில் முந்நீரை யாரும் அருந்தவில்லை. பேச்சின் சூழல் பொருத்தமாய் அமைவதுபோல் இல்லை. அனைவரின் எண்ணமும் அதுவாகத்தான் இருந்தது.

வீரயுக நாயகன் வேள்பாரி - 81

குவளையைக் கையில் ஏந்திய கபிலர் அப்போதுதான் கவனம்கொண்டார். உடன்வந்த அலவன் அருகில் இல்லை. ``என்னுடன் வந்த சிறுவன் எங்கே?” எனக் கேட்டார். மற்றவர்களும் அதுவரை கவனிக்கவில்லை.

கூடாரத்துக்கு வெளியே பணியாளர்கள் அங்குமிங்குமாகத் தேடினர். மூஞ்சலின் ஒரு மூலையிலிருந்து நடந்து வந்துகொண்டிருந்தான் அலவன். பணியாளர்கள் அவனை அழைத்துக் கொண்டு வந்தனர். கூடாரத்துக்குள் நுழைந்து கபிலரின் அருகே அமர்ந்தான். அவனுக்கும் குவளையில் முந்நீர் தரப்பட்டது.

அதுவரை உதியஞ்சேரலின் அருகே இருந்த கருங்குரங்குக்குட்டி திடீரென பல்லை இளித்து `கீர்ர்ர்’ரென ஓசை எழுப்பத் தொடங்கியது. என்ன ஓசையெழுப்புகிறது என மற்றவர்கள் பார்க்கும்போதே அந்த இடத்தில் மலம் கழித்தது. என்ன செய்கிறது எனப் பார்த்தறியும் முன்னரே அது நிலைகுலைந்து கத்தவும் குதிக்கவும் தொடங்கியது. சேரனின் பணியாளர்கள் உடனே வந்து அதைப் பிடிக்க முயன்றனர். அதன் செயல்கண்டு பதற்றத்தோடு உதியஞ்சேரல் கத்தினான், ``குவளையில் இருக்கும் முந்நீரை அருந்தாதீர்கள். அதில் நஞ்சு கலக்கப் பட்டிருக்கிறது.”

குலசேகரபாண்டியன் மிரண்டு எழுந்தான். ஏந்திய குவளையை சட்டென விடுத்தான் சோழவேலன். செங்கணச்சோழனும் பொதியவெற்பனும் அதிர்ந்தனர். முசுகுந்தர் நடுங்கிப்போனார்.

யாருக்கு எதிரான சதியிது? யாருக்கும் ஒன்றும் புரியவில்லை. மூவேந்தர்களும் ஒருவருக்கு ஒருவர் வீசிய பார்வையில் எழுப்பப்பட்ட நம்பிக்கை நொறுங்கிக்கொண்டிருந்தது.

கபிலர், ஏந்திய குவளையோடு அப்படியே இருந்தார். அருகில் இருந்த அலவன் அவரின் காதோடு சொன்னான், ``அது என்னைக் கண்டுதான் மிரண்டு கத்துகிறது. குவளை நீரில் நஞ்சேதும் இல்லை.”

குலசேகரபாண்டியனின் மேலெல்லாம் வியர்த்துக்கொட்டியது. ``சுவைநீரில் நஞ்சிருக்கிறதா என்று சோதியுங்கள். சமையலாளர்களைச் சிறையிடுங்கள்” என்றார்.

மிச்சம் இருந்த குவளைநீரை பணியாளர்கள் கைநடுங்க வந்து வாங்கினர். கபிலர் சொன்னார், ``இதில் நஞ்சேதும் இருப்பதுபோல் தெரியவில்லையே!”

``வேண்டா பெரும்புலவரே” என்று சொன்ன குலசேகரபாண்டியன் அவையைப் பார்த்துச் சொன்னான், ``முந்நீரில் நஞ்சு கலக்கப்பட்டுள்ளதா என்று சோதித்தறிந்த பிறகு பேச்சைத் தொடரலாம்.”

அவை அமைதிகாத்தது. கபிலரையும் அலவனையும் சற்றுநேரம் ஓய்வெடுக்க கூடாரத்துக்கு அழைத்துச்சென்றார் முசுகுந்தர்.

நீண்ட சோதனைக்குப் பிறகு மூவேந்தர்களின் தலைமை மருத்துவர்கள் உள்ளே நுழைந்தனர், ``பார்போற்றும் வேந்தர்களை வணங்குகிறோம். சுவைநீரில் நஞ்சேதும் இல்லை.”

``நன்றாகச் சோதித்தீர்களா?”

``முழுமையாகச் சோதித்துவிட்டோம்.”

``அப்படியென்றால் நீங்கள் மூவரும் முதலில் அருந்துங்கள்” என்றார் சோழவேலன்.

மூவரும் குவளைநீரை அருந்தினர்.

குவளையைக் கீழே வைக்கும் வரை வேந்தர்களின் கண்கள் அவர்களைவிட்டு விலகவில்லை. அருந்திய மருத்துவர்களின் கண்களில் சிறு அச்சம்கூட இல்லை. அவர்கள் குவளையைக் கீழே வைத்த கணத்தில் உதியஞ்சேரல் கத்தினான், ``அந்தக் குரங்கைக் கொன்றுவிடுங்கள்!”

சற்று இடைவெளிக்குப் பிறகு ஓய்வறையில் இருந்த கபிலரை அழைத்துவரச் சொன்னார்கள். நஞ்சு, அச்சம், சதி, விசாரணை, கொலை என சிறிது நேரத்துக்குள் அனைத்தும் நிகழ்ந்து முடிந்த ஓர் அவைக்குள் கபிலர் மீண்டும் நுழைந்தார். யார் முகத்திலும் இயல்பும் மகிழ்வும் இல்லை. பாரியின் தரப்பில் நின்று வேந்தர்களுக்கு எதிராக வெளிப்படையாகச் சொல்லேந்துவார் கபிலர் என யாரும் எதிர்பார்க்கவில்லை.

அதிகாரத்தின் மீதிருந்து வெளிவரும் நேரடியான அரசியல் பேச்சு தொடங்கியது. ``இப்பெரும் போரால் பாரியும் பறம்பும் அழிவதைத் தவிர்க்கவே நாங்கள் விரும்புகிறோம். அதற்காகத்தான் உங்களை அழைத்தோம்” என்றார் குலசேகரபாண்டியன்.

அருகில் இருந்த அலவனைப் பார்த்து, ``நீ வெளியில் போ” என்றார் கபிலர். அவன் வெளியேறினான்.

``நான் என்ன செய்ய வேண்டும் என்று கருதுகிறீர்கள்?” எனக் கேட்டார் கபிலர்.

``பாரியை சமாதானப்படுத்தி பேரரசர்களோடு இணங்கிப்போகச் சொல்லுங்கள்” என்றார் முசுகுந்தர்.

``போருக்கு ஆயத்தமாக இருக்கும் ஒருவனைத்தானே சமாதானமாகப் போகச்சொல்ல முடியும். பாரிதான் போருக்கே ஆயத்தமாகவில்லையே, பிறகு எப்படி அவனை சமாதானமாகப் போகச்சொல்வது?”

``பெரும்புலவர், பொய் பேசத் துணிந்துவிட்டீர்! எதிர் மலையில் நாள்தோறும் எண்ணற்ற வீரர்களைக் குவித்துக்கொண்டு இருக்கிறான். அவனையா போருக்கு ஆயத்தமாகவில்லை என்று சொல்கிறீர்கள்?”

``அவனது மண்ணைக் காக்க அவனது எல்லைக்குள் வீரர்களைச் சேர்க்கிறான். அதுவா போருக்கான ஏற்பாடு?”

``எல்லையைக் காப்பதற்கும் எல்லைக்குள் இருந்து தாக்குதலுக்கு  ஆயத்தமாகவதற்கும் நிறைய வேறுபாடு உண்டு. நீங்கள் அதை அறியாதவரல்லர். ஆனால், அவன் எங்களையும் எமது படையையும் அறியாதவனாக இருக்கிறான். அதை அவனுக்கு உணர்த்தவே உங்களை அழைத்தோம்” என்றார் சோழவேலன்.

``நீங்கள் தேரில் ஏறிய கணமிருந்து இந்த இடம் வந்து சேர இரு பொழுதுகள்  ஆனதல்லவா! இதே வேகத்தில் தேரை ஓட்டினால் எமது படை நிற்கும் பரப்பளவு முழுவதும் பார்த்தறிய மூன்று நாள்களாகும். இந்தப் பெரும்படையோடு மோத நினைக்கும் மூடத்தனத்தை அவன் செய்ய வேண்டாம் என நீங்கள் அவனுக்கு எடுத்துரைக்க வேண்டும்” என்றார் குலசேகரபாண்டியன்.

வீரயுக நாயகன் வேள்பாரி - 81

``நாகக்கரட்டின் மேலிருந்து பார்த்தால் படையின் சரிபாதி தெரிகிறது. அதுவே இரலிமேட்டிலிருந்து பார்த்தால் ஒரே பார்வையில் மொத்த படையின் முழுமையையும் பார்த்துவிட முடிகிறது. அவ்வளவுதான் இந்தப் படையின் அளவு. ஆனாலும் பாரி போரிட வேண்டாம் என்றுதான் முடிவுசெய்துள்ளான்” என்றார் கபிலர்.

``இந்தப் பெரும்படையைப் பார்த்தால், எந்தச் சிறுகுடி மன்னனும் போரிட வேண்டாம் என்றுதான் முடிவுசெய்வான். அதைத் தவிர அவனுக்கு வேறு வழி என்ன இருக்கிறது?” எனக் கேட்டான் உதியஞ்சேரல்.

வார்த்தைகள் உரசிக்கொள்ளத் தொடங்கின. கபிலரைக் காயப்படுத்திவிடக் கூடாது என்ற கவனம் மெள்ள மெள்ள குறைந்துகொண்டிருந்தது.

உதியஞ்சேரல் வயதால் மிகச் சிறியவன்; பலமுறை தோல்வியடைந்ததால் தீராவலியோடு இருப்பவன். அவையனைத்தும் வார்த்தைகளில் வெளிப்பட்டுக் கொண்டிருந்தன.

``மூவேந்தர்களோடு இணங்கிப் போதல்தான் பாரிக்கு நல்லது. எண்ணற்ற சிறுகுடி மன்னர்களைப்போல அவனும் தனது நிலத்தை சிறப்பாக ஆளலாம்” என்றார் முசுகுந்தர்.

``இல்லையென்றால்..?”

``போர்க்களத்தில் அவனது குடலை கழுகுகள் ஏந்திப் பறக்கும் நாள் விரைவில் வரும்” என்றார் சோழவேலன்.

கூர்முனைகொண்ட வார்த்தைகள் அடியாழம் வரை இறங்கின. கபிலர் சற்றே அமைதிகொண்டார். அவை முழுவதும் அமைதி நீடித்தது. செங்கணச்சோழன் பொதியவெற்பனைப் பார்த்து கண்களை உருட்டி ஏதோ சொல்லச் சொன்னான். தூதுவனைச் சீண்டுவதும் மிரட்டுவதும் மிக முக்கியம். எதிரியை எந்தப் பொறியை நோக்கி நகர்த்த வேண்டும் என்பதிலிருக்கும் தெளிவுதான் தூதுவனை நோக்கி எறியவேண்டிய சொற்களை தீர்மானிக்கிறது. பாரியிடம் சமாதானம் பேசவேண்டிய தேவை எதுவும் மூவேந்தர்களுக்கு இல்லை. திசைவேழரின் வாக்கை ஏற்றதாக இருக்க வேண்டும் என்பதால், இது நடக்கிறது.

இந்தப் படையெடுப்புக்கு வேந்தர்கள் மூவருக்கும் தனித்தனியான காரணங்கள் உண்டு. பொதுவான காரணம், பாரியின் புகழ். அது இவர்களின் ஆழ்மனதை நிம்மதி இழக்கச் செய்துள்ளது. அவனது பெயர் அவமானத்தை நினைவூட்டுவதாக இருக்கிறது. அவனது அழிவு மட்டுமே இதற்கு முடிவு காணக்கூடியது. அதற்காக போர்க்களம் நோக்கி குறிவைத்து இழுக்க பேச்சுவார்த்தையைப் பயன்படுத்துதல் என்பதுதான் இவர்களது எண்ணம்.

பேசவேண்டியது பற்றி கண்களால் குறிப்புச் சொன்னதும் பொதியவெற்பன் கூறினான், ``பெரும்புலவரை வணங்குகிறேன். பேரரசர்கள் வீற்றிருக்கும் அவையில் இளவரசன் பேசுதல் முறையன்று. ஆனாலும் எனது கருத்தைத் தெரிவிக்க விழைகிறேன். பாரியின் முன்னால் இருப்பன இரண்டு வழிகள்தான்.”

என்னவென்று கபிலர் கேட்பார் எனக் கருதியது அவை. அவரோ அமைதியாக அவனையே பார்த்துக்கொண்டிருந்தார்.

கேள்வி எழாததைக் கண்டுகொள்ளாததைப் போல் பேச்சைத் தொடர்ந்தான், ``மூவேந்தர்களில் யாரேனும் ஒருவருக்கு பாரி தன் மகளை மணமுடித்துக் கொடுத்து மணஉறவு காண்பது அல்லது மூவேந்தர்களோடு போரிட்டு மாய்வது. இவை இரண்டில் எது சரியான வழியென உங்கள் நண்பனுக்கு நீங்கள் அறிவுரை வழங்குங்கள்.”

கொந்தளிக்கும் தனது எண்ணங்கள் எதுவும் முகத்தில் தெரிந்துவிடக் கூடாது என பெருமுயற்சி செய்தார் கபிலர். ஆனாலும் மற்றவர்களால் கண்டறிய முடிந்தது. இதுதான் தகுந்த நேரம் என நினைத்த சோழவேலன் சொன்னான், ``போரில் அவன் அழிவான். அதன் பிறகு மூவேந்தர்களும் பறம்பைப் பங்கிட்டுக் கொள்வோம். அதைத் தடுக்க, மூவேந்தர்களோடு மண உறவுகொள்ளுதல் சிறந்ததுதானே?”

இயற்கையின் தன்னியல்பில் பற்றிப் படரும் கொடிபோல் மனிதக்காதல் செழித்துக்கிடக்கும் ஆதிநிலம் குறிஞ்சி. குறிஞ்சியின் குலச்சமூகம் நோக்கி மணவுறவை அரசியல் நடவடிக்கை என்னும் வல்லாயுதமாக மாற்றி வீசியெறிந்தபோது கபிலரின் உடல் நடுங்கியது.

மறுசொல்லின்றி அமர்ந்திருந்தார். அமைதி நீடித்தது. சற்று நேரத்துக்குப் பிறகு கொந்தளித்த உணர்வுகளை ஒருமுகப்படுத்திப் பேசத் தொடங்கினார்,

``உங்கள் மூவருக்கும் பறம்பின் மலைகள் வேண்டும். அவ்வளவுதானே?”

நேரடியாக இப்படிக் கேட்கிறாரே என்று குலசேகரபாண்டியன் எண்ணிக்கொண்டிருந்த போது, சற்றே உயர்த்திய குரலில் சோழவேலன் சொன்னான், ``ஆமாம்.”

``அதோ அந்த மேடையில் இருக்கும் இரண்டு யாழ்களையும் இருவர் கையில் எடுத்துக் கொள்ளுங்கள். இரண்டு பெண்களை அழைத்து கால் சலங்கையைக் கட்டிக்கொள்ளச் சொல்லுங்கள். அனைவரும் உடன் வாருங்கள். நான் பாடுகிறேன். பாட்டிசைத்துப் பறம்பேறிய குழுக்கள் கேட்பதை `இல்லை’ எனச் சொல்லும் வழக்கம் பாரியிடம் இல்லை. மொத்த பறம்பினையும் வழங்கிவிடுவான்.”

ஆணவத்தை அடியோடு வெட்டிச் சாய்ப்பதைப்போல சொற்களை வீசியெறிந்துவிட்டு, மறுமொழி என்ன என்பதை இறுமாப்போடு பார்த்தார் கபிலர்.

கொதிநெருப்பைக் கொட்டியதுபோல துடித்தெழுந்தான் சோழவேலன். நிலைமை வேறுவிதமாக ஆகிவிடக் கூடாது எனக் கருதிய குலசேகரபாண்டியன் சட்டெனச் சொன்னார், ``நட்பால் நா பிறழ்கிறது. உமது சொற்கள் பற்றியெறியும் பறம்பினைப் பாட அதிக நாள் இல்லை கபிலரே!” 

இருக்கையைவிட்டு எழுந்தார் கபிலர், ``நெருப்பில் எரித்தாலும் மீண்டும் முளைக்கும் ஆற்றல்கொண்டது பனம்பழம் மட்டும்தான். பனையை குலச்சின்னமாகக்கொண்டவன் வேள்பாரி. நெருப்பாலும் அழிக்க முடியாத அவனைப் பாடுதல் எந்தமிழுக்கு அழகு.”

சொல்லியபடி வணங்கி அவை நீங்கினார் கபிலர்.

- பறம்பின் குரல் ஒலிக்கும்...