Published:Updated:

காதலிக்குத் திருமண ஏற்பாடு... காதலனுக்குத் தீ!

காதலிக்குத் திருமண ஏற்பாடு... காதலனுக்குத் தீ!
பிரீமியம் ஸ்டோரி
News
காதலிக்குத் திருமண ஏற்பாடு... காதலனுக்குத் தீ!

காதலிக்குத் திருமண ஏற்பாடு... காதலனுக்குத் தீ!

திருத்தணியைச் சேர்ந்த அஸ்வினிக்கும் அரக்கோணத்தைச் சேர்ந்த ராகேஷுக்கும் காதல் வளர்ந்த கதை மிகவும் சுவாரஸ்யமான பக்கம்... அந்தக் காதல், தீயால் கருகியது வேதனையின் உச்சம். காதலியைப் பெண்கேட்டுச் சென்ற ராகேஷ், தீயில் கருகி இப்போது சென்னை மருத்துவமனையில் இருக்கிறார்.

என்ன நடந்தது என விசாரித்தோம்.

சென்னை ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரியில் படித்துக்கொண்டிருந்தபோது தோழியின் மூலம் அஸ்வினிக்கு அறிமுகமானவர், ராகேஷ். கண்டதும் காதல். தனக்கெனப் பிறந்தவள் இவள்தான் என அந்த நொடியே ராகேஷ் காதலை உணர்ந்தார். உடனே அஸ்வினியிடம் தன் காதலைச் சொன்னார். அவர் காதலைச் சொன்ன விதம் அஸ்வினிக்கும் பிடித்திருந்தது. முகத்துக்கு முகம் பார்த்துப் பேச வாய்ப்பு குறைவாக இருந்தாலும்... இருக்கவே இருக்கிறது, முகப்புத்தகம். ஃபேஸ்புக் மூலம் மூன்று ஆண்டுகள் காதல் தொடர்ந்தது.

காதலிக்குத் திருமண ஏற்பாடு... காதலனுக்குத் தீ!

கல்லூரிப் படிப்பை முடித்துக்கொண்டு ஐ.ஏ.எஸ் தேர்வு எழுதப் பயிற்சி பெறுவதற்காக டெல்லி சென்றார் அஸ்வினி. டெல்லி கரோல்பாக் பகுதியில் தங்கி, கோச்சிங் கிளாஸ் போய்வந்தார். மும்பையில் கடற்படையில் ராகேஷுக்கு வேலை கிடைத்தது. வார விடுமுறைகளில் டெல்லி சென்று அஸ்வினியைச் சந்தித்து வந்தார். ராகேஷின் அம்மா வசுமதி, அவரின் தங்கை பிரீத்தி என அனைவரிடமும் அஸ்வினி பலமுறை பேசியுள்ளார். இந்த நிலையில், 15.3.2017 அன்று பதிவுத் திருமணம் செய்துகொள்ள முடிவுசெய்து அழைப்பிதழ்கூட அச்சடித்து விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்தனர். அதற்குத் தேவையான பள்ளிச் சான்றிதழ், ஆதார் கார்டு, ரேஷன் கார்டு ஆகிய அனைத்து ஆவணங்களையும் ராகேஷிடம் அஸ்வினி கொடுத்துள்ளார். ஆனால் ராகேஷ், ‘இரு தரப்பு பெற்றோரின் சம்மதம் கிடைக்கும்வரை காத்திருப்போம்’ எனத் தடுத்து நிறுத்தியுள்ளார். அதற்குச் சம்மதித்த அஸ்வினி, பதிவுத் திருமணம் செய்துகொள்ளும் முடிவைக் கைவிட்டுள்ளார். அஸ்வினி தொடர்ந்து படிப்பதில் கவனம் செலுத்தி வந்தார். இந்த நிலையில் கடந்த வாரம், அஸ்வினி வீட்டில் காதல் விவகாரம் தெரிந்து, உடனடியாக வீட்டுக்கு வருமாறு அழைத்தார்கள். 

வீட்டில் என்னவோ ஏடாகூடமாக நடக்கப் போகிறது என்பதை உணர்ந்த அஸ்வினி, உடனடியாக ஒரு காரியம் செய்தார். தான் பேசுவதை செல்போனில் வீடியோவாகப் பதிவுசெய்தார். ‘‘என் பெயர் அஸ்வினி. நானும் ராகேஷும் மூன்று வருடங்களாகக் காதலித்து வருகிறோம். என் படிப்பு முடிந்ததும் வீட்டில் சொல்லிச் சம்மதம் பெறலாம் என நினைத்திருந்தபோது, எனக்கு என் வீட்டில் மாப்பிள்ளைப் பார்த்து விட்டார்கள். என் அப்பாவிடம் ‘நான் ராகேஷைதான் மேரேஜ் செய்து கொள்ளப்போகிறேன்’ என்று சொல்வேன். அவர் ஓகே சொல்லும் வரை நான் வெயிட் பண்ணுவேன். பட்... எங்க அப்பா எங்களைப் பிரிக்கக் கூடாது. அதைத்தான் நான் எதிர்பார்க்கிறேன். நன்றி’’ என முடிகிறது அந்த செல்ஃபி வீடியோ.

வீட்டுக்கு வந்த அஸ்வினிக்குப் பெரும் அதிர்ச்சி காத்திருந்தது. அப்பா, மாப்பிள்ளை தானே பார்த்திருக்கிறார் என நினைத்த அஸ்வினிக்கு, நிச்சயதார்த்த ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது தெரியவந்தது. அஸ்வினின் அப்பா சௌந்தர்ராஜன், திருத்தணி அ.தி.மு.க நகரச் செயலாளர். திருத்தணி நகராட்சி சேர்மனாகவும் இருந்தவர். கடந்த வெள்ளிக்கிழமை அஸ்வினிக்கு ரகசியமாக உள்ளூர்ப் பிரமுகருடன் நிச்சயம் செய்து முடிக்கப்பட்டது. இந்தத் தகவல் ராகேஷுக்குத் தெரிந்ததும் தன் உறவினர்களுடன் கடந்த வாரம் அஸ்வினி வீட்டுக்குப் பெண் கேட்டுச் சென்றார். அங்குதான் திடீரெனத் தீப்பிடித்து எரிந்திருக்கிறார் ராகேஷ்.

பெண் கேட்டுப் போன சம்பவத்தை விவரித்தார் ராகேஷின் சகோதரி ப்ரீத்தி. ‘‘வீட்டுக்குப் போனதுமே அஸ்வினியின் அப்பா சௌந்தர்ராஜன், ‘நீங்கள் என் தகுதி தெரியாமல் வந்திருக்கிறீர்கள்’ என ஆவேசமாகப் பேச ஆரம்பித்தார். இந்த நேரத்தில் ராகேஷுக்கு ஒரு போன் வர, வீட்டுக்கு வெளியே வந்து பேச நினைத்தான். ஆனால், சில நிமிடங்களில் முதுகுப்பக்கம் தீப்பிடித்த நிலையில் ‘காப்பாத்துங்க... காப்பாத்துங்க’ என்றபடி உள்ளே ஓடிவந்தான். யார் தீ வைத்தது, எப்படி வைத்தார்கள் என்பதை யூகிக்கும் முன்பே தீ வேகமாகப் பரவி அலறித் துடித்தான் ராகேஷ்’’ என்றார் கண்கலங்க.

ராகேஷின் அம்மா வசுமதி, ‘‘என் மகன் உயிரா எழுந்து வந்தாலே போதும். அப்பா இல்லாத அவனை அப்படிச் செல்லம் கொடுத்து வளர்த்தேன். இன்று வெந்து கிடக்கிறானே’’ என்று அழத்தொடங்கினார். ராகேஷின் மைத்துனர் லோகித், ‘‘என்னை அடித்தது மட்டுமல்லாமல், அவனுக்கு முதலுதவி செய்யக்கூட எங்களை அனுமதிக்கவில்லை’’ என்றார்.

காதலிக்குத் திருமண ஏற்பாடு... காதலனுக்குத் தீ!

இந்தச் சம்பவம் நடப்பதற்கு இரு நாள்களுக்கு முன் அஸ்வினி, ராகேஷுக்கு வாட்ச் ஒன்றை வாங்கி அனுப்பியிருக்கிறார் என்று அதைக் காட்டினார்கள். நடந்த சம்பவம் பற்றி அறிய அஸ்வினியின் செல்போன் எண்ணுக்குத் தொடர்புகொண்டோம். அது ஸ்விட்ச் ஆஃப் செய்யப்பட்டிருந்தது. அஸ்வினின் அப்பா சௌந்தர்ராஜன் நம்மிடம் பேசத் தயாராக இல்லை.

போலீஸ் தரப்பில் பேசினோம். ‘‘தற்கொலைக்கு முயன்றதாகவும், அஸ்வினி வீட்டுக்கு வந்து மிரட்டியதாகவும், அஸ்வினியின் புகைப்படங்களைச் சமூக வலைத்தளங்களில் தவறான நோக்கத்துடன் பரப்பியதாகவும் ராகேஷ்மீது வழக்குத் தொடர்ந்துள்ளோம். தொடர்ந்து விசாரித்து வருகிறோம்’’ என்றனர்.

காதலுக்குக் கண் இல்லையா... காதலை எதிர்ப்பவர்களுக்கா?

- இரா.தேவேந்திரன்