
பாதை போடாத தமிழகம்... பறிபோகும் கண்ணகி கோயில்!
‘‘விவரம் தெரிந்த நாள்முதல் கண்ணகி கோயிலுக்கு வருகிறேன். இப்போது பளியன்குடி வழியாக மலைப்பாதையில் வந்தேன். பளியன்குடி அடிவாரத்தில் தமிழக வனத்துறையினர் சோதனை செய்தார்கள். பிளாஸ்டிக் பொருள்களுக்கு அனுமதி இல்லை. அத்தியூத்து என்ற இடத்தில் உள்ள கேரள வனத்துறையின் சோதனைச் சாவடிவில் கடுமையாக சோதனை செய்தார்கள். அதனால், பெண்கள் மிகுந்த சிரமத்தைச் சந்தித்தார்கள். கேரள வனத்துறையினர் நம் இடத்தில் சோதனைச் சாவடி அமைத்துக்கொண்டு, நம்மையே சோதனை செய்கிறார்கள்’’ என்று ஆதங்கத்துடன் பேசினார் கம்பத்தைச் சேர்ந்த அசோக்.

தமிழக - கேரள எல்லையில், தமிழகப் பகுதியில் கண்ணகி கோயில் அமைந்துள்ளது. ஒவ்வோர் ஆண்டும் சித்திரை முழுநிலவு நாளில், மங்கலதேவி கண்ணகிக்கு விழா எடுக்கப்படும். கண்ணகி கோயிலுக்குச் செல்ல இரண்டு பிரதானப் பாதைகள் உள்ளன. ஒன்று, கம்பம் பள்ளத்தாக்குப் பகுதியில் இருக்கும் பளியன்குடி வழியாக 6.6 கி.மீ தூரம் கொண்ட மலைப்பாதை. விரதம் இருந்து, நேர்த்திக்கடன் செலுத்தும் பக்தர்கள் இந்த வழியாக நடந்தே செல்வார்கள். மற்றொன்று, கேரள மாநிலம் குமுளி வழியாக, 12 கி.மீ தூரம் கொண்ட பாதை. இந்தப் பாதையில் ஜீப் மூலமாகவும் செல்லலாம்; நடந்தும் செல்லலாம். பெரியாறு புலிகள் காப்பகத்துக்குள் இந்தப் பாதை இருப்பதால், காப்பக வாயிலில் ஜீப்பில் இருக்கும் பக்தர்கள் கீழே இறக்கிவிடப்பட்டு கடும் சோதனைக்கு உட்படுத்தப்படுவார்கள். அதைத் தாண்டிப் பயணம் செய்தால், சீரமைக்கப்படாத சாலை, நம் கண்களில் புழுதியை வாரி இறைக்கும். இந்த ஆண்டு முழுநிலவு நாளில் பக்தர்களோடு நாமும் சென்றிருந்தோம். கண்ணகியை வழிபட தமிழக பக்தர்கள் பெரும் உரிமைப் போராட்டம் நடத்தவேண்டிய அவலத்தை நேரில் பார்க்க முடிந்தது.
‘‘ஜீப் மூலமாகக் குடும்பத்துடன் கண்ணகி கோயிலுக்கு வந்தோம். முன்பு இருந்ததைவிட, இப்போது பாதை மிகவும் மோசமாக இருக்கிறது. குண்டும் குழியுமாக இருந்ததால், குழந்தைகளும் வயதானவர்களும் மிகுந்த சிரமத்துக்கு ஆளானார்கள். ஒரே புழுதி. மூச்சு விட பெரும் சிரமமாக இருந்தது. கண் எரிச்சல் தாங்க முடியவில்லை. நடந்து வருபவர்களின் நிலை இன்னும் பரிதாபம்’’ என்றார் மதுரையைச் சேர்ந்த சுரேஷ்.

மங்கலதேவி கண்ணகி அறக்கட்டளை பொருளாளர் முருகன், ‘‘தமிழ்நாட்டின் எல்லைக்குள் கண்ணகி கோயில் உள்ளது. 1975-ல் குமுளி வழியாக கண்ணகி கோயிலுக்கு கேரளா பாதை போட்டது. அந்த ஒரு பாதையைப் போட்டுவிட்டு, மொத்த கோயிலையும் உரிமை கொண்டாடப் பார்க்கிறது கேரளா. இதனால்தான், பளியன்குடி பாதையைச் சீரமைத்துத் தாருங்கள் என்று தமிழக அரசிடம் நீண்டகாலமாகச் சொல்லிவருகிறோம். பளியன்குடி பாதை சீரமைக்கப்பட்டால், குமுளிப் பாதையை யாரும் பயன் படுத்த மாட்டார்கள். கேரளாவின் தலையீடும் இருக்காது’’ என்றார்.
இது குறித்து தேனி மாவட்ட கலெக்டர் பல்லவி பல்தேவிடம் கேட்ட போது, “பளியன்குடி பாதை நமக்கு மிக முக்கியமானது. என் விருப்ப நிதியிலிருந்து ஒரு லட்சம் ரூபாய் செலவில் பளியன்குடி பாதையைச் சீரமைத்திருக்கிறேன். விரைவில் பளியன்குடி பாதை முழுமையாக சீரமைக்கப்படும்’’ என்றார்.
பூசாரிகள் நான்கு மணிக்கெல்லாம் சென்று பூஜை ஏற்பாடுகளைச் செய்வது வழக்கம். இந்த முறை, ‘ஆறு மணிக்குப் பிறகு செல்லுங்கள்’ என்று கூறிய கேரளா வனத்துறையினர், பூசாரிகளிடம் ஆதார் கார்டு கேட்டுள்ளனர். பெரும் போராட்டத் துக்குப் பிறகே, பூசாரிகள் அனுமதிக்கப்பட்டனர். செய்தி சேகரிக்கச் சென்ற பத்திரிகையாளர்களிடம் ‘இரவு ஏழு மணிக்கு மேல் அனுமதி இல்லை’ என்று கேரள வனத்துறை அதிகாரிகள் கூறினர். அதனால், பத்திரிகையாளர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். அவர்களுக்கு ஆதரவாக பக்தர் களும் பொதுமக்களும் மறியலில் இறங்கினர். அதனால், ஒரு மணி நேரத்துக்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதுதொடர்பாக இடுக்கி மாவட்ட கலெக்டர் கோகுலிடம் கேட்டபோது, ‘‘மாலை நேரம் விலங்குகள் நடமாட்டம் அதிகமாக இருக்கும். இரவில் திரும்பிப் போகிறவர்கள் பாதை மாறிச் செல்லவும் வாய்ப்பு அதிகம். அதனால்தான் சீக்கிரம் திரும்பிவிட வேண்டும் என்று சொல்கிறோம்’’ என்றார்.

எம்.ஜி.ஆர் ஆட்சியில், பளியன்குடி பாதையைச் சீரமைக்க நிதி ஒதுக்கீடு செய்யப் பட்டது. பளியன்குடிப் பாதை ஆரம்பிக்கும் இடத்தில் கண்ணகிக்கு மணிமண்டபம் கட்டப் படும் என்று எம்.ஜி.ஆர் அறிவித்தார். சிறிது தூரம் வரை மட்டும் பாதை சீரமைக்கப்பட்டது. அதன்பின் இன்றுவரை எந்த நடவடிக்கையும் இல்லை. இந்தப் பாதை இல்லாததால், கண்ணகி கோயிலையே நாம் இழக்கும் அபாயம் உள்ளது.
‘எப்போது வேண்டுமானாலும் கண்ணகி கோயிலுக்குச் செல்லலாம்’ என்ற நிலை முன்பு இருந்தது. பிறகு, ஒரு வாரம் மட்டுமே அனுமதி என்று மாற்றினர். அதன்பிறகு, ‘ஒரு நாள் மட்டுமே அனுமதி’ என்று சொன்னார்கள். இப்போது ‘காலை 6 மணி முதல் மாலை 3 மணி வரை மட்டும்தான் அனுமதி’ என்று கொண்டுவந்துவிட்டனர். அடுத்து?
நீதியின் அடையாளமான கண்ணகியைத் தரிசிக்க பெரும் நீதிப்போராட்டத்தை தமிழக பக்தர்கள் நடத்தவேண்டும் போலிருக்கிறது.
- எம்.கணேஷ்
படங்கள்: வீ.சக்தி அருணகிரி