
குடிமராமத்தில் குதறி எடுக்கப்பட்ட குளங்கள்

‘‘குடிமராமத்து திட்டம் காவிரி டெல்டா வுக்கு வரம். ‘ஏரி, குளங்களில் இருக்கும் வண்டல் மண்ணை எடுத்து விவசாயிகள் விளைநிலங்களுக்குப் பயன்படுத்திக் கொள்ளலாம்’ என முதல்வரும், பொதுப்பணித் துறையைக் கையில் வைத்திருப் பவருமான எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டார். இதனால், ஒரு பைசா செலவில்லாமல் அனைத்து நீர் நிலைகளும் தூர்வாரப்பட்டுள்ளன. இதன் மூலம் வருங்காலத்தில் ஏரி, குளங்கள் நிறைந்து நிலத்தடி நீர்மட்டம் உயரும். குடிநீர்ப் பிரச்னை இருக்காது. முதல்வரின் இந்தத் தொலைநோக்குத் திட்டமே திறமையான ஆட்சிக்கு எடுத்துக்காட்டு’’ என அமைச்சர் ஓ.எஸ்.மணியன், நாகப்பட்டி னத்தில் நடந்த எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவில் பேசி எடப்பாடி உள்பட அனைவரையும் புல்லரிக்க வைத்தார்.
ஆனால், ‘‘இத்திட்டத்தின் நோக்கமே டெல்டா மாவட்டங்களின் நீர்நிலைகளில் இருக்கும் மண்ணைக் கொள்ளையடிப்பதுதான். விவசாயி கள் யாரும் வண்டல் மண்ணை எடுத்து விளை நிலத்துக்குப் பயன்படுத்தவில்லை. மாறாக ஒவ்வோர் ஊரிலும் உள்ள அரசியல்வாதிகள், ‘மூன்று அடி ஆழத்துக்குத்தான் மண் எடுக்க வேண்டும்’ என்ற அரசு உத்தரவைத் தூக்கியெறிந்து விட்டு சுமார் 30 அடி ஆழம் வரை மண்ணை அள்ளி விற்றுப் பணமாக்கியுள்ளனர். இதற்கு அதிகாரிகளும் துணைபோயுள்ளனர்’’ என அதிர்ச்சி கிளப்புகிறார்கள் சமூக ஆர்வலர்கள். இதைத் தொடர்ந்து விசாரணையில் இறங்கினோம். கிடைத்த தகவல்கள் அனைத்தும் அதிர்ச்சி ரகம்.

கவனித்தால் அனுமதி!
நிலத்தின் சர்வே எண்ணைக் குறிப்பிட்டு, ‘என் சொந்த உபயோகத்துக்கு மண் எடுத்துக்கொள்ள அனுமதியளிக்க வேண்டுகிறேன்’ என முதலில் கிராம நிர்வாக அலுவலரிடம் விண்ணப்பம் அளிக்க வேண்டும். இதற்குக் கட்டணமே கிடையாது. ஆனால், கிராம நிர்வாக அலுவலருக்கு ரூ. 1,000, வருவாய் ஆய்வாளருக்கு ரூ.1,000, வட்டாட்சியருக்கு ரூ.3000 தர வேண்டும். பின், குறிப்பிட்ட நீர்நிலையில் மூன்று அடி ஆழம்வரை மண் எடுத்துக்கொள்ள நமக்கு அனுமதி கிடைக்கும். இது ஏழு நாள்களுக்கான அனுமதி மட்டும்தான். மீண்டும் தேவையென்றால், இதே போல அதிகாரிகளைக் கவனித்து அனுமதி வாங்கலாம். இந்த அனுமதியுடன் வருபவர்கள், உள்ளூரில் கட்சிக்காரர்களைக் கவனித்துவிட்டு மண்ணைக் கொள்ளையடிக்கிறார்கள்.
திருவாரூர் மாவட்டம், எண்கண் கிராமத்தைச் சேர்ந்த ஜெயராஜ், ‘‘எங்கள் ஊரில் ஏழு குளங்கள் இருக்கு. மூன்று அடி ஆழத்துக்கு மண் எடுக்க அரசு அனுமதி பெற்றவர்கள், 30 அடி ஆழத்துக்கும் மேல் அதிகமாக மண் எடுத்தார்கள். இதனால், நிலத்தடி நீர்மட்டம் கீழே இறங்கிவிட்டது. அதிக குதிரை சக்தி கொண்ட மோட்டார்கள் போட்டும் தண்ணீர் எடுக்க முடியவில்லை. இப்போது குடிநீருக்கே அலையவேண்டியதாகி விட்டது. மழைக்குப் பின்னர், குளங்களில் நீர் நிரம்பியது. ஆனால், கைப் பம்புகளில் அழுக்கு நீர்தான் வந்தது’’ என்று வேதனையுடன் முடித்தார்.
மீன்களுக்கும் ஆபத்து!
தரங்கம்பாடி அருகே நல்லாடை கிராமத்தில் குளத்தில் மண் எடுக்க அரசு அனுமதியுடன் வந்தவர்களைத் தடுத்து விவசாயி ஜெயராமன் தலைமையில் மறியல் செய்துள்ளனர். ஜெயராமனைச் சந்தித்தோம். ‘‘இதே குளத்தில் 20 வருஷத்துக்கு முன்னால வண்டல் மண்ணையும், அதற்குக் கீழேயுள்ள சவுடு மண்ணையும் எடுத்தாங்க. அந்த வருஷம் குளத்துக்கு வந்த நீர் நிலைச்சி நிக்கல. வெகு சீக்கிரமாவே வறண்டு போச்சு. பல பேருடைய போர்வெல்லுக்கும் தண்ணீர் சப்ளை கிடைக்கல. அந்த வருஷம் நட்ட பயிர்களைக் காப்பாத்த படாதபாடு பட்டோம். வண்டல் மண் இருந்ததால்தான், குளத்தில் நீர் தேங்கியது. அதை எடுத்தது தப்புன்னு உணர்ந்தோம். அப்புறம் குளத்துக்குள்ள வண்டல் மண்ணைக் கொண்டு வந்து கொட்டினோம். இப்படி வண்டல் மண், சவுடு மண் அவசியம்னு புரிஞ்சது. இப்போது வண்டல் மண், சவுடு மண் எடுக்க அனுமதிச்சதால, விவசாயத்துக்கு மட்டும் பாதிப்பு இல்ல. விரால், குறவை, கெளுத்தி, சென்னல், ஆரா, சிலேப்பி போன்ற மருத்துவ குணம்மிக்க நாட்டு மீன்கள் இனம் வளர்வதும் கஷ்டம்தான். குளங்களில் உள்ள மண்ணைச் சூறையாடியது தவறு’’ என்றார்.

டெல்டா விவசாயிகள் சங்கங்களின் கூட்டமைப்பின் செயலாளர் ஆறுபாதி கல்யாணம், ‘‘விதிகளை மீறி 30 அடி ஆழத்திற்கு மேல் மண் எடுத்தபோது வருவாய்த் துறை ஏன் தடுக்கவில்லை? இதனால், கைக்கெட்டும் தூரத்தில் இருந்த நீரோட்டம் அதலபாதா ளத்துக்குச் சென்றுவிட்டது. தஞ்சை, திருவாரூர், நாகை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் சுமார் 15 ஆயிரம் குளங்கள் பள்ளமாக்கப்பட்டதன் விளைவாக, வரும் ஆண்டுகளில் மக்களுக்கு மிகப்பெரிய குடிநீர்ப் பஞ்சம் ஏற்படும். காவிரி நீரின்றி, நிலத்தடி நீரை நம்பி போர்வெல் மூலம் சாகுபடி செய்துவந்த விவசாயிகளும் பாதிக்கப் படுவார்கள். உண்மை நிலை இப்படியிருக்க, ஏதோ சாதனை செய்துவிட்டதாக ஆட்சியாளர் கள் பேசுவதுதான் வேதனை’’ என்றார்.
நாகை மாவட்டம் மயிலாடுதுறையில் உள்ள ஆராயக்குளத்தில் அ.தி.மு.க-வினர் அதிகளவு ஆழத்தில் மண் எடுத்துவிட்டனர். இதனால் குளம் வறண்டுபோய்விட்டது. குளத்தைச் சுற்றிலும் கரைகளில் வசிக்கும் சுமார் 200 குடும்பங்களுக்குக் குடிநீர்கூட கிடைக்கவில்லை. இதுபற்றி மயிலாடுதுறை அ.தி.மு.க எம்.எல்.ஏ ராதாகிருஷ்ணனிடம் மக்கள் புகார் கொடுத்தனர். அவர் தனது தொகுதி வளர்ச்சி நிதியிலிருந்து சுமார் 200 அடி ஆழத்துக்கு போர்வெல் அமைத்து, குளத்தில் தண்ணீர் நிரப்பித் தந்திருக்கிறார்.
கொள்ளையடிக்கப்பட்ட கோடிகள்!
ஒரு அடி நீளம், ஒரு அடி அகலம், ஒரு அடி உயரம் என்பது ஒரு கன அடி. ஒரு யூனிட் என்பது 100 கன அடி. ஒரு யூனிட் மண்ணின் விலை சுமார் 1,000 ரூபாய். உதாரணமாக நாகை மாவட்டம், மயிலாடுதுறை ஒன்றியத்தில் 54 ஊராட்சிகள் உள்ளன. ஓர் ஊராட்சியில் சுமார் 5 குளங்கள் இருப்பதாகக் கணக்கிடுவோம் (இது குறைந்தபட்ச அளவே... 10, 15 குளங்கள் கொண்ட ஊராட்சிகளும் உள்ளன). ஒவ்வொரு குளத்திலும் சுமார் 30 அடி ஆழம் வரை மண் எடுத்து விற்றுள்ளனர். இதன்படி பார்த்தால், ஒரு குளத்திலேயே சுமார் 30 லட்ச ரூபாய் வருமானம் ஈட்டியிருப்பார்கள். மயிலாடுதுறை ஒன்றியத்தில் உள்ள 54 ஊராட்சிகளில் சுமார் 270 குளங்கள் இருக்கின்றன. ஒரு குளத்துக்கு ரூ.30 லட்சம் என்றால், 270 குளங்களுக்கு சுமார் ரூ.81 கோடி ரூபாய் வருமானம்.
ஒரு ஒன்றியத்தின் நிலையே இது! நாகை மாவட்டத்தில் 434 ஊராட்சிகள், 8 பேரூராட்சிகள், 4 நகராட்சிகள்; திருவாரூர் மாவட்டத்தில் 430 ஊராட்சிகள், 7 பேரூராட்சிகள், 4 நகராட்சிகள்; தஞ்சை மாவட்டத்தில் 589 ஊராட்சிகள், 22 பேரூராட்சிகள், 3 நகராட்சிகள் என உள்ளாட்சி அமைப்புகள் உள்ளன. ஆகமொத்தம் 1,501. ஒவ்வொன்றுக்கும் 5 குளங்கள் எனக் கணக்குப் போட்டாலே, வரும் தொகை தலைசுற்ற வைக்கிறது. அதாவது, இரண்டாயிரத்து இருநூற்றி ஐம்பத்தி யோரு கோடியே ஐம்பது லட்சம். ஊராட்சிகளில் ஐந்து குளங்கள் என்றால், பேரூராட்சிகளில் குறைந்தது 10 குளங்கள் இருக்கும். நகராட்சிகளில் 20 குளங்களுக்குக் குறையாமல் இருக்கும். ஆனால், நகர்ப்புறங்களில் பெரும்பாலான குளங்களை மூடிவிட்டார்கள். எனவே, அவற்றிலும் சராசரியாக ஐந்து குளங்கள் என்று கணக்கில் வைத்தே இந்த மண் கொள்ளை யைக் கணக்கிட்டுள்ளோம். இந்தக் குறைந்தபட்சக் கணக்கே ரூ.2,251 கோடி என்றால், சரியான கணக்கு எப்படி இருக்கும் என்பதை நீங்களே யூகித்துக்கொள்ளுங்கள்.
டெல்டாவின் மூன்று மாவட்டங்களில் மட்டுமே இது என்றால், தமிழ்நாடு முழுக்க எவ்வளவு? இதனால், தண்ணீரைத் தேக்கி வைக்கும் மண் வளத்தை இழந்து, குடிநீர்ப் பஞ்சத்தில் தவிக்கப் போகும் கிராமங்களின் எண்ணிக்கை எவ்வளவு? எந்த அறிவியல் பார்வையும் நிபுணர் பரிந்துரையும் இல்லாமல் இதைச் செய்ய ஏன் முடிவெடுத்தார்கள்? எந்தக் கேள்விக்கும் யாரிடமும் பதில் இல்லை.
தடுப்பணைகள் தேவை!
அரியலூரைச் சேர்ந்த புவியியலாளர் பேராசிரியர் சந்திரசேகரனிடம் பேசினோம். ‘‘பூமிக்குக் கீழே நிலத்தடியில் உள்ள நீர் என்பது ஒரு பாத்திரத்தில் இருப்பது போன்றதுதான். அதனை எடுக்க எடுக்கக் குறைந்துகொண்டே போகும். எனவே, மீண்டும் அந்தப் பாத்திரத்தில் நீரைச் செலுத்த வேண்டும். இப்போது மழையும் குறைந்துகொண்டே வருகிறது. பூமியில் உள்ள மணல் பரப்பின் ஈரப்பதம் 15 சதவிகிதமாக இருந்த நிலைமை மாறி, வெறும் ஐந்து சதவிகிதமாகக் குறைந்துவிட்டது. இதனால் தண்ணீரைச் சேமித்து வைக்க முடியவில்லை. ஏரி, குளங்களை அகலமாக்க வேண்டும். இப்போது அரசு உத்தரவால் ஆழமாகி இருக்கிறது. இதனால் இன்னும் கீழேதான் நீரோட்டம் செல்லும். மக்களுக்குப் பயன்படும் வகையில் மேலடுக்கில் தண்ணீர் இருக்காது. எனவே, நிலத்தடி நீரை சேமிக்க அதிக அளவில் தடுப்பணைகள் கட்ட வேண்டும். இதை அரசு உடனே செய்ய வேண்டியது அவசியம்’’ என்று வலியுறுத்தினார்.
உயிரிழப்புகள்
குளங்களில் இப்படி ஆழமாக மண் எடுப்பதால், ஆழம் தெரியாமல் பலர் சிக்கி உயிரிழப்புகளும் ஏற்படுகின்றன. தரங்கம்பாடி அருகே திருக்களாச்சேரி கிராமத்தைச் சேர்ந்த ஜெய்ஜவானின் மகள் ஹாசினி, குளத்துநீரில் மூழ்கி இறந்திருக்கிறாள். வெளிச்சத்திற்கு வராத உயிரிழப்புகளும் ஏராளம் உண்டு.

எங்குதான் மண் எடுப்பது?
குடிமராமத்து மண் கொள்ளை குறித்து நாகை மாவட்ட கனிமவளத் துறை துணை இயக்குநர் ஜோதியிடம் கேட்டபோது, ‘‘குளங்களில் மண் எடுக்க அனுமதி கொடுத்தது, அதனைக் கண்காணிப்பது எல்லாமே வருவாய்த் துறைதான். மணல் குவாரிகளோ பொதுப்பணித் துறையினரின் கட்டுப்பாட்டில் உள்ளது. எங்கும் அதிக ஆழத்தில் மணல் எடுப்பதாக புகார் வரவில்லை’’ என்று நழுவிக்கொண்டார்.
திருவாரூர் மாவட்ட ஆட்சியர் நிர்மல்ராஜிடம் கேட்டபோது, ‘‘சவுடு மணல் கிடைக்காததால் தேசிய நெடுஞ்சாலை உள்பட பல வளர்ச்சிப் பணிகள் பாதிக்கப் பட்டுள்ளன. இதற்குத் தேவைப் படும் சவுடு மணலை எங்குதான் எடுப்பது?” என்று கேள்வியுடன் முடித்தார். நாகை மாவட்ட ஆட்சியர் சுரேஷ்குமாரிடம் விளக்கம் கேட்டோம். ‘‘இதுவரை இல்லாதவகையில் முதல்முறை யாக ஏரி, குளங்கள் தூர்வாரப் பட்டுள்ளன. பெருமழையில் குளங்கள் நிறைந்திருக்கின்றன. இதனால் நிலத்தடி நீர்மட்டம் உயரும்’’ என்றார்.
முதல்வரின் ‘தொலைநோக்கு’ திட்டத்தால், டெல்டா மாவட்டங்களில் வரும் ஆண்டுகளில் குடிநீருக்கே மக்கள் தவிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
- மு.இராகவன்
படங்கள்: க.சதீஷ்குமார், செ.ராபர்ட்
குளங்களைக் காப்பாற்றிய கிராமம்!

இப்படி எதிர்கால ஆபத்தை அறியாமல் ஆயிரக்கணக்கான கிராமங்கள் குளங்களில் உள்ள மண்ணைப் பறிகொடுத்துப் பரிதவிக்கும் வேளையில், ஒரு கிராமம் மட்டும் விவரமாக இருந்து நீர்நிலைகளைக் காத்திருக்கிறது. மயிலாடுதுறை அருகே உள்ள மாப்படுகை கிராம குடிமராமத்துத் தலைவர் ராஜேஸ்வரனைச் சந்தித்தோம். ‘‘எங்கள் ஊரிலுள்ள குளங்களில் கிராமக் கமிட்டியின் மேற்பார்வையில், 2 அடி ஆழத்துக்கு மட்டுமே வண்டல் மண்ணை எடுக்க அனுமதித்தோம். மண் எடுத்தவர்கள் மூலம் கிடைத்த பணத்தைக் கொண்டு, குளங்களின் கரைகளைச் சீரமைத்தோம். குளங்கள் மற்றும் நிலத்துக்கு வரும் பாசன வடிகால் வாய்க்கால்களை தூர்வாரினோம். இதனால், இந்தக் கோடையிலும் எங்கள் ஊர் குளங்களில் நீர் நிரம்பியிருக்கிறது. கிராமத்துக்கு நல்லது எது என்பதைக் கலந்துபேசி அனைவரும் ஒற்றுமையுடன் இருந்ததால் இதைச் செய்ய முடிந்தது’’ என்றார்.