Published:Updated:

‘மதுக்கடைகளை மூடுவீர்களா பிரதமரே... முதல்வரே?’

‘மதுக்கடைகளை மூடுவீர்களா பிரதமரே... முதல்வரே?’
பிரீமியம் ஸ்டோரி
News
‘மதுக்கடைகளை மூடுவீர்களா பிரதமரே... முதல்வரே?’

‘மதுக்கடைகளை மூடுவீர்களா பிரதமரே... முதல்வரே?’

து ஒழிப்புக்காகப் போராடிய சசிபெருமாள் தொடங்கி பலரையும் மது அரக்கன் காவு வாங்கியிருக்கிறான். ஆனால், நன்றாகப் படித்து டாக்டராகி விட வேண்டும் என்கிற ஏக்கமும் கனவும் கண்களில் மிளிர வலம் வந்த அப்பாவி இளைஞனின் உயிரை, தந்தையின் மதுப் பழக்கமே பலிகொண்டிருப்பதுதான் வேதனையின் உச்சம்.

நெல்லை தெற்குப் புறவழிச் சாலையில் மே 2-ம் தேதி காலையில் நடைப்பயிற்சி சென்றவர்கள், அங்கு ரயில்வே பாலத்தில் பள்ளி மாணவர் ஒருவரின் உடல் தொங்கிக்கொண்டிருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். தலையில் தொப்பி யும், தோளில் ஸ்கூல் பேக்கும் அணிந்தவாறு தொங்கிக்கொண்டிருந்த அந்த மாணவரின் உடலை, தீயணைப்புத் துறையினரின் உதவியுடன் கீழே இறக்கினர். அவரது சட்டைப் பையில், ‘டாக்டர். தினேஷ் நல்லசிவன் எம்.பி.பி.எஸ்.,
எம்.டி’ என எழுதப்பட்டிருந்தது. 10-ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ், நீட் தேர்வு மையத்துக்கான அனுமதி அட்டை ஆகியவை பையில் இருந்தன. ஒரு காகிதத்தில் தன் மரண வாக்குமூலத்தை எழுதிவைத்திருந்தார் அவர். பிளஸ் டூ படித்து விட்டு நீட் தேர்வுக்குத் தயாராகி வந்த நிலையில், தற்கொலை முடிவெடுத்த அந்த மாணவன் எழுதிவைத்திருந்த கடிதம் மிகவும் உருக்கமானதாக இருந்தது.

‘மதுக்கடைகளை மூடுவீர்களா பிரதமரே... முதல்வரே?’

அதில், ‘அப்பா... நான் தினேஷ். நான் செத்துப் போனதுக்கு அப்புறமாவது நீ குடிக்காம இரு. நீ குடிப்பதால் எனக்குக் கொள்ளி வைக்காதே. மொட்டை போடாதே. ஓப்பனாகச் சொன்னால், நீ எனக்குக் காரியம் பண்ணாதே. மணி அப்பா தான் பண்ண வேண்டும்’ என்று எழுதியுள்ளார். அதே கடிதத்தில், ‘பிரதமரும், முதல்வரும் இனி மேலாவது தமிழகத்தில் மதுபானக் கடைகளை அடைக்கிறார்களா என்று பார்ப்போம். இல்லை யென்றால், நான் ஆவியாக வந்து மதுபானக் கடைகளை ஒழிப்பேன்’’ என்று குறிப்பிட்டுள்ளார்.

மாணவர் தினேஷ் நல்லசிவனின் தந்தை மாடசாமி, நெல்லை மாவட்டம் குருக்கள்பட்டியை அடுத்த ரெட்டியபட்டி கிராமத்தைச் சேர்ந்தவர். இவருக்கு இரு மனைவிகள். முதல் மனைவி பாப்பா என்ற இசக்கியம்மாள், பத்து ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். பிறகு குருவம்மாள் என்பவரை இரண்டாவதாகத் திருமணம் செய்துகொண்டார். முதல் மனைவியின் மூத்த மகன்தான் தினேஷ் நல்லசிவன். இவரின் தம்பி இசக்கியப்பன் 9-ம் வகுப்பும், தங்கை தனுஸ்ரீ 8-ம் வகுப்பும் படிக்கிறார்கள். தந்தை மாடசாமி மதுபோதைக்கு அடிமையாகி, பொறுப்பில்லாமல் இருந்ததால், இந்த மூன்று பிள்ளைகளையும் மாடசாமியின் அண்ணன் மணி தன் முயற்சியில் படிக்க வைக்கிறார். தினேஷ் நல்லசிவன், நாமக்கல்லில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் பிளஸ் டூ முடித்துவிட்டு, நீட் தேர்வுக்காகத் தயாராகி வந்த நிலையில், இந்த விபரீத முடிவை எடுத்துள்ளார்.

‘மதுக்கடைகளை மூடுவீர்களா பிரதமரே... முதல்வரே?’

தினேஷ் நல்லசிவனின் சித்தப்பா குட்டியிடம் பேசினோம். ‘‘மிகவும் அன்பான பையன். எப்போதும் சிரித்த முகத்துடன் இருப்பான். எல்லாரிடமும் மரியாதையாக நடந்து கொள்வான். படிப்பில் கெட்டிக்காரன். 10-ம் வகுப்பில் 478 மார்க் வாங்கினான். அவனை நாமக்கல்லில் ஒரு பள்ளியில் படிக்கவைத்தோம். அங்கு, பள்ளியிலேயே முதல் ரேங்க் அல்லது இரண்டாவது ரேங்க் எடுத்துவந்தான். டாக்டராக வேண்டும் என்பது அவனது கனவு. அதற்காக இரவு பகலாகப் படித்துவந்தான். இப்போது அவன் எடுத்தது போன்ற விபரீதமான முடிவை வேறு எந்தப் பிள்ளையும் எடுத்துவிடக் கூடாது. குடிப்பழக்கம் உள்ள தந்தைகளுக்கு தினேஷ் நல்லசிவனின் முடிவு ஒரு பாடமாக இருக்கட்டும்’’ என்றார் கண்ணீருடன்.

மாடசாமியின் உறவினர்களிடம் பேசினோம். ‘‘மாடசாமியின் குடும்பத்தில் அனைவருமே நன்றாகக் கல்வி கற்றவர்கள். இவர் மட்டும் மதுப்பழக்கத்துக்கு அடிமையாகிவிட்டார். ஊதாரித்தனமாகச் செலவு செய்ய அவர் வாங்கிய கடன்களை உறவினர்கள் திருப்பிச் செலுத்துவார்கள். நீட் தேர்வுக்குத் தயார் செய்துவந்த தினேஷ் நல்லசிவன், ஏப்ரல் 30-ம் தேதி சொந்த ஊருக்கு வந்தார். அப்போது, அவர் செலவுக்கு வைத்திருந்த பணத்தை எடுத்து மாடசாமி குடித்துவிட்டார். தந்தையைக் கண்டித்தபோது இருவருக்கும் வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது. அதைத் தொடர்ந்துதான், தினேஷ் நல்லசிவன் தற்கொலை முடிவை எடுத்துள்ளார். தனக்குத் தந்தை இறுதிச்சடங்கு செய்யக் கூடாது என அவர் எழுதியிருந்தாலும், ‘சின்னப் பையன் ஆத்திரத்தில் அப்படி எழுதிட்டான். அதைப் பெரிதுபடுத்த வேண்டாம்’ என உறவினர்கள் சொல்லி, மாடசாமியை இறுதிச்சடங்கு செய்யச் சென்னோம்’’ என்றனர் சோகத்துடன்.

‘மதுக்கடைகளை மூடுவீர்களா பிரதமரே... முதல்வரே?’

மாணவனின் தற்கொலையைத் தொடர்ந்து டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும் என்ற குரல் தமிழகத்தில் வலுத்துள்ளது. ‘‘தாய்க்கு அடுத்தபடி உன்னதமான உறவு தந்தைதான். அத்தகைய தந்தை தமது இறுதிச்சடங்கில் பங்கேற்கக்கூடாது என்று தினேஷ் தற்கொலைக் கடிதத்தில் குறிப்பிட்டிருக்கிறார். அவர் எந்த அளவுக்குக் காயப்பட்டிருப்பார் என்பதை இதிலிருந்து உணர முடியும். தினேஷின் குடும்பத்தைப் போன்று தமிழகம் முழுவதும் தெருவுக்கு ஒரு குடும்பம், தந்தையின் குடிப்பழக்கத்தால் சீரழிந்து கொண்டிருக்கிறது. தினேஷைப் போன்ற லட்சக்கணக்கான இளைஞர்கள், மதுவால் தங்கள் குடும்பத்தில் ஏற்பட்ட சீரழிவுகளை வெளிப்படையாகக் கூற முடியாமல் மனதுக்குள் புழுங்குகிறார்கள். இனியும் தாமதிக்காமல் மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும்’’ என்கிறார் பா.ம.க இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ்.  ஆனால், “டாஸ்மாக் கடைகளை அடைத்துவிட்டால், கள்ளச்சாராயம் பெருகிவிடும்” என்று சொல்கிறார் அமைச்சர் ஜெயக்குமார். இவரது இந்தக் கருத்தை, சமூகவலைத்தளங்களில் பலரும் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். 

- பி.ஆண்டனிராஜ்
படங்கள்: எல்.ராஜேந்திரன்