
ஹலோ வாசகர்களே..!
வங்கி ஃபிக்ஸட் டெபாசிட்களின் வளர்ச்சி வேகம் கடந்த ஐம்பது ஆண்டு களில் இல்லாத அளவுக்கு அதாவது, 1963-ல் இருந்த அளவுக்குச் சென்றிருப்பதாக ரிசர்வ் வங்கி சொல்லியிருக்கிறது. கடந்த 2017-ல் வங்கி ஃபிக்ஸட் டெபாசிட் விகிதம் 15.8% அளவுக்கு வளர்ந்து, ரூ.108 லட்சம் கோடியை எட்டியது. பிற்பாடு இந்த வளர்ச்சி வேகம் 6.7 சதவிகிதமாகக் குறைந்து, ரூ.114 லட்சம் கோடியை எட்டியுள்ளது.

வங்கி எப்ஃ.டி-யின் வளர்ச்சி வேகம் குறைவதற்கு, வங்கி டெபாசிட் தொடர்பான புதிய எஃப்.ஆர்.டி.ஏ.ஐ மசோதா ஒரு காரணமாக இருக்கலாம். வங்கிகள் திவாலாகும்பட்சத்தில், டெபாசிட் செய்த பணம் பறிபோகும் என்கிற பயத்தினால், வங்கிகளில் பணத்தை டெபாசிட் செய்ய மக்கள் தயக்கம் காட்டுகிறார்கள். இந்தப் பயம் தேவையில்லாதது; காரணம், இந்த விஷயம் தற்போது மசோதாவாக மட்டுமே இருக்கிறது. எதிர்காலத்திலும் இது சட்டமாகுமா என்பதும் கேள்விக்குறியே!
ஆனால், வங்கி எஃப்.டி-யின் வளர்ச்சி வேகம் குறைய முக்கியமான காரணம், அதன் வட்டி விகிதம் தொடர்ந்து குறைந்து வருவதே. நான்கு ஆண்டுகளுக்குமுன் 8 சதவிகிதமாக இருந்த வட்டி விகிதம் மெள்ளமெள்ளக் குறைய ஆரம்பித்து, தற்போது 6% என்கிற அளவில் உள்ளது. இது குறுகிய காலத்தில் கொஞ்சம் உயர வாய்ப்பு உண்டு என்றாலும், மீண்டும் 8 சதவிகிதத் துக்கு மேல் செல்வதற்கு வாய்ப்பில்லை என்பதே இப்போதைய நிலை.
இந்த உண்மையைச் சரியாகப் புரிந்துகொண்ட மக்கள், வங்கி எஃப்.டி-யை விட்டு விலகி, மியூச்சுவல் ஃபண்ட் போன்ற முதலீடுகளைத் தேடிச் செல்ல ஆரம்பித்திருக்கிறார்கள். கடந்த சில ஆண்டுகளில் மட்டும் மியூச்சுவல் ஃபண்டுகளில் செய்யப்பட்ட முதலீடு சுமார் ரூ.7 லட்சம் கோடிக்கு மேல் என்பதே இதற்கு ஆதாரம்.
வங்கி எஃப்.டி-யிலிருந்து மியூச்சுவல் ஃபண்ட் போன்ற முதலீடுகளை நோக்கி மக்கள் செல்வதை நாம் ஆரோக்கியமான மாற்றமாகவே கருத வேண்டும். இன்றைய நிலையில், நமது பணவீக்கமே 5% என்கிற அளவில் இருக்கிறது. வங்கி எஃப்.டி-யில் போட்டுவைக்கும் பணத்தின்மூலம் கிடைக்கும் வருமானத்துக்கான வரியைக் கட்டிமுடித்தபின், நமக்குக் கிடைக்கப்போகும் லாபம் எந்த வகையிலும் சிறப்பானதாக இருக்காது.
எதிலும், எப்போதும் ரிஸ்க் எடுக்கத் தயங்குபவர்களாக நம் மக்கள் இருந்தது முந்தைய காலம். கொஞ்சம் ரிஸ்க் எடுத்தாலும், வங்கி எஃப்.டி-யைவிட ஓரளவு நல்ல லாபம் பார்க்க முடியும் என்பதைப் புரிந்துகொண்டு செயல்படுவது இந்தக் காலம். மியூச்சுவல் ஃபண்டிலும் ரிஸ்க் உண்டு. அந்த ரிஸ்க்கினைப் புரிந்துகொண்டு, நீண்ட காலத்தில் முதலீடு செய்வதன் மூலம் வங்கி எஃப்.டி-யைவிட நல்ல லாபத்தை நம்மால் ஈட்ட முடியும் என்பதை நாம் எல்லோரும் புரிந்துகொண்டு, இனியாவது பணவீக்கத்தைவிட அதிக லாபம் தரும் முதலீடுகளை நோக்கி நாம் செல்வோம்!
- ஆசிரியர்