Published:Updated:

அன்பும் அறமும் - 11

அன்பும் அறமும் - 11
பிரீமியம் ஸ்டோரி
News
அன்பும் அறமும் - 11

சரவணன் சந்திரன் - ஓவியம்: ஹாசிப்கான்

உடலே மந்திரம்!

செம்மண்ணில் உருண்டு புரண்டு வயிற்றைத் தள்ளிக் கொண்டு ஓடி வந்த ஒன்றரை மாத வெள்ளை நிற நாயைக் கண்டதும் வெடவெடவென்று வெண்டைக்காய் போல நீளமான உடலை உடைய அந்த முதியவர் முகத்தைச் சுளித்தார். ஏதோ செய்யக் கூடாத பாவமொன்றைச் செய்ததைப் போல என் முகத்தை அதிருப்தியுடன் உற்றுப் பார்த்தார். “எவ்ளோ சொன்னாலும் கேக்க மாட்டேங்கறீங்க. வயிறு வீங்கக் கூடாதுங்க குட்டிக்கு. சாப்பாட்டை அளவாப் போடுங்க. காய்ச்சலையும் பாய்ச்சலையும் காட்டி வளக்கணுமில்லையா?” என்று சொல்லிவிட்டுக் கடைசியாய் ஒரு விஷயத்தையும் சேர்த்துச் சொன்னார். “சிட்டிக் காரங்களுக்குத்தான் வயிறு குப்பைத் தொட்டி மாதிரி” என்றார். அவர் சொன்னது சரிதான்.

இதே மாதிரி  ஒரு குண்டான நாயைத் தினமும் அதிகாலை தேநீர்க் கடையில் பார்ப்பேன். கழுத்தையும் உடலையும் அசைக்க முடியாமல், தத்தித் தத்தி நடந்து வரும். சின்ன வயதில் வெங்காய மண்டி நடத்தும் மாமா ஒருத்தர் இப்படித்தான் தெற்குத் தெருவில் நடந்து போவார். அவரைப் பார்த்தாலே தூக்கிக் கொஞ்சலாம் என்கிற மாதிரி ஒரு உணர்வு வந்துவிடும். அந்தப்  பெரிய உடலில் அப்பாவியான ஒரு முகம் தொங்கும். நிற்கிற இடங்களில் எல்லாம் ஏதேனும் ஒரு கடையில் எதையாவது வாங்கிச் சாப்பிடுவார். சாப்பாட்டுக் கடை வந்ததும் தன்னியல்பாக அவருடைய கால்கள் நின்று கொள்ளுமோ என்று யோசித்திருக்கிறேன். “கொஞ்சமா சாப்பிட கடைசி வரை தெரியாம போச்சே” என ஒருதடவை சங்கடத்துடன் சொன்னார். ‘இந்த உணவு இன்றே கடைசி’ என போர்டு மாட்டிய மாதிரி நினைத்துக்கொண்டு வெறியோடு சாப்பிடுவார். ஊரில் அவர் மீது மரியாதை கொண்டவர்கள்கூட அவர் சாப்பிடும்போது முகத்தைச் சுளிப்பார்கள்.

அன்பும் அறமும் - 11

“வளர்ற பிள்ளைக்கு அளந்துதான் தட்டில போடணும். இல்லாட்டிப் படிப்பு ஏறாது” என கிட்டத்தட்ட எல்லோரது வீட்டிலுமே மட்டன் துண்டுகளை எண்ணித்தான் அப்போதெல்லாம் தட்டில் போடுவார்கள். எப்போதும் அரைப் பசி இருக்கிற மாதிரியே பார்த்துக்கொள்வார்கள். அப்படி வளர்ந்ததால்தான் இப்போதும் தாக்குப் பிடிக்கிறோமோ என்றுகூடத் தோன்றுகிறது. இது ஏதோ ஒரு மேலோட்டமான படிப்பினை சார்ந்த விஷயம் இல்லை. ஆழமாக உழுகிற ஒரு பழக்கம் என்பதை உணர்ந்தேன். திடீர் மழைகளின் காரணமாக, மொட்டு விடாமல் செடிகள்கூட கொழுப்பெடுத்துக் கொப்பு விட்டு வளர்வதைச் சுட்டிக் காட்டுகிறார்கள். காய்ச்சலும் பாய்ச்சலும் செடிகளுக்குக்கூடத் தேவை என்பதைச் சொல்லிச் சொல்லி மாய்கிறார்கள். பல நேரங்களில் தண்ணீர் விடாமல் வெயிலில் காயப் போடுகின்றனர் செடிகளை. நுணுக்கிச் செதுக்குகிற ஒரு இயற்கைசார் வாழ்க்கை முறை இங்கே ஏற்கெனவே இருந்திருக்கிறது. உடலை முறுக்கேற்றுகிற மந்திரத்தைத் தேடித் தேடி அலைந்திருக்கின்றனர்.

ஒருதடவை சர்வதேச புகைப்படக் கலைஞரான மதுரை செந்தில்குமரன் அவர் சேமிப்பில் வைத்திருந்த பழைய புகைப்படங்கள் சிலவற்றைக் காண்பித்தார். மதுரை  சித்திரைத் திருவிழாவுக்குத் தோள்களில் பிள்ளைகளைச் சுமந்து கொண்டு வந்த மக்களின் கறுப்பு-வெள்ளைப் புகைப்படங்கள் அவை. நான் எல்லாவற்றையும் விட்டு விட்டு அவர்களது வயிறுகளையே பார்த்தேன். சிக்ஸ் பேக் எல்லாம் தோற்றுப் போகும். இயல்பாகவே வரிக் குதிரையைப் போல உடல்களைக் கொண்டிருந்தார்கள். பழங்குடிச் சமூகங்கள் பலவற்றைப் பார்த்திருக்கிறேன். இந்தோனேசியா பக்கத்தில் உள்ள தீவொன்றில் வசிக்கும் பழங்குடி மக்கள் சிலரோடு வாழவும் செய்திருக்கிறேன். அங்கெல்லாம் தொப்பையைத் தள்ளிக் கொண்டு வந்து யாராவது நின்றால், வாயைப் பொத்திக் கொண்டு சிரிப்பார்கள். அவருக்கு சமூக மரியாதையைத் தரவும் தயங்குவார்கள். வெங்காய மண்டி மாமாக்கள் உலகெங்கும் இருக்கிறார்கள். அமேசான் காட்டுப் பழங்குடியினரின் வீடியோ ஒன்றைப் பார்த்த போது அங்கேயும் ஒரு வெங்காய மண்டி வயிற்றைத் தள்ளிக் கொண்டு ஆடினார்.

அன்பும் அறமும் - 11



அப்போது ஒரு சில வெங்காய மண்டி மாமாக்கள் மட்டுமே பஜார் வீதிகளில் சுற்றிக்கொண்டிருந்தார்கள். இப்போதைய நிலையைச் சொல்லியும் தெரிய வேண்டுமா என்ன? ‘உடலினை உறுதி செய்’, ‘உடலே மந்திரம்’ என்கிற வார்த்தைகளையெல்லாம் உச்சரித்தால் ஏதோ பழமைவாதம் பேசுகிற ஆள் என்று உடனடியாக முத்திரை குத்துவார்கள். அதைப் பழமை என்றே வைத்துக் கொண்டு கடந்து போய்விடலாம். உடல் விஷயத்தில் தொடர்ந்து ஒழுங்காய் மேலேறி வந்த சங்கிலி, எங்கோ பொத்துக் கொண்டு போய்விட்டது. அமெரிக்காவில் என்ன நடக்கிறதோ, அது பத்து வருடம் கழித்து இங்கேயும் நடக்கும் என நண்பர் ஒருவர் சொன்னார். யோசித்துப் பார்த்தால் மிகச் சரியாகத்தான் இருக்கிறது. இங்கேயும் உடல் பருமன் ஒரு பிரச்னை ஆகி விட்டதா இல்லையா?

அடிப்படையிலேயே உடல், அதை முறுக்கேற்றும் விளையாட்டுகள் குறித்த எதிர்மனநிலை இங்கே ஆழமாகப் பரவி விட்டது. நானும் தொழில் முறை விளையாட்டு வீரன் என்கிற முறையில் இதை உறுதியாகச் சொல்ல முடியும். விளையாட அனுமதிப்பதே இல்லை. இப்போதெல்லாம் விளையாட்டுப் பள்ளிகளுக்கு ஆட்களே வருவதில்லை என விளையாட்டுப் பயிற்றுனர் ஒருவர் மாலை மங்கும் நேரத்தில் வாலிபால் மைதானத்தில் நின்றுகொண்டு கண்ணீர் கசியச் சொன்னார். ஒட்டுமொத்தத் துரோணாச்சாரியார்களின் துயரத்தை ஒற்றைக் குரலில் வெளிப்படுத்தினார். இங்கே கிரிக்கெட் மட்டும்தான் விளையாட்டு. மற்ற விளையாட்டு களெல்லாம் பயனில்லாதவை. தூக்கி எப்போதோ குப்பையில் எறிந்து விட்டார்கள். கை கால்களை அசைக்காத தலைமுறையை உற்பத்தி செய்து தள்ளுகிறார்கள்.

ஒரு சின்ன உதாரணம் சொல்கிறேன். விளையாட்டை எப்படி இவர்கள் விளையாட்டாய் எடுத்துக் கொள்கிறார்கள் என்பதைச் சொல்லி விடும் அப்புள்ளி விபரம். தமிழகம் முழுக்க கிட்டத்தட்ட ஐம்பது லட்சத்துக்கும் மேல் மாணவர்கள் கல்வி பயில்கின்றனர். ஆனால், மொத்தமே நாலாயிரத்து சொச்சம் உடற்கல்வி ஆசிரியர்கள்தான் இருக்கிறார்கள். அவர்களையும்கூட பிற பணிகளுக்குத்தான் அதிகமும் அனுப்புகிறார்கள் என்று உடல்கல்வி ஆசிரியர் ஒருவர் சொன்னார். இத்தனை லட்சம் குழந்தைகளின் உடல்நலம் என்று என்றாவது யோசித்துப் பார்த்திருந்தால் இந்த அசட்டையைச் செய்திருக்கவே மாட்டார்கள். ஒட்டுமொத்தச் சமூகமே நாற்காலியில் உட்கார்ந்துகொண்டு மதியச் சாப்பாட்டை மூக்கு முட்ட முடித்த கையோடு, மேல் சாப்பாடாக முறுக்கைக் கடித்துக் கொண்டிருக்கும் நிலையில் அவர்களை மட்டும் குற்றம் சொல்லுவானேன்?

அன்பும் அறமும் - 11

ஒருசமூகம் உடல் விஷயத்தில் படிப்படியாக எப்படி மேலிருந்து கீழே இறங்கியது என்பதைக் கண்கூடாகப் பார்த்தீர்கள்தானே? ஆண், பெண் என்று விலக்கி வைத்துப் பேதம் பிரிக்கவில்லை. எல்லோருமே வயிற்றைச் சுற்றி டயர் வாங்கிக் கொண்டுதான் அலைகிறார்கள். எல்லாவற்றையும் கொட்டுவதற்கு வயிறு ஒன்றும் குப்பைத் தொட்டியல்ல என்று அந்தப் பெரியவர் சொன்னதை ஆழமாக யோசித்துப் பார்க்கிறேன். இதற்குப் பின்னணியில் ஒரு சமூகக் காரணமும் இருக்கிறது. அதைத் தவறென்றும் உடனடியாகத் தடியெடுத்துத் தலையில் தட்டிச் சொல்லவும் முடியவில்லை. ஒரு விளையாட்டு வீரனாய் மேலெழும் ஆதங்கம்தான். வேறென்ன?

கூழ் குடித்த சமூகம்தான் இது. அரை வயிறாய்க் கிடந்து காய்ச்சலைப் பார்த்தவர்கள்தான். இப்போது எல்லா தட்டுகளிலும் மெல்ல மேலேறி வந்திருக்கிறார்கள். ஒட்டுமொத்த சமூக வளர்ச்சி என்பது மெல்ல சாத்தியப்பட்டிருக்கிறது. பொருளாதார ரீதியில் மேலேறி வரும் சமூகம் தனது பெருமிதத்தையும் பகட்டையும் நிலத்திலும் உணவிலும் காட்டும். குடிசைகள் எல்லாம் கான்க்ரீட் வீடுகளாய் மாறும்போது முன்னே விரிக்கிற இலையின் நீள, அகலமும்கூடும். தலைவாழை இலையில் குடும்பப் பகட்டையும் பெருமிதத்தையும் பரப்பத் துவங்கி விட்டனர். இரண்டு பொரியல், ஒரு கூட்டு போட்ட கல்யாண வீடுகள் எல்லாம் இப்போது எப்படியிருக்கின்றன என்று போய்ப் பார்த்திருப்பீர்கள்தானே?

அறுபது அயிட்டங்களுக்குக் குறைவாக வைக்கவே கூடாது என அடம்பிடித்துப் பெருமிதங்களைக் காட்டத் தொடங்கிவிட்டனர். எந்த விஷயத்திலும் எந்தச் சமூகமும் சுகித்து ஆடித்தான் அடங்கும். சுகிக்கிற நேரத்தில் காதுக்குப் பக்கத்தில் போய் ஏதாவது சொன்னால், ‘சும்மா நொய்யு நொய்யுன்னு’ என கையை ஓங்கத்தான் செய்வார்கள். ஒரு நம்பிக்கை பரவுவதைப் போல இப்போது மெல்ல காது கொடுத்தும் கேட்கவும் துவங்கியிருக்கின்றனர். ஏகப்பட்ட டயட் முறைகள் சந்தையில் கூவிக் கூவி விற்கப்படுகின்றன. சில நேரங்களில் இதைப் பின்பற்றாவிட்டால் செத்தே போவாய் எனப் பயமுறுத்தக்கூட அவை செய்கின்றன. ஏதோ உடலைப் பேசுகிறார்கள் என்கிற வகையில் குற்றம் குறைகள் இருந்தாலும் அமைதியாய்க் கடந்து போக வேண்டியிருக்கிறது.

கிரிக்கெட் வீரர் கவாஸ்கர் ஒருதடவை சொன்னார், “ஆண்டுக்கு எட்டே எட்டு நாள்கள் மட்டுமே கட்டற்று சாப்பிடுவேன்” என்று. உண்மையிலேயே அவரைப் போலச் சொல்பவர்கள் இங்கேயும் உருவாகி வருகின்றனர். இணையப் பக்கங்களில் அப்படி உடலை முறுக்கேற்றுகிற புகைப்படங்கள் கண்ணாரப் பார்க்கக் கிடைக்கின்றன. ஒரு இஞ்ச் தொப்பை அதிகமாகி விட்டதே என்பதற்காக ஒரு இளம்பெண் தீவிர மன அழுத்தத்திற்குச் சென்று விட்ட கதையொன்றையும் பார்த்திருக்கிறேன்.

பகட்டாய் மேலெழுந்த சமூகத்தில் அதன் அடுத்த தலைமுறை இரண்டாகப் பிளவு பட்டுக் கிடக்கிறது. ஒருபக்கம் உடலை உறுதி செய்கிறவர்கள், இன்னொரு பக்கம் விளையாடப் படி தாண்டாதவர்கள். அறிவுரையாகச் சொல்லவில்லை. எச்சரிக்கையாகவே சொல்கிறேன். உலகம் இன்று சந்திக்கிற மிகப் பெரிய பிரச்னை உடல் பருமன்தான்.  சுனாமியைக் கண்டுகூட அஞ்சாத ஜப்பானே இப்போது அதன் அடுத்த தலைமுறையின் வீங்கிய வயிறுகளைக் கண்டு அஞ்சத் துவங்கி விட்டது. நாயின் வயிறு வீங்குவதைக்கூட பொறுத்துக் கொள்ள முடியாத சமூகம்தான் நாமும். எங்கே இந்த அடிப்படை மனநிலையைத் தொலையக் கொடுத்தோம் என்று ஆழமாக யோசித்துப் பாருங்கள். விளையாட்டை மதிக்காத சமூகம் உடல் விஷயத்தில் உருப்பட்டதாய்ச் சரித்திரமே இல்லை. பொருளாதார ரீதியில் பாய்ச்சலைப் பார்த்து விட்ட இந்தச் செடிகளுக்குக் காய்ச்சலைக் காட்ட வேண்டிய நேரம் வந்து விட்டது அந்த வெள்ளை நிற நாய்க்குட்டியைப் பார்க்கும் போதெல்லாம் எதையாவது தின்னக் கொடுக்கலாம் என்று தோன்றத்தான் செய்கிறது. ஆனாலும் மட்டன் துண்டுகளை எண்ணித் தட்டில் போடுங்கள். அதைத்தான் எங்களுக்குச் செய்தார்கள். பசிக்காத நிலையில்கூட முறை வைத்து மூன்று நேரமும் சாப்பிட்டே ஆக வேண்டும் என எந்தச் சட்டப் புத்தகத்திலும் சொல்லப்படவில்லை. காய்ச்சல் சில நேரங்களில் நல்ல தோழன்தான்!

- அறம் பேசுவோம்!