
சு.வெங்கடேசன் - ஓவியங்கள்: ம.செ.,
வேனிற்காலப் பள்ளியறையிலிருந்து மீண்டும் குளிர்காலப் பள்ளியறைக்கு மாறியிருந்தாள் பொற்சுவை. ஆனால், மாற்றங்கள் வேறு எதிலும் நிகழவில்லை. வேனிற்காலப் பள்ளியறையில் இருந்த காலத்திலும் பொதியவெற்பன் அங்கு வரவில்லை. அரசப் பணிக்காக வெங்கல் நாட்டுக்குப் போனவனை பேரரசர் அங்கேயே இருக்கச் சொல்லிவிட்டார். போர்ச்சூழலை நோக்கி நாள்கள் நகர்ந்துகொண்டிருந்தன.
மழைக்காலம் தொடங்கும் முன் பேரரசரும் புறப்பட்டுப் போனார். போருக்கான ஏற்பாடுகளுக்காக அரண்மனையின் முக்கியப் பொறுப்பாளர்கள் அனைவரும் முன்னதாகப் புறப்பட்டுப் போயினர். போர்ச்சூழல், அரண்மனையை ஆண்களின் வாசனையற்றதாக மாற்றியது. கருவூலப் பொறுப்பாளர் வெள்ளிகொண்டார் மட்டுமே கோட்டையில் தங்கியிருந்தார். அரண்மனையின் நிர்வாகப் பொறுப்பு முழுமையும் அவர்வசமிருந்தது.
கோட்டையின் பாதுகாப்புக்கான வீரர்களைத் தவிர படைக்கலனில் இருந்த அனைவரும் புறப்பட்டுப் போயினர். பேரரசரும் இளவரசரும் கோட்டைக்குள் இல்லாத காலங்களில் விழாக் கொண்டாட்டங்கள் நடப்பதில்லை. தெய்வ வழிபாட்டுச் சடங்குகள் மட்டுமே வழக்கம்போல் நடந்தன. அரண்மனையின் அன்றாடம் என்பது ஆடம்பரமற்றே இருந்தது.

இந்தப் புறச்சூழல் எதுவும் பொற்சுவையின் அகத்துக்குள் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தவில்லை. அவளது நாள்கள் வழக்கம்போலவே கழிந்தன. ஒரு பகல் பொழுதில் சுகமதியை அழைத்துக்கொண்டு அரண்மனையின் வெவ்வேறு மாளிகைகளைப் பார்த்துவந்தாள். தனித்து இருந்த அழகிய மாளிகை ஒன்று அப்போது அவளின் கண்ணில்பட்டது.
கடல் அலைகள் இடைவிடாது சுருண்டு மேலெழுவதுபோல் மாளிகையின் வெளிப்புறச் சுதைவேலைப்பாடுகள் இருந்தன. அலையை மேல்தோல் எனப் போத்தியிருக்கும் அந்த மாளிகையைப் பார்த்ததும் உள்ளே நுழையவேண்டும் என ஆசைகொண்டாள். கடல் அலையின் தளும்பல்களை காலம் முழுவதும் உணர்ந்தவள் அவள். அதைப் பார்த்ததும் கால்கள் தன்னியல்பில் அந்த மாளிகையை நோக்கி நடக்கத் தொடங்கின.
அது என்ன மாளிகை என்று உடன் இருக்கும் சுகமதிக்குத் தெரியும். எனவே, அங்கு போவதைத் தவிர்க்க முயன்றாள். ஆனால், அதற்குள் மாளிகையின் வாசல் அருகே சென்றுவிட்டாள் பொற்சுவை. இளவரசி திடீரென அங்கு வருவாள் என, பணிப்பெண்கள் எதிர்பார்க்கவில்லை. முத்துகள் பதித்த விரிவடிவத் தட்டுகளை எடுத்து வந்து அவளை வரவேற்க ஏற்பாடு செய்தனர். ஆனால், அதற்குள் பொற்சுவை மாளிகையின் உள்ளே நுழைந்துவிட்டாள்.
நிலைச்சுவரிலும் தரையிலும் பளிங்குக்கற்கள் பாவப்பட்டிருந்தன. ஓவியங்களும் மரவேலைப்பாடுகளும், மனிதக் கற்பனைக்கு எட்டாத பேரழகுகொண்டு விளங்கின. எங்கும் இசைக்கருவிகள் நிறைந்திருந்தன. வியந்து பார்த்த பொற்சுவை,”இது என்ன மாளிகை?” எனக் கேட்டாள்.
சொல்வதற்கு சற்றே தயக்கத்தோடு சுகமதி நின்றிருந்தபோது, அருகில் இருந்த தலைமைப் பணிப்பெண் சொன்னாள், “இந்த மாளிகையின் பெயர் பாண்டரங்கம்.”
பெயர் கேட்டதும், நீலவள்ளிதான் நினைவுக்குவந்தாள். ‘திருமணத்துக்காகக் கட்டப்பட்ட பாண்டரங்கில்தான் நீலவள்ளி யோடு மகிழ்ந்துகிடக்கிறான் பொதியவெற்பன்’ என்று பலமுறை கேள்விப்பட்டுள்ளாள். இந்த மாளிகையில்தான் தேவவாக்கு விலங்கின் வடக்கிருக்கும் ஆற்றல் கண்டறியப்பட்டது என்பதையும் அறிவாள். மனதுக்குள் அந்த எண்ணங்கள் ஓடிக்கொண்டிருக்க, கண்கள் கலைவேலைப்பாடுகளைக் கண்டு சுழன்று கொண்டிருந்தன.
நிமிர்ந்து மேற்கூரையைப் பார்த்தாள். அங்கும் வானியல் காட்சிகள் வரையப்பட்டிருந்தன. காலத்தை வசப்படுத்தும் மனித முயற்சிகள் அவளுக்குச் சிரிப்பையே வரவழைத்தன. பார்த்தபடியே இடதுபுறமாகத் திரும்பினாள். மேடை ஒன்றில் மகரயாழ் வைக்கப்பட்டிருந்தது. அதற்கு சற்று தள்ளி மாளிகையின் நடுவில் விளக்கு ஒன்று இருந்தது. அதன் கலை வேலைப்பாடுகள் கண்களை ஈர்த்தன. மகரயாழை நோக்கிச் செல்ல நினைத்தவள், விளக்கை நோக்கிச் சென்றாள்.
பணிப்பெண் அருகில் வந்து சொன்னாள், “மிகச்சிறந்த கலைவேலைப்பாடுகளைக்கொண்ட விளக்கு இது. ‘காமன் விளக்கு’ என்று இதைச் சொல்வார்கள் இளவரசி.”

காதலுற்றப் பெண் ஒருத்தி வலதுகையை பக்கவாட்டில் சற்றே உயர்த்திப் பிடித்திருக்கிறாள். அவளின் உள்ளங்கையில் அகல் இருக்கிறது. இடதுகையை மார்போடு அணைத்தபடி வைத்திருக்கிறாள். அந்தக் கை ஒரு மலரைப் பிடித்துக்கொண்டிருக்கிறது. அவளின் பேரழகில் மயங்கிய காதலன் அவளின் முகம் பார்த்தபடி அணுக்கமாய் மயங்கி நிற்கிறான். அந்தச் சிலையை உற்றுப்பார்த்தபடியே நின்றாள் பொற்சுவை.
பணிப்பெண் சொன்னாள், “இந்த விளக்கில் சுடரேற்றிப் பார்க்கும்போதுதான் இதன் முழு சிறப்பும் தெரியவரும் இளவரசி.”
‘சரி’ எனத் தலையசைத்தாள் பொற்சுவை. அரங்கின் பிற பகுதிகளிலிருந்து வரும் ஒளியை, திரைச்சீலையை இறக்கி மறைத்தார்கள். பாண்டரங்கில் இருள் நிறைந்தது. பணிப்பெண்கள் காமன் விளக்கில் சுடரேற்றினார்கள். முன்திசையெங்கும் ஒளி பரவியது. அரங்கில் இருந்த கண்ணாடிகளும் முத்துகளும் ஒளியை வாங்கி உமிழத் தொடங்கின.
பணிப்பெண், “இந்த விளக்கின் சிறப்பு, உமிழும் ஒளியல்ல; படரும் நிழல்தான்” என்று பொற்சுவையைப் பார்த்துச் சொல்லியபடி விளக்கின் பின்புறத்தை நோக்கிக் கை நீட்டினாள். பொற்சுவையும் சுகமதியும் அந்தத் திசையைப் பார்த்தனர்.
ஆணும் பெண்ணுமாக இருவர் நிற்கும் சிலையின் நிழல் ஒற்றை உருவமாக படிந்திருந்தது. சுடர் அசையும்போதெல்லாம் நிழலும் அசைந்துகொடுத்தது. அசையும் நிழலுக்குள் புரளும் உருவங்களைப் பற்றி பணிப்பெண் வியந்து சொல்லத் தொடங்கினாள்.
கையை உயர்த்தி அவளின் பேச்சை நிறுத்திய பொற்சுவை. “திரைச்சீலைகளை உயர்த்துங்கள்” என்றாள்.
சற்றே அதிர்ந்த பணிப்பெண்கள் திரைச்சீலைகளை விலக்கினர். பாண்டரங்கம் மீண்டும் ஒளிகொண்டது.
சிலையின் அருகில் இருந்தபடி உற்றுப்பார்த்துக்கொண்டே இருந்த பொற்சுவை, சிறிது நேரம் கழித்துச் சொன்னாள், “இந்தச் சிலையின் சிறப்பு, வலதுகையில் ஏந்திப்பிடித்துள்ள விளக்கோ படரும் நிழலோ அல்ல.”
அனைவரும் வியந்து பார்த்தனர்.
“இடதுகையில் மார்போடு அணைத்துப் பிடித்திருக்கும் அந்த மலர்தான்.”
சுகமதி அப்போதுதான் அந்த மலரை உற்றுப்பார்த்தாள்.
“இந்தச் சிலையை வடித்த சிற்பி யார்?”
பணிப்பெண்களுக்குத் தெரியவில்லை. “கேட்டுச் சொல்கிறோம் இளவரசி.”
“விரைந்து தெரிவியுங்கள்” என்று சொல்லி, பாண்டரங்கம்விட்டு வெளியேறினாள்.
வரும் வழியில் சுகமதி கேட்டாள், “அந்த மலரின் சிறப்பு என்ன இளவரசி?”
“அந்தக் காதலர்களின் முகங்களைப் பார்த்தாயா? உள்ளுக்குள்ளிருந்து பெருகும் பேரன்பால் மலர்ந்திருக்கின்றன. விளக்கில் சுடரை ஏற்றாதபோதும் அந்த முகங்கள் மலர்ந்தே இருக்கின்றன. அப்படியென்றால், ‘அந்த மகிழ்வுக்குக் காரணம் விளக்கன்று, வேறேதோ காரணம் இருக்க வேண்டும்’ எனத் தோன்றியது. அப்போதுதான் அந்த மலரை உற்றுக்கவனித்தேன். அது தனித்துவமிக்கதொரு மலர். அதன் கீழ் இதழ்களின் அடிப்பகுதியில் சிறுசிறு வேர்கள் இருப்பதைப்போல சிற்பி வடித்துள்ளான்” என்றாள்.
“மலரின் இதழ்களில் எப்படி வேர் இருக்கும்? வேரில் காய்கள் காய்க்கும்... மலர்கள் மலருமா என்ன?”
“நானும் இதுவரை கேள்விப்பட்டதில்லை. ஆனால், வேரில் மலரும் தன்மைகொண்ட ஏதோ ஓர் அதிசய மலர் உள்ளது. அதை ஏந்திப்பிடித்துள்ளதால்தான் இந்தக் காதலர்கள் இவ்வளவு மகிழ்வோடு இருக்கிறார்கள். அதைத்தான் சிற்பி மிக நுட்பத்தோடு வார்த்துள்ளான்” என்றாள்.
அன்றைய நாள் முழுவதும் அந்த மலரையும் காமன் விளக்கையும் பற்றியே பேசிக்கொண்டிருந்தாள் பொற்சுவை. அந்த விளக்கைச் செய்த சிற்பி யார் எனத் தெரிந்துகொள்ள, விடாது முயன்றாள்.
மறுநாள் காலையில் பாண்டரங்கின் தலைமைப் பணிப்பெண் வந்து சொன்னாள், “தங்களின் திருமணத்துக்காக வெங்கல்நாட்டுச் சிறுகுடி மன்னர் கொடுத்த பரிசுப்பொருள் அது. அங்கு உள்ள சிற்பி இதை வடித்துத் தந்துள்ளார்.”
அன்று மாலையே வெள்ளிகொண்டாருக்கு செய்தி தெரிவிக்கப்பட்டது. இளவரசி வெங்கல்நாட்டுக்குச் செல்லவேண்டும்.
போர்க்களத்துக்குச் செல்ல இளவரசி ஏன் ஆசைப்படுகிறார் என்பது வெள்ளிகொண்டாருக்கு விளங்கவில்லை. இளவரசர் அரண்மனையைவிட்டு அகன்று பல மாதகாலம் ஆகிவிட்டது. “அவரைக் காணும் விருப்பத்தில் இளவரசி புறப்படுகிறார்’’ என்று உடன் இருந்தவர்கள் அவருக்குச் சொன்னார்கள். உரிய ஏற்பாட்டோடு இளவரசியை அனுப்பிவைப்பதைத் தவிர அவருக்கு வேறு வழியேதும் தெரியவிலை.
தகுந்த பாதுகாப்போடு இளவரசியை அழைத்துச் செல்லும் பொறுப்பு செவியனுக்கு வழங்கப்பட்டது. அரண்மனையின் நிர்வாகப் பொறுப்பில் இருக்கும் செவியன்தான் வெங்கல் நாட்டுக்கு பலமுறை சென்று வந்த அனுபவம்கொண்டவன். எனவே, வெள்ளிகொண்டார் அவனைத் தேர்வுசெய்தார்.

மூன்றாம் நாள் அதிகாலை தேர் புறப்பட்டது. தோழிகள் புடைசூழ, அன்னகர்கள் காவல்கொள்ள, அவர்களைக் கடந்து வீரர்கள் அணிவகுக்க, செவியன் தலைமையில் பயணம் தொடங்கியது.
செவியனின் குதிரையே முன்னே பாய்ந்து சென்றது. ஆனால், அவனது மனம் குழப்பத்திலிருந்தது. கடந்தமுறை வெங்கல் நாட்டிலிருந்து இளமாறனை மதுரைக்கு அழைத்து வந்தது செவியன்தான். ஆனால், அவனால் அழைத்துவரப்பட்டவன் மீண்டும் உயிரோடு வெங்கல்நாடு திரும்பவில்லை. இப்போதோ இளவரசியை வெங்கல்நாடு நோக்கி அழைத்துச்செல்கிறான். இந்தப் பயணம் எப்படி அமையப்போகிறதோ என்ற குழப்பத்தில் தவித்தது அவனது மனம்.
விரைந்து பயணித்தனர். குதிரைகள் இளைபாறுதலுக்காக ஆங்காங்கே நிறுத்தப்பட்டன. அப்போதெல்லாம் தேர்விட்டு இறங்கி வெளியில்வரும் இளவரசி, சற்று தொலைவு நடந்து இயற்கையின் காட்சிகளைக் கண்டு மகிழ்ந்தாள். மழைக்காலம் முடிவுற்ற நேரமிது. வயல்வெளியெங்கும் உழவுத்தொழில் செழிப்புற்று இருக்கவேண்டிய காலம் இது. ஆனால், காட்சிக்கு அப்படித் தெரியவில்லை. அந்த வழி சென்ற இரண்டு பெண்களை அழைத்துக் கேட்டாள் பொற்சுவை.
“ஊர்களில் ஆண்கள் இருந்தால்தானே உழவுத்தொழிலைச் செய்ய முடியும். எல்லோரையும் போர்க்களத்துக்கு அனுப்பச் சொல்லி அரச உத்தரவு. பிறகு எப்படி பயிர்செய்ய முடியும்?” எனக் கேட்டுவிட்டு நடந்தனர் பெண்கள்.
செல்லும் வழியில் எதிர்படும் ஊர்களில் தேர் நின்றது. பெண்களும் குழந்தைகளும் வயோதிகர்களும் மட்டுமே ஊர்களில் இருந்தனர். நீரும் வயலும் இருந்தும் பயிரை விளைய வைக்க முடியாத கொடுமையைப் பார்த்துக்கொண்டே கடந்தாள். கொல்லர், தச்சர், பறம்பர் என எவரும் ஊரில் இல்லை. எல்லோரும் போர்க்களம் சென்றுவிட்டனர். தானியங்களைச் சேமிக்க வழியின்றி இருக்கும் சின்னஞ்சிறு ஊர்களில் எல்லாம் கோடைக்காலத்தைப் பற்றிய கவலை இப்போதே வரத் தொடங்கிவிட்டது. ஏறக்குறைய எந்த ஊரும் இந்த ஆண்டு முழுமையான அறுவடையைச் செய்யவில்லை. வரப்போகும் காலம் எவ்வளவு கொடுமையாக இருக்கப்போகிறது என்பதை ஒவ்வொருவரின் கண்களிலும் கண்டாள் பொற்சுவை.
இரண்டாம் நாள் பயணத்துக்குப் பிறகு அவள் மனிதர்களைப் பார்ப்பதைத் தவிர்த்தாள். காட்சிகள் மனதைக் கலங்கடிப்பனவாக இருந்தன. எனவே, திரைச்சீலை விலகாமல் பார்த்துக்கொண்டாள்.
தொடர்ந்து பயணித்து வெங்கல்நாட்டு மாளிகையை அடைந்தனர். பாண்டியநாட்டு இளவரசியின் திடீர் வரவு, வெங்கல்நாட்டு அரண்மனையைத் திகைப்புறச் செய்தது. புதிதாகக் கட்டப்பட்ட மாளிகை ஒன்றில் அவள் தங்கவைக்கப்பட்டாள். போர்க்களம், பலகாதத் தொலைவு தள்ளி இருக்கிறது. செவியன் அங்கு சென்று மையூர்கிழாரைக் காண முயன்றான். ஆனால், அதற்கு வாய்ப்பில்லை எனத் தெரிந்தது. மையூர்கிழாருக்கு செய்தி அனுப்பப்பட்டது. அவர் வரும் வரை காத்திருந்தனர்.
இரண்டாம் நாள்தான் செய்தி மையூர்கிழாரை எட்டியது. அவர் காலாட்படையின் வடகோடியில் இருந்தார். செய்தியை அவர் முதலில் நம்பவில்லை. ‘உலகின் பேரழகி என வர்ணிக்கப்படும் பாண்டியநாட்டு இளவரசி, தனது அரண்மனைக்கு வந்துள்ளாரா?!’ வியப்பு நீங்காமல் குதிரையை விரைவுபடுத்தினார்.
‘பொதியவெற்பன் மதுரைக் கோட்டை யிலிருந்து நீங்கி பல மாத காலம் ஆகிவிட்டது. அதனால்தான் இளவரசியாரும் புறப்பட்டு இங்கு வந்துள்ளார்’ என்று எண்ணியபடியே அவள் தங்கியுள்ள மாளிகையை அடைந்தார். பாண்டியநாட்டு வழக்கப்படி நுன்னிழை பட்டுச் சரடுகளாலான திரைச்சீலைகள் அலையலையாய் மறைத்திருக்க அப்பால் நின்றிருந்த இளவரசி திரை விலக்கி வெளியே வந்தாள். தலை தாழ்த்தி வணங்கிய அவர், இளவரசியின் வருகையை வர்ணித்துக் கூறிய வார்த்தைகளை முடிக்க நீண்டநேரமானது. பொற்சுவை மகிழ்ந்து அவரது வரவேற்பை ஏற்றாள்.
“அமைச்சர் முசுகுந்தரிடம் நான் வந்துள்ள செய்தியைத் தெரிவியுங்கள். அவர் பொருத்தமான நேரத்தில் பேரரசரிடமும் இளவரசரிடமும் இந்தச் செய்தியைச் சேர்ப்பார்” என்றாள்.
“உத்தரவு இளவரசி. அவ்வாறே செய்கிறேன்” என்று கூறி, புறப்பட ஆயத்தமான மையூர்கிழாரை நோக்கி சுகமதி கேட்டாள், “இளவரசியாரின் திருமணத்துக்கு காமன் விளக்கைப் பரிசாகத் தந்தீர்கள் அல்லவா... அந்த விளக்கைச் செய்த சிற்பி எங்கே?”

மையூர்கிழார் உள்ளுக்குள் மகிழ்ந்தார். இந்த மாளிகைக்கு இளவரசர் வரும் நாளன்று காமன் விளக்கு இங்கு இருக்க வேண்டும் என இளவரசி விரும்புவதாக எண்ணிக்கொண்டார்.
“உடனடியாக அதற்கு ஏற்பாடு செய்கிறேன்” என்று கூறிய மையூர்கிழார், அரண்மனையின் தலைமைச் சித்திரக்காரர் குழல்தத்தனை அழைத்து காராளி எங்கு இருந்தாலும் அழைத்துவர உத்தரவிட்டு போர்க்களம் திரும்பினார்.
குழல்தத்தன் வயதில் மூத்தவர். இளவரசியைக் கண்டு வணங்கினார். “காராளியின் ஊர் மலைக்குன்றுகளுக்குள் இருக்கிறது. போய்த் திரும்ப மூன்று நாள்கள் ஆகும்” என்று சொல்லிச் சென்றார்.
இளவரசி பொற்சுவை, பயணக்களைப்பு நீங்க ஓய்வெடுத்தாள். மூன்று நாள்களுக்குப் பிறகு குழல்தத்தன் வந்தார். ஆனால், உடன் யாரும் வரவில்லை. இளவரசியிடம் பணிந்து சொன்னார், “காராளி வர மறுத்துவிட்டான் இளவரசி.”
யாரும் எதிர்பாராத பதிலாக இருந்தது.
“பாண்டியநாட்டு இளவரசியின் அழைப்பை ஒரு சிற்பி மறுத்துச் சொல்கிறானா?” எனச் சற்றே கோபத்தோடு கேட்டாள் சுகமதி.
குழல்தத்தன் பேச்சற்று நின்றார்.
“ஏன் மறுத்தான்?” எனக் கேட்டாள் பொற்சுவை.
குழல்தத்தன் எந்த விளக்கமும் சொல்லாமல் நின்றார்.
மீண்டும் கேட்டாள் பொற்சுவை. காரணத்தைச் சொல்வதன்றி குழல்தத்தனுக்கு வேறு வழியில்லை.
“ ‘வாக்குத் தவறியவனின் சொல்லுக்கு மதிப்பளிக்க மாட்டோம்’ எனக் காராளி கூறுகிறான்.”
பொற்சுவைக்குப் புரியவில்லை.”வாக்குத் தவறியது யார்?” எனக் கேட்டாள்.
தயக்கத்தோடு குழல்தத்தன் சொன்னார், “எங்கள் மன்னர் மையூர்கிழார்.”
சற்றே அதிர்ந்தார் பொற்சுவை.
“ ‘பறம்பின் மீது தாக்குதல் தொடுக்கவோ, தொடுப்பவருக்கு உதவியோ செய்ய மாட்டோம் என்பது எம் முன்னோர்களின் வாக்கு. மையூர்கிழார் அதை மீறிவிட்டார். இனி இந்த மண்ணை நான் மிதிக்க மாட்டேன்’ எனக் கூறி வர மறுத்துவிட்டான்” என்றார் குழல்தத்தன்.
காரணம் அறிந்ததும் அமைதிகொண்டாள் பொற்சுவை. அந்த அமைதி, அவன் மீதான கோபமாக உருமாறவில்லை. என்ன சொல்லப்போகிறாரோ என குழல்தத்தன் எதிர்பார்த்திருக்க,”அவன் இங்கு வரவேண்டாம், நான் அங்கு செல்கிறேன்” என்றாள் பொற்சுவை.
குழல்தத்தன் பதறிப்போனார். “இளவரசியார் மலைக்குன்றுகளுக்குள் இருக்கும் அவனுடைய இடத்துக்குப் போகவேண்டுமா!” என்றார்.
அதற்குள் அவளின் ஆணை அன்னகர்களுக்குத் தெரிவிக்கப்பட்டது. பல்லக்குகள் ஏற்பாடாயின. “நாளை காலை புறப்படலாம்” என்று சொல்லிவிட்டு உள்ளே சென்றாள் பொற்சுவை.
மையூர்கிழாரைக் கண்டு இதைத் தெரிவிக்க முடியவில்லை. அவர் மூவேந்தர்களின் படைக்குள் எங்கு இருக்கிறார் என்பதை அறிவதே இயலாத செயலாகத் தோன்றியது. எனவே, அழைத்துச் செல்வதைத் தவிர குழல்தத்தனுக்கு வேறு வழியில்லை.
பல்லக்கைச் சுமந்தபடி காரமலையின் அடிவாரக் குன்றுகளுக்குள் நுழைந்தனர் அன்னகர்கள். குழல்தத்தன் முன்னால் போய்க்கொண்டிருந்தார். காரமலையின் அடிவாரத்தில் உள்ளொடுங்கி இருக்கும் ஆறு ஊர்களும் வெங்கல்நாட்டுக்கு உட்பட்டவை. அதற்கு முன்னும் பின்னுமாக இருக்கும் ஊர்கள் பறம்புக்கு உட்பட்டவை. உடலெங்கும் வியர்த்துக்கொட்டியபடி இருந்தது. ஆனாலும் பறம்பு மக்கள் மீதிருந்த நம்பிக்கையில் அவர் துணிந்து அழைத்துச்சென்றார். எந்த ஓர் ஆபத்தும் அவர்களால் நேராது என்பது அவரின் எண்ணம்.
சரிவுப்பாறையில் வண்ணக் கலவைகொண்டு ஓவியம் வரைந்துகொண்டிருந்தான் காராளி. அவன் இருக்கும் இடமறிந்து அங்கேயே அழைத்துச் சென்றார் குழல்தத்தன். மலையேற்றப் பாதையில்கூட பல்லக்கைக் குலுங்காமல் தூக்கி வந்தனர் அன்னகர்கள். திறள்கொண்ட அவர்களின் தோள்களும் துடுப்பு போன்ற அகலமான பாதங்களும் அதற்கென பழக்கப்பட்டவை.
சற்று தொலைவில் இருந்த காராளியிடம் போய்ப் பேசினார் குழல்தத்தன். காராளி திரும்பிப் பார்த்தான். பல்லக்கைக் கீழிறக்கிக்கொண்டிருந்தார்கள். உள்ளே இருந்து பெண் ஒருத்தி இறங்கி அவனை நோக்கி வந்தாள். “வருபவர்தான் பாண்டியநாட்டு இளவரசி” என்று சொல்லி, அந்த இடம்விட்டு அகன்றார் குழல்தத்தன். சுகமதி பல்லக்கின் அருகேயே நின்றுகொண்டாள்.
இளவரசியை மகிழ்ந்து வரவேற்க, காராளி ஆயத்தமாக இல்லை. தலையைத் தாழ்த்தியபடி உயிரற்றக் குரலில் வரவேற்புச் சொல்லைக் கூறினான்.
தனது வரவை விரும்பாத ஒருவனின் முன் நிற்கிறோம் என்பதை முதல் பார்வையிலேயே உணர்ந்தாள் பொற்சுவை. ‘ஆனாலும் என்ன, அவனது கலை என்னை இங்கே வரவைத்தி ருக்கிறது. வாக்கு மீறியவன் மன்னனேயானாலும் அவன் மாளிகைக்கு வர மாட்டேன் என்று சொல்லும் துணிவு பிடித்திருக்கிறது. அதனால்தான் வந்துள்ளேன்’ என மனதுக்குள் நினைத்தபடி சொன்னாள், “நீ வடித்து தந்த காமன் விளக்கு மிகச் சிறப்பாக இருக்கிறது.”
ஒன்றரை ஆண்டுகளுக்கு முன் செய்து தந்த விளக்கைப் பற்றிய நினைவுவந்தது. எல்லோரையும்போல அதன் சிறப்பை அறியாமலேயே சிறப்பித்துக் கூறும் இன்னொ ருவர் என நினைத்தபடி “நன்றி” என்றான் தலைநிமிராமல்.
“அந்தச் சிலையின் அழகு, சுடரில் ஒளியேற்றும்போது இணைந்துவிழும் நிழலில் இருப்பதாகக் கூறினர். ஆனால், எனக்கு அவ்வாறு தோன்றவில்லை” என்றாள்.
சற்றே விழிப்புற்றான் காராளி. தாழ்த்தியிருந்த தலையை மெள்ள உயர்த்தி இளவரசியைப் பார்த்தான். “உங்களுக்கு என்ன தோன்றியது?” எனக் கேட்டான்.
“அவள் இடதுகையில் பிடித்திருக்கும் மலரில்தான் அந்தச் சிலையின் உயிர் இருப்பதாக நினைக்கிறேன்.”
வியப்புற்று விரிந்தன கண்கள். காராளி, சொற்களின்றி அவளின் முகம் பார்த்தபடியே நின்றான்.
“நான் சொல்வது சரிதானா?” எனக் கேட்டாள்.
சற்று இடைவெளிக்குப் பிறகு “எப்படிக் கண்டறிந்தீர்கள்?”

“நீ விளக்கில் வடித்துள்ள சிலைகள் அவ்வளவு உயிர்ப்போடு இருக்கின்றன. அவர்களின் முகங்களில் இருக்கும் மகிழ்வை வார்த்தைகளால் சொல்ல முடியாது. அதற்குக் காரணம், இடதுகையில் ஏந்தியிருக்கும் மலர்தான். அவள் அதை உயிரெனக் காத்து வைத்திருக்கிறாள்.”
“ஆம், அதுதான் மலர்களிலே அதிசிறந்தது. காதலின் குறியீடாக மலைமக்கள் போற்றுவது.”
பெருவியப்போடு பொற்சுவை கேட்டாள், “என்ன மலர் அது? அதன் சிறப்பு என்ன?”
முகம் மலர்ந்து காராளி சொன்னான், “நிலத்தில் பூக்கும் பூக்கள் எல்லாம் ஒருமுறைதான் மலர்கின்றன. பிறகு காய்ந்து உதிர்ந்துவிடுகின்றன. ஆனால், நீர்ப்பூக்கள் அப்படியன்று. அவை மலர்கின்றன. பிறகு கூம்புகின்றன, மீண்டும் மலர்கின்றன. பூக்களின் அதிசயம் நீர்ப்பூக்கள் என்றுதான் பலரும் கருதுவர்.”
“ஆம், அதில் என்ன ஐயம்?” எனக் கேட்டாள் பொற்சுவை.
“நீர்ப்பூக்களைப்போல மலர்ந்து பிறகு கூம்பி, மீண்டும் மலரும் பூ ஒன்று நிலத்திலும் இருக்கிறது.”
பெருவியப்போடு, “நீ சொல்வது உண்மையா?” எனக் கேட்டாள் பொற்சுவை.
“ஆம்” என்று சொன்ன காராளி, “அதில் வியப்புக்குரிய செய்தி இதுவன்று; இதனினும் சிறந்த ஒன்று உள்ளது” என்றான்.
சொல்லி முடிக்கும் முன்னர் “என்ன அது?” என்று கேட்டாள்.
காராளி சொன்னான், “முளைக்கும் பயிர் நிலத்தை முண்டி மேலே வருவதைப்போல, வேரிலிருந்து முளைக்கும் இந்த மலர் நிலத்தை முண்டி மேலே வந்து மண்ணோடு மலரும். இதன் வியப்புக்குரிய குணம் என்னவென்றால், மனிதர்கள் யாரேனும் அருகில் போனால் மலர்ந்த அதன் இதழ்களை மீண்டும் கூப்பி உள்ளே இழுத்துக்கொள்ளும். அதன் மேலிதழ்களில் சிறுசிறு முற்கள் இருக்கும். பார்ப்பவர்கள் ஏதோ முள்காய் மண்ணுள் கிடக்கிறது என நினைத்து கடந்து போய்விடுவார்கள்” என்றான்.
பொற்சுவை அசையாமல் கேட்டுக்கொண்டி ருந்தாள். காராளி, பேச்சை நிறுத்தி அமைதியானான்.
“அப்படியென்றால், மனிதர்கள் இதைப் பார்க்கவே முடியாதா?”
“முடியும். பேரன்பால் ஒன்றுகலந்த காதலர்கள் மண்ணுள் புதைந்திருக்கும் இதன் அருகே உட்கார்ந்து, ஈசல் புற்றை மெள்ள ஊதுவதுபோல மூச்சுக்காற்றால் ஊத வேண்டும். காதல் இணையர்களின் மூச்சுக்காற்று படப்பட கொஞ்சம் கொஞ்சமாக இந்த மலர் மலர்ந்து வெளிவரும் என்று சொல்வார்கள்.”
பொற்சுவையின் உடல் நடுங்கி அடங்கியது, “நீ சொல்வது உண்மையா?”
“ஆம்” என்றான் காராளி. “இதன் ஆதிப்பெயர் நிலமொரண்டி. ஆனால், ‘காதல் மலர்’ என்றால்தான் காட்டில் உள்ளவர்களுக்குத் தெரியும்.”
பொற்சுவை சொல்லின்றி நின்றாள்.
“பாரியும் ஆதினியும் தங்களின் மூச்சுக்காற்றால் மலரவைத்த காதல் மலரை ஏந்தி நின்றார்கள் என்று என் ஆசான் ஒருமுறை கூறினார். அந்தக் காட்சியை நான் கற்பனையாக வரைந்திருந்தேன். மையூர்கிழார் புதுமையாக ஏதாவது பரிசுப்பொருள் செய்ய வேண்டும் என்று சொன்னபோது அந்த ஓவியத்தையே விளக்காக வடிவமைத்தேன். எல்லோரும் சிலை அமைக்கப்பட்ட கோணத்தால் நிழல் படர்வதைத்தான் கவனித்தார்களே தவிர, கையில் ஏந்தியிருக்கும் காதல் மலரை யாரும் கவனிக்கவில்லை. நீங்கள் மட்டுமே அந்த அதிசய மலரைக் கண்டறிந்திருக்கிறீர்கள்” என்றான்.
மூர்ச்சையாவதைப்போல தாக்குண்டு நின்றாள் பொற்சுவை. “நீ வடித்துள்ள சிற்பத்தில் இருப்பது பாரியும் ஆதினியுமா?”
“அவர்களை நினைத்துதான் அந்த ஓவியத்தை வரைந்தேன். அந்த ஓவியம்கொண்டே சிற்பத்தை உருவாக்கினேன். அப்படியெனில், அதில் இருப்பது அவர்கள்தானே!”
மிரட்சியிலிருந்து மீள முடியவில்லை. “பாண்டியப் பேரரசின் பாண்டரங்கத்துக்குள் இத்தனை காலமாக இருப்பது பாரியின் சிலையா?!” கலங்கி நின்றாள் பொற்சுவை.
“மனங்களை வெல்லத் தெரிந்தவன் ஒருபோதும் தோல்வியடைய மாட்டான். நாடுகளையும் காலங்களையும் கடந்து, கலைகளால் அவன் வாழ்வான். இன்னும் எத்தனை நூறு ஆண்டுகள் கழித்தும் மனமொன்றிய காதலர்கள் நிலமொரண்டியைக் கண்டு மூச்சுக்காற்றை ஊதினால் பாரியும் ஆதினியுமே இதழ்களாய் விரிவார்கள்” என்றான் காராளி.
கலங்கிய கண்களோடு பேச்சின்றி நின்றாள் பொற்சுவை. அவளின் ஆழ்மனதுக்குள் மூச்சுக்காற்று ஊதப்பட்டுக்கொண்டிருந்தது. ஆனால், புதைந்துபோன அவளது காதல் மலர் இதழ் விரித்து மேலெழவில்லை. சற்றே அதிர்ச்சியாகி நின்றாள். காலம் கடந்துவிட்டது எனத் தோன்றியது. மூச்சுக்காற்றின் ஓசை மட்டும் கேட்டபடியிருக்க அந்த இடம்விட்டு மெள்ள நகர்ந்தாள்.
‘எதுவும் சொல்லாமல் போகிறாரே!’ என நினைத்த காராளி, பொற்சுவையைப் பார்த்துக் கூறினான், “நாங்கள் ஆறு ஊர்க்காரர்களும் வெங்கல்நாட்டைச் சேர்ந்தவர்கள்தான். ஆனால், வாக்குத் தவறியவனுக்காக வில்லேந்த மாட்டோம் என்று உறுதிகொண்டுள்ளோம். எனவே, போர்க்களம் புகப்போவதில்லை. தங்களுக்கு விருப்பமானதைச் சொல்லுங்கள் இளவரசி. செய்துதருகிறேன்”.
தள்ளிப்போன பொற்சுவை கண்களைத் துடைத்தபடி திரும்பினாள். முகம் மெள்ள மலர்ந்தது. காராளியைப் பார்த்துச் சொன்னாள், “எனக்கு வேண்டியதை நீ தந்துவிட்டாய்!”
அவளது புருவங்கள் இசைவாய் வளைந்து கீழிறங்குவதும், இமையோரத்து மயிர்கால்கள் அதை எவ்விப் பிடிக்க முயல்வதும் யாராலும் வரைய முடியாத ஓவியம்போல் இருந்தன. அந்த அழகிய விழிகளைவிட்டு காராளியின் கண்கள் விலகவில்லை.
பேச்சின்றி நின்ற காராளியைப் பார்த்து, “என்ன?” என்றாள் பொற்சுவை.
“இந்த உலகில் வரைய முடியாத ஓவியங்கள் இருக்கும்வரை, ஓவியன் வரைந்துகொண்டே இருப்பான்” என்று சொல்லி மீண்டும் வண்ணக்கலவையைக் கையில் ஏந்தினான் காராளி.
- பறம்பின் குரல் ஒலிக்கும்...