
புக் மார்க்

``பல வரலாற்றாசிரியர்கள் இந்தியா - பாகிஸ்தான் பிரிவினை குறித்து எழுதியிருக்கிறார்கள். ஆனால், பிரிவினைக் காலத்தைக் குறித்து அறிந்துகொள்ள வேண்டுமென்றால், நீங்கள் தேடவேண்டியது அந்தக் காலத்தின் வன்முறைகளை அல்ல; அன்புக் கதைகளை. மதம் பிரிக்கும் கருவியாகச் செயல்பட்டுக்கொண்டிருக்கும் இந்தக் காலத்தில், உலகத்துக்கு இந்தச் செய்திகள்தான் தேவை’’ என்கிறார் `From Quetta to Delhi: A Partition Story’ நாவலாசிரியர் ரீனா நந்தா. பிரிவினைக் காலத்தின் அரசியல் நிலவரம் மட்டுமல்லாமல், பிரிவின் வலி, இடப்பெயர்வின் காரணமாக மனிதர்களுக்கு நிகழ்ந்த சமநிலைக் குலைவு ஆகியவற்றை அழுத்தமாகப் பேசுகிறது இந்த நாவல். பிரிவினையின் காரணமாக பாகிஸ்தானின் க்வெட்டாவிலிருந்து டெல்லிக்கு வந்த குடும்பங்களில், நாவலாசிரியரின் குடும்பமும் ஒன்று. இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் வெளியான இந்த நூலின் வெளியீட்டு விழாவுக்கு, எதிர்பாராத அளவுக்குத் திரண்டது மக்கள் கூட்டம். அவர்களில் பலர் பாகிஸ்தானின் க்வெட்டாவில் வசித்தவர்கள் என்பதுதான் ஹைலைட்.

பாலைவன லாந்தரிடம் ஒரு கேள்வி: பெண் கவிஞர்களின் படைப்புகளை சுயவாக்குமூலங்களாகக் கருதும் ஆணாதிக்கத் தமிழ் வாசிப்பிலிருந்து தப்பிக்க, உங்கள் கவிதைகளில் எந்த மாதிரியான உத்திகளைக் கையாள்கிறீர்கள்?
- கவிஞர் இந்திரன்.

விருத்தாசலம் பீங்கான் தொழிற்சாலையைக் கதைக்களமாகக்கொண்டு `தொப்புள் கொடி’ என்ற நாவலை எழுதிக்கொண்டிருக்கிறார் எழுத்தாளர் சு.தமிழ்ச்செல்வி. ``தாயைத் தேடி தவிப்போடு அலையும் மகளின் உணர்வுகளைப் பேசும் இந்தப் புதினம், அவளது சாதி மறுப்புக் காதல் திருமணத்தையும் அதில் நிகழும் சிக்கல்களையும் விவரிக்கும்’’ என்கிறார்.

`` `கவர்னரின் ஹெலிகாப்டர்’ என்ற புத்தகம் வாசித்துக்கொண்டிருக்கிறேன். தன் வாழ்க்கையில் நடந்த விஷயங்களை கட்டுரைகளாகவும் சிறுகதைகளாகவும் சுவாரஸ்யமாக எழுதியிருக்கார் இதன் ஆசிரியர் எஸ்.கே.பி.கருணா. இந்தப் புத்தகத்தில `சுஜாதாவின் ஆட்டோகிராஃப்’, `கவர்னரின் ஹெலிகாப்டர்’ இந்த இரண்டு பகுதிகளும் என்னை வெகுவாகக் கவர்ந்தன. வாசகர்கள் நிச்சயம் படிக்கவேண்டும் என்று நான் ஆசைப்படும் இன்னொரு புத்தகம் ரூமியின் `தாகங்கொண்ட மீனொன்று’ கவிதைத் தொகுப்பு. இதில் உள்ள கவிதைகள் ஒவ்வொன்றும் என் வாழ்நாளுக்கானவை.’’
- இயக்குநர் லிங்குசாமி

கார்த்திகைப் பாண்டியனிடம் ஒரு கேள்வி: சுரண்டலுக்கு எதிராகப் போராட வேண்டிய, விழிப்புஉணர்வைப் பெறவேண்டிய தேவை நிலவும் சூழலில், அரசியல்நீக்கம் பெற்ற இலக்கியங்களால் என்ன பயன் என நினைக்கிறீர்கள்? - பதிப்பாளர் அனுஷ். (எதிர் வெளியீடு)

``சமீபத்தில், புத்தரின் வாழ்க்கை குறித்த `Old Path White Clouds’ என்ற புத்தகம் வாசித்தேன். மிக முக்கியமான ஒரு புத்தகம். இதை எவரேனும் தமிழில் மொழிபெயர்த்தால், இந்தக் காலகட்டத்துக்குப் பயனுள்ளதாக இருக்கும்.’’
- குட்டி ரேவதி.